Thursday, January 29, 2009

விவியன்:
ஒரு பரட்சிகாரியின் மரணம்









என்.சரவணன்


கடந்த ஒக்ரோ­பர் 3ம் திகதியன்று விவி­யன் குணவர்தன எம்மை விட்டு மறைந்து விட்டார். சகல பத்திரிகை­களும் ”புரட்சிக்காரி” விவிய­னின் இழப்புக் குறித்துச் செய்திகள் வெளியிட்­டிருந்தன. கடந்த செப்­டெம்பர் மாதம் 18ம் திகதி தான் விவியன் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி­யிருந்தார். அவரது சேவையை வாழ்த்தி பல அமைப்புக்கள் பாராட்டுக் கூட்டங்களை நடாத்தியிருந்தன. எண்ணி 15வது நாளில் திடீரென சுகவீனமுற்ற அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட ஒரு நாளிலேயே எல்லோ ரையும் விட்டுப் பிரிந்துவிட்டார்.

கடந்த வாரம் சரிநிகர் ஆசிரியர் பீட கூட்டத்தின் போது விவியனின் 80வது வயது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஒரு நேர்காணல் செய்வது தொடர்பா­கக் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் அப்பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்­டிருந்த போதே அவரது பிரிவு பற்றிய செய்தி என்னை எட்டியது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நிலையில் குற்றவுணர்வும் சூழ்ந்துகொண்டது என்னை.

நேர்காணலைச் செய்ய முடியவி­ல்லை என்பதற்காக மட்டுமல்ல. சென்ற வருடம் யூன் மாதம் எனது தொடர் கட்டுரைக்காக விவியனின் வீட்டுக்குச் சென்று உரையா­டியிருந்தேன். அப்போ­தும் அவரது உடல் நிலை சிறப்பாக இருக்காவிட்டாலும் உற்சாகத் துடன் உரையாடினார். கடந்த காலங்களில் அவரது சேவை பற்றி நான் தெரிந்து வைத்தி­ருந்ததை விட அவருடன் உரையாடி யபோது கிடைத்த தகவல்­கள் என்னையும் உற்சாகப்படுத்தி­யிருந்தன. நான் அவரிடம் ”உங்களைப் பற்றி நூல் ஒன்றை எழுத அனுமதிப்­பீர்களா, நீங்கள் அதற்கு ஒத்துழைப்­பீர்களா?” எனக் கேட்டபோது அவர் ”நிச்சயமாக நான் ஒத்துழைக்கிறேன். குமாரி ஜெயவர்தனவும் என்னைப் பற்றிய ஒரு நூலை எழுதுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஏன் நீங்கள் கொல்வின் பற்றி தமிழில் சரியான நூலை எழுத முயலக் கூடாது?” என என்னிடம் கேட்டார். அவர் பற்றிய நூலை அவர் இருக்கும் போதே செய்ய முடியாமல் போனது ஒரு வகையில் குற்றவு ணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் விவியன் பற்றி விவியனின் ஒத்துழைப்புடன் 'மலல்கொட பந்துதிலக்க' என்பவர் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் என்று இரு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. எனினும் இந்நூல் அவர் இறந்த பின் தான் அச்சு செய்து பூர்த்தியாக்கப்­பட்டது. விவியனுக்கு அந் நூலைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

விவியனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான செஞ்சட்டையணிந்த கட்சித் தொண்ட­ர்களும், பொது மக்களதும் தொகையே விவியனின் சேவைக்கு சாட்சி சொல்லும். முக்கியமாக விவியனிடம் இருந்த ஒரு போராளிக்குhpய நேர்மை­யும் துணிச்சலும் அவரது புகழுக்குக் காரணமாயிற்று.

விவியன் 1918.09.16ம் திகதியன்று பிறந்தார். ஆங்கிலேய விசுவாசமிக்க உயர் கொவிகம சாதியில் செல்வாக்கு படைத்த பொரளுகொட பரம்பரையில் பிறந்தபோதும் உயர் மத்திய தர வர்க்கத்தவர் பயிலக் கூடிய கொழும்பு மியுசியஸ் கல்லூரியல் பயின்ற காலத்திலேயே பிரித்தானிய ஏகாதிபத்­தியத்தை எதிர்த்து ”சூரியமல்” இயக்கத்துடன் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். ஆங்கிலேயர்களால் வருடாவருடம் மேற்கொ ள்ளப்பட்டு வந்த (நவம்பர் 5ம் திகதி) ”பொப்பிமல்” தினத்தின் போதான 5 நிமிட மௌன­த்தினைப் பாடசாலைக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவார்.

லங்கா சம சமாஜக் கட்சியில் அன்றைய நாட்களின் தலைவர்களான பிலிப் குணவர்தன, ரொபட் குணவர்தன ஆகியோர் விவியனின் மாமனார்கள் (தாயின் சகோதரர்கள்) இவர்கள் இருவரும் விவியனுக்கு மாக்சீய அரசியல் உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

வீட்டுக்குத் தொpயாமல் சூரியமல் இயக்க த்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். பின்னர் இது தந்தைக்குத் தெரிய வந்தபோது விவியன் வீட்டில் அடைக்கப்பட்டார். அதையும் மீறி களவாக அரசியல் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார்.

ல.ச.ச.கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய தந்தையி­டம் அனுமதி கிடைக்­காத நிலையில், இரகசியமாக ஆரம்ப­த்தில் வேலை செய்யத் தொடங்கி, பின்னர் கட்சியில் முழு நேர ஊழியராகப் பணிபுரிந்தார். ல.ச.ச.க­வின் செயலாளராக அன்று தீவிரமாக பணிபுரிந்து வந்த லெஸ்லி குணவர்தன­வுடன் காதல் கொண்டு குடும்பத்தைத் துறக்க வேண்டிய நிலைக்கும் உள்ளா­னார்.

லெஸ்லி-விவியன் தொடர்பை இல்லாமல் செய்வதற்­காக விவியனை வீட்டில் அடைத்து வைத்ததால் லெஸ்லி, விவியனின் தந்தை குணத்தி­ல­க்கவுக்கு எதிராக ஆட்கொ­ணர்வு மனு வழக்கொன்றை தொடர்ந்திரு­ந்தார். அன்று லெஸ்லிக்கு ஆதரவாக வழக்காடியவர், பின்னாளில் ஜனாதி­பதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவே. இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் வைத்து விவியனின் தந்தை ”எனது மகள் காதலிக்கும் நபர் தேச விரோதக் கட்சியின் உறுப்பினர். ல.ச.ச.க. ஒரு தேச விரோதக் கட்சி எனப் பேசப்படும் கட்சியாகும். அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்தால் எனது மகளும் தேச விரோத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என்றார்.

அதற்கு விவியன் அளித்த பதிலோ ”அவர் கூறும் தேச விரோதக் கட்சியில் இரகசியமாக நானும் அங்கம் வகித்து வருகிறேன். எனவே ஒரு தேச விரோதக் கட்சியொன்றின் உறுப்பினருக்குக் கிடைக்கக் கூடிய அதே தண்டனையை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே!” என்றார்.

இவ்வழக்கின் இறுதியில் விவியனின் தந்தையை நீதிமன்றம் கண்டித்ததுடன். லெஸ்லி-விவியனின் இணைவை அங்கீகரித்தது.

விவியன்-தந்தை உறவு அத்துடன் முறிவ டைந்தது. விவியனின் தனிப்பட்ட வாழ்க்கையும், தனிப்பட்ட இயல்பும் புரட்சிகரமானவை.

1950இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக­வும், 1956 தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 1964ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு வரையான காலத்துக்குள் உள்ளூரா­ட்சி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சராகப் பதவி வகித்தார். இலங்கை­யின் அரசிய­லில் முதற் பெண் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் விவியனே. 1970ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1977ம் ஆண்டு தேர்தலில் இரத்மலான தொகுதியில் போட்டி யிட்ட போதும் லலித் அத்துலத் முதலியினால் தோற்கடிக்கப்­பட்டார். அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியி­டவில்லை.

1956ம் ஆண்டு மொழிப்பிரச்சினை­யின் போது தமிழ் மொழிக்கும், சிங்களத்துக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனப் போராடிய போது சிங்கள இனவாதிகளால் 'யாழ்தேவி', எனப் பட்டப்பெயர் சூட்டப்பட் டார். அதுபோல '1953ம் ஆண்டு ஹர்த்தால்' போராட்டத்தின் போது தீவிரமாக மக்களை அணிதிரட்டிப் போராடினார். அமெரிக்க தூதராலயத்தின்முன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய போது விவியன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்ப ட்டார். இறுதி வரையும் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடி வந்தவர் விவியன்.

தன் மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் ஐ.தே.க.வினரால் மேற்கொள்­ளப்பட்ட சண்டித்தனங்களை விவியன் தலைமை கொடுத்து முறியடித்த சம்பவங்கள் ஏராளம்.

அன்று ல.ச.ச.கவின் அனுசரணையு­டன் வெளியிடப்­பட்ட 'ஜனதின' பத்திரிகையிலும் தொடர்ந்து சில வருடங்கள் பணியாற்றியிருந்தார்.

அன்றைய காலனித்துவத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நவகாலனித்துவத்­திற்கெதிராகவும் போராடி வந்த விவியன், நிறைவேற்று ஜனாதிபதி முறை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றிற்கெதிராகவும் பிற்காலங்களில் குரலெழுப்பினார். பெண்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளைக் கண்டித்து நடத்தப்­படும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங் களில் விவியனைக் காணலாம்.

பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அறுபதாயிர த்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ”அன்னையர் முன்னணி”யுடன் இணைந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் விவியனின் காரசார­மான உரையைக் கேட்பதற்காகவே பலர் கூடுவர். வயதானாலும் குரலும், அதன் பின்னால் இருக்கும் கருத்தும் உறுதி குலையாது இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் விவியன் ஆற்றிய சேவையை இலகுவில் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எவையுமே பெண்களின் உரிமைக்காக காத்திர­மான பங்களிப்பை இதுவரை செய்யாத­தானது, பெண்களின் பங்களிப்பி லும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மரபு இடதுசாரி அமைப்புகளின் கடைசிக்­காலமான இந்தக் கட்டத்தில் இறுதி­யான புரட்சிக்காரியை இழந்து விட்டோம்.

ஹிட்லரின் சிறையில் தூக்குக்கு அனுப்பப் பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஜலியஸ் பூஷிக் சொன்னதைப் போல ”எமது போராட்டத்தின் சகல நிகழ்வுகளும் பதிவு பெறுவது அவசியம். போராட்டத்தை முன்னெடுக் கும் அடுத்த சந்ததிக்கு அது அவசிய மானது.” என்பது போல விவியனின் வாழ்க்கையும் பதிவு பெறல் அவசியமானது.

(சரிநிகர்-96.ஒக்)

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster