Wednesday, January 28, 2009

பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்:
கொள்கையளவில் ஏற்கும் கட்சிகள் நடைமுறையில்...?
-சேப்பாலி கோட்டேகொட-




என்.சரவணன்

அண்மையில் மும்பாய் பெண்ணான ரீட்டா முகத்துவாரம் காக்கைதீவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்­கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டமை நாடெங்கிலும் அதிர்ச்சியூ­ட்டிய செய்தியாகப் பரவியதைத் தொடர்ந்து அது குறித்து தொட­ர்பூடகங்களில் முக்கியத்­­து­வம­ளிக்­கப்பட்ட செய்தியாக ஆனது அது. கடந்த 21ஆம் திகதியன்று கொழும்பு லிப்டன் வளைவில் வைத்து பெண்கள் அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தது பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு (இவ்வமைப்பு பெண்ணுரிமை­களின் கண்காணிப்பு எனும் காலாண்டு கண்கா­ணிப்பு அறிக்கையொன்றையும் கடந்த இரண்டு வருடங்களாக வெளியிட்டு வருகி­றது.) எனும் நிறுவனமும் அரசு சார்பற்ற பெண்கள் அமைப்­புகளின் கூட்டமைப்பு எனும் நிறுவனமும ஆகும்.

பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பின் இயக்குனர்களில் ஒருவவரும், அரசு சார்பற்ற பெண்கள் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான கலாநிதி சேப்பாலி கொட்டேகொட கொழும்பு பல்கலைக்­கழகத்தில் பெண்ணியத்துறையின் விரிவுரை­யாள­ராக இருந்து வருபவர்.

1995இல் பீஜிங்கில் நடந்த நான்காவது உலகப் பெண்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செயற்திட்டங்கள் என்பவற்றை கண்காணிப்­பதற்கான பணியையும் இவ்வ­மைப்பு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை அம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கையில் உடனடியாக செயற்படுத்த வேண்டிய சிலவற்றைத் தெரிவு செய்து அவை தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இவ்வமைப்பை, தலைமை­யேற்று நடத்தும் சேப்பாலி கொட்டே­கொடவுடன் அச்செயற்பாடுகள் குறித்து சரிநிகர் உரையாடியது.


இலங்கைப் பெண்களின் அரச சார்பற்ற கூட்டமைப்பினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் குறித்து கூறுங்களேன்.

பீஜிங்கில் நான்காவது உலகப் பெண்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட பீஜிங் செயற்திட்டத்தை நிறைவேற்றுவதாக பல நாடுகள் கையெழுத்திட்டன. அதில் இலங்கை அரசும் ஒன்று. அந்த வகையில் இலங்கையில் சமகால சூழலில் பெண்கள் முகம் கொடுத்து வருகின்ற பிரதான ஐந்து பிரச்சினைகளை மையப்படுத்தி அரசை நிர்ப்பந்திக்கின்ற அதேவேளை அவை குறித்து சமூகத்தில் விழிப்பூட்டுவதற்காக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இத்தலைப்புகளை தீர்மானிக்கின்ற போது எமது கூட்டமைப்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களையும், சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 35 அமைப்புகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்தே நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்த வேலைத்திட்டத்தை எப்போது ஆரம்பித்தீர்கள்?

இவ்வருடம் ஜனவரியிலிருந்து இதனைச் செய்து வருகிறோம். முதலாவது விடயமாக நாங்கள் தீர்மானமெடுப்பதிலும், அரசியலிலும் பெண்களின் பங்களிப்பு என்பதை தெரிவு செய்தோம். ஜனவரியில் மாகாண சபைத்தேர்தலுக்கான முயற்சிகள் செய்யப்பட்டு வந்த வேளை தான் நாங்கள் அதனைச் சரியான தருணமாக எண்ணி அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம். பொதுவாகவே அரசியற் கட்சிகளை நோக்கி நாங்கள் ”எங்கே உங்கள் கட்சிகளில் பெண்களின் பங்களிப்பு, பிரதிநிதித்துவம்?” என்கின்ற கேள்விகளை எழுப்பி சவாலிட்டோம். பின்னர் அதனையும் தாண்டி உத்தியோகபூர்வமாக கட்சித் தலைமைகளைச் சந்தித்து இவை குறித்து உரையாட முடிவு செய்தோம். பிரதான கட்சிகளிலிருந்து இந்த பேச்சுவார்த்தையைத் தொடக்கினோம்.

எந்தெந்தக் கட்சிகள்?

ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க, மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி என நாங்கள் தொடாந்து சந்தித்து வந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியோடு தொடர்பு கொண்ட போது, அவர்கள் இவ்விடயத்தில் தங்களுக்கு எந்த முரண்பாடுமில்லாமையால் இது குறித்த பேச்சுவார்த்தை அவசியமில்லையென்றும் அவை குறித்த கடிதங்களை அனுப்பி வைக்கும்படியும் கூறினர்.

இ.தொ.கா.வுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் எமக்கு நேரம் ஒதுக்கித் தருவதில் பல மாதங்களாக பின்வாங்கிக் கொண்டே உள்ளனர். அவர்கள் எப்போதுமே பெண்களை தமது தேர்தல் வேட்பு மனுக்களில் போட்டு வந்திருப்பதாகவும், கட்சியிலும் பெண்கள் பலர் செயற்படுவதாகவும் தமக்கு இதில் எந்தவித பிரச்சினையும் இல்லையென்றும் கூறிக் கொண்டிருந்தனர். பல கட்சிகளுக்கு எங்கள் மீது சந்தேகங்களும் இருந்தன. இவர்களின் பின்னால் எந்தக் கட்சி இருக்கின்றது என்கின்ற தேடலும், கட்சிச் சாயம் பூசித் தட்டிக் கழிக்கவும் முயன்றனர். எனவே தான் நாங்கள் முதலில் தொடர்பு சாதனங்களுடன் இவை குறித்து விரிவாகப் பேசவென தொடர்பு­சாதனவியலாளர்களோடு கலந்துரையாடலொன்றைச் செய்தோம். அவர்களுக்கூடாக தொடர்ந்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டோம்.

இதன் போது தான், எமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நுவரெலியாவைச் சேர்ந்த ”சிங்கள-தமிழ் கிராமிய பெண்கள் அமைப்பு” மாகாண சபைத் தேர்தலில் சுயாதீனமான ”பெண்கள் குழு”வொன்றை களத்தில் இறக்கவிருப்பதாகவும் அதற்கு துணை புரியுமாறும் கோரினர். இதனைச் சாதகமாக ஆக்கிக் கொண்டு நாங்கள் அவர்களுக்கான பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் செய்து கொடுத்தோம். அவர்களின் தேர்தற் கொள்கைகளும் மிகவும் முன்னேற்றகரமானதாக இருந்தது.

இதன் போது திடீரென அரசு தேர்தலைப் பின்போட்டது. ஆரம்பத்தில் நாங்கள் எங்களின் நடவடிக்கைகளை, அரசியற் கட்சிகளை நோக்கியும் இரண்டாவதாக வேட்பாளர்கள், வாக்காளர்களை இலக்காகக் கொண்டும் செயற்படவிருந்தோம். வேட்பாளர்களை நோக்கி முதலில் பெண்களுக்கு மட்டும் வாக்கிடுங்கள் என்று கூறாமல் 'பெண்கள் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டிய, காட்டி வருகின்ற, வேட்பாளர்களுக்கு, கட்சிகளுக்கு மாத்திரம், வாக்கிடுங்கள் என்று கேட்டிருந்தோம்.

நீங்கள் உரையாடிய கட்சிகள் எவ்வாறான பிரதிபலிப்புகளைச் செய்தன?

அக்கட்சிகளில் பெரும்பாலானவை தங்களுக்கு பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவது குறித்த விடயத்தில் கொள்கையளவில் எந்த முரண்பாடுகளும் கிடையாதெனவும், பெண்கள் தான் முன்வருவதில்லை­யென்றும் கூறினர். அக்கட்சிகள் தங்கள் கட்சிகளில் பெண்கள் குறித்த அக்கறையின்மையே பெண்களின் முன்வராமைக்கான காரணம் என்பதை ஏற்றுக்­கொள்ளவில்லை. வாய்ப்புகளை வழங்கக் கூடிய இடங்களில் கூட வழங்கப்படாமை குறித்து பல ஆதாரங்களுடன் நாங்கள் விளக்கினோம். அவர்களின் பொறுப்பின்மையை சுட்டிக் காட்டினோம். இன்று சகல துறைகளிலும் பெண்களின் ஈடுபாடு, பங்களிப்பு பெருகி வருகிறது என்பது உண்மை தான், ஆனால் அங்கெல்லாம் அவர்கள் தலைமை நிலைகளிலோ, அல்லது தீர்மானமெடுக்கின்ற அதிகாரம் வாய்ந்தவர்­களாகவோ, இல்லை மாறாக வெறும் சுரண்டலுக்குள்­ளாப­வர்களாக மட்டுமே உள்ளனர்.

ஏறத்தாழ ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டத்தின் மூலம் என்ன விளைவுகளைப் பெற முடிந்தது?

இவ்விடயங்கள் குறித்து தொடர்புசாதனங்கள், கட்சிகள், வெகுஜன அமைப்புகள், மற்றும் வெகுஜன மட்டத்தில் பேசுபொருளாக ஆக்க முடிந்திருக்கிறது. ஏற்கெனவே அவை பேசப்படவில்லை என்று கூறவரவில்லை. எமது செயற்பாடுகளின் வாயிலாக இவ்விடயங்களைத் துரிதப்படுத்தியும், பலப்படுத்தியும், உறுதிப்படுத்தியும் உள்ளன. இனி இவை குறித்து பூஜ்ஜியத்திலிருந்து தொடக்க வேண்டியதில்லை.

இவற்றுக்கு காலவரையறை வைக்கவில்லையா?

பெண்கள் பிரச்சினை குறித்த விடயங்கள் அனைத்திலும் தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்ற அதே நேரம் ஒவ்வொன்றுக்குமான முக்கியத்துவத்தை காலவரையறைக்குட்படுத்தியே ஆக வேண்டியுள்ளது. அதன்படி இரண்டாவது நடவடிக்கையாக பெண்களுக்­கெதிரான வன்முறைகளை எடுக்கவிருக்கின்றோம்.

இவை குறித்த உங்களது முயற்சிகள் வெறும் பிரச்சாரங்களுடன் மட்டுப்பட்டுவிடுகின்றனவா?

இல்லை, ஆனால் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஏனெனில் விழிப்பூட்டல் செயற்பாட்டில் தொடர்பு சாதனங்களின் ஒத்துழைப்பு இன்றி எதனையும் செய்ய முடியாதவர்களாயுள்ளோம். மேலும் எங்களின் வலைப்பின்னலில் சம்பந்தப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்தும் அவ்வப் பிரதேங்களில், அந்தந்த சமூகங்களில் இவை குறித்த செயற்பாடுகளை வீச்சுடன் மேற்கொள்ள எமது இந்த வேலைத்திட்டங்கள் கைகொடுக்கின்றன.

பீஜிங் செயற்திட்டத்திலிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்தடுத்த விடயங்கள் எவை?

நவம்பர் 25ஆம் திகதி பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம். அது போல டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். தற்போது நாங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொண்டுள்ள விடயம் ”பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” அடுத்தது ”பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே!” என்பவை. எனவே தான் நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியாக பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருக்கிறோம். அதற்கு பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி போன்ற அனைத்து ஊடகங்களையும் உயர்ந்த பட்சம் பயன்படுத்தி பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்தும், விழிப்பூட்டல் செயற்பாடுகளையும் செய்யவுள்ளோம். அவற்றைத் தவிர சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், வீதிநாடகங்கள், மற்றும் இன்னும் பல கலை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டம் என தொடர்ந்து இந்த நாட்களில் நடத்தவிருக்கிறோம்.

இதற்கு அடுத்த தலைப்பாக எதனைத் தெரிவு செய்திருக்கிறீர்கள்?

மார்ச் மாதத்திலிருந்து ”பெண்களும் வேலையும்” என்கின்ற விடயத்தை முக்கிய கருப்பொருளாக எடுக்கவிருக்கின்றோம். இதன் போது ஊதியம் பெறுகின்ற வேலைக்கும், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைக்குள்ளாகும் பெண்களின் வேலைகளின் பெறுமதி குறித்து அக்கறை செலுத்தவிருக்கின்றோம். சமூகத்திலும், தீர்மானமெடுக்கின்ற அதிகாரமுள்ளவர்கள் மத்தியிலும், கொள்கைகளை நிர்ணயிப்பவர்கள் மத்தியிலும் வீட்டு வேலைகளும் ”பெறுமதிக்குhpய வேலை”கள் தான் என்பது குறித்த கருத்தை உறுதி செய்யுமுகமாக பிரச்சாரங்களை செய்யவிருக்கின்றோம். இன்று எந்தப் புள்ளி விபரங்களிலும் பெண்களின் வீட்டு வேலைகள் கணிப்புக்குரிய ஒன்றாக இல்லை. சிங்கள-தமிழ் புதுவருட காலத்திலேயே இதனை மேற்கொள்ளவிருக்கின்றோம் ஏனெனில் அந்தக் காலத்தில் பெண்களின் வேலைகள் முக்கியத்துவ­மிக்கதாக அமைவதுண்டு. மேலும் அவற்றுக்கு பண்பாட்டு ரீதியான காரணிகளும் இதனுடன் இணைந்திருப்பதால் இவை குறித்து உரையாட இதுவே பொருத்தமான காலமாக அமையும்.

இதற்கு அடுத்ததாக -நான்­காவதாக- சுகாதார உரிமைகளை முன்னெ­டுக்கவுள்ளோம். யூன் மாத­மளவில் இவற்றைத் தொடக்குவோம்.

இவையனைத்துக்கும் கால எல்லையை வகுத்துள்ளீர்களா?

இரண்டாண்டு காலத்திற்குள் இந்த நான்கு விடயங்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள­விருக்கிறோம்.

நீங்கள் முன்னெடுத்த செயற்பாடுகளின் விளைவுகளை எப்படிஅளவிடுகிறீர்கள்?

எமது அமைப்பு மையப்ப­டுத்தப்பட்ட ஒரு மத்திய அமைப்பு என்கின்ற ரீதியில் அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைகளை பரஸ்பரம் ஏனைய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பரிமாறுகிறோம்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த விடயத்தைப் பேசுகையில் அதில் கலந்துகொண்ட பல பெண்கள் 'எத்தனை காலம் இக்கட்சிகளை நம்பியிருப்பது? நாங்கள் பெண்களுக்கென்று அரசியற் கட்சியொன்றை ஆரம்பிக்கத் தான் வேண்டுமென ஒருவர் தொடங்க ஏனையோரும் அதனைத் தொடர்ந்து மாறிமாறி உத்வேகம் கொண்டு பேசினர். அதன் விளைவாக நுவரெலியாவில் பெண்கள் அரசியற் குழு போட்டியில் இறங்கியது. இப்ப­டியாக எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும். அதன் பிறகு அந்த உத்வேகத்தில் தைரியத்தில் ஏனையோரும் ஒருவர்பின் ஒருவராக அல்லது கூட்டாக களத்தில் இறங்குவார்கள். அந்த வகையில் எமது செயற்பாடுகள் பல விளை­வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster