Tuesday, January 27, 2009


ஹிட்லரின் ஜெர்மனில்
பெண்களின் நிலை!

கேட் மில்லட்


அமெரிக்காவைச் சேர்ந்த கேட் மில்லட் ஆரம்பத்தில் 1969இல் வெளியான அவரது நூலான பாலியல் அரசியல் (Sexual Politics) எனும் நூலின் மூலமே உலகுக்குத் தெரியவந்தார். ஆங்கில மொழிவிசேட பட்டம்பெற்ற இவர் பேராசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது ஆய்வு நூலுக்கு அரசியலில் பால்நிலை செல்வாக்கு குறித்து அக்கறை காட்டியிருந்தார். ஆணாதிக்க வாழ்முறை தொடர்ச்சியாக இருப்புகொள்ள இலகுவாக்கிய பிற்போக்கு சக்திகள் ஆற்றிய பாத்திரம் அவை வெற்றிகொண்ட விதம் அதன் மூலம் புரட்சிகர சமூக மாற்றம் மேலும் பின்தள்ள காரணமாகிப் போன விதம் என்பன குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந் நூல் பின்னர் வந்த பெண்ணிய ஆய்வுகளுக்கு அதிக துணைபுரிந்துள்ள புகழ்பெற்ற நூலாக கொள்ளப்படுகிறது. அவரது நூலில் ஒரு கட்டுரையான நாசி ஜேர்மனியில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் எனும் கட்டுரை இங்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது.

பொதுவான ஆணாதிக்க அரசியல் கட்டமைப்புக்குள் நடாத்தப்படும் ஏனைய பிரச்சினைகளுக்குள் எவ்வாறு பெண்கள் விசேடமாக அடக்கப்படுகிறார்கள், புனிதங்களின் பெயரால் அவை எப்படி நியாயப்படுத்தப்படுகிறது. இந்த ஒடுக்குமுறைகள் எவ்வாறு திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்படுகின்றன. இதனை எதிர்க்க முடியாதபடி அரச இயந்திரம் எப்படி அடக்குமுறைக்கு தயார்படுத்துகிறது, விடுதலையின் பெயராலும், தாய்நாட்டின் விடிவின் பெயராலும், இனத்துவத்தின் பேராலும், இவை எல்லாம் தவிர்க்கமுடியாது என்பது எப்படி நம்பவைக்கப்படுகிறது என்பது இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சூழலில் அவசியமானவை. அப்படி ஒரு அனுபவத்தைத் தர இந்த கட்டுரை 60 வருடங்களுக்கு முந்திய சூழலுக்குள் கொண்டு போகிறது.

ஹிட்லரின் ஜேர்மனியில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடமானது குடும்பம் தாய்மை போன்றனவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியவாறான நிலையே. என்றாலும், அத்தோடு யுத்தம் தொடக்கப்பட்ட காலப்பகுதியில், ஜேர்மயின் யுத்த தந்திரோபாயமானது யுத்தத்தளபாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாகைளில் அதிகளவில் உழைப்பை செலுத்தியவர்கள் பெண்களாவர். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அடிமை உழைப்புக்கு அள்ளுப்பட்டு வந்த காலத்தில் இந்த நிலைமை அதிகரித்தது. 1933 ஜனவரியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரும்போது தொழிற்சா­லைகளில் பணிபுரிந்த உழைப்பாளர்களில் 37.3 வீதம் பெண்களாக இருந்தனர். 1936ஆகும்போது பெண்களின் தொகை 31.8ஆக குறைந்தது. என்றபோதும் 1940 ஆகும் போது மீண்டும் 37.1 வரை வேலை செய்யும் பெண்களின் வீதாசாரம் உயர்ந்தது.

1935இல் யூலை 26 அன்று தேசிய உழைப்புச்சேவை சட்டத்தின் கீழ் பெண்கள்-ஆண்கள் இரு தரப்பினரும் கட்டாய தேசிய சேவைக்கு அமர்த்தப்பட்டனர். 1940இல் இந்த சட்டத்தை மீறமுடிந்த பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. திருமணம், தாய்மை மற்றும் குடும்பம் பற்றிய கற்பிதங்களும், பிரசாரங்களும் எவ்வாறிருந்தபோதும் நாசி ஆட்சியின் கீழ் தொழில்புரிந்த பெண்களின் தொகை நிச்சயமாக அதிகமாக இருந்தது. இதில் உள்ள ஆச்சிரியம் என்னவென்றால் நாசி ஜெர்மனியில் வேறு துறைகளில் பெண்களுக்கு இருந்த இடம் பற்றி தெரியும்போது தான். பல்கலைக்கழக பிரவேசம் தொடர்பாக கடைபிடித்த கொள்கையின் காரணமாக பெண்களின் பிரவேசம் 10க்கு 1 ஆக இருந்தது. இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களில் மூன்றில் இரண்டு வீதம் பெண்க­ளாக இருந்தனர்.

இவற்றை ஆராய்ந்து கொண்டு போனபோது எமக்கு கிடைக்க முடிவுகள் இதுதான். பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பது என்பது நாசிச் சிந்தனையின் பிரதான நோக்கமாக இருக்கவில்லை, மாறாக ”சகல உயர் தொழில்­களிலிருந்தும் அவர்களை நீக்கி அவர்களை குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக ஆக்குவதாகவே இருந்தது.”

1934இல் நாசி வைத்தியச் சபையொன்றில் உரையாற்றிய வைத்தியத்துறை தலைவர் டொக்டர் வாக்னர் இப்படிக் கூறினார். ”நாங்கள் பெண்களுக்கு உயர் கல்வியை அளிக்கும் எண்ணத்தை விட்டுவிடுவோம்' என்றார் அவர்.

புதிய முறையினை எதிர்த்து தமது குரல்களை பெண்கள் வெளிப்படுத்தாமலு­மில்லை. திம் எனும் டொக்டர், சோபி சோக், பர்னர், அன்னா பெப்ரிட்ஸ் போன்றோர் இதில் அடங்கினர். ஆனால் இவர்களின் குரல்கள் படிப்படியாக ஊமையாக்கப்பட்டன. புதிய அரச யந்திரம் உறுதிபடுத்தப்பட்டதன்பின், நீதிபதிகளாக கடமையாற்றும் உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. 1936 ஆகும் போது நீதிமன்றங்களில் எந்தவொரு பதவியையும் பெண்கள் வகிப்பது தடை செய்யப்பட்டது. நாசிகள் பதவிக்கமர்ந்த போது ரய்க்ஸ்டாக் எனும் பிரதேச அட்சியில் பெண் உறுப்பினர்கள் 30 பேர் அங்கம் வகித்தனர். 1938இல் ஒரு பெண்ணும் அங்கம் வகித்திருக்க­வில்லை.

இதே காலப்பகுதியில் பிரச்சார சாதன­ங்களால் தாய்மை கருத்தாக்கங்களும், குடும்பம், வீடு உயர் குண்கள் என்பன பற்றிய கருத்து­ருவாக்கங்களும் பரப்பப்பட்டன. இதன் நோக்கம் பெண்களை உழைப்பில் ஈடுபதிலிருந்து அகற்றும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்திருக்க முடியும். இரண்டு வருமானமுடைய குடும்பங்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், எந்தவித காரணமுமின்றி திருமணமான, திருமணமாகாத பெண்களை தொழி­லிருந்து நீக்கப்பட்­டதையும் நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டுவ­தோடு, இவ்வாறான மேற்தோற்றத்தில் நிலைமைகள் உரு­வாகும்போது தன்னை உறு உழைப்­புச் சந்தையில் குறைந்த ஊதியத்திற்கு தள்ளப்பட்டோ அல்லது உதவியாளராகவோ தள்ளப்படும் நிலைமையை மொளனமாக ஏற்றுக்கொள்ள தயார்படுத்தப்பட்டாள்.

அமைச்சுப் பதவி வகித்த வில்ஹெம் பிரிக் இன் கருத்தின்படி ”தாய்க்கு தமது பிள்ளைக்காக அர்ப்பணிப்பதும், மனைவி கனவனுக்காக அர்ர்ப்பணிப்பதும் பெண்களின் ஆயுட்கடமையானது.” திருமணமாகாத பெண் தன்னை பாதுகாக்க ”பெண்களுக்கே உரித்தான” தொழில்களை செய்வதற்கூடாகத் தான் தன்னை பேணக்கொள்ளலாம். இன்­னொருவகையில் கூறப்போனால் தொழிலானது ஆண்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்றபோதும், நாசி அரசின் ஆணாதிக்கமானது முக்கியத்துவம் பெறுவதற்கு பிரதான காரணம் உளவியல் ரீதியான மற்றும் ஐதீகம் சார்ந்­ததுமாகும். கட்சியின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது வெளிப்படையாக தெரிகிறது. கட்சியின் ஆரம்பகால சித்தாந்­தவாதியாக இருந்த கொட்பி பெடர் மக்களுக்கு பெண்களின் இயல்பு பற்றி தெளிவுபடுத்தும்­போது இவ்வாறு குறிப்பிடுகிறார்-

பாலியல் ஜனநாயகத்தை திட்டமிட்டு யூதப் பெண்கள் எம்மிடமிருந்து பறித்திருக்கிறார்கள். இளைஞர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு இதனை இல்லாது செய்யவேண்டும். அப்போதுதான் உலகின் மிகவும் புனிதமான பொருளான வேலைக்காரி மற்றும் பணிப்பெண்ணாக செயற்படும் பெண்ணை மீளவும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1934 செப்டம்பர் 8 அன்று நூரெம்பர்க்கில் ஹிட்லர் உரையாற்றியபோது கட்டற்ற பாலியல் புரட்சிக்கு காரணம் யூத கம்யூனிசமே என்று கூறினார்.

”பெண்கள் விடுதலை” பற்றிய கருத்தாக்கம் கண்டெடுக்கப்பட்டது யூதப்பெண்களிடமிருந்தே என்பதால் அதில் கருக்கொண்டு இருப்பதும் யூத ஆத்மாவே.

பெண்களின் நிலைமை குறித்து ஹிட்லர் கொண்டிருந்த கொள்கை மிகவும் தெளிவானவை. ஏனையோரைப்போலவே அவருக்கும், பெண்-ஆண் இரு பாலினருக்குமான வேறுபாடு இயற்கையானது. ”அவளின் உலகமானது கணவன், குடும்பம், பிள்ளைகள், வீடு. ஆனால் இந்த சின்ன உலகம் எந்தவொரு காரணத்தைக்கொண்டும் பாதுகாக்காவிட்டால், அதைவிட பெரிய உலகத்தை பாதுகாப்பது யார்? பெண்ணானவள் கனவனின் உலகத்­திற்குள் நுழைய முயற்சிப்பது, எமது உணர்வுக­ளுக்கு ஏற்புடையதல்ல. உண்மையில், இந்த இரு உலகங்களும் வேறுவேறாக இயங்குவது இயல்பானதாகத் தோன்றும். ஒரு சாராருக்கு உரிமையாவது என்பது உணர்வுபூர்வமான, ஆத்மார்த்த ரீதியலான பலமே. ஆண்களே உலகைத் தாங்கி நிற்கின்றனர். பெண்களே குடும்பத்தை தாங்கிநிற்கின்றனர். பெண்களின் உரிமை என கருத்தப்படுவது யாதெனில் இயற்கையால் அவளுக்கு நியமமாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைக்குள் கிடைக்கக்கூடிய கவனிப்பு அவளுக்கு கிடைக்கச்செய்வதையே. பெண்களும் ஆண்களும் பூரணமாகவே வெவ்­வேறு வாழ்க்கையைஅனுபவிக்கும் உயிரிகள் இரண்டு. ஆணிடம் ஆட்சி செலுத்துவது தர்க்க அறிவு. அவன் ஆராய்வான். சில வேளைகளில் புதிய உலகைக் கண்டுபிடிப்பான். ஆனால் அவனின் தர்க்க அறிவால் பெறும் விளைவுகள் பெரும்பாலும் மாற்றமுறவும் கூடும். உணர்வுகள் தர்க்க அறிவை விட சில வேளைகளில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. பெண்கள் என்பவர்கள் உணர்வுகள்.”

மேற்படி மேற்கோள் ஹிட்லரின் புகழ்பெற்ற நூலான ”மயின் காம்ப்” என்பதில் எடுக்கப்­பட்டது. அதில்இன்னுமொரு இடத்தில் ”ஜேர்­மனிய இளம் பெண்கள் அரசின் முன் சேவகர்­கள். அவள் பிரஜையாவது மணமானதன் பின்னர்தான்.” என்றும் குறிப்பிடுகிறார்.

முதலாவது நாசி வேலைத்திட்டதின் மூலம் கோரப்பட்ட பிரதான கோரிக்கை பெண்களின் வாக்குரிமையை இல்லாதொழிப்பது என்பது. 1918இல் வைமார் அரசால் ஜேர்மன் மக்கள் பெற்றுக்கொண்டு சர்வஜன வாக்குரிமை நாசி ஆட்சி யந்திரம் பதவிக்கு அமர்ந்ததும் இல்லாமல் செய்யப்பட்டது. பெண்கள் பொது வாழ்க்கையில் அந்நியப்படுத்தப்பட்டு, அரச பதவிகளில் இருந்து அகற்றப்படுவதும் நாசிகளின் கொள்கையாகும். ஹிட்லரின் ”பெண்கள் கல்வியின் மூலம் இலக்காக்கிக் கொள்ளவேண்டியது எதிர்கால தாய்மைக்கு தயாராவது குறித்தே” எனும் கூற்று முக்கியமாக அவசியப்படுவது எதற்கெனில் இராணுவ அரசொன்றில் ஆட்பலத்தை அதிகரிப்பதற்கான நீண்டகால இலக்கை கருத்தில் போதே. நாட்டுக்காக மரணமாவதற்காக குழந்தைகள் அதிகளவில் பிறந்துகொண்டிருக்க வேண்டும். பதிவரதைத்தனத்தை காத்துக்கொண்டுஒரு நல்ல தாயாக இருப்பது ஒரு எடுத்தக்காட்டான பெண்ணின் கடமையாக வலியுற்றத்தப்படுவது, பாலியல் தேவைகளுடன் கருவளத்தையும் கட்டாயமாக பிணைத்து வைத்திருப்பதும் முக்கியமான வழிமுறையென தெரிகிறது. நாசிகள் குடும்பக்கட்டுப்பாட்டுக்கும், கருக்­கலைப்புக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அது போல இந்த வழிகளின் மூலம் பெண்களின் பாலியல் மற்றம் கருவள உரிமைகளை தீர்மானிப்பதும், கட்டுப்படுத்துவதும் அரசின் நடைமுறை தத்துவமாக இருந்தது.

நாசி கட்சியின் ஆரம்பகாலத்தில் முக்கி­யமான பாத்திரமாற்றிய ப்லே ட்ஸ்க்ளிங் எனும் பெண்மணியும் இதே வகையான கருத்துக்க­ளுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்தார். அவர் இப்படிக் கூறியிருந்தார். ”ஜேர்மனிய பெண்களின் சீவியக் கடமை ஜேர்மனிய கனவனுக்கு சேவை செய்வதே. வீட்டைப்பேணிக்காத்து ஆணுக்கு திருப்தி ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்வதே” என்றார் அவர்.

நாசிக் கொள்கையானது ஆணுக்கே ஆணுக்குhpய ஒன்றாகவே இருந்து வந்தது என்பது சந்தேகத்திற்கிடமில்லை. பிரசாசரத்­துறைக்கு பொறப்பான அமைச்சர் கோயபல்ஸ் இன் கருத்தின்படி ”நாசி இயக்கமானது இயல்பாகவே ஆண்களின் இயக்கமாகும். பொது வாழ்க்கையில் ஆலோசனைகளைப் பெற்றுக்­கொள்வதில் கடினமான காரியமில்லை. அரசியல் எனும் மிகப்பெரும் துறை இதிலொ­ன்றாகும். இது நிச்சயமாக ஆண்களுக்கு உரித்தாக இருக்க வேண்டிய ஒன்று. நாங்­கள் பொது வாழ்க்­கையில் பெண்களை விரட்டும் போது அவ்வாறு செய்வது அவளிடமிருந்து விடுபடுவதற்கு அல்ல. அவளுக்கு உயர்ந்த கௌரவம் கொடுப்­பதற்காகவே. பெண்க­ளுக்கு உரித்தான பிர­தானமானதும், முக்கிய­மானதுமான கடமையா­னது மனைவியாதலே. நாங்கள் இந்த கருத்­திலிருந்து திரும்பினோ­மானால் அது பெரும் குற்றமாகும்.”

நாசி ”பரிசிலிப்பு” குறித்து மிகவும் எமக்கு முக்கியமாவது அது பெண்களின் நிலைமையை சட்டரீதியில் கட்டுப்படுத்துவதாலேயே. நாசி அரச இயந்திரத்தின் கீழ் திருமணமாகாத பெண்-ஆண் ஆகிய இரு சாராரிடமிருந்தும் வரி வசூலிக்­கப்பட்டது. 1933 யூன் 1ஆம் திகதி முக்கியத்­துவம் வாய்ந்த விவாகக்கடன் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி விவாகமொன்றின் மூலம் பெறப்பட்ட சகல குழந்தைக்கும் வரிவிலக்கு வழங்கப்பட்டது. பெண்ணின் பெயருக்கு இந்த கடன் வழங்கப்பட்டாலும் அதனை பெற்றுக் கொண்டது ஆண்தான். இந்த கடன் முறையின் மூலம் தாய்மார் தொழில்செய்வது தடைசெய்யப்­பட்டிருந்தது.

நாசி ஜேர்மனில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய பிரச்சாரங்கள் செய்வது வைத்தியர்களுக்குக் கூட தடைசெய்யப்பட்டிருந்ததானது மோசகரமான செயலாக இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை செய்துகொண்டிருந்த நிலையங்கள் 1993இன் பின் மூடப்பட்டன. விசேட அனுபமதிப்பத்திரமின்றி குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்குவது, பிரசுரங்கள் வெளியிடுவது, விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது.

நாசி அரசு பற்றிய ஒட்டுமொத்த சாராம்­சமாக பார்க்கும்போது ”புனிதமான தாய்மை' மற்றும் குடும்பத்தில் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறியும் அதே வேளை பொருளாதார காரணங்களும் காரணியாக தொழிற்பட்டி­ருக்கிறது. அரசுக்கு தேவைபட்டபடி மிகவும் கடினமான செயற்­பாடுகளில் ஈடுபடுத்து­வதற்காக ஜேர்மனிய பெண்கள் தொழில் ரீதியாகவும் அரசியல் சமூக பங்களிப்புக­ளிலிருந்து அந்நியப்ப­டுத்தப் பட்டதோடு மட்டுமல்­லாமல் குடும்­பத்­தில் அனைத்து உறுப்பினர்­களுக்கும் கட்டாயம் நிறுவனம­யப்படு­வதற்காக அரசுக்கும், குடும்ப அலகுக்கும் இடையில் போட்டி நிலைமை எற்பட்டது.

ஆனால் நாசி அரசு ஆணாதிக்கத்தை சித்தாந்த வழிகொண்டு நடத்தப்பட்ட தன்மை பிரதானப்பட்டது. பெண்களின் மீதான அடக்குமுறைகளின் மேல் எழுப்பப்பட்ட சமூக கட்டமைப்புக்குள் சர்வாதிகார இராணுவ ஆட்சி­யந்திரத்தை நடத்துவதென்பது இலகுவாக இருந்தது.

மீண்டுமொருமுறை எமக்கு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும் விடயம், பாலியல் அரசியல் சமூக அமைப்புக்குள் பொருளாதார மற்றும் வேறும் துறைகளுடன் தொடர்புற்றிருக்­கக்கூடும் ஆனால், அது பிரதானமாக ஏதாவது வாழ்முறை சார்ந்த கொள்கையாகவும் இருப்பது தான் எமது கவனத்துக்குரியது. எமது இருப்பின் மீது சகல மட்டங்களிலிருந்தும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எமது மரபில் இறுக்கமான உளவியல் சித்தாந்த கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இன்று வரை அதிலிருந்து எவராலும் இலகுவாக கழன்றுவிடமுடியாதபடி இருக்கிறது.


-தமிழில் - என்.சரவணன்

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster