Tuesday, January 27, 2009

பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்
இருந்ததையும் இழக்கும் நிலையில்...!




உலகின் முதலாவது பெண் அரச தலைவரை உருவாக்கிய நாட்டில் அதே பிரதமரின் இறுதி வாக்களிப்போடு நடந்து முடிந்த 11வது பாராளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கின்றனர் என்று நாங்கள் பெருமையுடன் கூறிக்கொள்வோம்.
ஆனால் 1977க்குப் பின்னர் முதற்தடவையாக மீண்டும் பெண்களின் பிரதிநிதித்துவ வீதாசாரம் பாராளுமன்றத்தில் குறைந்துவிட்டது என்பதை இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்த கால இடைவெளிக்குள் அதிகளவு பெண் அமைச்சர்களையும், பெண் உறுப்பினர்களையும், பெண் ஜனாதிபதியையும், பெண் பிரதமரையும் கூட ஏக காலத்தில் கொண்டிருந்தும் கூட அதற்கடுத்த படியாக நடந்துமுடிந்திருக்கிற தேர்தலில் பெண்களின் பிரதிநித்துவ வீதாசாரம் இருந்ததை விட குறைந்ததைக் கவனத்தில் எடுக்க வேண்டும். (பார்க்க அட்டவணை) 1977இல் மொத்த பாராளுமன்ற பிரதிநிதிகளில் பெண்களின் வீதாசாரம் 2.3 வீதம் மட்டுமே இருந்தது. 1989 மற்றும் 1995 ஆகிய 9வது 10வது பாராளுமன்றத்தில் 5.1 வீத பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் இம்முறை அது 4 வீதமாக மீண்டும் குறைந்திருக்கிறது.

29 அரசியற் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களிலுமாக மொத்தம் 5048 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்திருந்தனர். வரலாறு காணாத அளவுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட குழுக்களினதும், கட்சிகளினதும் எண்ணிக்கை கூட அவை போட்டியிட்ட தொகுதிகளும் அதிகம். சென்ற தடவை போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 1440 பேர் மட்டுமே ஆகும். இந்த அடிப்படையில் நோக்குகையில் பெண் வேட்பாளர்கள் இம்முறை அதிகரித்தது ஒன்றும் பாரிய விடயம் அல்ல.

ஆனால் இம்முறை போட்டியிட்ட 117 பெண் வேட்பாளர்களில் 9 பேர் தான் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். சென்ற முறை 12 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொ.ஐ.மு.வின் மூலம் 14 பெண் வேட்பாளர்களும், ஐ.தே.க. 8 பெண் வேட்பாளர்களையும், ஜே.வி.பி. 23 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தது.

இம்முறை சுமேதா ஜயசேன, பவித்திரா வன்னி ஆராச்சி, அமரா பியசீலி ரத்நாயக்க, சந்திரானி பண்டார, பேரியல் அஷ்ரப், சோமா குமாரி தென்னகோன், சிறியானி பெர்ணான்டோ, அன்ஜன் உம்மா, சுரங்கனி எல்லாவெல ஆகிய 9 பேருமே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்களான மகளிர் விவகார அமைச்சா ஹேமா ரத்நாயக்க, பிரதி அமைச்சராக இருந்த நிருபமா ராஜபக்ச, உணவு, வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த சுமித்ரா பிரியங்கனி அபேவீர ஆகியோர் தேர்தலில் தோல்வியுற்றனர்.

அது போல ஐ.தே.க.விலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்த இம்முறை வேட்பாளர்களான சுனேத்ரா ரணசிங்க, கல்யாணி வீரசிங்க, ரேனுகா ஹேரத், வீமாலி கருணாரத்ன, ஷீலா யாப்பா, ராஜமனோகரி புலேந்திரன், சமந்தா கருணாரத்ன, அனுலா பஸ்நாயக்க, பத்மா வெத்தேவ, சம்பா கலுகல்ல, சிறிமணி அத்துலத் முதலி, சுவனீத்தா குணரத்ன ஆகியோரும் இம்முறை ஆசனங்களை இழந்துள்ளனர்.

இம்முறை தெரிவாகியுள்ள 10 உறுப்பினர்களில் 5 பேர் புதிய முகங்கள். பேரியல் அஷ்ரப் (என்.யு.ஏ.), பொ.ஐ.மு விலிருந்து சுரங்கனி எல்லாவெல, சோமா குமாரி தென்னகோன், சிறியானி பெர்ணான்டோ, ஐ.தே.க.விலிருந்து சந்திராணி பண்டார ஜே.வி.பி.யிலிருந்து அன்ஜன் உம்மா, ஆகியோரே அந்த முகங்கள்.

இலங்கையின் சரித்திரத்திலேயே முதலாவது தடவையாக முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒரு விசேட அம்சம். அதுவும் இரு பெண்கள். முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த பேரியல் அஸ்ரப் ('இவரது கணவர் தான் மறைந்த அஸ்ரப்') மற்றும், ஜே.வி.பியின் சார்பில் தேசியப் பட்டியலின் மூலம் தெரிவாகியிருக்கும் அன்ஜன் உம்மா. இவர்களில் பேரியல் அஸ்ரப் இலங்கையில் பாராளுமன்றவாத அரசியலுக்குள் நுழைய முடிந்த பலரும் உள்நுழைந்த வழியான அனுதாப வாக்கு, குடும்பச் செல்வாக்கு, என்பவற்றால் வந்தவர் எனலாம். ஆனால் அன்ஜன் உம்மா கட்சி அரசியலுக்கூடாக தெரிவானவர். அவர் ஏலவே உள்ளூராட்சி சபையில் அங்கம் வகித்தவர். இவர் தான் இலங்கையின் வரலாற்றில் முதலாவது தடவையாக அரசியல் நிர்வாக கட்டமைப்பொன்றுக்கு தொpவான முதலாவது முஸ்லிம் பெண்ணாவார். அது மட்டுமன்றி முதலாவது தடவையாக ஜே.வி.பி.யின் பெண் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. ஆனால் இவர் ஜே.வி.பி.யினரால் வெறும் ”ஷோ காட்டலுக்கான” (சிறுபான்மை இனங்களுடனான நெருக்கத்தை வெளிக்காட்ட) பொம்மையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறார் எனும் குற்றசாட்டு ஜே.வி.பி.யின் பலரும் முன்வைக்கின்றனர். இம்முறை ஒரு தமிழ் பெண்ணும் தெரிவாகவில்லை. இருந்த ராஜமனோகரி புலேந்திரனும் தோல்வி.
கடந்த மூன்று வருடங்களாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகாpப்பதற்கான கோரிக்கையை உயர்த்திப் பிடித்தபடி பெண்கள் இயக்கங்கள் கோசங்களை முன்வைத்தாலும், பல அரசியற் கட்சிகளை நேடியாக சென்று உரையாடியபோதும் இவை ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வகையில் இது அரசியல்மயப்பட்ட போராட்டமாக இருக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். என்.ஜீ.ஓ.மயப்பட்ட இந்தக் கோரிக்கைகள் வெறும் பருவகால கோரிக்கைகளாக ஆகிப்போனமையும், (தொடர்ச்சியற்ற தன்மையும், இத்தகைய வேலைத்திட்டத்திற்கான நிதியுதவி முடிந்ததும் அது வேறு வேலைத்திட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதுமான நிலைமை) சாதாரண உழைக்கும் வர்க்க கோரிக்கையாகவும் இராததும், இருக்கும் அதிகார கட்டமைப்புடனான தற்காலிக சமரச கோரிக்கை வேண்டி நின்றதுமான போக்கும் இவ்வகைப்பட்ட தேவைகள் தேவைகள் அடையப்பெறமைக்கான காரணமாக இருக்க வேண்டும்.

இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாக இருந்தபோதும் இன்னமும் 5 வீதத்தைத் தாண்டிச் செல்லாத அரசியற் பிரதிநிதித்துவம் தான் உள்ளது. பெண் அமைப்புகளின் கோரிக்கைகள் கூட நியாயப்படி இருக்கவேண்டிய 50 வீத பிரதநிதித்துவக் கோரிக்கையாகக் கூட இருக்கவில்லை. வெறும் 30 வீதக் கோரிக்கையாக மட்டுமே இருந்தது. இறுதியாக பாராளுமன்றத்துக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் போன அரசியல் சீர்திருத்ததித்ல் கூட உள்ளூராட்சிப் சபைகளில் 25 வீத அரசியல் பிரதிநித்துவ ஒதுக்கீட்டுக்கான உத்தரவாதத்தைமட்டுமே அறிவித்திருந்தனர்.

ஒரு தொடர்புடைய அமைச்சர் என்கிற ரீதியில் மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்நாயக்க பல அரசியற் கட்சிகளை நோக்கி பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தை அதிகரியுங்கள் என பலமாக கோரிக்கை வைத்தும் தான் பார்த்தார். ஆனால் அவருக்கு இம்முறை அமைச்சா பதவி மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்தார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 52 ஆண்டுகளாம், சர்வஜன வாக்குரிமை ஆண்களுக்கு பெண்களுக்குமாக கிடைத்து 79 ஆண்டுகளாம் ஆனால் இலங்கை ”ஜனநாயக” ”சோசலிச”, ”குடியரசில்” பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவத்தை 30 வீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்கு கொள்கையளவில் கூட அரசியற் கட்சிகளைத்தான் விடுவோம், அரசு கூட இல்லை என்பது தான் நிலைமை.

மீண்டும் எங்கள் ஜனாதிபதி சந்திரிகா, நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைவர் அரசாங்கத்தினதும் தலைவர். இதனைத் தான் இது ஒரு சமூக அதிகாரத்துவ கட்டமைப்பின் விளைவு என்கிறோம். ஆக இதே கட்டமைப்புக்குள் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்டாலும் கூட பெண்களின் நலன்கள் நிறைவேற்றப்படுமா என்கிற கேள்வி பலமாக இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.

என்.சரவணன்
சரிநிகர்-இதழ்-206

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster