Thursday, January 29, 2009

மகளிர் தினமும் மகளிர் பிரதிநிதித்துவமும்




என்.சரவணன்

வழமைபோல இம்முறையும் மார்ச் 8ம் திகதியன்று ”சர்வதேச பெண்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. இம்முறையும் பெண்கள் தினத்துக்கான ஆயத்தங்களை பெண்கள் அமைப்பு கள் மும்முமரமாக ஈடுபட்டுவருகின்றன. அவ்வாறான அமைப்புக ளில் அரச சார்பற்ற அமைப்புகள், கட்சிகள் சார்ந்த அமைப்புகள், இரண்டையும் சாராத சுதந்திர அமைப்புகள் என்பவை முக்கியமா னவை. இவற்றில் கட்சி சார்ந்த பெண்கள் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குள் கிளையாக இயங்குகின்ற பெண்கள் அணி என்பவை பெரும்பாலும் இம்முறை சர்வதேச பெண்கள் தின நினைவு கூரலை கைவிட்டுவிட்டனர். காரணம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களின் முன்னிலையில் பெண்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமானதாக அல்லது தேவையற்ற தாகப் போய் விட்டுள்ளது போலும்.

பொதுவாக பெண்கள் அமைப்புக ளைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் பெண்களின் எழுச்சியையும், பலத்தையும், பெண்களின் கோரிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்கும் இந்நாளை கூடிய பட்சம் பயன்படுத்த விளைவதே இயல்பானது.

ஆனால் இங்குள்ள அமைப்புகளுக்கு இது முக்கியமாகப் படவில்லை. அதைவிட தேர்தல் அவர்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இந்த கட்சி சார்ந்த அமைப்புகள் போலவே பெரும்­பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்முறை நேரடி­யாகவோ மறைமுகமாகவோ கட்சிகளுக்கு ஆதரவளித்து இயங்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெல்லச் செய்வதே பெருமளவான அரசசார்பற்ற பெண்கள் அமைப்­புகளின் நோக்கமாக இருப்ப தைக் காண முடிகிறது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது என்னவென்றால் அவ்வாறான பெண்கள் அமைப்புகள் எவ்விதத்திலும் பெண்களின் கோரிக்கை களை முதன் மைப்பத்திய நிபந்தனைகள் எதுவுமில் லாமல் ஆதரவளிப்பதே.

பொ.ஐ.மு.வே ஐ.தேகவுக்கு சாpயான மாற்று என்றும் ஐ.தேகவோடு ஒப்பிடுகையில் ஜனநாயகம், போர், இனப்பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவை முன்னரை விட நல்ல நிலையில் அணுகப்படுவதாகவும், ஓரளவு சாத்தியமான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்டிருப்பதா­கவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக கூறித் திரிவதைக் காணமுடிகிறது.

இந்நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தாவது இவ்வமைப்புகள் அவதானத்து டன் அணுகுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

குறிப்பாக உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 40 வீதத்தினர், 16-35க்கு இடைப்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனும் விதி தேர்தல் ஆணைக்குழுவி னரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விதி மீறப்பட்ட பல பட்டியல்கள் இம்முறை நிராகரிக்கவும் பட்டன. இவ்வாறான ”இளைஞர்” பிரதிநிதித்து வத்தைப் பெற பிரயத்தனம் செய்த ஆணாதிக்க ஆட்சியதிகார கட்டமைப்பு பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து சிறிதும் சட்டை செய்யவே இல்லை. இதில் ஆச்சிரியமும், அனுதாபமும் கொள்ள வேண்டிய விடயமென்னவென்றால் இது குறித்து எந்தவொரு பெண்கள் அமைப்புமே கவனத்தில் கொள்ளாதது தான்.

இந்த 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை நோக்குவது இங்கு முக்கியமானது.

1987-1989 காலப்பகுதியில் நடந்த அரச பயங்கரவாதத்தை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பியினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆயிரக்க ணக்கான இளைஞர்கள் பிரேமதா சவின் படையினரால் கொன்றொழிக்க ப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்ட போது சர்வதேச ரீதியில் பிரேமதாச அரசாங்கம் சாடப்பட்டது, கண்டிக்கப் பட்டது. இதை மூடி மறைப்பதற்காகவும் இளைஞர் பிரச்சினைக ளை தீர்க்க வந்தவராகவும் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை பிரேமதாசவுக்கு இருந்தது. அதன் விளைவாக 1989இல், ”இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது, அவ் ஆணைக் குழுவில் இருந்த ஐவரில் ஒருவர் இன்றைய நீதித்துறை அமைச்சர் (அன்றைய கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர்.) ஜீ.எல்.பீரிஸ், இன்னொருவர் ஐ.நா.சபையில் பெண்கள் மீதான வன்முறை பற்றிய அறிக்கையாளராக கடமையாற்றும் ராதிகா குமாரசுவாமி.

அவ்வாணைக்குழு விசாரணையின் முடிவில் பல பிரேரணைகள் முன்வைக் கப்பட்டன. அப்பிரேரணைகளில் ஒன்று தான் அரசியலில் இளைஞர்களுக்கு 40 வீத பிரதிநிதித்துவம் என்பது.

அவ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை முழுமையாகப் பார்க்கும் போது அது இளைஞர்களை கட்டிப்போடுவது எப்படி? இளைஞர்களின் புரட்சிகர குணாம்சங்களை வளரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது போன்ற இலக்கைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. மற்றொரு அம்சம், அது ”இளைஞர்” என கருதிக் கொண்டது ஆண்களை மட்டுமே என்பது. இளைஞர்கள் சம்பந்தமாக ஆராயப்பட்ட அவ் ஆணைக்குழு அறிக்கையில் எந்த அத்தியாயமும் ”இளம்” பெண்கள் பற்றி ஆராயப்படாததும் விதிவிலக் காகவே பெண்களை சந்தித்து விசாரித்துள்ளனர் என்பதுவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவால் ”இளைஞன்” களுக்கு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதத்தில் விதிகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.

அது மட்டுமன்றி அவ் ஆணைக்குழுவில் பெண்நிலை­வாதி என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் இருந்தும் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை யென்றால் அதை சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்த ஆணாதிக்க சட்ட அமுலாக்க கட்டமைப்பை பற்றி மட்டும் கூறவா வேண்டும்?
”பிரதிநிதித்துவம்” எனும் போது ஜனத்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களு க்கும் சமமான பிரநிதிநிதித்துவம் இருக்கக் கூடிய வகையில் ஒழுங்கமை க்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அரசியலமைப்பில் ”சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' எனும் போலி வாசகம் மாத்திரம் போதுமானதல்ல. இன்னமும் சர்வதேச ரீதியில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் 5 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. என்பதே யதார்த்த நிலை. இந்நிலை யில் குறைவிருத்தியுடைய (குறைவிரு த்திக்குள்ளாக்கப்பட்ட) பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதெனில் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். அப்படியாக விசேட கவனிப்பு செலுத்துவதா­கவிருந்தால் குறைந்த பட்சம் அக்குறிப்பிட்ட காலத்துக்கு வேட்பாளர் பட்டியலில் 50 வீதத்துக்கும் அதிகமான வீதத்தை பெண்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது. ஆனால் இங்கு 3 வீதத்தைக் கூடக் காணவில்லை.

இதன் அர்த்தம் வேட்பாளர் பட்டிய லில் பெண்களின் எண்ணிக்கையை கூட்டிவிட்டால் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடிவிடும் என்பதல்ல. எப்படியோ வாக்காளப் பெண்கள் கூட ஆண்களை நோக்கியே தமது வாக்குக­ளையிடுவார்கள் என்பதும் வேட்பாளப் பெண்களும் தமது வெற்றியின் பின் பெண்களை பிரதிநித்துவப்படுத்தப் போவதில்லை என்பதுவும் உண்மை. ஆனால் இந்த முதலா­ளி­த்துவ பாராளுமன்ற அமைப்புமுறை மாற்றமுறுவது வரையி­லான காலம் வரை பெண்களது அரசியல் ஈடுபாட்டை நிர்ப்பந்திக்க கணிசமான அளவுக்கு இது உதவுமென்று நம்பலாம்.

இந்தியாவில் கூட பாராளுமன்ற த்தில் 30 வீத பெண் பிரதிநித்துவ கோரிக்கை நாடு முழுவதும் மிகவும் துடிப்பாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

இன்னமும் பெண்களின் பாராளு மன்ற பிரதிந்துவம் குறித்த அசமத்துவ நிலை குறித்து அரச மட்டத்திலேயோ அரசு சாராமட்டத்திலேயோ கேள்வி எழாததன் காரணம் என்ன? ஏன் ஒரு முறையேனும் பெண்கள் அமைப்பி னரால் கூட குரல் எழுப்பப்படவில்லை? 1987-1989இல் நடந்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தான் இன்று 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவம் வழங்கப் படக் காரணம் என்றால் பெண்கள் கூட தமது உரிமைகளுக்காக அப்படியொரு தனித்த போராட்டத்தை முன்னெடுத் தால் தான் கவனத்தில் கொள்ளப்ப டுமோ?

இக்கேள்விகள் நியாயமான முறை யில் பரிசீலிக்கப்படாவிட்டால் அப்படி யொரு நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

(1997- மார்ச்-06,சரிநிகர்)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster