Wednesday, January 28, 2009

இரண்டாவது தசாப்தத்தில்
காலடி வைக்கும் "சக்தி"




“இரண்டாவது தசாப்தத்தில் காலடி” எனும் தலைப்பைத் தாங்கி சக்தி சஞ்சிகை வெளிவந்திருக்கிறது. சக்தி தொடங்கி 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் “ஆணாதிக்கப்பிடியிலிருந்து தகவல் தொழில்நுட்பத்தை விடுவிப்போம்” கோசத்துடன் தாங்கி வரும் இந்த இதழில் இம்முறை கனதியான கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சக்தியின் முதலாவது இதழ் 1990 ஓகஸ்டில் வெளிவந்தது. மைத்திரேயி போன்றவர்களின் முழு முயற்சியால் நோர்வே-ஒஸ்லோவில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் சுகிர்தா, லிட்டா ராசநாயகம் போன்றோன் பங்களிப்புகளுடன் வெளிவந்து, ஒரு கட்டத்தில் அது நின்று போக சக்தியுடன் இணைந்த பணியாற்றிய தயாநிதி அதனை பொறுப்பேற்று இது வரை வெளிக்கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர் புலம்பெயர்ந்த பெண்கள் பலரின் பங்களிப்புகளுடன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இது வரை வெளிவந்த 25 இதழ்களையும் வைத்து மறுவாசிப்பு செய்யும்போது தமிழ்ச் சூழலில் பெண்ணிய எழுத்துக்களை அல்லது பெண்களின் எழுத்துக்களை ஆராய்கையில் சக்தியை விட்டுவிட்டு நகரமுடியாது என்கிற முடிவுக்கு வரமுடிகிறது. 25 இதழ்கள் மட்டுமே இந்த 10 வருடங்களில் கொண்டுவர முடிந்திருந்தாலும் அதன் தொடர்ச்சி உண்மையில் மெச்ச வேண்டிய ஒன்று. புகலிடச் சூழலில் மட்டுமல்ல பொதுவாக சிறுசஞ்சிகை உலகில் ஆண்களால் வெளிக்கொணரப்பட்ட சஞ்சிகைகள் எல்லாமே காலக்கிரமத்தில் கைவிடப்பட்டு போன, போகிற நிலையில் (இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.) 10 ஆண்டுகால சக்தியின் தொடர்ச்சி உண்மையில் மலைக்க வைக்கக்கூடியது தான்.

சக்தியில் வெளிவந்த பெண்களின் சிறுகதைகளை ஒன்றுதிரட்டி புது உகல எமை நோக்கி எனும் ஒரு சிறுகதைத் தொகுப்பை சக்தி வெளியிட்டிருந்தது.

பெரும்பாலும் சிறு சஞ்சிகைகள் நடத்தும் பலர் ஏதோ ஒரு உந்துதலில் தமது எழுத்துக்களுக்கும், தமக்கு விருப்பமான எழுத்துக்களையோ அல்லது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய ஆதங்கத்துடனோ வெளிக்கொரணப்படும் இவ்வகைச் சஞ்சிகைகளை நடத்துவதற்கு கொடுக்கப்படும் விலை சாதாரணமானதல்ல. இலங்கையில் விடிவு சஞ்சிகை நடத்திய போதும், வேறு சில சஞ்சிகைகளுடன் கூட்டாக இயங்கிய போதும் கண்ட அனுபவங்கள், மற்றும் சக நன்பர்கள் பலரின் அனுபவங்களும் கொடுமையானது. நாமே எழுதி, நாமே அலைந்து திரிந்து ஆக்கங்கள் தேடி, தட்டச்சு செய்து, அச்சுக்கு கொடுத்து, புரூப் பார்த்து, அச்சுக்காரர்களின் பின்னால் நாயாய் பேயாய் அலைந்து, கையில் காசு இல்லாமல் பல தூரங்கள் நடந்து போய் அச்சடித்த சஞ்சிகைகளை சுமந்துகொண்டு வந்து பல்கலைக்கழங்களிலும், புத்தகக் கடைகளிலும் போட்டு, பொதி கட்டி தபாலில் அனுப்பி, இவற்றில் பின் வாங்கியவர்கள், கடைக்காரர்கள் பணம் தராமல் விட, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அச்சேற்றிய பணத்தில் 10 வீதமும் கிடைக்காது. மீண்டும் அடுத்த சஞ்சிகைக்கான வேலை தொடரும். இது சிறு சங்சிகை நடத்திய பலரது அனுபவம்.

சமீபத்தில் இலக்கியச் சந்திப்போடு ஒட்டிய பயணங்களுக்காக பாரிஸ், ஜேர்மன் போக நேரிட்ட போது புகலிடச் சூழலில் சிறு சஞ்சிகைகள் நடத்தி நொந்து போன பலரை சந்திக்க முடிந்தது. இன்றும் சஞ்சிகை நடத்திக்கொண்டிருக்கிற பாரிஸைச் சேர்ந்த நன்பர் சஞ்சிகைக்காகவே தொழில் செய்கிறார். அவர் பணிபுரியும் ரெஸ்டுரன்டில் அவருக்கு மாதம் கிடைக்கும் சம்பளம் சஞ்சிகைக்கு சரி. அவரது நாளாந்த வாழ்க்கைச் செலவை அவருக்கு அங்கு கிடைக்கும் டிப்ஸ் தான் தான் தீர்மானிக்கிறது. சில தடவைகள் பட்டினி கிடந்து சஞ்சிகையை கொண்டு வரநேரிட்ட சோகங்களையும் கூறிய போது இதன் அவலத்தை வேதனையுடன் உணர முடிந்தது. சஞ்சிகையை கொண்டுவர என்னை விலையையாவது கொடுப்போம், போராடுவோம் எனும் விடாப்பிடியான நோக்கில் கொணரப்பட்ட பல சஞ்சிகைகள் இடையில் கைவிடப்பட்டதற்கு வெறும் பொருளாதாரக் காரணிகளை மட்டும் கூறி விட்டு போக முடியாது. கூட்டுழைப்பு, கூட்டுப்பொறுப்பு இல்லாமல் போனமை மற்றும் அரசியல் குழுவாதம், தனிப்பட்ட சண்டைகள் என்பன போன்ற காரணிகளும் சில சஞ்சிகைகளின் நிறுத்தத்திற்கு காரணமாகியிருக்கின்றன.

இப்படியான சிறுசஞ்சிகை சூழல், அவலங்களின் மத்தியில் பெண்களால், பெண்களுக்காக, கொணரப்பட்டுள்ள சக்தி குறித்து முறையாக ஒரு முழுமையான விமர்சனம் பெண்களால் செய்யப்படவேண்டும். என்.ஜீ.ஓ நிதிகளைக் கொண்டிருந்தும் பணம் கொடுத்து எழுதவைக்கக் கூடிய வசதிகள் இருந்தும் கூட பெண்கள் இயக்கங்கள் பல இலங்கையில் பெண்களின் சஞ்சிகையை தொடர்ச்சியாகவும், கிரமமாகவும் கொண்டுவர முடியாமலிருக்கும் நிலை கவனிக்கத்தக்கது.

புகலிடச் சூழலில் இயந்திரமயப்பட்ட வாழ்க்கை, களைப்பு, நேரமின்மை, இவ்வளவையும் விலைகொடுத்து சஞ்சிகைக்காக பிரேத்தியமாக உழைத்து, தம்மை மாடாக சுரண்டவிட்டு கிடைக்கும் பணத்தைக்கொண்டு தான் இப்படியான சஞ்சிகைகள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நோர்வேயில் வெளிவந்துகொண்டிருந்த “சர்வதேச தமிழர்” எனும் சிறு பத்திரிகை (சில மாதங்களுக்கு ஒரு முறை வந்த News Letter சமீபத்தில் நிறுத்தப்பட்டது. அதன் ஆசிரியர் இப்பத்திரிகையை நடத்துவதாகக் கூறி வருடாந்தம் அரசாங்கத்தால் வழ்கப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட நோர்வே குரோனர்கள் மோசடி செய்யப்பட்டதாகக் கூறி இங்கு வெளிவரும் நாளிதழ்கள், அவற்றின் இணையத்தளம் http://www.vg.no/pub/vgart.hbs/artid3=3252958 என்பவற்றிலும் வந்தது. சக்தியை நடாத்த அரசாங்கத்திடம் உதவி கோரலாமே என்று சக்தி ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் “இது அரசின் நிபந்தனைளுக்கும், அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் இணங்குவதை விட நாங்கள் எங்களை வருத்தி நடாத்திக் கொண்டுபோய்விடலாம்” என்கிறார்.

இம்முறை சக்தியின் ஆசிhpயர் தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. “ஆரம்பத்தில் சந்தா சேகரிப்பதற்காக நாங்கள் வீடுவீடாகவும் பஸ்தரிப்பிடம் புகையிரதநிலையம் தென்பட்ட ஆசிய முகங்களுடன் எல்லாம் நாம் பேச முயற்சித்தோம். அவர்களின் அலட்சியங்கள் மத்தியிலும் தொடர்ந்தோம்.... எமது சுவரொட்களைக் கழித்தும், சஞ்சிகைகளை எரித்தும் நடத்தப்பட்ட ஆண்களின் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டோம்.... புகலிடச் சூழலில் ஆரம்பிக்கப்பட்ட் இலக்கியசந்திப்பில் சக்தி சஞ்சிகை பற்றி பல சந்திப்புக்களில் விமர்சனங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆனாலும் சக்தி 10வது வருடத்தை பூர்த்தி செய்யும் இந்த ஆண்டில் இலக்கிய சந்திப்பின் 26 வது அமர்வில் சக்தி சஞ்சிகைக்கான “அறிமுகம்” நடைபெற்றுள்ளதை என்னவென்பது.

ஆண்கள் இலக்கிய உலகம் இதையிட்டு பெருமிதம் அடையலாம் அத்துடன் பெண்விடுதலையில் ஆர்வம் உள்ளவர்களாக தம்மைக்காட்டிக் கொள்ளும் ஆண்களும் இது பற்றி திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஐரோப்பாவில் ஆரம்பத்தில் வெளிவந்த சகல சஞ்சிகைகளும் நின்று போன நிலையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சக்தி “பெண்கள் சஞ்சிகை” என்பதால் அதனை யாராலும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை போலும்....”

சக்தி பல பெண் புதிய பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறது. தங்களை எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துவதற்காகவும், தாம் கூற விரும்புவற்றை கூறுவற்கான களமாகவும் பல பெண்களுக்கு சக்தி அமைந்திருக்கிறது. ஆண எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இதுவரை வெளிவந்திருக்கின்ற போதும் பெண்களின் கட்டுரைகள் போதுமானதாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். சக்தியில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “கருக்கலைப்பு” விவாதம் பலர் அறிந்தது. அந்த விவாதத்தோடு ஒட்டிய கட்டுரைகள் சரிநிகர் மற்றும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் “சமர்” போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தது.

இம்முறை வெளிவந்திருக்கம் 25வது இதழில் “தமிழ்ச் சமூகத்தில் கணவரை இழந்தவர்கள்” குயின், “வௌ;ளி விழாக்காணும் கலைஞர் ஆனந்தராணியுடனான” உரையாடல் - தயாநிதி, “ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் திரைப்பட விமர்சனம்” - உமா, “தேசிய விடுதலைப் போராட்டமும் பெண்களின் நினைவுகளும்!” -ஜெயந்திமாலா, “மறுப்பறிக்கை..”- நிரூபா, “செல்வியின் நினைவுப் பதிவு செய்தி”, “வாடகைக்குக் கருப்பைகள்.” ஆறாம்திணையிலிருந்து, “குழந்தை வளர்ப்பு - விலங்கொடு மனிதராய்” - றஞ்சி, “ஹிட்லரின் அட்சியில் பெண்கள்” - கேட் மில்லட், “புதிய கருத்தடை சாதனம்” - ஜெயந்திமாலா, “சிங்கள சாதியமைப்பில் இன்றும் தொடரும் கன்னித்தன்மைப் பரிசோதனை” - என்.சரவணன் மற்றும் நளாயினி, சுதா ஆகியோரின் கவிதைகள் என்பன அடங்குகின்றன.

இவை எல்லாவற்றையும் விட சக்தி இந்த இதழ் தொடக்கம் இணைத்தில் கிடைக்கிறது. சக்தியின் இணைய முகவரி http://geocities.com/pennsakthi/அடக்கப்படும் அனைத்து சமூக சக்திகளும் ஆளும் குழுமங்களிலிடமிருந்து தகவல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவது என்பது தவிர்க்க முடியாத போராட்டமாக இந்த மில்லேனியத்தில் ஆகிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பெண்கள் படிப்படியாக தகவல் தொழில்நுட்பத்தை பெண்கள் தமது பிடியில் கொண்டுவருவது அவசியமாகியிருக்கிறது. ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக இன்று உற்பத்தி செய்யப்படும் அதிகாரத்துவம் சார்ந்த கருத்துக்கள், தகவல்கள், தேற்றங்கள், சித்தாந்தங்கள் போன்றவற்றை முறியடிப்பதென்றால் இதனை மேற்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. அந்த வகையில் சக்தியின் இணையப் பதிப்பு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.
என்.சரவணன்

சக்தி சஞ்சிகையுடன் தொடர்புகளுக்கு
SAKTHI, BOKS 99Oppsal 0619,OLS 6, Norway
Email-sakthee.england.com
இணையத்தளம் - http://gocities.com/pennsakthi/


AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster