Wednesday, January 28, 2009

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற
ஒப்பந்தத்தில் இலங்கை அரசு
கைச்சாத்திடாது ஏன்?
-சுனிலா-





என்.சரவணன்

இன்று பொதுவாகவே பாலியல் வல்லுறவு சம்பவங்களின் அதிகரிப்பு வேகமாகியிருந்தாலும் கூட யுத்த சூழ்­நிலையைப் பொறுத்தளவில் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவே?

பெண்களிடம் அதிகாரம் இல்லாமலி­ருக்கின்ற அதிகாரத்தைப் அடையாமலி­ருக்கின்ற பெண்களின் மீது மேற்கொள்­ளப்படுகின்ற வன்முறைகளிலேயே உச்ச வடிவம் தான் பாலியல் வல்லுறவு. சமூகத்­தில் நிலவுகின்ற பாலியல் வன்முறைகள் என்பது பல்வேறு வடிவங்களிலும் இருக்கி­ன்றது. ஒரு ஆண் பிள்ளையைப் போலல்­லாது பெண்ணாணவள் பிறந்தவுடனேயே அவளது நடத்தை, அவளது கல்வி, அவ­ளது அறிவியல் எல்லாமே மட்டுப்படுத்­தப்படுகிறது. தொடர்ச்சியாக கண்காணி­ப்புக்குள்ளாகிறாள். அவளது திருமணத்­துக்கு முன் அவளது கன்னித் தன்மை பரிசோதிக்கப்படுகிறது.

இதற்கு சமூக பழக்கவழங்கங்கள், மரபுகள் துணை செய்கின்றன. எனவே வன்முறையென்பதை நாம் பரந்த அர்த்தத்­தில் காண வேண்டும். அப்போது தான் அதன் ஊடுறுவலையும், வியாபகத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட வன்முறைகளின் உச்ச வடிவம் தான் பாலியல் வல்லுறவு. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பாலுறவு என்பது ஒரு நெருங்கிய அன்புப் பரிமாறலுக்குரிய சந்தர்ப்பம். அந்த கிட்டிய சந்தர்ப்பத்தையல்லவா வன்முறைக்குள்­ளாக்குகின்றனர். இந்த வகையான சம்பவ­ங்கள் வாழ்நாள் முழுவதும் பெண்கள் ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் போதெல்லாம் அந்த நினைவுகள் வந்து அச்சங்கொள்ளச் செய்யும்.

சமூகத்தில் இந்த அதிகாரம் யாரிடம் இருக்கிறது. குடும்பத்தில் தகப்பனுக்கு, சகோதரனுக்கு, கணவனுக்கு, மற்றும் சமூகத்தில் மதத் தலைவர்களுக்கு, அரசி­யல் தலைவர்களுக்கு, பணம் படைத்த வர்க்கத்துக்கு அதிகாரம் இருக்கின்றது.

இது போலவே இலங்கையைப் போன்ற சமூகத்தில் துப்பாக்கியை ஏந்திய தரப்பு விசேட அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆணதிகார வன்முறையின் உயர்ந்தபட்ச வடிவம் தான் இராணுவமயம். பலாத்கா­ரமாக சமூகத்தில் இருப்பு கொண்டிருக்கும் ஒரு வடிவம் தான் இராணுவமயம்.

இலங்கை போன்ற நாட்டில் வன்முறை உயர்ந்தபட்சம் வளர்ந்துவிட்டுள்ளது. மூத்தவர்கள் இளையவர்களை அடிக்கின்­றனர். கணவன் மனைவியை அடிக்கிறான். ஆசிரியர் மாணவருக்கு அடிக்கிறார். பாதையில் போபவர்கள் இன்னொருவரை அடிக்கின்றார். இப்படி வன்முறையென்பது சகல தரப்பிலும் வியாபித்துள்ளது.

இவ்வகையான வன்முறைகளை துப்­பாக்கி முனையில் பயமுறுத்தி விரும்பி­யதை அடையமுடியுமென்ற நம்பிக்கை வளர்ந்து விட்டுள்ளது. சாதாரண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் இப்படியானவை மேற்கொள்ளப்பட்டால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவனை தண்டிக்க சிவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சீருடையினர் இதை செய்தால் அதனை நிரூபிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்காது. அவ்வாறு நிரூபிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடையாது. அவர்களின் தொழிலின்படி, அவர்களின் சீருடையின்படி அவர்கள் குற்றம் புhpவதற்கான அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. இதை தமது கடமையின் ஒரு பகுதியாக கொள்கின்றனர்.

கடந்த 1987-89 காலப்பகுதிகளில் மனித உரிமைகளை மீறுவதற்கும், உரிமைகளை நாசம் செய்வதற்கும் மக்களின் மீதான வன்முறைகளை மேற்­கொள்வதற்கும் புதுமையான விதத்தில் படையினருக்கு லைசன்ஸ் வழங்கப்பட்­டிருந்தது. இந்தக் காலப்பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணா­மல் போவதற்கு காரணமாக இருந்தவர்­களின் பெயர்கள் அவற்றை விசாரித்த ஆணைக்குழுக்களில் பேசப்பட்டதல்லவா?

ஆனால் அந்த பொலிஸ், படை போன்றவ­ற்றைச் சேர்ந்த அந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எந்த நடவடிக்­கையையும் எடுக்கவில்லையே.

நாங்கள் அது குறித்து விசாரித்த போது ”யுத்தமொன்று நிலவுகின்ற போது இது குறித்த நடவடிக்கை எடுப்பதாயிருந்தால் இராணுவத்தினரின் உள நிலையைப் (Moral) பாதிக்குமென்றனர். இந்தக் காரணம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இன்று மக்கள் மத்தியில் இந்தளவு வன்­முறைகள் வளர்வதற்கு நாடு இராணுவ மயமாகியிருப்பது ஒரு முக்கிய காரணம். இவ்வாறு ஆயுதங்களைப் பாவித்து மக்களை அடக்கலாம், மக்களின் குரலை அடக்கலாம் என்கின்ற நம்பிக்கை பொதுவாகவே நிலவுகிறது.

சமூகத்தில் அதிகாரம் அற்ற குழுவி­னர் தான் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். சிறுபான்மை இனக்குழுமங்கள், ஒடுக்கப்­பட்ட சாதியினர், பெண்கள், சிறுவர்கள், ஏழைகள், அங்கவீனர்கள் என அப்பாவிகள் இதற்கு பலியாகின்றனர். அதிகாரம் உள்ள­வர்கள் அல்லது பலம் படைத்தவர்கள் இவர்களை இலகுவாக ஒடுக்கி தமது அதிகாரத்தை-நலன்களை நிலைநாட்டிவிட முடிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை­யைப் பொறுத்தளவில் யுத்தம் நிலவுகிறது. இந்த யுத்தத்தில் பலமுடையவர்களாக ஆயுதம் தாங்கியவர்கள் உள்ளார்கள். அவர்கள் புரிகின்ற குற்றங்களைத் தடுக்கக் கூடியளவுக்கு சட்டம் பலமானதாக இல்லை. அவர்களின் துப்பாக்கிக்கு முன்னால் சட்டம் வலுவிழந்து விடுகிறது. ஆயுதம் ஏந்திய ஒடுக்குமுறையாளர்க­ளாக ஆண்கள் உள்ளனர். அதிகாரம் அற்ற தரப்பினராக பெண்கள் உள்ளனர். எனவே அதிகாரம் இல்லாத தரப்பினர் ஒடுக்கு முறையிலிருந்து தப்பிக்க தங்களிடம் துப்பாக்கியில்லாததன் காரணமாக இலகுவாக பலியாகி விடுகிறார்கள்.

கடந்தகாலங்களில் இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உண்மையில் ”போர்க்கால குற்றங்களுக்கு” எதிரான சட்ட விதிகள் கொண்டு வருவதற்காகப் போராடியிருக்க வேண்டும். கடந்த யூன் மாதத்தில் சர்வ­தேச ரீதியில் ”சர்வதேச குற்றவியல் நீதி மன்றம்” என்ற ஒன்று ஐ.நா.வால் அமைக்­கப்பட்டது. அதற்கான ஆவணங்களில் பல நாடுகள் கையெழுத்திட்டு உறுப்புரிமை பெற்றுக்கொண்டன. ஆனால் அதற்கு இலங்கை உடன்படவுமில்லை, கையெழு­த்திடவுமில்லை. ஆயுதப் போராட்டம் இடம்பெறுகின்ற நாடுகளில் அரசு என்கின்ற ரீதியில் அதற்கு வகிக்க வேண்டிய பொறு­ப்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பவற்றையே அந்த ஒப்பந்தம் குறிக்­கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்­திட்டால் போரை நடாத்தும் அரசாங்கம் போர்க்குற்றவாளிகளாக இருக்கும் முக்கிய அதிகாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்த முன்வரவேண்டும்.

இன்று குறிப்பிட்ட ஒரு இனத்தை கீழ்த்தரமாக அவமானப்படுத்த வேண்டு­மெனில் அவ்வினத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்­கினால் அது சாத்தியமாகும் எனும் நம்பிக்கை நிலவுகிறது. ஒரு ஆணின் மீது காறி உமிழ்வதற்கு சமமான ஒரு அவமானத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அவனது சகோதரியையோ, தாயையோ, மனைவியையோ மகளையோ வல்லுறவு புரிந்தால் போதுமானது.

இன்றும் ஆண்கள் மத்தியில் நடக்கி­ன்ற சண்டைகளின் போது பார்க்கிறோம் அல்லவா, உனது தங்கையைத் தூக்குவேன், அக்காவைத் தூக்குவேன் என்று கூறப்படுகிறது அல்லவா?

ஒரு ஆணின் ஆண்மைக்கு சவாலிட வேண்டு­மாக இருந்தால் அவனுக்கு நெருங்கிய பெண்ணை வல்லுறவுக்கு உள்ளாக்­கினால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இன்று இலங்கையிலுள்ள நீதிமன்றங்க­ளிலும் பாலியல் இம்சைகள் அனைத்­தையும் குற்றமாக கணிக்கிற வழக்கம் வந்து கொண்டிருக்கிறது. இது ஜெனிவா பிரகடனத்தின் பின் படிப்படியாக அடையப்பெற்ற பெண்களின் வெற்றி.

வரலாற்றில் நாடுகளுக்கிடையிலான சண்டைகளின் போது பெண்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பது என்பது இன்று போரின் ஒரு பகுதியாகவே இடம் பெற்று வருகிறது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட நிலைமையை கூறிவிட்டு இதே சமூகத்தில் சுதந்திரமாக வாழ இடமிருக்கிறதா என்கின்ற கேள்­வியை எழுப்பிப் பார்க்க வேண்டும்?

சமூகத்திலுள்ள ஐதீகங்களுக்கு இப் பெண்களால் முகங்கொடுக்க இயலுமா?

சமூகத்தில் அவளுக்கு எந்த ஆதரவும் அனுதாபமும் கிடைப்பதில்லை. மாறாக அவளை அவமானப்படுத்தவும் தண்டிக்­கவும் அவளை தள்ளி வைக்கவுமே செய்கிறது.

இன்று கமல் அத்தர ஆராச்சி வழக்கை எடுத்துக்கொள்வோம். இன்று பாதிக்க­ப்பட்ட சிறுமி வயதில் குறைந்தவர் பாதுகா­க்க வேண்டுமெனக் கூறி கங்கொடவிலவில் உள்ள பாதுகாப்பு முகாமொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளாள். அது ஒரு சிறை. ஆனால் தவறிழைத்தவர் இன்று பிணையில் விடுதலையாகியிருக்கிறார். இது தான் சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு.

ஆண்கள் இந்த பிரச்சினையை சாpயாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் இதில் ஆற்றுக்கின்ற பாத்திரத்தை ஆண்கள் உணர வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிலவுவதானது சகல ஆண்களுக்குமான பெரும் அவமானமாக கருத வேண்டும். பெண்களைக் கண்டால் வல்லுறவுகொள்­ளத் தோன்றும் மனநிலையானது மிருகத் தனமானது. இப்படிப்பட்ட மிருகத்தனமிக்க­வர்கள் என ஆண்களை கூறினால் அது எத்தனைப் பொருத்தமுடையதாக இருக்கும். எனவே இந்த அவமானம் ஆண்களுக்கே.


தொகுப்பு : என் சரவணன்
(சரிநிகர் 158)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster