Wednesday, January 28, 2009
கோணேஸ்வரி வழக்கு:
கோணேஸ்வரிகளின் கதி?
கோணேஸ்வரிகளின் கதி?
என்.சரவணன்
கோணேஸ்வரி பாலியல் வல்லுறவு மற்றும் கொலை தொடர்பாக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட படையினருக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதியன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 23ஆம் திகதியன்று நடைபெற்ற விசாரணை முடிவின் பின் இவ்வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும் திகதியாக இத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை தொடர்ச்சியாக அவதானித்து வந்தவர்களின் அப்பிராயங்களின்படி அதன் போக்கு, வழக்கு தொடரப்பட்ட காலத்தில் இருந்த சாட்சியங்கள் அனைத்தும் வலுவிழந்து போனதன் காரணமாக குற்றவாளிகளுக்கு சாதகமாகவே திரும்பியிருப்பதாக தெரியவருகிறது. நீதிமன்றங்களும் நீதிபதியும், வழக்காளியும் எதிரியும் நிரல்படுத்தும் சாட்சிகள் வாதங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே நீதியை வழங்க முடியும் என்பதால் நீதமன்றையும் நீதிபதியையும் தவறாக வழிநடத்தக்கூடிய விதத்தில் சாட்சிகளை சோடிப்பது அல்லது சாட்சிகளை மிரட்டி அவர்களைப் பின் வாங்கவைத்து வலுவற்ற சாட்சியங்களாக மாற்றுவது போன்ற வழிமுறைகளை பலம்வாய்ந்த குற்றவாளிகள் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. இவை வெறுமனே திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கூட நடந்து வரும் உண்மைகளாகும். அதுவும் கோணேஸ்வரி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் படையினராகவும், சாட்சிகள் அனைத்தும் அவர்களின் பாதுகாப்பு கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களாகவும் இருக்கும் போது நிலமை வேறு விதமாக எப்படி அமைய முடியும்?
பின்னணி
கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதியன்று அம்பாறை சென்றல் கேம்ப் 1ஆம் கொலனியைச் சேர்ந்த திருமதி முருகேசுப்பிள்ளை புவனேஸ்வாரி (கோணேஸ்வரி-வயது 35 , மூன்று ஆண் ஒரு பெண் பிள்ளையுண்டு) வீட்டுக்கு இரவு 9.30 மணியளவில் புகுந்த பொலிஸார் அவரைக் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் அவரின் யோனியில் கிரனைட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துக் கொன்ற சம்பவம் முழு உலகமறிந்த விடயம். இச்சம்பவத்தை முதன் முதலில் வெளிக் கொணர்ந்தவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். சம்பவம் நடந்து நான்காவது நாள் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளும்படி ஜோசப் எம்.பி. ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர பக்ஸ் கடிதத்தின் மூலம் தெரிவித்தார். இதே வேளை அந்த பக்ஸ் கடிதத்தை ஏனைய பத்திரிகைகள் சிலவற்றுக்கும் அவர் அனுப்பியிருந்தார்.
இதனை முதன் முதலில் வெளியிட்டவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் செல்வநாயகம்.. இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாலியல் வல்லுறவு புரிந்ததன் பின் அதன் சாட்சிகள் அனைத்தையும் மூடிமறைக்க பொலிஸார்-படையினரால் உயர்ந்த பட்சம் முயற்சித்துள்ளார்கள் என்பதை அங்கிருந்து அப்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்தன. சம்பவம் நடந்தவுடன் கோணேஸ்வரியின் பிரேதத்தை உடனடியாக பிரேத பரிசோதனைக்குட்படுத்தாது தகனம் செய்யும்படி குடும்பத்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். (ஆயினும் உடல் தகனம் செய்யப்படாமல் உறவினர்களால் புதைக்கப்பட்டது), அடுத்தது கணவர் அக்கிராமத்தை விட்டே ஓடி விட்டார். அவரை மிரட்டி படையினரே விரட்டியடித்ததாக பின்னர் தகவல்கள் வெளியானது. இது குறித்து சாட்சியங்கள் அளிக்கவிருந்த ஊரார் மற்றும் மகன் அனைவரும் மிரட்டப்பட்டுள்ளனர். எனவே தான் ஆரம்பத்தில் இச் சாட்சியங்களைக் கொண்டு வழக்கைத் தைரியமாக நடத்தலாம் என்று கருதினோரும் கூட தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர். காரணம் தற்போது ஊராரில் இருவர் சாட்சியமளிக்கப் பின்வாங்கி விட்டனர். அது தவிர கோணேஸ்வரியின் மகன் செல்வகுமார் குகராஜ்ஜின் (வயது 18) சாட்சியம் கூட பயனற்ற ஒன்றாகச் செய்துள்ளனர். இறுதியாக நடந்த வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த மகன் ”சம்பவ தினத்தன்று நான் வீட்டில் இல்லை. பக்கத்திலுள்ள கிருஷ்ணபிள்ளையின் வீட்டிலிருந்தேன். ரியூசனுக்கு சென்ற நானும் தம்பிமாரும் அங்கேயே தங்கி விட்டோம்.அன்றிரவு வெடிச்சத்தம் கேட்டது. எனினும் பயம் காரணமாக நான் வீட்டுப் பக்கம் போகவில்லை. மறுநாள் தான் வீட்டுக்குப் போனேன். வெடிபட்டுக் கிடந்தார் அம்மா. அம்மா எப்படி இறந்தார் என்பது எனக்குத் தெரியாது. யார் செய்தது என்பதை என் கண்ணால் பார்க்கவுமில்லை” எனக் கூறியுள்ளார்.
கோணேஸ்வரியின் உடலை வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய டொக்டர் குமுதினி துரைரட்ணம் சாட்சியமளிக்கையில் ”நான் செய்த வைத்திய பரிசோதனையின் போது இடது கமக்கட்டிலிருந்து இடது தொடையின் நடுப்பகுதி வரை கிழிசல் நீண்டிருந்தது. கிழிசல் யோனிப் பகுதியையும் உள்ளடக்கியது. இடது பக்க கையெலும்பு, விலா எலும்பு, தொடை எலும்பிலும் உட்காயங்கள் இருந்தன. இடது பக்க மண்ணீரல், குடல், சுவாசப்பை சூலகம் என்பனவும் சேதமடைந்திருந்தன. சிறு நீரகத்திற்கும் மூத்திரப்பைக்கும் சேதம். இந்த மரணம் குண்டு வெடிப்பின் காரணமாக உண்டான அதிக இரத்தப் பெருக்கினாலும், அதிர்ச்சியினாலும் நிகழ்ந்திருக்கலாமென அபிப்பிராயப்படுகிறேன்... உடலை இனங்காட்டியவர்களோ வேறு உறவினரோ காலஞ்சென்றவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக என்னிடம் கூறவில்லை...” என்றார்.
எனவே அந்தச் சாட்சியமும் சம்பவத்தை உறுதி செய்ய வாய்ப்பளிக்கவில்லை.
நீதிமன்றக் கட்டளைப்படி சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் அதாவது 97 யூன் 20 ஆம் திகதியன்று பிரேதம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து இது குறித்த வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவ்வறிக்கை கிடைத்திருந்தால் கடந்த 23ஆம் திகதியன்றே இவ்வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கக்கூடும். இவ்வறிக்கையை எதிர்பார்த்தே தீர்ப்பு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.
எவ்வாறிருப்பினும் ஆரம்பத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அறிக்கையினை இன்னும் விரிவுபடுத்தி மட்டுமே இது இருக்குமே ஒழிய புதிதாக எதனையும் சொல்லப் போவதில்லை. இவ்வைத்திய பரிசோதனையின் ஆரம்ப அறிக்கையின்படி ”மரணம் குண்டினால் சம்பவித்துள்ளது. அது யோனியில் தான் வைக்கப்பட்டது என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. யோனியை அண்டிய பகுதிகள் அனைத்தும் சேதப்பட்டிருந்ததனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகளையும் இனங்காண முடியவில்லை.” என்பதே அதன் சாராம்சம். எனவே வைத்திய பரிசோதனையும் கோணேஸ்வரி வழக்கில் கைகொடுக்கவில்லை.
இப்படி நன்றாக திட்டமிட்ட முறையில் சாட்சியங்கள் நலிவடையும் விதத்தில் படையினர் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிருடன் விட்டால் பாலியல் வல்லுறவு விடயம் உண்மை வெளியில் தெரிந்து விடுமென கொலை செய்யத் துணிந்தவர்கள், சடலத்தைக் கொண்டும் பாலியல் வல்லுறவு வெளித்தெரியாதபடி செய்ய யோனியை கிரனைட் வைத்து சிதைத்துள்ளனர். அத்தோடு சகல சாட்சியங்களையும் மிரட்டி பலமிழக்கச் செய்துள்ளளனர்.
ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை வெளிக் கொணர்ந்த ஜோசப் எம்.பி. மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் செல்வநாயகம் ஆகியோர் 97 நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க ஆஜரான போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜே.சத்யன் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காததினால் வழக்கு 98 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்ற போதும் இதற்கு முன்னர் ஜோசப் எம்.பி. தன் மீதான நீதிமன்ற அழைப்பாணை பாராளுமன்ற சிறப்புரிமை மீறலென சபாநாயகரிடம் 97 யூலை 10ஆம் திகதி நடந்த அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தின் போது புகார் செய்திருந்தார். அப்புகாரில்...
”...இச்சம்பவம் பற்றி 97 மே 20ஆம் திகதியன்று பொது மக்கள் எனக்கு முறைப்பாடு செய்திருந்தனர். அத்தொகுதி பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் இது குறித்து பூரண விசாரணை செய்யும்படி நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வது எனது கடமையாகும். இவ் வழியைத் தான் காலாகாலமாக ஏனைய உறுப்பினர்களும் செய்து வருகின்றனர். அந்த வகையில் இச்சம்பவம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இவை குறித்து எனக்குப் புகார் செய்யப்பட்டிருந்ததேயன்றி நான் நேரில் சம்பவத்தைப் பார்த்தவனல்ல. ஆனால் என்னையும் இச்சம்பவத்துக்கு சாட்சியாக ஆஜர் செய்யும்படி சென்றல் கேம்ப் பொலிஸ் அதிகாரி எனக்கு அனுப்பி வைத்துள்ள நீதிமன்ற அழைப்பாணை பாராளுமன்ற சிறப்புரிமை மீறலாகும் ” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி சகல சாட்சியங்களும் பயனற்றதான நிலையில் சம்பவ தினத்தன்று புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் குண்டுவிழுந்து இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் தரப்பில் சோடிக்கும் முயற்சிகள் ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், 11ஆம் கொலனியைச் சேர்ந்தவர்கள் மத்திய முகாமைச் சேர்ந்த படையினரால் தொடர்ந்து இம்சிக்கப்பட்டு வந்த விடயம் இரகசியமான ஒன்று அல்ல. 'கோணேஸ்வரி சம்பவம்' நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கூட முகாமைச் சேர்ந்த பொலிஸார் கிராமத்தினுள் புகுந்து செய்த அடாவடித்தனங்கள் பற்றி கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா தெரிவித்திருந்தார். கிராமத்தினுள் புகுந்த படையினர் பொது மக்களை அடித்து துன்புறுத்தியதன் காரணமாக பலத்த காயத்துக்குள்ளானவர்களில் எஸ்.கிருஸ்ணபிள்ளையும் (வயது 52) ஒருவர் அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையின் ஒன்பதாம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றிருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் இந்தச் சம்பவம் புதைக்கப்படப் போகிறது இதற்கு ஒரு வகையில் பெண்கள் அமைப்புகளும் பொறுப்பு சொல்லி ஆக வேண்டும். என்று மனித உரிமைகளுக்கான இல்லத்தைச் (HHR - Home for Human Rights) சேர்ந்த ஷெரின் சேவியர் குறிப்பிடுகிறார். கோணேஸ்வரி வழக்கில் ஆரம்பத்திலிருந்து அக்கறை செலுத்தி வந்த நிறுவனத்தின் இயக்குனரான இவர் சம்பவம் நடந்து 5ஆம் நாள் கோணேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டு வந்ததுடன் சூழ உள்ளவர்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்தவர். இவரது அமைப்பினர் வழக்கின் சகல விசாரணை நாளின் போதும் கொழும்பிலிருந்து கல்முனைக்கு போய் வருவார்கள். கோணேஸ்வரியின் வீட்டில் சூழ சிதறியிருந்த தசைப்பிண்டங்களைக் கூட கண்ணால் கண்டு வெதும்பி வந்தவர்கள். இவர்கள் இது பற்றி குறிப்பிடுகையில்...
”ஆரம்பத்திலிருந்து பெண்கள் அமைப்புகள் முயற்சித்திருந்தால் இந்த நிலைமைக்கு இவ்வழக்கு வந்திருக்காது. நாங்கள் போதிய முயற்சிகள் செய்தோம்.. எங்களாலும் செய்யப்பட்ட முயற்சிகள் பூரணமானது எனக் கூற மாட்டோம்.
அதேவேளை கிருஷாந்தி சம்பவத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஏன் இந்தச் சம்பவத்துக்கு பெண்கள் அமைப்புகளால் வழங்க முடியவில்லை? இவை குறித்த வித்தியாசங்களை நீங்கள் தான் வெளிக்கொணர வேண்டும், அச்சம்பவத்துக்கு இருந்த கால அவகாசம் கூட இதற்கு இல்லை. ஆரம்பத்தில் தயாராக இருந்த சாட்சியங்கள் படிப்படியாக இல்லாமல் போனது ஏன் என்பதற்கும் நீங்கள் தான் விடை கண்டு பிடிக்க வேண்டும்.” என்றார்.
பல பெண்கள் அமைப்புகள் ஆரம்பத்தில் வெறுமனே தங்கள் சுய விலாசத்துக்கு விட்ட அறிக்கைகளோடு ஓய்ந்து விட்டன. அதன் பின் இச்சம்பவம் பற்றி எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
கிருஷாந்தி வழக்கில் படையினர் மட்டுமல்ல அரசும் கூட நல்ல 'பாடம் ' கற்றுக் கொண்டது. எனவே இனி பாலியல் வல்லுறவு, கொலை போன்ற விடயங்கள் நடைபெற்றாலும் கூட சாட்சியங்களை எவ்வாறேனும் மூடி மறைத்தும், சம்பவத்தை வெளிக்கொணர முடியாத படியும் செய்து விடுவார் அரசும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவே செய்யும். ஏனெனில் வடக்கு கிழக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஒன்றே கிருஷாந்தி சம்பவம். ஏனைய சம்பவங்கள் அனைத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து விடுவதன் மூலம் சர்வதேச அளவில் தான் அம்பலப்படுவதையும், யுத்தத்தை நடத்துகின்ற படையினருக்கெதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை புண்படுத்தவும் அரசு தயாரில்லை. அப்படித் தயாராயிருந்தால் இந்த சம்பவங்களுக்கு மாத்திரமல்ல, காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் மூலம் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான படையினருக்கு எதிராக எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக குற்றத்திலிருந்து விடுவிப்பும் அவர்கள் அனைவருக்கும் பதவியுயர்வு வழங்கப்பட்டிருப்பதும் இரகசியமானதல்ல.
எப்படியோ கோணேஸ்வரி சம்பவம் புதையுண்டு போவதுஅரச படை அரக்கர்களுக்கு பாரிய உற்சாகத்தையும், தைரியத்தையும் வழங்கவே செய்யும் என்றால் அது மிகையாது.
பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம் நினைவு கூரப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பாதிக்கப்பட்ட பெண்கள் இடும் சாபம் வெறுமனே இந்த அரசுக்கும், அரச படைகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் எதிராக மட்டுமிராது பெண்கள் அமைப்புகளுக்குமெதிராகவும் தான் என்பதை மனதில் இருத்துவோம்.
0 comments: to “ ”
Post a Comment