Wednesday, January 28, 2009

அப்படிப்பட்ட ஒரு விடுதலை
எனது மகனுக்கு தேவையில்லை!
-சீலவத்
தி-



நேர்காணல் - என்.சரவணன்

சீலவத்தி டி சில்வா

1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல.
ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அறிமுகப்படுத்துகி­ன்ற நோக்கில் அவர் பற்றிய அறிமுகமும் சிறு உரையாடலும் இவ்விதழில் பிரசுரமா­கிறது.

அவர் இப்போது இல்லை என்றே பரவலான கதை நிலவி வந்தது. ஆனால் ஒஸ்மன் டி சில்வாவிடம் நேர்காண­லொ­ன்றை செய்வதற்­குச் சென்றிருந்த வேளை அவரது தாயார் இன்ன­மும் இருக்கின்ற தகவலை அறிய முடிந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் ”இது தகர்த்தெறி­யப்பட வேண்டிய சமூக அமைப்புமுறை” என உறுதியாகக் கூறுகிறார் அவர்.

அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி.யினர் மத்தியிலும் இடதுசாரிப் பெண்கள் மத்தியிலும் மதிப்பு மிக்கவராக விளங்கிவரும் தோழர் சீலவத்தியை வட­கொரிய புரட்சிகரத் தலைவரின் தாயார் ”கம்பொங்ஷொக்” என்ற பெயரில் ஜே.வி.பி.­யினர் அழைத்து வந்தனர்.

1923 டிசம்பர் 24ஆம் திகதி கொழு­ம்பு-பொரல்­லையில் பிறந்த இவாpன் பெற்­றோர், ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற் கட்சி­யின் ஆதரவாளர்கள். 1940இல் தள்ளு வண்டி­களை சொந்தமாக வைத்து வாடகைக்கு கொடுத்து வந்த வில்பிரட் சில்வாவை இவர் மணந்தார்.

30களில் மலோpயா காய்ச்சல் பரவிய­போது, மலோpயா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சமசமாஜக் கட்சியினாpன் பிரச்சாரத்தால் கவரப்பட்டு தம்பதியர்கள் இருவரும் அரசியலில் ஈடுபாடு காட்டினர். இரண்டாம் உலக மகா யுத்தக் காலப் பகுதியில் சமசமாஜக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தடை செய்யப்பட்­டிருந்தது. சம சமாஜக் கட்சியின் செயற்பா­டுகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்­கொள்ளப்பட்டு வந்தன. இரகசியப் பிரச்சார வேலைகளிலும் கட்சியின் உத்தியோகபூர்­வமான ஏடான ”சமசமாஜய” பத்திரிகையை இரகசியமாக விநியோகிப்பது போன்ற வேளைலகளில் தோழர் சீலவத்தி ஈடுபட்டு வந்தார். கால்களில் பத்திரி­கைகளை சுற்றி வைத்து இரப்பர் போட்டு விழாதபடி வைத்துக்கொண்டு வெளித் தெரியாதபடி சேலைய­ணிந்து செல்வாராம் இவர்.

1942 இல் இவர் கொம்யூனிஸ்ட் கட்சி­யு­டன் இணைந்து கொண்டார். உள்ளுரா­ட்சித் தேர்தல்களின் போது பீட்டர் கெனம­னின் வெற்றிக்காக கடுமையாக உழைத்­தார். பேர் பெற்ற டிராம் வண்டித் தொழிலாள­ர்­களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது வீதி மறியல் செய்தனர் பெண்கள். அப்பெண்களுக்கு தலைமை தாங்கியவர்­களில் சீலவத்தி, மல்லிகா, சோமா போன்ற­வர்கள் முக்கியமான­வர்கள். இரண்டாம் யுத்த காலப்பகுதியின் பின் சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் விடுத­லையாகி வந்த­னர். அதன் பின் கட்சியின் வேலைக­ளைப் பகிரங்கமாக நடத்த முடிந்­ததால், சீலவத்தி தனது பிரதேசமான வனாத்த­முல்ல பகுதியில் ல.ச.ச.க.வின் மாபெரும் பகிரங்கக் கூட்ட­த்தை நடத்துகின்ற ஒழுங்குகளை மேற்கொண்டார். பின்னர் ல.ச.ச.க. தலைமை தாங்கிய லிப்டன் கம்பனி, பொஸ்டட் கம்பனி, கொமர்ஷல் கொம்பனி போன்ற வேலை நிறுத்தப் போராட்டங்க­ளிலெல்லாம் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

1953 ஹர்த்தால் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு என்பது வரலாறு காணாத ஒன்று என்பதை யாரும் அறிவர். வீதிகளை மறித்து மறியல் போரா­ட்டம் செய்த போது அரசாங்கம் வலுக்கட்­டா­யமாக வாகனங்களை செலுத்தி­யது. அதனை தடுப்பதற்கென வீதிகளில் கிடையாக குழி தோண்டுதல், மற்றும் வாகனங்­களை சேதப்படுத்துதல போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்ட­மிடப்­பட்டிருந்தது. அதற்காக வெடி குண்டு­கள் கூட தயார் படுத்தப்பட்டிருந்தது. அப்ப­டி­யான தயாரிப்புகளில் தோழர் சீலவத்தி­க்கும் பங்கிருந்தது.

சீலவத்தி அரசியல் ரீதியில் நிறைந்த அனுபவங்­களைப் பெற்றிருந்த வேளை 1963, 1964களில், இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டுவது குறித்து தீர்மானம் நிறை­வேற்றிய போது லெஸ்லி குணவர்தனவுடன் சேர்ந்து நடுநி­லைமை வகித்தார். ஆனால் அது எவ்வளவு தவறான நிலைப்பாடு என்பதை பிற்காலத்­தில் உணர்ந்ததாகத் தெரிவிக்கி­றார்.

படிப்படியாக தான் சார்ந்த கட்சியி­லிருந்து நம்பிக்கையிழந்தார். ஜே.வி.பி. செயற்படத் தொடங்­கிய போது அது வரை காலம் ல.ச.ச.க.வில் செயற்பட்டு வந்த தனது மகன் ஜே.வி.பி.யில் இணைந்து அதில் தீவிரமாக செயற்படத் தொடங்கி, தனது வீடும் ஜே.வி.­பி.யின் கட்சிக் காரியா­லயமாக செயற்படத் தொடங்­கிய போது அதில் படிப்படியாக ஈடுபடத் தொடங்கி­னார். அவரால் முடிந்த வேலைகளை பொறுப்பெடுத்து செய்து வந்தார்.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். சமூக விடுதலைக்காக எந்த அமைப்­பில் தீவிரமாக ஆரம்பத்திலிருந்து தன்னை அர்ப்பணித்து வந்தாரோ, அதே கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தான் இவரை கைது செய்து கடுமையான சித்திரவதைக்குள்ளாக்­கியது. தோள்பட்­டையில் பட்ட அடி காரணமாக தோள்ப­ட்டை எலும்பு முறிந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். தோழர் சீலவத்­தி­க்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் (ஆண்­கள் ஐந்து பேர், பெண்கள் மூவர்). புரட்சி­யின் போது அவரது மூன்று பிள்ளைகளும் (ஒஸ்மன்ட், சிட்னி, நெந்தொல்) கைது செய்­ய­ப்பட்டனர். எல்லோரும் நான்கு வருட­ங்களுக்கு குறையாத சிறைவாசத்தை அனு­பவித்தனர். ஒரு மகன் 1987-89 காலப் பகுதியில் கொல்லப்பட்டார். படையினரால் கொல்லப்பட்டவர் என்றே இன்றும் நம்பப்படுகிறது.

71 ஏப்ரல் புரட்சியைத் தொடர்ந்து இவரது வீடு பொலிஸாரால் அழித்து தீக்கி­ரையாக்கப்­பட்டது. சூழ இருந்தவர்களால் பொருட்கள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த ஏனைய பிள்ளைகள், மருமக்கள்­மார், பேரன் பேத்தி என எல்லோருமாக எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருக்க நேரிட்டது. போகு­மி­டங்­களிலெல்லாம் ஒரு பயங்கரவாதக் குடும்பம் என்று பார்க்கப்பட்டதே இதற்கான காரணம். ”சொந்­தக்காரர்கள் கூட எங்களு­டன் நெருங்க அஞ்சினர். எங்களுக்கு உதவி செய்ய மறுத்தனர். வீட்டில் இருந்த ஆண்கள் எல்லோ­ரும் கைது செய்யப்பட்ட நிலையில் பெண்கள் நாங்கள் வறுமையி­லும், பயத்திலும் காலத்தை கடத்தினோம். அந்த துன்பங்களையும், அவலத்தையும் இன்று நினைத்துப் பார்க்கவும் நடுங்குகி­றது” என்கிறார் சீலவத்தியின் மகள். இப்படி­ப்பட்ட கொடுர அனுபவங்களின் மத்தி­யிலும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவரா­கவும், சமூகப் புரட்சியொன்றை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கின்ற இந்த தாய் வரலாற்று நினைவுகளில் பதிந்து விட்டவர்.


லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர உறுப்பினராக செயற்பட்ட நீங்கள் எப்படி ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளராக ஆனீர்கள்?


எமது வீட்டில் தான் ஜே.வி.பி.யின் சகல அந்தரங்க கூட்டங்களும் நடத்தப்பட்­டன. ஆரம்பத்தில் மகன் கூட எனக்கு விபரங்களை மறைத்தான். வீட்டில் நடத்தப்­படும் கூட்டங்களின் போது அந்த பிள்ளை­களுக்கான உதவிகளை நான் செய்து வந்த போதும் கூட ஒரு மனித குலத்துக்கு விடிவு தேடித்தரும் ஒரு புரட்சிக்கான தயா­ரி­ப்புகளை செய்து வருகிறார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள தாமதமாகவி­ல்லை. புரட்சிக்கான சகல ஒத்துழைப்புக­ளையும் நான் செய்ய தீர்மானித்தேன். இதேவேளை ஜே.வி.பி. குறித்து போலிப் பிரச்சாரங்களை ல.ச.ச.க. மற்றும் கொம்யயூனி­ஸ்ட் கட்சியும் செய்து வந்த போது அது வரை காலம் அதன் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்த என்னால், அந்தக் கட்சி­களை விமர்சிக்காமல் இருக்க முடியவி­ல்லை. எனவே படிப்படியாக ல.ச.ச.க.வின் செயற்பாடுகளிலிருந்து விலகிய அதே வேளை ஜே.வி.பி.யுடனான செயற்பாடு­களை அதிகரித்துக் கொண்டேன்.

71இல் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்க­ப்பட்டிருந்த விஜேவீரவை சந்தித்து தாக்குதலை நடத்துகின்ற செய்தியை அவரிடமிருந்து நீங்கள் தான் பெற்று வந்தீர்கள் என்று கூறப்படுகிறதே உண்மையா?


இயக்கத்தின் இளைஞர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை சிறைக்குச் சென்று சந்திப்­பது மற்றும் ல.ச.­ச.க.வைச் சேர்ந்த -வழக்கறிஞர்க­ளாக இருந்த- எனது நன்பர்களின் உதவியோடு விடுவிப்பது, சிறையிலிருக்கும் கட்சி உறுப்­பி­னர்களிடம் தகவல்களைக் கொண்டு செல்வது, அவர்களிடமிரு­ந்து தகவல்­களை கொண்டு வருவது போன்ற கடமை­களை செய்து வந்தேன். யாழ்ப்பாணத்து­க்குச் சென்று தோழர் விஜேவீரவை சந்தி­க்க நானும் தோழர் குமநா­யக்கவும் சென்றி­ருந்தோம். தாக்குதலை மேற்கொள்­ளும் தீர்மானம் பற்றிய தகவல் என்னிடம் அனுப்­பப்­படவில்லை. அத்தக­வல் குமநாயக்கவி­னூடாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

புரட்சிக்கு முன்னரேயே உங்கள் மகன் உட்பட பல இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு­ விட்டன. அப்போது ஆட்சியிலிருந்த ல.ச.ச.க.வினரை சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா?

தோழர் என்.எம்.பெரேராவை கட்சித் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நானும் குமநாயக்கவும் சென்று சந்தித்து இது குறித்து உரையாடினோம். ”இந்நாட்­டின் புரட்சிகர இளைஞர்கள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதை தடுக்க எவராலும் முடியாதே தோழர், அவர்களை கைது செய்து அடைத்து அடக்­குமுறையை பிரயோகிப்பது இடதுசா­ரிக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கமொ­ன்றில் எப்படி நிகழ முடியும்? நீங்கள் கூறி வருவதைப் போல இடதுசாரிக் கட்சிகளை நாசம் செய்ய வந்த சீ.ஐ.ஏ. இயக்கமென்பது கட்டுக்கதை. முடிந்தால் அவர்க­ளுடன் சேர்ந்து ஒத்துழையுங்கள்” என்று கேட்­டேன். அவர் இதற்கு செவிமடுக்கவில்லை. அலட்சியமாக நடந்து கொண்டார். ”இப்படி சென்றால் செக்கோஸ்ல­வேக்­கியாவில் நடந்ததைப் போல் தான் ஆகும். உங்­களது மகன் ஒஸ்மன்டை வேண்டுமென்றால் விடுதலை செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி என்னோடு ஒன்றும் பேச வேண்டாம்” என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு மட்டும் தேவை இல்லை என்று வந்து விட்டேன்.

அப்போதைய ல.ச.ச.க.வினர், அரசாங்கத்துடன் சேர்வதென்ற முடிவை எடுத்த போது நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்?

ஐ.தே.க தோற்கடிக்குமுகமாக ஐக்­கிய முன்ன­ணியொன்றை கட்டியெழுப்புவ­தற்கு ல.ச.ச.க., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிரேரணை குறித்து ஒரு முறை நகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்­தில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. ஏறத்­தாழ 700க்கும் மேற்பட்ட வாக்குகள் அப் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்­டது. அந்த விவாதத்தின் போது பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி போன்ற தோழ­ர்கள் கடுமையாக எதிர்த்து தாங்கள் வெளி ­யேறுவதாக அறிவித்தார்கள். லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆகியோர் இதன் போது தாங்கள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் நடுநிலை வகித்தேன். பிற்காலத்­தில் அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தி­ருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

நீங்கள் கைது செய்யப்பட்டது எப்போது?

ஏப்ரல் 18ஆம் திகதியன்று நான் கைது செய்யப்பட்டேன். ஒஸ்மன்ட்டை எங்கு வைத்தி­ருந்தார்கள் என்பது தெரியா­திருந்தது. நான் தேடியலைந்து கொண்டிரு­ந்தேன். அப்படியான ஒரு வேளையில் தான், இடையில் வைத்து பொலிஸார் என்னைக் கைது செய்தார்கள். நான்கு வருடங்கள் எவ்வித வெளியுறவுகளும் இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்­தேன். ஆரம்பத்தில் நான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தேன். தோளில் கடும் தாக்­கு­தலால் குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்று வந்தேன். 5ஆம் திகதி தாக்குதல் பற்றிய செய்தியை விஜேவீரவிடமிருந்து நான் தான் பெற்று வந்தேன் என வாக்கு மூலமளித்தால் என்னை விடுதலை செய்வ­தாக கூறினார்கள். நான் இறுதி வரை ஒப்புக் கொள்ள மறுத்தேன். அதன் விளைவாகவே நான்கு வருடங்கள் சிறையில் கழித்தேன். மதிலுக்கு அப்பால் எனது மகன்மார் மூவ­ரும் தடுத்து வைக்கப்பட்டிருந்­தும் கூட அவர்களைச் சந்திக்க அனுமதி தரப்படவி­ல்லை. ஒரு முறை ஒஸ்மன்ட் என்னை சந்தி­க்க வேண்டுமென விசாரணையாளர்களிடம் கோரியதைத் தொடர்ந்து ஆணைக்குழுவி­லிருந்த ஒரு மனித நேயமிக்க ஒரு விசார­ணையாளர் தனது சொந்த முயற்சியின் பேரில் பல இடங்களிலிருந்து உத்தரவு பெற்று ஒரே ஒரு முறை சந்திக்க வழி செய்தார்.

சிறையில் பெற்ற அனுபவங்களை விளக்குங்களேன்?

வெலிக்கடை சிறையில் எங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜே.வி.­பி.யின் பெண் தோழர்­கள் பலர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்­குள் நாங்கள் முகம் கொடுத்த முக்கிய பிரச்­சினை, சாதாரண சமூக விரோத குற்ற­ங்களுக்காகத் தண்­டனை பெற்ற கைதிக­ளையும் எங்களைப் போன்ற அரசியல் கைதிகளையும் ஒன்றாக போடப்பட்டிருந்­தது தான். பாதாள உலக செயற்­பாடுகளில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரும் எங்களுடன் சேர்த்து போடப்பட்டிருந்தனர். சிறைக்குள் அவர்க­ளுக்கு, பல சலுகைகள் சிறை அதிகாரிக­ளால் வழங்கப்பட்டு வந்தன. உணவு, இருப்பிடம், சீருடை என பல விடயங்களில் அவர்களுக்கு விசேட வசதிகள் இருந்தன. அரசியல் கைதிகளான நாங்கள் நியாய­மான வசிதிகளோஇன்று இருந்த அதே வேளை கிரிமினல் குற்றவாளிகள் சலுகை பெற்றவர்களாகவும், சிறைக்குள் அதிகா­ரம் நிறைந்தவர்களாகவும் இருந்­தார்கள். அது மட்டுமன்றி அக்கைதிகள் எங்களை இம்சித்தார்கள். எனவே, சிறைக்குள் அடிக்­கடி இரு சாராருக்குமி­டையில் சண்டைகள் நடப்பதுண்டு. நாங்­கள் எமது எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சிறைச் சாலைக்குள்ளும் போராடி­னோம். ஏற்கெனவே சித்திரவதைக்குள்ளாகி, விரக்தியுற்ற நிலையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பெண் தோழர்களுக்கு ஏற்பட்ட இவ்வகையான நிலைமைகள் ஒரு வகையில் சித்திரவ­தைகளே. உண்மை­யில், சிறைச்­சாலை என்பது இன்னொரு அரசியல் வகுப்பு மாத்திரமன்றி இன்னொரு போராட்டக்களமும் கூடத்தான்.

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster