Wednesday, January 28, 2009

பெண்+அழகு+சினிமா=பாலியல் சுரண்டல்!
ஒரு பாலுறவின் மீதான
ஆண்
மைய சிந்தனை சினிமா
விலும்!

-என்.சரவணன், சூரியகுமாரி, தேவகெளரி-





கடந்த மே மாத சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அது என்ன­வெனில் களுத்துறையில் ஒரு லெஸ்பியன் சோடி தற்கொலை செய்து கொண்டதாம். ஆடைத்தொ­ழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த ரேணுகா (22), சுமனா (26) ஆகிய பெயர்களைக் கொண்ட இந்த இரு யுவதிகளும் மனமுடைந்த நிலையில் வீட்டாருக்கு பிக்னிக் போவதாகக் கூறிவிட்டுச் சென்று களுத்துறையில், களுகங்கை ஆற்றில் ஒருவரையொருவர் தழுவியபடி விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சடலங்கள் மறுநாள் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அவர்களது டயரியிலிருந்த வாசகங்கள் அவர்கள் இருவரும் தன்னினச்சேர்க்கையாளர்கள் என்பதை உறுதி செய்வதாக பொலிஸார் உறுதி செய்தனராம். இச்செய்தி மனித நேயமுள்ள பலரது மனங்களை உலுக்கச் செய்திருந்த சம்பவமாக இருந்தாலும் இது அப்பெண்களை தூற்றிக் கொச்சைப்படுத்தவும், அவர்களிருவருக்கும் ”தேவடியாள்” பட்டம் கொடுக்கவும் வேறுபல பத்திரிகைகள் மற்றும் சராசாரி மட்டங்களில் பின்னிற்கவில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியும் இப்படியான ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்­தது. இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் கொழும்­பில் லெஸ்பியன்களின் (பெண் தன்னினச் சேர்க்கையாளர்களின்) முதலாவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதே அது. இச் செய்தி. இதுவும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையில் கடும் எதிர்ப்பைத் தாங்கிய கட்டுரைகள், கடிதங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுகள் இரண்டும் ஏற்கெனவே புனையப்பட்டுள்ள பாரம்பரியம், புனிதம், தூய்மை, குடும்ப அலகு என்கிற பெயரால் மோசமாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள். இத்தாக்குதலினால் அடிபட்டுப்­போன, வெளித்தெறியாமல் செய்யப்பட்ட விடயங்கள் அப்பெண்களின் சுயவிருப்பு. பாலியல் தெரிவு, பாலியல் ஜனநாயகம் போன்றவையே.

இந்த வகையில் இத்தாக்குதலுக்குப் புதிதாக இலக்காகி இருப்பது அண்மையில் வெளிவந்த சிங்களத் திரைப்படமான ”சுரயான கினிகனி” (தேவமஞ்சம் தீப்பிடிக்கிறது) எனும் லெஸ்பி­யன்கள் பற்றிப் பேசும் திரைப்படமாகும். இந்த இடத்தில் நமது கவனம் சிங்களத் திரைப்படச் சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்த பாலியல் குறித்த கருத்தாடலே.

Adults Only
”18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்”,
”வயது வந்தவர்களுக்கு மட்டும்”,
”கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்”
இப்போதெல்லாம் இலங்கையில் திரையிடப்­படும் சிங்களத் திரைப்படங்களில் இந்த வாசக­ங்கள் இல்லாத திரைப்படங்களை லேசில் காண மாட்டீர்கள்.

தணிக்கைக்கு உட்படாத, தணிக்கை சபையின் ஒ சான்றிதழ் பெறாமல் வெளிவரும் சிங்களத் திரைப்படங்களை லேசில் காண முடியாது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தத் தணிக்கையானது பாலியல் காட்சிப்படுத்தல்களிலேயே பிரயோகிக்கப்பட்டுவருகிறது.

சிங்களத் திரைப்படத் திசை­வழியின் புதிய பரிமாணமாக இந்த போக்கைக் காணலாம். பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள், திரையரங்கு­களின் வாசலில் வைக்­கப்படும் கட்அவுட்கள் என்பவற்றில் கண்டி­ப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் பொறிக்­கப்படுகிறது. திரையரங்கு கட் அவுட்களில் படுக்கையில் இருவர் அரை நிர்வாணமாக காட்சிப்படுத்­துவது என்பது கடந்த அரை தசாப்தகாலமாகவே ஒரு குறியீடாக ஆகிவிட்டிருக்கிறது
.

சினிமா சந்தையில் பாலியல்

திரைப்படத்துறையில் முதலிடுபவர்கள் இந்த போக்கை கிரமமான முறையில் தொடர்ந்து வருகிறார்களென்றால் இது எந்தளவுக்கு லாபத்தைக் கொட்டிக்குவிக்கிற வியாபாரமாக ”பாலியல் விவகாரங்களை விற்றல்” என்பது ஆகிவிட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான திரைப்படங்கள் கலைப்படமாகவும், முற்போக்குதிசைவழியைக் கொண்டிருக்கிறது என்றும் கற்பிதம் செய்யப்பட்டிருப்பது தான் பல பார்வையாளர்களை தொடர்ந்தும் தக்கவைத்­திருப்பதன் ரகசியம். எனவேதான் இது இன்றைய சிங்களத் திரைப்படத்துறையில் பெரும்போக்­காகவே ஆகிவிட்டிருக்கிறது.

1993இல் எகே வைரய திரைப்படம் வெளிவந்த போது வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கிற லேபளுடன் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ”எகே வைரய-2”, ”ராகய உனுசும”, ” வியரு கெஹனியக்”, ”அக்கய் நங்கிய்”, ”கேர்ள் பிரன்ட்”, ”உனுசும் ராத்திரிய” என தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவந்தன. இத்தி­ரைப்படங்களுக்கே என்று அப்போது சில நடிகை­களை பயன்படுத்தினர். சுமனா கோமஸ், அனுஸா தமயந்தி, சந்தி ரசிக்கா போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் பேசப்படும் படமாக கொள்ளப்பட்டது ”பஹூ பார்யா” (பல மனைவிகள்) எனப்படும் திரைப்படம். இத்திரைப்படத்தில் பிரபலமான கதாநாயகி சங்கீதா பாலியல் காட்சிகளில் நடித்திருந்தார். இது பற்றிய விவாதங்கள் திரைப்படத் துறையினர், தொடர்புசாதனங்கள், ஏன் பெண்ணிய அமைப்புகள் மட்டத்தில் கூட நடத்தப்பட்டன. பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பின் (Women & media Collective) ஒன்று கூடலொன்றின் போது இது குறித்து மிகவும் சுவாரசியமான உரையாடலொன்றும் நடத்தப்­பட்டது. அதில் பெண்ணியலாளர்கள், எழுத்தா­ளர்கள், நாடகக் கலைஞர்கள், சினிமா தொலைக்­காட்சி கலைஞர்கள் என்போர் கூட கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதமொன்றைச் செய்திருந்தனர்.


சங்கீதா ஓர் உதாரணம்

சங்கீதா அப்படி நடிக்கவில்லை, அக்காட்சிகள் வேறு பெண்ணைக் கொண்டு எடுக்கப்பட்டு கலந்திருக்கிறார்கள் என்று சங்கீதாவின் தகப்­பனார் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்திருந்த கருத்து குறித்து பத்திரிகையொன்று (சங்கீதாகிவிடம் பேட்டி­யொன்றை எடுத்தபோது) கேட்டபோது அவ்வாறு தான் பொய் கூற விரும்பவில்லை என்றும் அதனை தான் ஏற்றுத் தான் நடித்ததாகவும், அக்குறிப்பிட்ட கதைக்கு அக்காட்சி அவசி­யமாக இருந்ததென்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சங்கீதாவின் தகப்பனார் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கதைகள் அடிபட்டன. பாலியல் காட்சிகள், பெண் பற்றிய சித்திரிப்பு, என்பவை யாருக்கு அவசியப்பட்­டிருக்கிறது? எந்தப் பிரிவினருக்கு எனப் பல விடயங்கள் அப்போது உரையாடப்பட்டன.

சங்கீதா நாட்டில் இல்லாததை வைத்து, இத்திரைப்பட வெளியீட்டு விழாவன்று நாட்டை விட்டு ஓடிப்போயிருந்தார் என்ற பிரச்சாரத்தை இங்குள்ள பத்திரிகைகள் செய்திருந்தன. இப்ப­டியாக பாலியல் காட்சிகளில் நடிக்க வைத்து வியாபாரத்தை பெருக்கும் ”ஆணதிகார உத்தி”க்கு பலியாக்­கப்­பட்டு இறுதியில் ஆணதிகார சூழலுக்கு எதிர்கொள்ளும் பொறுப்பும் அந் நடிகைக­ளுக்கு வந்து சேர்ந்தது. இது தான் இன்றைய உண்மை நிலை. சங்கீதா போன்றோரின் தூய்மை, கற்பு, புனிதம், என பல சர்ச்சை­களை பௌத்த மதத்துறவிகளும், பாரம்பரி­யம் பேசுகின்ற ஒரு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவாதம் போய்க் கொண்­டிருக்கும் போது தான் வரிசையாக இன்னும் சில திரைப்படங்கள் இதே வரிசையில் திரையிடப்பட்டன. அதில் முக்கியமாக பரப்பரப்பாக பேசப்பட்ட படம் ”சுரயான கினி கனி” எனும் திரைப்படம்.


முதல் ஒருபாலுறவு திரைப்படம்

இத்திரைப்படம் குசைந திரைப்ப­டத்தின் சாயலைக் கொண்டுள்ள பெண் தன்னினச் சேர்க்கை பற்றி பேசப்படும் ஒரு திரைப்படம்.

இலங்கையில் வெளிவந்த, தன்னி­னச்சேர்க்கை பற்றி பேசிய முதலாவது திரைப்படம் இது எனலாம். இதற்கு முன் பாலியல் விடயம் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சிறிய காட்சிகள் வந்து போயிருக்கிற போதும். அதனையே கருப் பொருளாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது­வாகும்.

ஆனால் இத்திரைப்படத்தின் கருவானது தன்னினச்சேர்க்கைக்கு எதிரான, அப்பட்­டமான பெண் பற்றிய தப்பபிப்பராயங்களை புனைகின்ற அதே ஆணாதிக்க உற்பத்திப் போக்கின் விளைவென்றே கூறமுடியும். இதனை அதன் இயக்குனர் எரங்க சேனாரத்ன தெளிவாக ஒப்புக்கொள்கிறார்.

”நான் தன்னிச்சேர்க்கையை நிராகரிக்­கிறேன். எங்கள் சமூகச் சூழல் அதனை ஏற்றுக்கொள்வ­தில்லை. நானும் அதனை ஏற்றுக் கொள்வதற்கில்லை.”

”தற்போதைய சூழலில் ஒருபா­லுறவு குறித்து பேசப்பட்டதன் காரணம் அதற்கு சந்தையில் பெறுமதி இருக்­கிறது என்று நீங்கள் அடையாளம் கண்டதால் தானே?” என கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளித்த எரங்க ”1995இல் 'எகே வைரய” (அவளின் வைராக்கியம்) திரைப்படம் வெளியானது. 1993 காலப்பகுதியில் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுப்பது குறித்து நான் நினைத்திருக்க மாட்டேன்.” என்கிறார்

.1”இது போலத்தான் பகுபார்யா திரைப்­படத்தின் இயக்குனரான உதயகாந்த வர்ணசூரிய ஒரு பேட்டியில் சந்­தையை புறக்கணித்து விட்டு ஒரு திரைப்பட­த்தை எடுத்துவிடமுடி­யாது. சந்தைக்காக நாங்­கள் இவ்வாறான உத்­திகளைக் கையாண்டாக வேண்டும்...”

2முதலாவது கூறிய எரங்க சேனாரத்ன­வின் கருத்திலிருந்து அத்திரைப்படம் நிச்சயம் லெஸ்பியன்களின் உரிமை பற்றிப் பேசவோ. அல்லது இதனை ஒரு ஆரோக்கியமான விவா­தத்தை உண்டுபண்ணவோ எடுக்கப்­பட்டதில்லை. மாறாக ஏலவே நிலை­பெற்றிருக்கிற ஆணாதிக்க நிறுவனத்­தின் மோகப்பசியை தீர்க்க எடுக்கப்­பட்ட, லெஸ்பியன் எதிர்ப்பு பிரச்சாரத் திரைப்படமாகும்.

உண்மையிலேயே தற்போ­தைய சந்தையில் இப்படியொரு தலைப்பை நன்றாக விற்கலாம் என்பதால் தான் இப்படிப்பட்ட திரைப்படம் எடுக்கப்­பட்டது என்பதற்கு வாக்குமூலமாகவே இப்படிப்பட்ட கருத்தைக் கருத முடிகிறது.


பெண் சித்திரிப்பு

”சுரயான கினி கனி”யில் வீனா ஜயக் கொடியை கட்டைக் காற்சட்டை அணிந்த சிகரட், விஸ்கி குடிக்கிற ஒரு மத்தியதரவர்க்க, தனியாக வாழும் பெண்ணாகச் சித்திரிப்பதன் மூலம் ஏள்கெனவே இது ஒரு உயர் வர்க்க உறவு முறை என்கிற கற்பிதத்தை­த்தான் மீளுறுதி செய்கிறது. அது தவிர தன்னில் தங்கியிருககும் பணிப்பெண், மற்றும் வாடகைக்கு குடியிருக்கும் பெண் ஆகியோரை தனது வர்க்க செல்வாக்கால் அதிகாரத்­துவத்துடன் தன்னிச்சேர்க்கைக்கு உள்ளாக்குவ­தாகவும் காண்பிக்கப்படு­கிறது. சனோஜாவை வீணா போதைக்­குள்ளாக்;கி பாலியலுறவு புரிவதாக காண்பிக்கப்படுவதன் மூலம் சனோஜா ”பாவம் அப்பாவி” என்கிற கருத்தே வடிவமைக்கப்படுகிறது. கணவன் பாலியலை தவிர்ப்தால் தான் சனோஜா வீணாவுடன் உறவை வளர்ப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. லெஸ்பியன் உறவு என்பது வெறும் பாலியல் சார்ந்ததென்று நிறுவுகிற வகையில் காட்சிகள் வரையறுக்கப்­படுகின்றன. ”மோசமான” பெண்ணிடமே இப்படி­யான நடத்தைகள் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. இறுதியில் அவள் அழிக்கபடுவதன் மூலம் விட்டு வைக்கக் கூடாது என்கிற எண்ணக்கரு உருவாக்கப்­படுகிறது. சனோஜாவின் கனவன் தொழில் பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணும் ஒரு ”நடத்தை கெட்டவளாகவே” காட்சிகள் கட்ட­மைக்கப்படுகின்றன. இது புராதன, பண்பாடு, கலாசாரம், மதம் சீரழிவு என்று புலம்பும் பலரும் ஏற்றுக்கொள்­ளக்கூடிய -சந்­தை­யில் எடுபடக்கூடிய- எண்ணக்கரு. எனவே தான் இப்டியான ஒரு கதை சிருஷ்டிக்­கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டுள்ளது.


ஆணாதிக்கத்துக்கு துணை போகும் பெண் நிறுவனங்கள்

பாலுறவின் வடிவங்களும், நுட்­பங்களும் சுதந்திரத் தெரிவிற்குரியவை. எந்தவித அதிகாரத்துவ­மற்ற முறையிலான, சமத்துவ­மான பாலுறவு எந்த வடிவத்தையோ, நுட்பத்தையோ கொண்டிருக்­கலாம்.

இலங்கையில் தன்னினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்பது கவனத்திற் கொள்ளத்­தக்கது. இது வரை பெண்கள் இயக்கங்கள் எதுவும் லெஸ்பியன் கருத்தாக்கத்திற்காக செயற்பட்டது கிடையாது. எம்மத்தியில் இருக்கும் பெண்ணியலாளர்கள் என்று கூறிக் கொள்வோர் பலர் லெஸ்பியன் உறவுக்கோ, செயற்பாட்டாளர்­களுக்கோ ஆதரவாக குரல்கொ­டுத்ததுமில்லை. இதில் காட்டும் தயக்கங்களுக்கு முக்கிய காரணம். இலங்கையில் சகல பெண்கள் இயக்கங்களும் என்.ஜீ.ஓ வலை­யில் சிக்கியிருப்பதும், செயற்பாட்டுத் தளத்தில் தொலைநோக்­குடனான பெண்கள் இயக்கங்கள் இல்லாததும், பெண்ணியலாளர்கள் என அழைத்துக் கொள்வோர் இதனைப் பற்றிப் பேசி சமூக ஐதீகங்களுடனும், வைதீக சக்தி­களுக்கு முகம் கொடுக்க தயாரில்லா­மையே என்றால் அது மிகையில்லை.

ஆண்மைய சமூக கட்டமைப்புக்கே இது வெற்றியைத் தந்துள்ளது.

பொதுவாகவே பாலியலானது பகிரங்க சொல்லாடலுக்கு உட்படுத்­தக்கூடாத ஒன்றாக ஆக்கப்பட்­டிருக்கிறது. இவ்வாறு வைத்திருப்­பதன் மூலம் இதிலுள்ள சமத்துவ­மின்மை­யையும், ஜனநாயகமின்­மையையும் கேள்விக்குட்படுத்தாமல் பாதுகாக்க முடியும் என்று ஆணா­திக்கம் நம்பு­கிறது. எனவே தான் அடிப்படையில் நிறுவனமயப்பட்ட ஆணாதிக்­கமானது பலமாக நிலை­நாட்டவென மதம், கல்வி, சட்டம், நிர்வாகம், தொடர்பூடகங்கள், தத்துவம் என சகல வழிகளிலும் நிறுவியுள்ளது. இவை கேள்விக்­குட்படுத்தவோ அல்லது கிளர்ச்சி செய்யவோ முடியாதபடி ஆணதிகார கட்ட­மைப்பு அதன் நசுக்கும் இயந்தி­ரங்களை தோற்றுவித்துள்­ளது. பெண் தனியான ஒரு ஆணுக்கு சொந்தமா­னவள் என்கிற சொத்துடமைக் கருத்தாக்கம் கேள்விக்குட்படுத்தப்­பட்டால், அதற்காக நிறுவப்பட்டுள்ள குடும்ப அலகு சிக்கலுக்குள்ளாகும். அப்படியொன்றை ஆரம்பத்திலேயே என்ன விலைகொடுத்தும் நசுக்கிவி­டுவது ஆணாதிக்கத்தின் வழிமுறை. மேற்தோற்றத்தில் இதனை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாது. ஏனெ­னில் நிறுவனமயப்பட்டு நிலைபெற்றி­ருக்கிற ஆணா­திக்கமானது இப்­போது நேரடியாக அது இறங்கத்­தேவை­யில்லை. ஆணா­திக்கமயப்­பட்ட அல்லது ஆணா­திக்கத்துக்கு பலியான பெண்க­ளோ’பெண்­ணிய இயக்கங்­களோ இதனைச் செய்­யும். மோதல் பெண்களுக்கிடை­யிலானதாகவும், பெண்கள் இயக்­கங்களுக்கிடையி­லானதும் என்பது போல வெளியில் தோற்ற­மளிக்கும்.
இந்த நிலை­மையை விளங்கிக் கொணடால் தான் இதனைக் கடக்க முடியும்.

1. ”இஸ்க்ரா” 1999-யூலை 4 இதழில் வெளியான எரங்கவின் பேட்டி.
2. ”லங்காதீப” 1999-ஏப்ரல் 9 இல் வெளியான உதயகாந்தவின் பேட்டி.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster