Thursday, January 29, 2009
பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்:
சில கேள்விகள்....
சில கேள்விகள்....
என்.சரவணன்
''பொ.ஐ.மு. ஆட்சியலமர்வதற்கு பெண்களின் பங்களிப்பு காத்திரமானது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு முக்கிய பதவிகளையும் பெண்களே வகிக்கின்றார்கள். உலகிலேயே இலங்கையில் மட்டுமே இப்படியான ஒரு நிலையுள்ளது...
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 50 வருடங்களாகப் போகின்ற இந்தத் தருணத்தில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதமாகவே உள்ளது. எமது நாட்டின் பெண்களுக்கு உள்ள குடும்பப் பொறுப்புக்கள் காரணமாக இது அதிகரிக்காமலிருந்தாலும் குறைந்த பட்சம் 25 வீதமாவது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கமுடியுமாயிருந்தால் நல்லது.
கடந்த 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத்திட்ட - மகளிர் விவகாரத் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான - விவாதத்தின் போது மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்னாயக்க ஆற்றிய உரையிலேயே மேற்படி தெரிவித்தார்.
பத்திரிகைகளின் செய்தியிடல்
இவ்வுரையானது அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியானது. சிங்களப் பத்ரிகைகளில், திவய்ன, லங்காதீப ஆகியவற்றில் வெளியான பாராளுமன்ற உரைகளில் ஏனைய ஆண் உறுப்பினர்களின் உரைகள் வெளியாகின. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் கூட வேறு விடயங்கள் குறித்த அம்சங்கள் வெளியாகினவே ஒழிய இவ்விடயம் குறித்தவை வெளியாகியிருக்கவில்லை. தினமின (அரச கட்டுப்பாட்டுக்குள்ளிருப்பது) மாத்திரம் இதனைப் பிரசுரித்திருந்தது. அதற்குக் காரணம் சொல்லப்பட்ட விடயம் பற்றியதற்காக அல்ல. சொல்லிய நபர் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் என்பதற்காகவே.தமிழ்ப் பத்திரிகைகளிலோ இது குறித்த உரை எங்கும் வெளியாகியிருக்கவில்லை. அதற்கடுத்த நாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.
ஆணாதிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்துமே இச்செய்தியின் முக்கியத்துவத்தை உணராததில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?
இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்திதான் என்ற போதும் கூறப்பட்ட விடயம் குறித்து அமைச்சரின் அதே வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது இன்னொரு பிரச்சினையாகும்.
காரணம் இந்த 25 வீதம் குறித்தது தான். இந்தக் கோhpக்கையானது ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைப் பொறுத்தளவில் எதிர்ப்புகளின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சனத்தொகையில் சாpபாதி (அதைவிடவும் கூட) பெண்கள் உள்ள நிலையில் அதே அளவு வீதாசாரத்தைக் கூடக் கோரப்படாததானது ஆணாதிக்கத்துக்கு வெற்றியேயன்றி வேறென்ன?
என்ற போதும் 25 வீதக்கோரிக்கை குறித்து கூட, இது வரை அரச தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை. அது குறித்து பரிசீலிப்பதாகவே கூறியிருக்கிறது. அக்கோரிக்கையை அதிகாரத்தரப்பு ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தக் கோhpக்கை அதிகாரத் தரப்பிலிருந்து, அதுவும் மகளிர் விவகார அமைச்சரிடமிருந்து வெளிவந்துள்ளமை எல்லோரையும் கூர்ந்து கவனிக்கச் செய்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இக் கோரிக்கையின் அற்பத்தனத்தை அடையாளம் காண எத்தனை பேரின் ஆதிக்க கருத்தியல் இடம் கொடுக்கும்?
அமைச்சர் ஹேமா, சரிபாதி ஜனத்தொகையைக் கொண்ட பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை மட்டுமே கோருவது மட்டுமல்லாமல் குடும்ப அமைப்புக்குள் பெண்களுக்குள்ள மரபான பொறுப்புக்களை மறைமுகமாக நியாயப்படுத்துவதையும் கண்டு கொள்ளாமலிருக்க இயலுமா? அவர் சார்ந்த அதிகாரத்துவம் மிக்க கட்சியினதும், அரசாங்கத்தினதும், அரசினதும் கூடிய பட்ச எல்லை இவ்வளவாகத்தான் இருக்க முடியும்.
அற்பக் கோரிக்கை?
அண்மையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ”in creasing political participation of women through a reservation system” எனும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்படி அரசாங்க மட்டங்களில், பெண்களுக்கு மூன்றில் ஒரு வீத பிரதிதித்துவக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். 15 வருடங்களுக்கு இது செல்லு படியாக வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இக்கோhpக்கையை முன்கொண்டு செல்ல அணிதிரண்டு வருவதாகத் தொpகிறது. WERC யின் தலைவி செல்வி திருச்சந்திரன் இது குறித்து எமக்கு தெரிவிக்கையில், ”இது குறித்து அரசியற் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியாக லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, த.வி.கூட்டணி, ஐ.தே.க. என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். அவர்களைப் பொறுத்தளவில் இக்கோரிக்கையில் எதுவித ஆட்சேபமுமில்லை.” என்றார். அற்பக் கோரிக்கைக்கு ஆட்சேபமென்ன இருக்க முடியும். (பிரதான கட்சிகளும் கூட இக்கோரிக்கையை அங்கீகரித்துள்ளன என்றால் அதன் அர்த்தம் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ள இதனை உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்ற கற்பனையினாலேயொழிய, இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து விட்டார்கள் என்றோ தமது ஆணாதிக்க நிலைப்பாட்டிலிருந்து மீண்டு விட்டார்கள் என்பதாலோ அல்ல) என்ற போதும் இக்கோரிக்கையும் கூட போதுமான கோரிக்கையாக இருக்க முடியாது.
இக்கோரிக்கை இலங்கையில் எழுவதற்கு பின்புலமாக இருந்தது, இந்தியாவிலும் மூன்றில் ஒரு வீத பெண் பிரதிநிதித்துவ கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதே. இக்கோரிக்கையின் பரப்பு, அது தரப்போகும் நீண்டகால பிரதிபலன், அதன் போதுமான தன்மை குறித்து எந்த வித பரிசீலனையும் இன்றி அதே கோரிக்கையை இலங்கையிலும் பிரதிபண்ணுவதாகவே தெரிகிறது. சரியான புரட்சிகர மாற்று சக்தியேதுமில்லாத நிலையில் பெண்களின் கோரிக்கையினை முன்கொண்டு செல்ல பெண்களுக்கென்று கட்சியொன்று இல்லாததன் குறை இங்கு தான் தெரிகிறது.
”25வீதம்”, ”மூன்றில் ஒரு வீதம்” போன்ற கோரிக்கைகள் முன்வைப்பதன் மூலம் உண்மையில் முன் வைக்கப்பட வேண்டிய கோரிக்கையை அற்பத்தனமான கோரிக்கையாக்கி, சிறு தேவையாக குறுக்கி விடும் ஒன்றாகவே இதனைக் காண முடிகிறது. இது வரை அரசு சார்பற்ற நிறுவனங்கள் சகல துறைகளிலும் செய்து வருவதும் இதனைத் தான். பிரதான அரசியல் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற போதெல்லாம் அதற்கு வலிந்து போய் தலையிட்டு, தலைமைகொடுத்து சிறு கோரிக்கையாக குறுக்கி விடும் போக்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே உரியன. அப்படியான ஒரு போக்காகவே இதனையும் காண முடியும். இவ்வமைப்புகள் அவ்வாறான கோரிக்கைகளில் கூட உறுதியாக தொடர்ச்சியாக நிற்கும் என்றோ, மிகவும் துடிப்புடன் போராடும் என்றோ நம்பிக்கை வைக்க முடியாது.
இவ்வமைப்பு ”மூன்றில் ஒரு வீத கோhpக்கை”யை எழுப்பியது ஒரு புறமிருக்க அக்கோரிக்கை 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும்படி செய்யவேண்டும் என்று கூறியிருப்பதானது, மேலும் அதன் தூரநோக்கற்ற, துரோகத்தனமான கோரிக்கையையே வெளிப்படுத்துகிறது.
ஏன் தேவை?
-சனத்தொகையில் சாpபாதியையுடைய பெண்களுக்கு அதே அளவிலல்லவா பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகம் கூட விகிதாசாரத்தை மறுக்காதே. இது சமூகத்திலுள்ள சிறுபான்மையோர் சம்பந்தமான பிரச்சனையல்லவே, சம விகிதாசாரத்தையுடையவர்கள் அதிகாரமற்றிருப்பது, மறறும் இன்னொரு தரப்பால் அடக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருப்பது பற்றிய பிரச்சினை. சிறுபான்மையினர் விடயத்தில் கூட கொள்கையளவில் இவ்விகிதாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடிந்த அதிகாரத் தரப்புக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்க முடியாது?-தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 35 வீதம் இளைஞர்களை (16க்கும் 35க்கும் இடையில்) உட்படுத்துவது குறித்த விதி பிரேமதாச காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இளைஞர்கள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாணைக்குழு ”இளைஞன்”களை மட்டுமே கருத்திற் கொண்டு இப் பிரேரணைகளை முன் வைத்திருந்தது. ஜனத்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை மட்டுமேயுடைய தரப்பினருக்கு இவ்வாறான பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்க முடியுமானால் பெண்களுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சினைதான் என்ன? மேலும் மேற்படி இளைஞர் ஒதுக்கீட்டினை ”இளம்” பெண்கள் அனுபவிக்க முடியாமலிக்கும் போக்கையும் அவதானிக்க வேண்டும்.
-உண்மையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதாயின் இக்கோhpக்கை போதுமானதாக இருக்க முடியாது. சமூகத்தில் எப்போதும் குறை விருத்தியையுடைய (குறை விருத்திக்குள்ளாக்கப்பட்ட) தரப்பினரை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதாயிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். உதாரணத்திற்கு அவர்களின் உண்மையான வீதாசாரம் 50 வீதமாக இருக்கிறதென்றால் (குறிப்பிட்ட பத்தாண்டோ பதினைந்தாண்டோ விசேட திட்டத்தின் மூலம்) அதனை விட மேலதிகமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் முலமே உயர்த்தலாம். இதனை அரசியல் கோரிக்கையாக முன்வைப்பதாயிருந்தால் இதனடிப்படையலேயே அமைய வேண்டும். அதை விட்டு 15 ஆண்டுக்கு மூன்றில் ஒரு வீதத்தைக் கோருவதோ, எந்த விதமான பாPசிலிப்புமின்றி இன்னொரு நாட்டை பிரதிபண்ணுவதோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த அரசியற் கோர்க்கையை சொற்ப கோரிக்கையாக எழுப்புவதோ அக்கோரிக்கையை செயலிழக்கவே செய்யும்.
-இலங்கையில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 5வீதத்தைக் கூடத் தாண்டவில்லை. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலும் ”மகளிர் அமைச்சு ” தவிர்ந்த வேறு அமைச்சுகள் அவ்வளவாக வழங்கப்பட்டதில்லை. பெண்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்படுவது கூட 9 வீதத்தை இது வரை தாண்டவில்லை. சமூக அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கும் அரசியல் ரீதியில் அவற்றில் தலையீடு செய்வதற்கும் பெண்களுக்கு உள்ள உரிமை இதுவரை காலம் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்துவந்த வேளைகளில் அதனை எதிர்க்க பாராளுமன்றத்தில் பலமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20, 21 ஆகிய திகதிகளில் ”கருக்கலைப்பு” தொடர்பான சட்ட திருத்தங்கள் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது ஆண் பிரதிநிதிகள் முன் வைத்த கருத்துக்களும் அதன் மோசமான முடிவுகளும்.
உருப்படியான புரட்சிகர சமூக மாற்றம் இடம்பெறாத சூழ்நிலையில் இக்கோரிக்கையும் கூட பூர்ஷ்வா கோரிக்கையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டளவிளான வளர்ச்சிக்கு இது இட்டுச் செல்ல உதவும்.
நிச்சயமாக ஆரம்பத்தில் இது உடனடி பிரதிபலனைத் தராது.
சில புரிதல்...
-ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வது மிகவும் குறைவே.சில புரிதல்...
-பெண்கள் கூட பெண்களுக்குத் தான் அல்லது பெண்களது தேவைகள் குறித்து அக்கறைப்படுபவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் கூறிவிட முடியாது.
-ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அதன்படி வேட்பாளர் பட்டியலில் பெண்களையும் சேர்த்து தேர்தலில் போட்டியிடச் செய்தாலும் பெண்கள் அதே அளவு வீதாசாரத்தில் தெரிவு செய்யப்படப் போவதுமில்லை. அதே அளவு தெரிவு செய்யப்படுவதாகக் கொண்டாலும் நிர்வாகத்துறையில் (அமைச்சரவையில்) அதே விதாசாரம் கிடைக்கப் போவதுமில்லை. அப்படிக் கிடைத்தாலும் பெண்களின் நலன்களுக்கு சார்பாகத் தான் இருப்பார்கள் என்றோ கற்பனை செய்யத் தேவையில்லை.
-மேட்டுக்குடிப் பெண்களே (ஓரளவு குடும்பச் சுமையிலிருந்து விடுபட்ட, பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியிருக்காத, வர்க்க, சாதிய,மத, இனத்துவ செல்வாக்கு போன்ற ஆதிக்க பண்புகளைக் கொண்ட, பெண்களே) அரசியல் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உண்டு.
ஆனாலும் நிச்சயமாக இது பெண்களுக்கு அரசியல் பயிற்சியை வழங்கும். அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும். அரசியல் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். இவை பெண்கள் சம வாய்ப்புகளை அடைய முன்நிபந்தனையாக அமையும். பெண்களை தமது சந்தர்ப்பவாதத்துக்காக கையாண்டு வரும் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபடவும் இப் பயிற்சி கணிசமான அளவு உதவும்.
முதலாளித்துவ தேர்தல் முறையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு பல சமூகத் தடைகள் உள்ளன. இன்றைய நிலையில் பெண்களுக்கு மரபான ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறை சுமத்தியுள்ள பொறுப்புகள், வன்முறை மிகுந்த சூழல், பெண்களின் பகிரங்க சமூக நடவடிக்கைகளை ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டிருக்கும் சந்தேகப் பார்வை, ஒழுக்க மீறலாக அதனைக் கருதும் போக்கு, கலாசார பண்பாட்டு ஐதீகங்கள், போன்றன தடையாகத் தான் இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட நிச்சயம் இக்கோரிக்கைகள் கூட போதுமானதாக இருக்க முடியாது. புரட்சிகர சமூக மாற்றத்தின் மூலமே இதனை வென்றெடுக்க முடியும்.
எவ்வாறாயினும் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதில் ஈடுபடும் எந்த சக்தியும் வரும் கேள்விகளை கவனத்திற் கொள்வது முக்கியம்.
சில கேள்விகள்...
சில கேள்விகள்...
-சகல தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சமனாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா? உண்டாயின் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வாக்களிப்பு வீதம் எத்தனை?
-அரசியற் கட்சிகளின் உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்தினர் பெண்கள்? அரசியற் பணிகளில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது? அத்தகைய பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா? அந் நடவடிக்கைகளின் தன்மை எத்தகையன?
-தேர்தல்களின் போது பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் என்ன? வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது தானா? பெண்களின் கோரிக்கைகளை பெண்கள் எவ்வளவு தூரம் முன் வைக்கிறார்கள்? பெண்களின் வாக்களிப்பு வீதாசாரம் என்ன? பெண்களை வெற்றிபெறச் செய்வதில் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு என்ன? ஆண்களோடு ஒப்பிடுகையில் எத்தனை வீத பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? நிர்வாகத்துறைக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் வீதாசாரம் என்ன?
-பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கான தடைகள் எவை? அத்தடைகளை ஏற்படுத்துவதில் சமூக ஐதீகங்களுக்கும், குடும்பச் சுமைகளுக்கும், அரசியற் சக்திகளுக்கும், அரசியற், பொருளாதார சூழலுக்கும், உள்ள பாத்திரம் எவை?
-இவற்றை தாண்டிவர பெண்களுக்குள்ள தெரிவு என்ன?
மேற்படி கேள்விகளுக்கான விடைகளானது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்புக்கு முன்னர் விடை காண வேண்டிய முன்நிபந்தனையான கேள்விகளாகும்.
மற்றும்படி அரசினதும் (அமைச்சாpனதும்) அரசு சாரா நிறுவனங்களினதும் திடீர் கரிசனைகளைக் கண்டு மலைக்கவோ நம்பிக்கை கொள்ளவோ தேவையில்லை.
(1998 ஜனவரி 18 சரிநிகர்)
0 comments: to “ ”
Post a Comment