Wednesday, January 28, 2009

மகளிர் சாசனத்தை
அமுல்படுத்த என்ன தடை?






என்.சரவணன்


சுனிலா அபேசேகர


சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்­ளும் இவர் ஒரு மனித உரிமையா­ளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்­தில் தீவிர செயற்பா­ட்­டாளராக இருந்­தவர். தற்போது பெண்கள் தொடர்­பூடகக் கூட்டமைப்பு (Women & Media Collective ), இன்போர்ம் (INFORM) என்பவற்றின் இயக்குனர்­களில் ஒருவராக இருந்து வருகிறார். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொரு­வராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர். இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.

இம்முறை பெண்கள் தினத்துக்கு நிங்கள் சார்ந்த அமைப்புகள்
என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றன?

இம்முறை நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கூட்டங்கள், கருத்தரங்குகள், கண்கா­ட்சிகள், பட்டறை­கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட­ங்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகள், இன்­னும் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என நிறையவே நடத்தப்படப் போகின்­றன.

இம்முறை உள்ள முக்கிய மாற்றம் என்னவென்­றால், கடந்த பத்து வருட காலமாக பெண்கள் தின நிகழ்ச்சிகள் யாவும் கொழும்பை மையமாக வைத்தே நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த இரு வருடங்களாக, நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் பல்வேறு பெண்கள் அமைப்பு­களால் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்­பாக அரசு சார்பற்ற பெண்கள் அமைப்புக­ளில் பெரும்பாலா­னவை இம்முறை கொழும்புக்கு வெளியிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

ஒரு புறத்தில் இது ஆரோக்கியமாக இருந்த போதும் மறுபுறத்தில் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய நிலையை இழக்கவும் நேரிடுகி­றது. கொழு­ம்பை மட்டுமே தொடர்பூடக­ங்கள் அனைத்­தும் கவனம் செலுத்து­கின்ற நிலையில் கிராம மட்டத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி­களை வெளிக் கொணர முடிவதில்லை. தேசிய ரீதியில் தாக்­கத்தை ஏற்படுத்தக் கூடிய வகை­யில் இத்தினத்தில் நடத்தப்­படும் செயற்­பாடுகள் அமைய வேண்டுமெ­ன்றே நான் விரும்புகிறேன்.


இந்த முறை பெண்கள் தினத்துக்காக கோஷமாக
பெரும்பாலும் என்னென்ன முன்வைக்கப்பட்டுள்ளன?

பெரும்பாலும் 'சமாதானமும், ஜனநாய­கமும்' பற்றியே கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.



மூன்று வருடங்களுக்கு முன் பெண்கள் தினத்துக்கு சகல பெண்கள் அமைப்புகளும் சமாதானத்துக்காக பெண்கள் அமைப்புடன் (women for eace) சேர்ந்து யுத்தத்துக்கு எதிராக கறுப்பாடைப் பெண்கள் ஆர்பாட்டத்தை நடத்தியிருந்தன. யுத்தத்தின் கொடூரத்தால் பெண்கள் மேலும் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஏன் அந்த ஆர்பாட்டத்தை கைவிட்டீர்கள்.

இஸ்ரேல், பொஸ்னியா, யூகோஸ்லா­வியா போன்ற நாடுகளில் யுத்தத்துக்கு எதிராக பெண்கள் அணி திரண்டு நடத்தி வந்த Women in Black எனும் ஆர்ப்பாட்ட­த்தை அனு­ப­வமாகக் கொண்டு இலங்­கையிலும் அத்தகைய ஆர்ப்­பா­ட்டத்தை பெண்கள் அமைப்புகள் செய்தன. ஆனாலும் யுத்தத்துக்கு எதிரான கோஷம் தற்போது தான் முன் வைக்கப்பட்­டது என்றில்லை. 83 க்குப் பின்னர் பல பெண்கள் அமைப்புகளின் முக்கிய கோஷங்களில் ஒன்றாக ”யுத்த எதிர்ப்பு” என்பது இடம்பெற்று வருகின்றது. இம்முறை கூட பெண்கள் அமைப்புகள் பலவற்றின் செயற்பாடுகள் யுத்த எதிர்ப்­பையே மையமாகக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இதில் உள்ள விடயம் என்னவெ­ன்றால் யுத்த எதிர்ப்பு உணர்வோ, அல்லது சமாதான அபிலாஷையோ எவ்வ­ளவு தான் இருந்தபோதும், எவருக்கும் நடைமுறையில் எப்படி இந்த சமாதானத்­தைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்து சரியான தெளிவில்லை. மேலும் 80களில் இருந்து பெண்கள் அரசியல் தீர்வை கோரி நிற்கின்றனர். ஆனால் இன்று அரசியல் தீர்வு யோசனையாக அரசாங்கத்தின் தீர்வு யோசனை­யையே கொள்கின்றனர். வேறு எந்த வித அரசியல் யோசனைகள் குறித்­தும் எந்த வித பேச்சுமேயில்­லையே. இன்று அரசியல் தீர்வு யோசனையை வேண்டி நிற்கின்றோம் ஆனால் அது அரசாங்­கத்தின் யோசனையாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை.

சிடோ குறித்த அனுபவத்தையும், அதன் இன்றைய நிலையையும் வாசகர்களுக்கு விளக்குவீர்களா

சீடோ (CSDAW) என்பது ஐ.நா.வின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஆக்கப்பட்டுள்ள ஒரு சர்வதேச பிரகடனம். அது ஒரு சாசனம். இச்சாசன­த்தை இலங்கையும் அங்கீகரித்து கைச்சாத்திட்­டுள்ளது. கையெழுத்திட்ட நாடுகளில் இச்சாசனத்­தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்­கள் குறித்த வளர்ச்சி என்ன? பெண்களால் அதனை அனுபவிக்க முடிந்­ததா? முடியாவிட்டால் அதற்கென்ன காரணம்? அதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் எவை? போன்றவை குறித்து நான்காண்­டுகளுக்கு ஒரு முறை ஒரு அறிக்கையை அளிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்த நாடுகளுக்கு உண்டு.

இலங்கை அரசாங்கம் அப்படி இது வரை அளித்து வருகிறதா?

இறுதியாக 1992ஆம் ஆண்டு இலங்கை அரசு அறிக்­கையை கையளித்திருந்தது. அது கூட அப்போது மிகவும் பிந்தியிருந்தது. அடுத்த அறிக்கையை 1995இல் கையளி­த்திருக்க வேண்டும். ஆனால் 1995ஆம் ஆண்டு பீஜிங்கில் நடத்தப்பட்ட நான்கா­வது சர்வதேசப் பெண்கள் மாநாட்டுக்­காக அரசாங்கம் தயாhpத்திருந்த அறிக்கையின் பிரதியை­யே சீடோவுக்கான அறிக்கையா­கவும் கையளித்திருந்தது. இவ்வாறு அறிக்கை கையளி­த்த பின் அரசாங்கத்தின் பிரதிநி­திகள் அவ்வறி­க்கை குறித்து சீடோ கமிட்டி முன் விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இது வரை அரசாங்கம் இவ்வறி­க்கை குறித்து விளக்கமளிப்பதற்காக சீடோ கமிட்டி முன் செல்லவில்லை. சில வேளை இந்த வருட மத்தியில் அரசாங்கம் சீடோவின் முன் செல்லுமென எதிர்பார்­க்கிறோம்.

1992ஆம் ஆண்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றி­ணை­ந்து ஒரு ”மாற்று அறிக்கை”யை கையளி­த்திருந்தன. இவ்வ­றிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கப் பிரதிநிதிகள் சீடோ கமிட்டியை சந்தித்த வேளையில் பல கேள்விகளை எழுப்பியி­ருந்தனர். எனவே தான் அரசாங்­கம் பல விடயங்கள் குறித்து சீடோவின் முன் உறுதிமொழிகளை அளிக்க நேரிட்­டது. குறிப்பாக நாங்கள் குறிப்பிட்டிருந்த விடய­ங்களில் திருமணத்துக்கான குறைந்­தபட்ச வயது 12 என்பதை எதிர்த்திருந்­தோம். அதன் பின்னர் 16 வயதாக சட்டத்­தை மாற்றியது அரசாங்கம். இம்முறை அரசு சார்பற்ற அமைப்புகள் இம்முறை மாற்று அறிக்கையொன்றுக்கான தயாhpப்புகளில் தீவர கவனமெடுத்து வருகின்றன.

இம்முறை தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கையில் முக்கியமாக என்னென்ன விடயங்களை முன்மொழிந்திருக்கிறீர்கள்?

உதாரணத்திற்கு சுகாதார விடயத்தை எடுத்துக் கொண்டால் சுகாதாரத்துறைக்கு அரசின் நிதியொதுக்கீடு வரவர குறைந்து போதல் மற்றும் உலக வங்கியின் ஆலோச­னையின் காரணமாக சுகாதாரத்துறையை தனியார் மயப்ப­டுத்தி வருவதன் விளைவா­கவும் பெண்களின் நலன்களுக்­கான மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட பல மருத்துவ மையங்களிலிருந்து பெண்கள் பெற்றுவந்த வசதிகள் அனைத்தும் குறைக்கப்பட்டு பறிக்கப்­பட்டு, வருகின்றன. மருத்துவ வசதிகள் குறைக்கப்­படும் போது குறிப்பாக பெண்களே பாதிப்புக்குள்ளாக்­கப்படுவது பற்றி சொல்லித் தெரியத் தேவையில்லையே.

குழந்தைகளின் சுகா­தார நிலைமைகளும் கீழே விழுமல்லவா? இலங்கையில் குறைந்த எடையுடன் பிறக்­கும் குழந்தைகளின் எண்ணிக்கை அண்மை­க்காலமாக வேகமாகவே அதிகரித்து வருகிறது. குழந்தை­கள் குறைந்த எடையில் பிறப்பதற்கான காரணம் தாயின் மந்தபோசனமும், இரத்தக் குறைவுமே. குழந்தை தாயின் வயிற்றிலிருக்கையில் தாய் மந்தபோச­னத்தால் பதிக்கப்ப­டுவது என்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் ஒன்றாகும். எடை குறைவாகப் பிறக்கும் குழந்தை­கள் பல சந்தர்ப்பங்களில் இறக்கவும் செய்கின்றன. இலங்­கை­யில் இப்படி சிசுமரண வீதம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணம். அறிக்கையில் இவை குறித்து விhpவாகக் குறிப்பி­ட்டுள்ளோம். அது தவிர இலங்கையில் சட்ட விரோத­மான கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. கருக் கலைப்பு காரணமாக மரணிக்கும், உடல் அங்கவீனங்­களுக்கு உள்ளாகி வரும் பெண்களின் எண்ணிக்கை எமது நாட்டில் அதிகம். அடுத்தது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் சரியான முறையில் ஒப்பந்த அடிப்படையில் செல்ல முடியாததன் விளை­வாக அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்பானது.

இதில் அரசாங்க­த்தின் தலையீடும், கண்காணிப்பும், பராமரிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் பிள்ளை­கள் வளர்க்கப்படுவ­தற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்நாட்டுக்கு அதிகளவு செலா­வணியைப் பெற்றுத் தரும் இப் பெண்கள் குறித்து கூடிய அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மேலும் இன்றும் விவசாயத்துறையில் ஆண்களு­க்கு சமமான சம்பள­த்தை பெண்கள் பெறுவத­ற்கான வாய்ப்புகள் இல்லை. விவ­சாய­த்துறை பெருமளவு தனி நபர்களி­டம் தங்கியிருப்பதால் சமசம்பளம் என்பது சாத்தியப்படாமல் உள்ளது. எனவே அரசாங்கத்தின் கவனமும் ஈடுபாடும் இது குறித்து இருக்க வேண்டும். இது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

சீடோவுக்கான அரசாங்கத்தின் அறிக்கையில் காணப்படும் விடயங்கள் என்ன?

அரசாங்கம் பெண்களின் உண்மை நிலையைக் குறிப்­பதை விட, தனது சாதனைகளைக் கூறும் வகையிலேயே அறிக்கை தயாரித்திருக்கும். இலங்கை மட்டுமல்ல உலகின் பல நாடுகள் இப்படித் தான். எனவே தான் எமது அறிக்கை இந்த இடத்தில் முக்கிய பெறுமதியைத் தருகி­றது.

பெண்கள் சாசனம் இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறப்படாதிருப்பதற்கு என்ன காரணம்?

உண்மை தான் பெண்கள் சாசனம் ஒரு அரச கொள்கை­யாக மாத்திரமே உள்ளது. இது 1993இல் பாராளுமன்றத்தால் அங்கீகாரிக்கப்பட்டது. இது மிகவும் நல்லதொரு ஆரம்பம். இது சீடோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரச மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல சேர்ந்து தயாரித்தது. சாசனத்தைப் பேணுவதற்­காக பெண்கள் தேசியக் கமிட்டி எனும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவுக்கு சாசனத்தை நடைமுறைப் படுத்­தவோ அல்லது அந்த சாசனம் மீறப்ப­ட்டது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்­கவோ அதற்கு அதிகாரமில்லை. அப்படி­யொரு அதிகார­மிக்க பெண்கள் ஆணைக் குழு­வொன்று நியமிக்கப்படு­மென்று சாசன­த்தில் கூறப்பட்டாலும், இன்று வரை அப்படி­யொ­ன்று நியமிக்கப்படவில்லை. சாசனம் என்பது வெற்றுக் கடதாசியாகவும், தேசிய பெண்கள் கமிட்டி என்பது வெறும் பரிந்து­ரைகளை மட்டும் செய்யும் ஒன்றாகவுமே இருந்து வருகிறது.

ஆனணக்குழுவை அரசாங்கம் நியமிப்பதில் இருக்கம் தடைகள் எவை?

எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் அக்கறை இருப்பதா­கவும் தெரியவில்லை. பெண்கள் அமைப்­பு­கள் கூட இதனை நியமிக்கும்படி கோருகி­ன்ற எதுவித நிர்ப்பந்தங்களையும் அரசுக்கு ஏற்படுத்துவதாகத் தெரியவி­ல்லை. சாசன­த்தை அமுல்படுத்த ஆணை­க்குழு அவசிய­மென்பது பல பேருக்குப் புரியவில்லை . இது வரைக்கும் பெண்கள் அமைச்சு என தனியான ஒன்று இருக்கவி­ல்லை. ஏதாவது ஒரு அமைச்சுடன் இணை­ந்தே இருந்து வந்திருக்­கிறது. ஆகவே பெண்கள் விடயத்­தில் தனியான அக்கறை காட்டுகின்ற அரச யந்திரம் இருக்கவி­ல்லை. ஆனால் இறுதி­யாக நடந்த அமைச்­சரவை மாற்றத்தின் போது பெண்கள் அமைச்சு தனியான ஒன்றாக ஆக்கப்­பட்டது. இவையெல்­லாம் நல்ல விடயங்கள்.

தற்போது பெண்கள் சாசனம் மிகவும் முன்னேறிய ஒறாக கூறப்பட்டு வருகின்ற அதே வேளை அதில் இன்னும் பல குறைகள் இருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக பெண்களின் பாலியல் தெரிவு (ஒரு பால் உறவு), குடும்ப வன்முறைகள் குறித்த சட்ட நடவடிக்கைகள் எடக்க முடியாத, குடும்ப அமைப்பு முறையை பேனுவதற்குரிய அம்சங்கள் எனபன சிக்கலாகனவையாக இருக்கின்றனவே?

பல வித குடும்ப மாதிரிகள் இன்று முன்வைக்­கப்படு­கின்றன. இந்தச் சாசனத்­தில் எந்த வித குடும்ப மாதிரிக்கும் பொருந்­தக் கூடிய விதத்தில் இச்சாசனம் அமைக்­கப்பட்டுள்ளதாகவே எனக்குப் படுகிறது. மற்றும்படி குடும்ப வன்முறைகள் குறித்த விடயங்களில் சாசனத்தில் கூறப்பட்ட விடயங்கள் சிக்கல்களைத் தருவனவா­கவே இருக்கின்றன.

இன்றைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைவிட முற்பொக்கானது, சகல விடயங்களிலும் ஒரு மாற்று அரசாங்கமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அரசாங்கம். பெண்களின் நலன்களில் கூட அது சிறப்பாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த குறைந்த ஆண்டுகளுக்குள் இந்த அரசாங்கம் பெண்கள் நலன்களை அதிகளவு மீறியிருப்பதாகக் கொள்ளலாமா?

எந்தவொரு அரசாங்கமும் பெண்கள் தொடர்பான வாக்­குறுதிகளை அளிப்பது ஒன்றும் கடினமானதல்ல. காரணம் அதற்­­கெதிர்ப்பு தொpவிக்­கும் நிலை இல்லை. கடந்த காலங்­களில் ஐ.தே.க. அரசாங்கம் தனது ஜனநாயக விரோத போக்குக­ளால் பறி போன புள்ளிகளை இந்தப் பெண்கள் சாசனம் போன்றவற்றை முன்வைத்ததனூ­டாக சர்வதேச அளவில் பெற்றுக்கொண்­டது. இது அரசியல் ரீதியில் அவர்களுக்கு சாதகமாகப் போனது. அரசாங்கத்தின் கவனம் முழுவதும் நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளில் மையப்படுத்தப்­பட்டு வருவதால் பெண்கள் பிரச்சி­னையென்பது அவர்களின் அக்கறைக்கு­ரியதாக இல்லை. அதே வேளை பெண்கள் பிரச்சினை குறித்து இந்த அரசாங்கம் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் நல்லவை­யாகவும் radical ஆகவும் இருந்த போதும், அவை விவாதத்துக்குரிய ஒன்றாக மாறும் என நம்புகிறது. குறிப்பாக கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து கோருகையில் காணப்படுகின்ற சிக்கல்­கள், குடும்பத்துக்­குள் காணப்படும் பாலி­யல் பலாத்காரங்கள் என்பன இன்றும் சிக்கலுக்குரிய­வையாகவே உள்ளன. 1995 செப்டம்பரில் தண்ட­னைக் கோவை சட்ட திருத்த விவாதத்தில் கருக்கலைப்பு பற்றிய விடயம் குறித்து எவ்வளவு எதிர்ப்புகள் காணப்பட்டன என்பது தெரியும் தானே.

அப்படி அக்கறையுள்ள அரசாங்கத்தால் ஏன் பெண்கள் ஆனணக்கழுவை நியமிக்க முடியாமல் போனது?

ஆணைக்குழுவை நியமிப்பதில் வேண்டுமென்றே தள்ளி வருகிறது எனக் கூற மாட்டேன். ஆனால் அசட்டையாகவே இருந்து வருகிறது என கூறலாம். அரசாங்­கம் யுத்தத்தில் காட்டி வரும் ஆர்வத்தின் முன்னால் இது போன்ற விடயங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு வருகின்றன. முன்னைய அரசாங்க­த்தின் மீது பெண்கள் அமைப்புகளுக்கு இருந்த எதிர்ப்புணர்வு காரணமாக பல கோரிக்கைகளுக்­காக பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடி­னார்கள். எப்படியோ அவ்வரசாங்கத்தோடு ஒருவித தொடர்பு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமா­கவோ என்னவோ அரசுடனான ஒரு கருத்­தாட­லைக் கூட காண முடியாதுள்ளது. இது ஒரு சிக்கலுக்குரிய விடயம். கருக்கலைப்பு குறித்த பாராளுமன்ற விவாதம் தொடர்பாக கூட அதற்கு வெளியில் எந்தவித நிர்ப்ப­ந்தமும் பெண்கள் அமைப்புகளால் செய்யப்­படவில்லை. இது எம்மிடமே உள்ள பெரிய குறைபாடு. இதனை சுயவிமர்சனமாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத்தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?

இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவா­கவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுக­ளில் காணப்பட்டு வரும் மாற்றங்­களையும் நாம் கவனத்தில்­கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பா­டானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்­கைகளு­க்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படு­கிறத­ல்­லவா? சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்­களை எம்மால் மாற்றத்துக்குள்­ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமா­கவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திக­ளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரி­கையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்­காக போராடுபவர்களுமே காணப்படுகின்­றனர் என்றே நான் கருதுகிறேன்.

நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?

ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோ­தும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்ற­னர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கி­றேன். சோஷ­லிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.

நீங்கள் ஜே.வி.பி.யின் சோசலிச மகளிர் சங்க்தில் இருக்கவில்லையா?

இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்­றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த RedPower பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்­குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கி­றேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிரு­க்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பி­ருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.

ஜே.வி.பி.யுடன் இணைவதற்க்கு உந்துதாக இருந்த சூழலை விளக்குவீர்களா?

நான் இன்றும் நம்புகிறேன். இலங்கை­யில் தீவிர இடதுசா­ரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமி­ருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமெ­ன்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சி­யில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்­குழுவின் விசாரணை­களின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடை­யாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைக­ளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலை­யான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.

ஜே.வி.பி.யிலிருந்து ஏன் விளகினீர்கள்?

ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சி­னைகளும் எனது விலகலுக்குக் காரணமா­கியிருந்தன. அதை விட தொடர்ந்­தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பா­னது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீன­மாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்க­ளின் வழிநடத்தலிலேயே, அவர்­கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்தி­ரை குத்தப்பட்­டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்த­தால் இது இம்முத்­திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திரு­க்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்தி­ருந்­ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றிருந்த வேளையில் அங்கு நடத்தப் பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்­களை அழைத்­திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார். அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படுத்தி அபாண்­டமான குற்றச்சாட்­டுக்கள் சுமத்தப்­பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரை­யும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்­திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினை­களை மூடிமறைத்துக் கொண்டே வருகி­றது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்­குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போ­டியப் போராட்டத்தைஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னி­டம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபன­ங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்க­ளைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்­தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி­யான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொ­டுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.

இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்­காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்­களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்ப­டுவதாகத் தெரியவில்லை. பொரு­ளாதார விடுதலை­யிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துட­னேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்ப­தாகத் தெரியவில்லை.

இன்று லெஸ்பியன் உறவுகள் (ஒருபால் உறவு) பெண்ணியத்தில் மிகவும் சர்சைக்குரியதாகவும், விவாதம் மிக்க ஒன்றாகவும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவுகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில் உங்கள் கருத்தென்ன?

நடைமுறையில், இலங்கை சமூகத்தில் கூட பெண்கள் பெண்களோடேயே நெருக்க­முற்றுள்ளனர். ஆண்கள் ஆண்களோ­டேயே நெருக்கமுடையவர்க­ளாக இருக்கி­ன்றனர். சிறு வயதிலிருந்தே விளையா­டும் போதும் பழகும் போதும் உறவுகள், தொடர்­புகள் என எல்லாமே அந்தந்த பாலாரைச் சார்ந்தவர்­க­ளோடேயே வரையறுக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இலங்கைச் சமூகத்­தில் இதனை அதிகளவு காணலாம். எமது பாடசாலை­களும் கூட தனித் தனிப்பாலாரு­க்கென மட்டுப்படுத்தப்பட்டே இருக்கி­ன்றன. மறு பாலாருடனான உறவுக்குரிய வாய்ப்புகள் எல்லைப்­படுத்தப்பட்டே இருக்கின்றன.

பாடசாலை விடுதிகள் மற்றும் வேலை செய்யும் பெண்கள் விடுதிகளில் பெண்க­ளோடேயே வசிக்கின்­றனர். ஆண்கள் ஆண்களோடேயே வசிக்கின்றனர். இவற்­றை ஒரு போதும் ஒரு பாலுறவு எனக் கொள்வதில்லை. சிலவேளைகளில் அவர்­களில் ஒரு பால் உறவு இருப்பவர்கள் உள்ள சந்தர்ப்பங்களில் அதனை ஒரு வித்தியா­சமாக உணருவதில்லையே. மேற்கு­லக நாடுகளில் மறு பாலாருடனான உறவுகள் பிரச்சினை­க்குரிய ஒன்றாக இல்லை. எனவே தான் சில வேளைகளில் ஒத்த பாலாருட­னான உறவுகள் வளர்கின்ற போது அது பிரச்சினைக்குரிய ஒன்றாக தோன்றுவதை­யும் நாம் கவனிக்கலாம். நமது சமூகத்தில் கூட சமூக உறவு என்பது ஒத்த பாலாருட­னேயே உள்ளது. எனவே இதன் தொடர்ச்­சியாகவே நாம் ஒத்த பாலுறவையும் பார்க்க வேண்டும். தனிச் சொத்தாகவே பெண்ணைப் பார்த்து வந்த ஆணாதிக்கத்­துக்கு பெண்ணை இன்னொ­ரு ஆண் மட்டுமல்ல பெண்ணின் மீது இன்னொரு பெண் அன்பு வைப்பதையும். பாலுறவு கொள்வதையும் ஒரு வேண்டப் படாத போக்காகவே ஐதீக­மொன்றை வளர்த்து விட்டுள்ளது என்றே நாம் கொள்ள வேண்டும்.

இலங்கையில் பெரும்பாலான பெண் பிள்ளைகளி­டம் உங்கள் நெருங்கிய நண்பர் யார்? யாரோடு ஒளிவுமறைவின்றி பேச முடிகிறது? யாரோடு அழ முடிகிறது? என கேட்டோமா­னால் அது பெரும்பாலும் இன்னொரு பெண்ணாகத் தான் இருக்கும். இதனை உங்களால் உணர முடிகிறதா? எனது உள்ளத்தைப் பகிர்ந்து கொள்வது இன்னொரு பெண்ணோடு என்றால்? பாலியல் உறவு என்பது மிகவும் சொற்பமான ஒன்றல்­லவா? சமூகம், ஒத்த பால் இணைவாக (Homo Social) இருக்கையில் ஒத்தபாலுற­வாக (Homo Sexual) ஏன் இருக்க முடியாது? எப்போதாவது ஆண்-ஆணோ­டும், பெண்-பெண்ணோடும் உள்ள உறவுக்கு சமூக அளவில் அல்லது சட்ட அளவில் இடையூறு­கள் வந்தால் அந்த வேளை நாங்கள் அதற்கெதிராக செயற்பட வேண்டி வரும். அப்போது லெஸ்பி­யன்களது (Lesbian) உரிமைகளுக்காகவும், கே (Guy) உரிமை­களுக்­காகவும் பகிரங்கமாகப் போராட வேண்டிவரும்.

லெஸ்பியன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்புகள் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது?

துரதிருஷ்டவசமாக இலங்கையில் பெண்கள் தொடர்பூ­டகக் கூட்டமைப்பி­னைத் தவிர லெஸ்பியன் உரிமைகள் குறித்து பேச ஒரு அமைப்பும் இல்லை. அது கூட இதனை வெறும் சஞ்சிகையில் எழுதுவ­தோடு நிறுத்தி விடுகின்றதே ஒழிய அவ்வுரிமை­க்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கின்ற அமைப்பாக இல்லை. தான் ஒரு லெஸ்பியன் என கூறிக்­கொள்­கிற பெண்ணிலைவாதிகளை கூட எம்மால் காணமுடி­வதில்லை. அப்படி சொல்வதை ஏற்றுக் கொள்வதற்குரிய சமூகச் சூழல் கூட வழக்கில் இல்லை.

இன்று வரை ஒரபாலுறவு என்பது ஒரு கிரிமினல் குற்றமாக அல்லவா காணப்படுகிறது?

ஆம் ஒருபாலுறவு என்பது சட்ட ரிதியில் தடை செய்யப்­பட்ட ஒன்று. ஆனால் நடை­முறையில் அது தடுக்கக்கூடிய ஒன்றா? பகிரங்கமாக இவை நடப்பதில்லையே? பொலிஸார் என்ன இதனை பிடிப்பதற்கு வீடுவீடாக டோச் அடித்துக் கொண்டா செல்ல முடியும்? பெரும்பாலும் ஆண்களு­க்கு ஒருபாலுறவில் ஈடுபடுவதற்கான சந்தர்­ப்பங்கள் அதிகம். பெரும்பாலும் மலசல­கூடங்களில், கடற்க­ரைகளில்... இப்படி­யாக. பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ள இடங்களைப் பார்த்தால் இப்படித் தான் இருக்கும். பெண்கள் - பெண்களென்பதா­லேயே அந்தளவு சந்தர்ப்பங்கள் இல்லை. எனவே பெண்களை பகிரங்கமாக கண்டி­ருக்க வாய்ப்புகள் இல்லை. நீங்கள் பாதைகளில் பார்த்தால் கூட பெண்கள் பெண்களுடன் கைகோர்த்துச் செல்வதை­யும் ஆண்கள் ஆண்களின் தோளில் கைபோட்டுச் செல்வதையும் பார்க்க­லாம். ஒரே கோப்பையில் உண்ணுவார்கள். ஒரே படுக்கையில் உறங்குவார்­கள். மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள் இதனைக் காணும் போது உடனேயே Homo Sexual என நினைப்பா­ர்கள். ஆனால் இது Homo Social. சில வேளை எமது சமூகத்­தில் நிலவிவரும் Homo Social ஐ விளங்கிக் கொண்டால் எம்மால் அது எப்படி Homo Sexual ஆக மாறுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோமென்றால் பாலியல் விடயத்தில் நெருங்குவது ஒன்றும் பிரச்சினைக்­குரிய ஒன்றல்ல. இதிலிருந்து ஒருபாலுறவுக்கு சிறு இடைவெளியொன்றே உள்ளது.

இதற்கெதிரான கருத்துகள் எங்கிருந்து வருகின்றது என நினைக்கிறீர்கள்?

பெரும்பாலும் மதங்களிலும், ஆணாதி­க்க தனிச்சொத்­தாக பெண்களை நோக்கு­கின்ற கருத்தியலிலிருந்துமே இது தொடங்­குகிறது. மேலும் யோனி மைய வாதம் ஒரு குறிப்பான காரணம். பாலுறுப்புகள் என்பது கருவுறுவாக்கலுக்கு பயன்பட வேண்டி­யவை. ஆனால் அதுவல்லாத பாலுறவு என்பது சமூக ஐதீகத்துக்குப் புறம்பானது என்ற கருத்தே வேறூன்றியுள்ளது.

மேலும் எப்போதும் பாலுறுவின் போது கூட ஆண்களின் அதிகாரத்துவ பாலுறவு நிலவி வருகிறது. ஆண்களுக்கு தேவை­யான போது, பாலுறவுக்குத் தயாராயிருத்­தல், ஆணின் தேவைக்­கிணங்க வளைந்து கொடுத்தல் என்பன சாதாரண­மாக நிலவு­கின்ற விடயம். எனவே தான் இப்படியான போக்குக்கு ஆணாதிக்கம் பயப்படுகிறது. இது ”ஆண்மை”­க்கே சவாலான ஒன்றாக பார்க்க வைக்கிறது. ”Whether you are homo sxual man or you are a Lesbian you challenge male image” ஆணதிகாரத்­துக்கே சவாலான ஒன்றாக கருதப்ப­டுகிறது. நாங்கள் மாற்று குடும்ப அலகு குறித்துப் பேசுவதாயிருந்தால், மாற்று கலாசார கட்டமைப்பு குறித்து பேசுகிறோம் என்றால் ஏன் மாற்று பாலுறவைப் பற்றிப் பேச பின்நிற்கிறோம்?

(சரிநிகர் 1998 மார்ச்)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster