Thursday, January 29, 2009

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!


என்.சரவணன்

போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.

பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.


போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.


இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.

இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.



அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.

இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.

அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.

இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.


1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.

போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.

அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.

இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.

உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.


மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.

இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும் சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.

உலகம் முழுவதும் இது தான்....
பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.



1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.

ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.

இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.

இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.

ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.

(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)

எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.

ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.

தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.

இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.

இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.

1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)

97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.

இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.

இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.

”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.

அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster