Thursday, January 29, 2009

மகளிர் சாசனம்:
கண்டுகொள்ளாத தவறுகள்












என்.சரவணன்

”மகளிர் சாசனத்தை அமுல் படுத்து!”
”பெண்களே! யுத்த அடக்கு முறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்!”

இம்முறை இலங்கையில் ”சர்வதேச பெண்கள் தினத்தை நினவு கூருகின்ற பெண்கள் அமைப்புகள் பல இக்கோரிக்கைகளையே முன்னணி கோஷமாக எழுப்ப தீர்மானித்திருக்கின்றன.

இவற்றில் ”மகளிர் சாசனம்” பற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றை சில பெண்கள் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

எனவே இன்றைய காலப் பொருத்தம் கருதி மகளிர் சாசனம் பற்றிய நடைமுறை சாத்தியங்கள் குறத்து கலந்துரையாடுவது பொருத்தமானது.

மகளிர் சாசனத்தின் தோற்றம்:

1975ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் வருடத்தை உலகம் பூராவும் நினைவு கூர்ந்த போது 1975 தொடக்கம் 1985ம் அண்டு வரையான பத்தாண்டுகளை பெண்கள் தசாப்பதமாகவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து உலகம் பூராவுமுள்ள பல நாடுகள் பெண்கள் நலனில் ஓரளவு ஈடுபாடு கொண்டன.

நான்கே ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிருக்கெதிரான சகலவிதமான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் உடன்படிக்கையை (CEDAW-Convention on the Elimination of all Discrimination Against Women) 1979 இல் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் வெகு சில நாடுகளே இவ்வுடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட முன்வந்தன.

இந்த CEDAW உடன்படிக்கையானது பெண்களின் உரிமைகளைப் பேணுவதற்கான அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு இவ்வுடன்படிக்கை­யில் கைச்சாத்திட்டது. இதனால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதன்மை நாடுகளில் ஒன்றாகவே இலங்கையும் கொள்ளப்படுகிறது. இவ்வுடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்ட போதும் அரசாங்கம் பெண்களின் நலனில் அக்கறையில்லாமலேயே செயற்பட்டு வருகின்றது எனும் குற்றச்சாட்டை பெண்கள் அமைப்புகள் முன்வைத்தன.

அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை CEDAW உடன்படிக்கையை இலங்கையில் அமுலாக்கும்படியும் இதற்கான ஒரு சுதேச சாசனம் ஒன்றை வரையும் படியும் பெண்கள் அமைப்புகள் கோரின. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே 90களின் ஆரம்பத்தில் அரசாங்கம் மகளிர் தொடர்பான உத்தேச சாசனம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மகளிர் அமைச்சிடம் ஒப்படைத்தது. மகளிர் விவகார அமைச்சு இவ் உத்தேச சாசனத்தை வரைவதற்காக பெண்கள் உரிமைகளில் அக்கறை காட்டும் முக்கிய பெண் பிரமுகர்கள் சிலரைக் கொண்ட குழுவொ­ன்றை அமைத்தது. இக்குழுவினரால் அமைக்கப்பட்ட உத்தேச சாசனமே 1993ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்ப்பட்­டது. இந்த சாசனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பெண்கள் சாசனமாக கொள்ளப்படுகின்ற ஊநுனுயுறுவை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்­பட்டுமுள்ளது. இலங்கையில் பெண்கள் நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடைய பெரும்பாலான பெண்ணிலைவா­திகளின் கருத்தின்­படி இச்சாசனம் மிகவும் பிரயோசனமா­னது. சிறந்தது. விமர்சனங்கள் திருத்த வேண்டியவைகள் எதுவுமில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியம் பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்கின்றனர்.

ஆனால் அதற்கிடையில் இச்சாசனம் தொடர்பாக பல விடயங்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்பதை பலர் உணர மறுக்கின்றனர். வெகு சிலரிடமே இச்சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் குடும்ப அமைப்பு முறையை பாதுகாக்கக் கூடிய பல அம்சங்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் மீதான ஒடுக்கு முறையின் பிரதான கருவிகளில் ஒன்றாகவே குடும்ப நிறவனம் அடையாளம் காணப்படுகின்ற போதும் அக்குடும்ப அமைப்பு முறைக்கு தோகக் கூடிய அம்சங்களை இதில் காண முடிகிறது.

ஆண்களுக்கிருக்கின்ற பாலியல் சுதந்திரங்கள் எவற்றையும் பெண்களுக்கும் இருப்பதாக இச்சாசனம் முன்­வைக்கவில்லை. புராதன தாய் வழிச் சமூகத்தை, தனிச் சொத்­துரிமையைப் பேணுவதற்காக உடைத்து தற்போ­தைய தந்தை வழிச் சமூகத்தை நிறுவிய ஆணாதிக்கம் தமது தனிச்சொத்துரிமையை பாதுகாப்பதற்காகவே ”தகாத பாலுறுவு” எனும் தடையை பெண்களுக்கு மட்டுமே விதித்தது. அந்தக் கருத்தியலின் தொடர்ச்சியான இருப்பை இன்னமும் ஆண்கள் அனுபவித்து பேணி வருவதுடன் பெண்கள் அவ்வுரிமையை பயன்படுத்தினால் ”வேசித்தனம்” என அவமானப்­படுத்தி சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே முறைமையை பெண்கள் சாசனம் பேணுகிறதா? ஆண்களுக்கு மட்டுமே இவ்வுரிமை இருப்பதாகக் கொள்கிறதா?

இந்நிலப்பாடானது அரசாங்கம் பெண்கள் மீதான கருத்தியல் சார்ந்த ஒடுக்குமுறையை பேணுவதாகவே கருதமுடியும்.

இன்று பெண்ணியத்தில், ஒருபால் உறவு சுதந்திரம் (Lesbiana Relationaship) என்பது இன்று பெண் விடுதலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பேசப்பட்டு வருகிறது. கருவள கட்டுப்பாட்டை திண்து வருவதில் வெற்றி கண்டு வந்த ஆண்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும் பெண்ணின் உயிரியல் இயல்புகளை ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதில் இருந்து விடுபடவும் ஒரு பால் உறவு சுதந்திரம் பெண்ணுக்கு இருக்க வேண்டுமென பேசப்படுகிற அளவுக்கு இன்று தத்துவார்த்த விவாதங்கள் வளர்ச்சியுற்றிருக்கிற போது இலங்கை மகளிர் சாசனத்தில் பாலியல் உரிமைகளுக்கே இடமில்லையென்றாகிவிட்டது. இது பற்றிய சர்ச்சைகளை பல பெண்ணிலைவாதிகள் எழுப்பாமல் இருப்பது தான் ஆச்சரியத்துக்குரியது.

இந்தச் சில குறைகள் இருந்த போதும் பெரும்பாலான உருப்படியான அம்சங்கள் நிறைந்த இந்த சாசனத்தில் அதன் சாத்தியப்பாடு குறித்த பல கேளிகளை எழுப்பச் செய்கின்றன.

சாத்தியப்பாடு


முதலாவது இது ஒரு சட்டமல்ல. அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயமல்ல. இது வெறும் அரச கொள்கை மாத்திரமே. அதாவது அரசானது கொள்கையளவில் மாத்திரமே அதாவது அரசு கொள்கையளவில் மாத்திரமே பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது என கொள்ளலாம். இச்சாசனத்துக்கு எந்த வித உத்தரவாதமுமில்லை. எனவே, இவற்றில் சொல்லப்பட்டவை மீறப்பட்டிருப்பதாக எவருக்கெதிராகவும் வழக்கு தொடர முடியாது. அதாவது ஒரு தனி நபரோ ஒரு நிறுவனமோ ஏன் அரசாங்கமோ கூட பெண்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதையிட்டு எதுவித சட்ட நடவடிக்கையையும் இச்சாசனத்தைக் காட்டி எடுக்க முடியாது. அது வெறும் அரச கொள்கை மட்டும் தான் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

எனவே தான் 1993ல் பாராளுமன்றத்தில் இக்கொள்கை அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் அமைப்புகள் பல இச்சாசனத்திற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும்படி போராடி வருகின்றனர்.

ஆனாலும் இச்சாசனத்தின் சாத்தியப்பாடு குறித்து கண்காணிப்பதற்கான பெண்கள் தேசியக் குழு (National Committee of Women) எனும்அரசாங்க நிறுவனம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் நியமித்தது. இந்தக் குழுவுக்கூடாகவேனும் சாசனம் சட்ட அந்தஸ்து பெறும் வரையில் பெண்கள் உரிமைகளை ஓரளவு பாதுகாக்கலாம் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுவும் கனவாக மட்டுமே காணப்பட்டது. காரணம் 15 பேர் அடங்கிய இந்த தேசியக் கமிட்டியால், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை சட்ட மீறல் நடவடிக்கையாகக் கொண்டு செயற்பட முடியாது. இக்கமிட்டிக்கு முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்து நேரடியாக நடவடிக்கை எடுக்கவோ, சமரச முயற்சிகளில் ஈடுபடவோ, சாட்சியங்களை அழைக்கவோ அதிகாரம் இல்லை.

ஆகக் கூடிய பட்சம், பாரபட்சம் தொடர்பான முறைப்பாடு­களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பிரிவு­களை வலுப்படுத்தி, அபிவிருத்தி கொள்கைகள், சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் என்பன சாசன பிரமாணங்களின்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் சிபாரிசுகளை செய்யவும் மட்டுமேமுடியும். எனவே கண்காணி­ப்பு, சிபாரிசு, விதந்துரைப்பு, ஆலோசனை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளுக்கப்பால் எதுவித அதிகாரமும் கமிட்டிக்கு இல்லை என்பதே உண்மை.

ஆக, ஒரு பக்கம் சட்ட அந்தஸ்து இல்லாத சாசனம். மறுபுறம் அதிகாரம் இல்லாத கமிட்டி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு தான் பெண்கள் நலனில் இந்த அரசாங்கம் ஈடுபடப் போகின்றதென்றால் பெண்களின் பாரிய போராட்டத்திற்கான தேவையுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

ஆனால் வாய் கிழிய நெஞ்சதிர மார்தட்டிக் கொள்வோம். நாட்டின் ஜனாதிபதி பெண் என்று, பிரதமர் பெண் என்று. பாராளுமன்றத்தில் அதிகப் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று. அமைச்சரவையில் அதிகப் பெண்கள் இம்முறை இருக்கிறார்கள் என்று...

இலங்கையில் பெண்கள் சாசனம் வரையப்பட்டது (ஆண் தலைமையிலான) ஐ.தே.க. ஆட்சியின் போதே. பெண்கள் தேசியக் கமிட்டி அமைக்கப்பட்டதும் (ஆண் தலைமையி­லான) ஐதே.க. ஆட்சியின் போதே.

ஆனால் அன்று தொடக்கமே இவ்விரண்டையும் வலுவுள்ளதாக்கும்படி பெண்கள் போராடித்தான் வந்தார்கள். பலன் இருக்கவில்லை. சந்திரிகா ஆட்சி தலைமை ஏற்ற போது எல்லாம் தீர்ந்தது என நினைத்தனர் பெண்கள். இன்று ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. சாசனம் வெற்றுக் கொள்கையாகவே உள்ளது. தேசியக் கமிட்டி கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றாக மட்டுமே உள்ளது.

இன்று இச்சாசனம் தொடர்பாக பெண்கள் எழுப்ப வேண்டிய முக்கிய மான கோரிக்கை என்னவென்றால்,

”அரசே! சாசனத்திற்கு சட்ட அந்தஸ்து கொடு! பெண்கள் தேசிய கமிட்டியை நீக்கி, பெண்கள் ஆணைக்­குழுவை ஸ்தாபி!”
என்பதே!.

(1996 மார்ச் 07 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


1 comments: to “

Design by Amanda @ Blogger Buster