Wednesday, January 28, 2009

மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினம்:
கருக்கலைப்பு:

சட்டமாக்கப்பட வேண்டும்!

என்.சரவணன்


உங்களுக்குத் தெரியுமா?


நாளொன்றுக்கு 750க்கும், 1000க்­கும் இடைப்பட்ட கருக்கலைப்புகள் இலங்கையில் செய்யப்படுகின்றன. இதில் 5 தொடக்கம் 6 வீதமான கர்ப்பிணித் தாய்மார் இறக்கின்றனர். அதாவது மாதமொன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் இறக்கின்றனர். மேலும் பலர்பக்க விளைவுகளால் நோயாளர்களாகின்­றனர். எதனால் தெரியுமா? இவை அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில், முறையான மருத்து நுட்பத்தின்படி செய்யப்படாததினாலேயே இறக்­கின்றனர் என்பது தெரியுமா? பாதுகா­ப்பற்ற முறையில் செய்யப்படுவதற்கு காரணம் தேர்ந்த தகுதிவாய்ந்த மருத்துவர்களால் செய்யப்படாதது என்பது தெரியுமா?

ஏன் தகுதியற்ற மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர்..........?

தகுதியற்ற மருத்துவர்களையும் நாடிச் செல்வதன் காரணம் இலங்கை­யில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம் என்கின்ற காரணத்தினாலேயே என்பது தெரியுமா? தாயின் உயிரைக் காக்கும் ஒரே ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்பதை அறிவீர்களா?

தற்போது கருக்கலைப்பு பற்றி நடைமுறையிலிருக்கும் சட்டம் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது என்பது தெரியுமா? ரோம, டச்சு சட்டத்தின் அடிப்படையிலான அந்த சட்டத் திருத்தப் பிரேரணை எமது நவகாலனித்துவ எஜமான்களான ”மக்கள் பிரதிநிதிகளால்” 1995 நவம்பரில் பாராளுமன்றத்தில் தோற்­கடிக்கப்பட்டமை பற்றி தெரியுமா? இந்த மூன்று வருடமாகியும் இன்னமும் அதில் எந்தவித மாற்றமுமில்லை ஏன் தெரியுமா?

கருவுற்று, கருசுமந்து, பிரசவிப்பது வரை யார் செய்வது? ஆனால்
- பாலுறவு பற்றிய தீர்மானங்கள் எடுப்பது யார்? (காலம், சூழல்)

- கருக்கட்டலைத் தீர்மானிப்பது யார்? (குடும்பத்திட்டம்-பாதுகாப்பான பாலுறவு கொள்வது குறித்து செலுத்தப்படும் அதிகாரம்)

- கரு சுமத்தலைத் தீர்மானிப்பது யார்?

- கருக்கலைப்பைத் தீர்மானிப்பவர் யார்?

முக்கியமான சந்தர்ப்பங்களி­லெல்லாம், பெண்ணின் உடல் மீதான அதிகாரம் பெண்ணுக்கு உண்டா?

தீர்மானிப்பது ஆணாதிக்கமும், ஆணாதிக்க எதிர்பார்ப்புகளுமல்லவா?

சிசுக்களை கொலை செய்து வீதிகளிலும், மலசலகூடங்களிலும் எரிந்து செல்கின்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரியுமா?

கடந்த வருட பத்திரிகை செய்திக­ளின்படி, சமீப காலமாக வன்முறைக­ளின் எண்ணிக்கை பெருகி வருவதாக­வும், மக்கள் ஈவிரக்கமற்றவர்களாக இலங்கை மக்கள், வன்முறைமயப்பட்டு வருகிறார்கள் என்று பொலிஸ் திணைக்களத்திலிருந்து கொட்டக்­கதெனிய தொpவித்துள்ளார். இதில் பெண்களின் மீதான வன்முறைகள் குறிப்பிடத்தக்க அளவு முன்னரை விட அதிகளவாக பெருகியுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளை ஆதாரமாகக் கொண்டு தயாரித்து வரும் ”பெண்ணுரிமைகளின் கண்காணிப்பு” எனும் காலாண்டு அறிக்கைகள் நான்கை தொகுத்து பார்க்கும் போது (பார்க்க அட்டவணை) இது உறுதிப்­படுத்தப்படுகிறது.

இதில் முக்கிய விடயம் என்னவெ­ன்றால் பெண்கள் மீதான சமீபகால வன்முறைகள் அதிகரிப்புக்குப் பின்னால் இருந்த காரணங்கள் என்னவெனில் விவாகத்துக்குப் புறம்பான பாலுறவில் ஈடுபட்டார், அந்நிய ஆணுடன் தொடர்பு கொண்டி­ருந்தார் மற்றும் அது குறித்த சந்தே­கங்கள் என்பனவற்றை அடிப்­படையாகக் கொண்டே இந்த தாக்கு­தல்கள், கொலைகள், சித்திரவதைகள் நடந்திருக்கின்றன.

இவற்றுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான விடயம், கற்பு குறித்த விதிகள், அதன் மீதான அதிகாரம் என்பன போன்றவைதான். ஆணாதிக்­கமானது கற்பு குறித்த பீதியை தக்க வைப்பதற்கும், மீறலுக்குள்ளாக்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவ­தற்குமான சமிக்ஞை தான் இந்த வன்முறைகள் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை.

எனவே, பலர் கருதுவதைப் போல கருக்கலைப்பு செய்து கொள்வோரில் அதிகமானோர் திருமணமாகாதோர் இல்லை. கருக்கலைப்பை செய்து கொள்வோரில் 60 சதவீதமானோர் திருமணமானோர் தான் என பெண்­ணிய செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர தெரிவிக்கிறார். அப்படி­யென்றால் திருமணத்தின் பின்னர் கூட கருக்கலைப்பின் தேவை இருந்து வருகிறது என்றால் இனியும் இது குறித்த காலாவதியடைந்த கருக்கலைப்பு சட்டங்களை மறுசீரமைப்பதன் அவசி­யம் அதிகளவில் உணர்த்தப்படுகிறது.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster