Thursday, January 29, 2009
என் உடல் மீதான உரிமை என்னதே!
"பெண் மீதான அடக்குமுறையின்
அடிப்படை பாலியலிலிருந்தே
ஆரம்பிக்கப்படுகிறது"
-குமுதினி சாமுவேல்-
என்.சரவணன்
பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இன்று அதன் இணைப்பாளராகவும் உள்ள குமுதினி சாமுவேல் நீண்ட காலமாக பெண்ணியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 80களின் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் தொழிலாளர் போராட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமானவர். பெண்களின் மீதான அடக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகை செய்திகிளினூடாக கண்காணித்து அவை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வரும் ''பெண்ணுரிமைகளின் கண்காணிப்''பின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் இவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கையிட்டு வருவராகவும் இருந்து வருகிறார். மேர்ஜ் அமைப்பின் தேசியக் கமிட்டி உறுப்பினரான அவர் பெண்ணிய விடயங்களில் குறிப்பாக பெண்களின் சுகாதார, மறுஉற்பத்தி உரிமையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர்.
சமீப காலமாக கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பெண்களின் சுகாதார உரிமைகள், மறு உற்பத்தி உரிமைகள் பற்றிய விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்ச் சூழலில் இது குறித்த கருத்தாடல்கள் போதுமானதாக இல்லை. மேலும் எனது உடல் எனக்கே சொந்தாமானது அதை தீர்மானிக்கும் உரிமையும் எனக்குரியதே எனும் கோஷமும் பெண்கள் அமைப்புகளால் பலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலம் இது. இந்த நிலையில் இவை பற்றி உரையாட தேர்ந்த நபரென குமுதினி சாமுவேல் அவர்களை தெரிவு செய்தோம்.எனது உடல் எனக்குரியது எனும் கோஷத்தை முன்னெடுக்கின்ற ஒரு வேலைத் திட்டம் குறித்து அண்மையில் இலங்கை அரசு சார்பற்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது பற்றி விளக்குவீர்களா?
அதை இந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அந்த கலந்துறையாடலில் இவை பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட கோஷங்களை உருவாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து மட்டும் தான் கலந்துரையாடினோம்.
பெண் உடல் மீதான ஆணின் அதிகாரம், மற்றும் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புனைவுகள் பற்றி?பெண்ணின் உடல் பற்றி எடுத்துக்கொண்டால் சிறு வயது தொடக்கமே அவளது உடல் பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணின் மாதவிடாய் தொடங்கும் காலம் தொட்டு, திருமண கால மாதவிடாய் வரை எமக்கு கற்பிக்கப்படுபவை, எமக்கு கற்பிக்கப்படாதவை பற்றி முக்கியமாக அவதானித்துப் பாருங்கள். சுகாதார விடயங்கள் பற்றி தாய்மார் பேசுவதற்கு வெட்கப்படுகின்றனர். தந்தை மார் அது பற்றி பேசுவதே கிடையாது. இப்படியான நிலையில், ஒன்றில் நன்பிகள் மூலமாகவோ அல்லது சில நூல்களினூடாகத் தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறோம். இவற்றிற்கூடாக பெரும்பாலும் எமக்கு வந்து சேர்பவை தவறானவையாக இருந்து விடுகின்றன.
இன்று தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் காணப்படுகின்ற ”பெரிய பிள்ளையாதல்” என்பது வெறும் ”சடங்கு” ஆகவே கொள்ளப்படுகிறது. அதன் போது பெண், திருமணத்துக்கு தயாரானவள் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்த சிகப்பு உடுத்தி ஒரு கண்காட்சியையே நடத்தி விடுகிறோம்.
ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சியை அவதானித்தேன். எனது நன்பி ஒருவாpன் உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்தார்கள். விசாரித்ததில் தனது பிள்ளைக்கு சாமத்திய சடங்கை நடத்துவதற்காக யாழ் அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை பிரச்சினைகளின் மத்தியில் நடத்தத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சிரியப்படுத்தியது. சாமத்திய சடங்கு பற்றிய மரபான முறையை கவனித்தோமானால், மாதவிடாய் முதல் தடவையாக வெளியேறுகிற சந்தர்ப்பத்தில் ஆண்களின் பார்வையிலிருந்து விலக்கி வைத்து, நேரம் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் நீராட்டி, கடவுளை வணங்கச் செய்து, பகிரங்கமாக உறவினர்கள், நண்பர்கள் பார்வையின் முன் கொண்டு வருவார்கள். இது முதலாவது சந்தர்ப்பத்தில். ஆனால் 12 தடவைகள் (12 மாதங்கள்) மாதவிடாய் வந்தபின்னும் கூட இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் காரணம் அதில் ”வாடிக்கையாளருக்கு” அறிமுகப்படுத்தும் நோக்கமும் திருமணத்துக்கு தகுதி பெற்று விட்டாள் என்கின்ற செய்தியை தெரியப்படுத்துவதுமே உள்ளார்ந்து இருக்கிறது.
வயதுக்கு வந்ததும் ஆண்களுடன் சேரக் கூடாது, பேசக்கூடாது, பழகக் கூடாது என வீட்டார் நிபந்தனை விதிப்பார்கள். திருமண காலங்களில் கூட எமது சம்பிரதாயங்களில் திருமணம் பற்றியோ குறைந்தது பாலியல் விடயங்கள் பற்றி கூட விளக்கமளிப்பதில்லையே. திருமணமான பழையவர்களைக் கேட்டால் தமக்கு அந்த முதல் இறவின் போது நடந்தவை பற்றி ஆச்சரியமாக இருந்தாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் சிறியானி பஸ்நாயக்க செய்திருந்த ஆய்வொன்றில், மணமாகாத பருவ வயது இளம் ஆண், பெண்கள் மத்தியில் பாலுறவு செயற்பாடுகள் அதிகாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இளம் சந்ததியினர் மத்தியில் இன்று பாலியல் விடயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் மறு உற்பத்தி சுகாதாரம் என்றால் என்ன என்பது குறித்த முறையான விளக்கம் அவர்கள் மத்தியில் கிடையாது.
சுகாதாரம் மறு உற்பத்தி குறித்த விடயங்கள் பெருமளவு பெண்ணின் உடல், பாலுறவு என்பவற்றோடு ஒட்டியல்லவா பேசப்படுகிறது?
மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய விடயங்கள் பரந்துபட்டது. பாலியல் ஈடுபாட்டின் போது கருக்கட்டப்படலாம். பாலுறவின் போது கருக்கட்டலை தவிர்க்க வேண்டுமாயின் எப்படிப்பட்ட முறையில் தவிர்ப்பது என்பது பற்றிய விளக்கம் பெரும்பாலும் கிடையாது. கருக்கட்டலை தவிர்க்கின்ற வகையில் பாதுகாப்பான பாலுறவு கொள்வது எப்படி என்பது பற்றி திருமணமானவர்கள் சாதாரணமாக வைத்தியர்களின் ஆலோசனையைப் பெறலாம். திருமணமாவதற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பாதுகாப்பான பாலுறவு கொள்ள ஆலோசனை பெறுவதற்கு பெரும்பாலும் முடிவதில்லை.....
இரண்டாவது, பாலுறவின் போது ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய எச்சரிக்கை கொள்ள வாய்ப்பில்லை. பாலியல் சார்ந்த நோய்கள் உள்ளவர்களை சமூகம் ஒழுக்கவியல் விவகாரமாகவே (moral) பர்க்கிறது. அவர்கள் பாவம் செய்தவர்களாகவும், ஊழ்வினைப்பயனை அனுபவிப்பவர்கள் என்றும் கருதுகிறது. அவ்வாறான நோய்களை தவிர்க்கும் முறைகள் பற்றி எமக்குத் தெரிவதில்லை. இன்று அதையும் விட எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி குறைவாகவே பேசப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலானோர் எமது நாட்டில் அப்படியொன்றும் பெரிதாக இல்லை எனக் கூறிக்கொள்கின்றனர். பேசவே விருப்பமில்லாத விடயமென்பதால் அப்படியொன்று இல்லையென்று ஒளிக்கவே விரும்புகிறோம்.
இன்று போர்ப் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அங்கு இளம் - ஆண்கள் படையில் பெருமளவாக உள்ளனர். சாவிலிருந்து தப்பி, விடுமுறையில் திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உணர்ச்சிகளைத் தணிப்பதற்காக பெண்களைத் தேடிக்கொண்டு செல்வார்கள். இன்று அனுராதபுரத்தில் பாரியளவில் விபச்சாரத் தொழில் நடந்து வருவது எம்மெல்லோருக்கும் தெரியும். எல்லைப் புறங்களிலும் இது தான் நிலைமை. மேலும் படையினர் அதிகமாக நடமாடும் இடங்களில் பெண்கள் பழியாக்கப்படுகின்றனர்.
விருப்பத்துடனோ விருப்பமின்றியோ இவை நடக்கின்றன. பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. படையினர் சூழ உள்ள பிரதேசங்களில் படையினரின் பாலியல் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அப்படியான பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பான பாலுறவு, கருக்கட்டல் தவிர்ப்பு, சுகாதாரங்கள், பாலியல் நோய்கள் என்பவை பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. படையினருக்குக் கூட இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறதா என்பது தெரியாது. அவர்கள் உறவு கொள்ளும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்களா?
சிலர் ஆணுறை மாத்திரம் பாவிக்கின்றனர். ஆனால் பெருமளவான ஆண்கள் ஆணுறையைப் பாவிக்க விருப்பப்படுவதில்லை. திருமணமான கனவனைக் கூட எமது பெண்கள் ஆணுறை பயன்படுத்துமாறு வலியுறுத்தும் வழக்கம் இல்லையே. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழமைபோல ஆணின் அதிகாரம் தான் அதையும் தீர்மானிக்கிறது. எனவே பெண்களின் உடலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இவை அனைத்தும் பெண்களின் மறு உற்பத்தி உரிமைகளுடன் தொடர்புடையவை.
பொதுவாக இவை குறித்த விழிப்புணர்வுகள் போதுமானதாக இல்லையே?
சமீப கால தரவுகள் படி குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் அது தற்போது குறைந்து வருவதாக சில மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். குடும்பத்திட்டம் பற்றிய கருத்தூட்டல் நிகழ்ச்சிகள் இலங்கையில் எந்தளவு தூரம் மக்களை அடைகிறது என்பது தொpயாது. இல்லாமல் போனால், கருக்கட்டல் வரையறையில்லாமல் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தற்போது திருமணமாகின்ற வயதும் அதிகரித்து வருகிறது. பெண்களாயின் அது 26-28 ஆகிறது என்றும் ஆண்களாயின் 30 அல்லது அதையும் தாண்டுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே திருமணமாவதற்கு முன்னர் பாலுறவுக்கான வாய்ப்புகள் உண்டு. அதை விட திருமணமான பின்னர் வேற்று பாலுறவுக்கான வாய்ப்புகளும் உண்டு. இதைவிட எமது சமூகத்தில் கனவரிழந்தவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு உண்டு. வடக்கிலும், தெற்கிலும், உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தேவைகள் இல்லையா? அல்லது அவர்கள் பாலுறவுக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாக மாட்டார்களா?
சம்பிரதாய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எமது சமூகத்தில் பாலுறவுகள் நடைமுறையிலிருக்கின்றன. நாங்கள் அதனை பிற்போக்குத் தனமாக உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பார்ப்போமானால் எம்மால் பிரச்சினைகளை அடையாளம் காணவும் முடியாது. அதனை தீர்க்கவும் முடியாது. யதார்த்தம் என்ன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நவீன சமூகத்தில் இந்த யதார்த்தத்தைத் தடுக்க முடியாது. எனவே நாம் இது விடயத்தில் எடுக்கக்கூடிய ஒரு ஒரே வழி பெண்களைப் பாதுகாப்பது. அதற்கு எமக்கு தகவல்கள் தேவை. பாலுறவுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகள் தேவை. கருக்கட்டல் எவ்வாறு இடம்பெறுகின்றது. கருக்கட்டல் அவசியமில்லையெனில் அதற்கேற்றவகையில் பாலுறவு கொள்வது எப்படி, அதையும் மீறி கருக்கட்டப்பட்டால் அதை பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு, திட்டமிடல் அவசியம். மத்திய தர வர்க்கத்தினருக்கு இவ்விழிப்புணர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகம். வறுமை மிகுந்த, கிராமிய, மற்றும் தொழிலாள, விவசாய பிரிவினருக்கு இந்த வாய்ப்புகள் எட்டுவதில்லை. அவர்களைப் போய் இந்த விழிப்பூட்டல்கள் போய் சேருவதில்லை, அல்லது வெட்கம் காரணமாக அவர்கள் பின்வாங்குகின்றனர். இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத்திலும் இந்த நிலமை இருக்கிறது. மலையகத்தில் பெரும்பாலும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்.
இன்று கருக்கலைப்பு உரிமை பற்றிய விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதற்கென்ன காரணம்?
இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவிலும் தாய்மையைப் பாதுகாப்பது (safe motherhood) என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பை செய்து கொள்ளளாம் என்கின்ற கருத்து உள்ளது. அதனடிப்படையிலேயே சட்டங்களும் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமான ஒன்று. உங்களுக்குத் தெரியும் இன்று இலங்கையில் நாளொன்றுக்கு 750க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக ஐ.நா.வின் தகவல் கூறுகின்றன. இதன் போது தாய்மார் 5-6 வீதம் வரை மரணிக்கின்றனர். இதன் பின்னராவது நாம் பெண்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், கருக்கலைப்பு ஒரு உயிர்க் கொலை, பாவம் என்கின்ற கருத்தாக்கத்திலிருந்து தொடங்கினால் உயிருடன் இருக்கிற தாயின் உயிர், ஆரோக்கியம், எதிர்காலம் குறித்த முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கருக்கலைப்பை சட்ட ரீதியில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான வசதிகளையும் ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு. பெரும்பாலும் கருக்கலைப்பைத் தீர்மானிக்கும் போது ஆணும் பெண்ணுமாக உடன்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் கருவை சுமப்பதும், அதன் விளைவுகளை சந்திப்பதும் பெண் என்பதால், குறித்த தீர்மானமெடுப்பதில் பெண்ணுக்கே முன்னுரிமை இருத்தல் அவசியம். விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு அதிகமாக இருக்கிறதென்று எமது புள்ளிவிபரங்களே கூறுகின்றதென்றால், படையினரின் பாலியலுக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றதென்றால் அதனால் ஏற்படும் கருவை கலைப்பதாயின் அந்த ஆண்களைத் துணைக்கு கூப்பிட முடியாது. எனவே, பெண்ணின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு வழி சமைக்க வேண்டும். பெண்கள் இந்த விடயத்தில் பொறுப்பற்ற தீர்மானத்தை எடுப்பதில்லை. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டால் சகலரும் குடும்பத்திட்ட முறைகளை கைவிட்டுவிட்டு கருக்கலைப்பை நோக்கிச் செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எமது நாட்டவர் மத்தியில் உண்டு. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக் காட்டலாம்.
எப்படி அது சாத்தியமானது?
கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள், விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவையும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேன். இலங்கையில் ஏற்கெனவே குடும்பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டால் அதற்கொன்று கொள்கைவகுப்பு, வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டிவரும். அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செய்து அதிகப்படுத்த வேண்டிவரும்.
கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து...?
1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாலோ, அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால் அதனை கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை. அமைச்சர் அதனை வாபஸ் வாங்க வேண்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர், இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில் பேசாது விடுவோம். அதையாவது செய்வோம். அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை. அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம். எனவே ஆஸ்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னையதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முறையான புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை.
இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது. பாராளுமன்றத்துக்கு மீண்டும் கொண்டு வரும்படி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட, சுகாதார நிறுவனம், தேசிய பெண்கள் கமிட்டி, பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாதவர்கள் குழந்தையை பெற்றுக் கொண்டதும், மலசல கூடங்கள், வாய்கால், குப்பைத் தொட்டிகள், காண்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம்.
அமைச்சர் கொண்டு வந்த சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெண்கள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெண்கள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியது திர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே. இது வரை அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெண்களின் பிரச்சினையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டதில்லை. பெண்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாக கருதுவது கிடையாது.
பெருமளவான தொடர்பு சாதனங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம், ”கருவிலேயே கொலை” என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.
ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும் பெண், இயந்திரம் அல்லவே.
குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளாகவும், வேசி என்றுமல்லவா அழைக்கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.
சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள், தங்களின் மனைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, சகோதாpக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?
இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல், ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி நிற்கிறது?அது தான் உண்மை. கற்பு குறித்த ஐதீகம் பெண்ணின் உடல் மீதான ஆணின் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் என்கின்ற விடயம், பாலியலை சுதந்திரமாக பெண் பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பண்டஙகளைப் போல சொந்தமானது, கற்பு புனிதமானது, தூய்மையானது என்கின்ற புனைவுகளை சுற்றிக் கட்டப்பட்டது. இந்த தூய்மையை, புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக ”கெடாமல்” காக்க வேண்டும். குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட, குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப்பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் ”வேசி” என்கின்ற பழிச்சொல் சுமத்தி, அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனிவுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெண்ணின் பாலியலை, உடலை கட்டுப்படுத்துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெண்ணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தியிருப்பதும் அதற்காகத் தான். விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை என்ற நிபந்தனை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான். கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருப்பதும் அதற்காகத் தான். பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேண்டியல்லவா போராடுகிறார்கள். அதே சுயநிர்ணய உரிமைக்காகவே பெண்ணும் போராட வேண்டியிருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேண்டியிருக்கிறது.
நேர்காணல்: என்.சரவணன்
0 comments: to “ ”
Post a Comment