Wednesday, January 28, 2009

ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதில்
வெற்றி காணும் தமிழ்,சிங்கள (குடும்ப)
மஞ்சட் பத்திரிகைகள்






சந்தையில் ஏகப்பட்ட சஞ்சிகைகள் முளைத்து விட்டுள்ளன. தமிழில் மாத்திரமல்ல சிங்களத்திலும் கூட. சிங்களத்தில் எண்ணிலடங்கா சஞ்சி­கைகள் வெளிவருகின்றன. இது எந்த­ளவுக்கு சந்தையில் இவற்றுக்கான கேள்வி இருக்கின்றது என்பதை தெளிவு படுத்துகின்றது. கலர் கலரான இந்தச் சஞ்சிகைகளை பெருமளவு வாசிப்ப­வர்கள் பெண்கள் என்பது சில பத்திரி­கைகள் செய்திருக்கின்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக பெண் நுகர்­வோரை இலக்காகக் கொண்டு இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

1977 ஜே.ஆர் ஆட்சியில் அமர்ந்­ததோடு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமானது. அந்நிய பல்தேசியக் கம்பனிகள் இலங்கையில் கடைவிரிக்கத் தொடங்கின. அந்நிய­ருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்க தாக்குப்பிடிக்கக்கூடிய அரசாங்கம் தேவைப்பட்டது. தனக்குக் கிடைத்த 6இல் 5 பெரும்பான்மை பாராளுமன்றப் பலத்தைக் கொண்டு மாற்ற கடினமான அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்தேசியக் கம்பனிகள் தமது சந்தையை நிறுவவும், நிலைநிறுத்தவும் தமது பொருட்கள் பற்றிய விளம்பரங்களை ஊதிப்­பெருப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய நுகர்பொருட்களை அறிமுகப்படுத்தி புதிய நுகர்பொருள் கலாசாரத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவை உணர்ந்தன. இதன் விளைவாக மலினக் கலாசாரத்தை பரப்புகின்ற தந்திரோபாயங்களைக் கையாண்டன. இவற்றின் விளைவாக இலங்கையில் பாலியல் திரைப்ப­டங்கள் தொடக்கம், மேற்கத்தேய கலாசார மோகத்தை ஏற்படுத்துகின்ற, போதைக்குள்­ளாக்குகின்ற சஞ்சிகைகள் எல்லாம் கணக்கு வழக்கில்லாமல் வந்து குவிந்து கொண்டிருந்தன. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஏற்பட்டு வந்த உற்பத்தி, உழைப்பு, வளங்கள் மீதான சுரண்டலை­யும் நாட்டின் நெருக்க­டிகளையும் கண்டு இளம் சந்ததியினர் மத்தியில் எழுச்சிகர சிந்தனைகள் உருவாகாமல் அவை திசைதிருப்பப்படவும் இந்த நுகர்பொருள் கலாசார மோகம் திணிக்கப்பட்டன. போதைப் பொருட்கள் வகைவகையாக வந்து குவிந்தன. ரேஸ் புக்கிகள் வீதியெங்கும் முளைத்தன. பாலியல் தொழிலுக்கு- குறிப்பாக சிறுவர் பாலியலுக்குப் -பேர் போன நாடாக உலக வரைபடத்தில் இலங்கைக்கு இடம் கிடைத்தது.

இவ்வாறான பின்னணியுடன் தான் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளுக்கு உள்ள மவுசை விளங்கிக் கொள்ள முடியும். இன்று இலங்கையில் தமிழ் பேசுவோர் பலர் வாசிக்கும் வாராந்தப் பத்திரிகையாக இருக்கும் தினமுரசு மற்றும் தமிழில் தற்போது ப்ரியா (இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை), ஜனனி (வாரப் பத்திரிகை), ரோஜா (வாரப்பத்திரிகை) போன்ற மலினப் (popular) பத்திரிகைகளைப் போலவே சிங்களத்திலும், சுவந்த, அரலிய, தருனி, சிரிகத்த, பிரியாதரி, எ, நவலிய, ரெஜின, ஏ, நேத்ரா, யுவதிபத்தி, மனாலிய போன்றவை முக்கியமாக வெளிவருகின்றன.

இந்த பத்திரிகைகளின் குவிதலுக்கு இன்னுமொரு முக்கிய காரணம் அச்சுத்தொழில் மற்றும் கணிணிச் செயற்பாடு அச்சுத்துறைக்குள் பெரும் பாத்திரம் செலுத்தத் தொடங்கியமை என்பன முக்கிய கவனத்துக்குரிய காரணங்கள்.

கலர், கலரில் வெளிவரும் இவற்றில் சினிமா ”கசமுசாக்கள்”, பாலியல் கதைகள், கிளுகிளுப்­பூட்டும் காதல் கதைகள், வீட்டுச் சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கேள்வி பதில், வைத்திய ஆலோசனைகள், என்பன பொதுவாக முக்கிய இடம் வகிக்கின்றன. கதைகளில் வீரசாகசங்கள், காதல், காமம், திகில், அந்தரங்கம் என்பன முக்கிய இடம் பிடித்தன.

ஆமர் வீதியில் உள்ள ஒரு பாதையோரக் கடையில் விசாரித்த போது அங்கு ப்ரியா-10, ஜனனி, 25, ரோஜா-15, தருனி-75, ரெஜின-35, சிரிகத்த-85, நவலிய-35, பிரிந்த,-40, பிரியாதரி-15, நேத்திரா-10, மனாலிய-25, யுவத்திபத்தி 15, ஏ 15 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.

புறக்கோட்டையில் ஒரு நடைபாதை கடையில் விசாரித்த போது அங்கு சராசரியாக ப்ரியா-15, ஜனனி, 30, ரோஜா-20, தருனி-80, ரெஜின-60, சிரிகத்த-105, நவலிய-75, பிரிந்த,-450, பிரியாதரி-300, மனாலிய-25, யுவத்திபத்தி 15, ஏ 600 என்கிற ரீதியில் விற்பனையாவதாக அறிய முடிந்தது.

வாழ்க்கையில் அடைய நினைக்கும் பல விடயங்களை’­கற்பனைகளை இவற்றை வாசிக்கையில் அந்தக் கணங்களில் உள்ர ரசித்து ஆனந்தம் கொள்கின்றனர். இதுவே அவர்களை அதிகமாக இவற்றைக் கவரப் பண்ணுகிற உளவியல். அந்த வகையில் ஏற்கெனவே சமூகத்தில் நிறுவப்பட்ட பழமைவாத புனைவுகளுக்குத் தீனி போடும் வகையில் இவை அமைகின்றன. அந்த ஐதீகங்களை மறுஉற்பத்தி செய்யும் வேலையையே இவை செய்து வருகின்றன. ஏலவே நிலை பெற்றுவிட்டுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பானது திட்டமிட்டு இந்த ஆதிக்க சித்தாந்தத்தை தொடர்ந்து நிறுவத் தேவையில்லை. ஏலவே நிறுவனமயப்பட்ட அது, இருக்கின்ற வாய்ப்புகளை வைத்துக் கொண்டு தன்னை தகவமைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நிறுவுகின்றது. அதற்கு தோதான வாய்ப்புகள் அனைத்தும் இந்த சமூக அமைப்பில் இருக்­கின்றன. அப்படித்தான் இந்த சஞ்சிகைளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவ்வகையான சிங்கள சஞ்சிகைகளைப் பற்றி ஆராய்ந்த சிலர், இது போய் சேரும் தரப்பினர் யார் என்பதை இனங்கண்டபோது

பாடசாலை மாணவிகள், பாடசாலை கல்வி முடித்துவிட்டு தொழிலின்றி இருக்கும் இளைஞர் ’யுவதிகள், படையினர், சுதந்திர வர்த்தக வலையப் பெண் தொழிலாளர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பணிப்பெண்கள் என்போரையே இவை அதிகமாக சென்றடைகிறது எனக் கண்டறிந்துள்­ளனர்.

இப்பத்திரிகைகளில் பொதுவாக பேனா நன்பர்கள் பக்கம், வாசகர் கடிதங்கள் பக்கம், துணுக்குகள் என்பவற்றோடு ”வைத்தியாpன் பதில்கள்” எனும் பக்கமும் இருப்பது வழக்கம். இவை தமிழ், சிங்கள பத்திரிகைகளுக்கு பொதுவான பண்பாக உள்ளது. அவற்றில் கேட்கப்படும் கேள்விகட்கு மித்திரன் யோகா பாலச்சந்திரனைவிட மோசமான பதில்கள் கிடைக்கும். ஆதிக்க சமூக அமைப்பின் எதிர்பார்­ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆலோசனைகள், கருத்துக்கள் அவற்றில் வழங்கப்படுவது வழக்கம்.

முக்கியமாக இவற்றில் பாலியல் விடயங்கள் அடங்குவது பொதுவான பண்பாகக் காணப்­படுகிறது. பாலியல் கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகிறதா அல்லது அவ்வாறான கேள்விகள் தான் வைத்தியரால்’பத்திரிகை ஆசிரியர்களால் தெரிவு செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வழங்கப்படும் பதிலைப் பார்ர்கையில் இவை கிளுகிளுப்பூட்டி ஆவலைத் தூண்டுகின்ற வகையிலேயே கேள்வியும் பதில்களும் அமைக்கப்படுகின்றன என்பது மட்டும் தெரிகிறது. பாலியல் பற்றிய கேள்விகள் இருப்பது ஆரோக்கியமான ஒன்று தான் ஆனால் இவ்வகைப் பத்திரிகை­களைப் பொறுத்தவரை வெறும் வியாபார உத்திக்காக மோசமான கருத்துக்களைப் பரப்புவதும், பிற்போக்கான ஆலோசனைகளை வழங்குவதும் முக்கிய கவனத்துக்குரியது. இவ்வாறான பாலியல் கேள்விகள் பற்றி உதாரணத்திற்கு தலா ஒவ்வொரு பத்திரிகையை எடுத்து அட்டவணை இட்ட போது இப்படி இருந்தது. பார்க்க அட்டவணை.

பெண்ணின் உடலை அங்கம் அங்கமாக காட்டி கவரப்­பண்ணுவது வியாபார உலகின் முக்கிய உத்தியாக கைக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான ரசனைகளுக்கு பழக்கப்­படுத்துவதன் மூலம் அதில் வாசகர்களைப் பெற்றுக் கொள்வதும், அதன் மீது அடிமை கொள்ளச் செய்வதும், அவ்வாறு திட்டமிட்டு உருவாக்கிய வாய்ப்பை பயன்படுத்தி தமது சந்தையை நிறுவுவதும் மூலதனத்தின் சாமர்த்தியமான உத்தி அல்லவா?

உதாரணத்திற்கு ஜனனியில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்

அன்பின் அண்ணா, நான் 17 வயது மங்கை. 15வது வயதில் நான் பருவம­டைந்தேன். நான் எனது பக்கத்து வீட்டு உறவினர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டேன். ஒருமுறை மட்டுமல்ல பலமுறையும் என்னை அவன் கற்பழித்தான். அவன் (ஆணுறை) பாவித்தே உறவு கொண்டான். அவன் எங்கள் வீட்டிற்கு மிக நம்பிக்­கையானவன். நான் சற்று அழகாகவும் கட்டுடல் கொண்டவளாகவும் இருப்ப­தனால் எனது கிராமத்து ஆண்கள் சிலர் என்னை விரும்பிக் கடிதம் தந்தனா;. அக்கடிதத்தில் ஒன்று அவனிடம் எப்ப­டியோ கிடைத்ததால் என்னை மிரட்டி வீட்டில் கடிதத்தைக் கொடுக்கப் போவ­தாகக் கூறியே கூறுவதாக சொல்லியே என்னை உறவு கொள்ள வைத்தான். தற்போ து இளைஞர் ஒருவர் என்னை விரும்பு­வதாகக் கூறி இரண்டு மாதமாக எனக்கு அவரு­டன் பழக்கம் உண்டு. இந்நிலையில் என்னைக் கற்பழித்த இளைஞன் தொந்தரவு தந்து கொண்டேயிருக்கிறான். வீட்டில் இதனைச் சொன்னால் காதலனைக் கொல்வேன் என்கிறான் இவன். எனக்குப் பயமாக இருக்கிறது. மேலும் எனது முதலிரவு நாளன்று உண்மை தெரிந்து விட்டால் நான் உயிரோடு வாழவே மாட்டேன்... தற்கொலைக்குக் கூட முயற்சித்தேன். இதற்கு நல்ல முடிவொன்றைத் தருமாறும், தனியார் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்று எனது கன்னித்தன்மையின் நிலையை அறியலாமா எனவும் பதில் தாருங்கள்.

அன்பின் வாசகிக்கு, உடனடியாக அந்தக் கயவனிடமிருந்து விலகுங்கள். அவன் ஒரு காமவெறியன். இது போன்ற காமப் பேய்கள் விரைவிலேயே இதற்கு தண்டனை அனுப­விப்பார்கள். அவன் பயமுறுத்தியிருக்கிறான் மற்றும்படி ஒன்றும் செய்ய­மாட்டான். மிரட்­டலுக்கு அஞ்சவேண்டாம். பெற்றோரிடம் ஏதேனும் கூறினால் அதனை சமாளிக்கலாம். கெட்ட கனவாக எண்ணி இனி வாழுங்கள். இனி கற்பைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்க வேண்டாம். பணம் புகழையும் விட கற்பு பெறுமதி மிக்கது மறந்து விடவேண்டாம்.

இந்த வகையான பதில்கள் ஏற்படுத்தப் போகும் விளைவுகளும், கருத்தியல் நிலைநிறுத்­தல்களும் கவனிக்கத்தக்கவை. கற்பு குறித்தும், புனிதம், தூய்மை என்பன குறித்த ஆணாதிக்க எதிர்பார்ப்புகளும், நிறுவல்களும் மீள உறுதி செய்யப்படுவது இப்படித்தான். அதுவும் குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு விற்பனைக்­காகத் தயாரிக்கப்படும் இந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்திவரும் விளைவுகள் நீண்டகாலத்தில் ஆபத்தானவை. இவ்வகையான பத்திரிகைகள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களையே அதிகம் போய் சேர்வதாக இப்பத்திரிகைகளுக்கு கிடைக்கின்ற கடிதங்கள் மற்றும் பிரதிபலிப்­புகளைக் கொண்டு அறிய முடிகிறது.

மேற்படி மூன்று தமிழ் பத்திரிகைகளிலும் ஜனனியில் தான் இந்த வகையான கேள்விகள் அதிகம் இருக்கின்றன. ஜனனியில் அளிக்கப்படும் பதில்களும் ஆண் ஒருவரால் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வாசகர்களின் கேள்விகளாக தாங்களே தயாரித்து பிரசுரிக்கும் வேலையும் நடக்குதாம்.

பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு பலியாக்கப்பட்டிருக்கும் ஒரு சமூக அமைப்பு அதனை தொடர்ச்சியாக தக்கவைக்க இவ்வகை தொடர்பூடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலைமையை ”பாலியல் கசாப்புக் கடைக்காரர்கள்” நன்றாகவே பயன்படுத்தி தங்களின் சந்தையை நிறுவி லாபங்களைக் குவிக்கின்றனர். இது ஒரு மோசமான சமூக அமைப்பு தொடர்ந்தும் நிலவ வழிவகுக்கிறது. திரும்பத் திரும்ப புனைவுகளுக்கும், பிற்போக்கு ஐதீகங்களுக்கும் பயன்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதும் இவை தான்.

-என்.சரவணன்

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster