Thursday, January 29, 2009

ஒரு பாலுறவு:
அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....




என்.சரவணன்

இன்று ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடந்து வருகின்றது. இது குறித்து ”சிரச” தொலைக்காட்சி சேவை, மற்றும் யுக்திய, ராவய, மாதொட்ட, பாராதீச போன்ற மாற்று பத்திரிகை, சஞ்சிகைகளிலும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்தளவுக்கு தமிழில் இது குறித்த விவாதம் இடம்பெறாதது ஒரு வகையில் துரதிருஷ்டவசமான ஒன்று.

இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.

இன்றைய மைய நீரோட்டத்தில் பெரும்போக்காகவே ஒரு பாலுறவுக்கு விரோதமான கருத்துக்கள் ஆழமாக வேறூன்றியுள்ளன. இதற்கு எமது சமூக அமைப்பின் பண்பாடு, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற ஆதிக்க மரபுவழிக் காரணிகளின் செல்வாக்கின் வழியாக வந்த ஐதீகங்கள் காரணமாக உள்ளன. எனவே இந்தக் கருத்தியலை முறியடிப்பது என்பதற்கு முன்நிபந்தனையாகவே மேற்படி காரணிகளை தகர்ப்பது என்பது அமைகிறது. ஒரு பாலுறவு நடைமுறையில் வழக்கிலுள்ள ஒன்றென்பதையும், அது குறித்து அவமானப்படுத்த, வெட்கங்கொள்ள, அசிங்கம் கொள்ள எந்தவித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லையென்பதையும் ஒப்புக்கொள்ளத் தடையாக இந்த ஐதீகங்களே இருக்கின்றன.

ஒரு பாலுறவு என்பது திடீரென்று வானத்தில் இருந்து குதித்த அபூர்வமான ஒன்றல்ல அது ஏலவே எமது கலாசாரத்தில் நீண்ட காலம் புழக்கத்திலுள்ள ஒன்று. நிலவி வந்த ஐதீகங்கள் காரணமாக அது வெளிப்படைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அவ்வளவே. இன்று உலகமுழுவதும் ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்தினால் இன்று பகிரங்க உரிமை கோரி கருத்துகள் வெளியாகின்றன.

இன்று தன்னுடைய நண்பி தனது சக நண்பியை அல்லது நண்பன் தனது சக நண்பனைத் தழுவவோ, அல்லது கைகோர்த்து நடக்கவோ, தோளில் கைபோடவோ, மடியில் சாயவோ அஞ்சுகின்ற நிலைக்கு இந்த ஐதீகங்கள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. இதன் விளைவுகளாக பாலியல் குறித்த எந்தவித கலந்துரையாடலுக்கோ, அல்லது அது குறித்த புரிதலை நாடவோ விடாதது வரை விளைவுகளாக்கியுள்ளது. அவ்வாறான பேச்சு ஒரு நடத்தைக் குறைவாகவும், ஒழுக்கக்கேடாகவுமே நோக்கப்படுகின்றது. சொந்த மனைவி பாலியல் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க தயக்கம் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அது அவள் ஏற்கெனவே அனுபம் கொண்டவள் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றுக்கு பாலியல் குறித்த திறந்த கலந்துரையாடல் எம் சமூகத்ததில் இல்லாததே காரணம். இதன் விளைவுகள் மோசமானவை என்பது கூறித்தெரிய வேண்டியவையல்ல.

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்தச் சட்டத்தை பிரித்தானியாவில் நீக்கிவிட்டார்கள். இங்கு இன்னமும் அது நிலவுகிறது. இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் கொடுக்கப்படும்.

அண்மையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மோசமான அவதூறுகள் காரணமாக அமைச்சர் மங்கள சமரவீர தான் ஒரு தன்னினச் சேர்க்கையாளன் தான் என்று ஆத்திரத்துடன் திருப்பித் திருப்பிக் கூறினார். இதைக் கூறியதும் அங்கிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று தம் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக இதனை பாவித்தார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்த ஒரு விவரண நிகழ்ச்சி ஒன்றை ”சிரச” தொலைக்காட்சி செய்தது. அதில் பல புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள், தன்னினச்சேர்க்கை உரிமையாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என்போரின் பேட்டியும் இடம்பெற்றது. ”சிரச” கூறிய தகவலின்படி ராஜித்தவை இது குறித்து கருத்து தெரிவிக்க அழைத்திருந்தும் அதனை நிராகரித்து நழுவினார் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜித்த சேனாரத்ன பரவலாக எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.

யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில்...

”..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (Sex Club) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்.....”
என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இவரின் இந்தக் கருத்தோடு சேர்த்து ஐ.தே.க. பிரமுகர் சீ.ஏ.சந்திரபிரேம, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச, ந.ச.ச.கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பெண் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான அனோமா ராஜகருணாநாயக்க, மற்றும் தன்னினச் சேர்க்கை அமைப்பின் தலைவர் சேர்மன் டி ரோஸ் ஆகியோர் யுக்தியவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச குறிப்பிடுகையில்...

”பாலியல் ஒருவாpன் தனிப்பட்ட உரிமை. ராஜித்தவுக்கு இது குறித்து பேச எந்த அருகதையுமில்லை. இதனை ஒரு இழிவுக்கும் குற்றத்துக்குமுள்ளாக்கும் ராஜித்த ஐ.தே.க.வுக்குள் இருக்கின்ற ஒருபாலுறவினரை எவ்வாறு காண்கிறார்.... இன்று ஐ.தே.க.வும் பொ.ஐ.மு.வும் மாறி மாறி குறை சொல்ல ஒன்றும் மிச்சம் இல்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் ஒன்று தான். ஒரே கொள்கை, ஒரே நடைமுறை. எனவே தான் அரசியல் கொள்கைகளுக்காக சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து இழிவுபடுத்தி அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்....”

விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்...

”...இன்று உலகம் முழுவதும் ஒரு பாலுறவை மானுட ரீதியில் அணுகி அங்கீகாரமளிக்கின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜித்தவிடம் ஒருபாலுறவு குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும் கூட அதனை ஏனைய சமூக, பொருளாதார காரணிகளுடன் நிறுவ முயலவில்லை. தனது இயலாமையை மூடி மறைக்க தனிப்பட்ட தாக்குதலைப் பிரயோகித்தமை குறித்து ராஜித்த வெட்கப்பட வேண்டும். இது ஐ.தே.க.வின் சீரழிவையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான கருத்துகள் அசட்டை செய்யக்கூடியதல்ல....”

பெண்ணியவாதி அனோமா ராஜகருணாநாயக்க கூறுகிறார்..

”....குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப்பட்ட தனித்துவமிக்க பாலியல் இறைமைகளை பலியாக்குவது என்பது துரதிருஷ்டவசமான ஒன்று. இப்படிப்பட்ட இழிவுபடுத்தல் எமது நாட்டில் நிலவுகிற வங்குரோத்துதனமிக்க அரசியல் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருபாலுறவு என்பது ஏதோ திடீரென்று வானத்திலிருந்து குதித்த அபூர்வமான ஒன்று அல்ல....”

சீ.ஏ.சந்திரபிரேம இது குறித்து கருத்து தெரிவிக்கையில்...

”...பௌத்தத்தின்படி பாலியல் குற்றம் என்று இல்லை. கிறிஸ்தவ சமயத்தில் தான் அப்படிப்பட்ட விதிகள் இருக்கின்றன. பௌத்தத்தில் பிக்கு-பிக்குனிகளுக்கு மாத்திரம் சகல பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருந்த போதும் இந்த பிரச்சினையின் மூலம் எமது சமூகத்தில் பாலியல் கருத்தாக்கம் குறித்த விடயம் பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ளது. அது எதிர்கால சமூகத்துக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கது....”

சேர்மன் டி ரோஸ் கருத்து தெரிவிக்கையில்....

”....ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குhpய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....” என்றார்.

இப்படி இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போது ”மாதொட்ட”, மற்றும் ”பாராதீசய” (இப்பத்திரிகைகள் இரண்டும் மங்கள சமரவீரவின் அனுசரணையுடன் நடத்தப்படும் மாதாந்த சஞ்சிகைகள். இதன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முன்னைநாள் ஜே.வி.பி. இளைஞர்கள். இவை தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் மாற்று சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை. அரச சார்பற்றவை. பின்நவீனத்துவம், மாக்சீயம், பெண்ணியம், அமைப்பியல்வாதம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்து வரும் முக்கிய இரு சஞ்சிகைகள். அது மட்டுமன்றி பாலியல் குறித்த விடயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றவை.) பத்திரிகைகள் இது குறித்து நிறையப் பக்கங்களை ஒதுக்கி விவாதித்தது (ஒக்டோபர் இதழ்கள்). அச்சஞ்சிகைகள் ராஜித்தவை 12ஆம் நூற்றாண்டின் அரசியல்வாதியென்று கூறியிருப்பதுடன் அவரை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வரும்படி சவால் விடுத்துள்ளன.

ராஜித்தவோ சிரசவுக்கு பின்னர் அளித்த பேட்டியொன்றில் ”பாராதீசய” சஞ்சிகை ஒரு தூஷன பத்திரிகை என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் பாராதீச சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ”தூஷனம் என்றால் என்ன? கனவான்களே முடிந்தால் மோதுங்கள்!” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்த விவாதம் இவ்வாறு தொடர்ந்து செல்கின்றது. இது எவ்வாறிருந்த போதும் உண்மையிலேயே இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ள இக்கருத்துப் பரிமாறலை உச்ச அளவு பயன்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று.

(சரிநிகர் இதழ் 157)

AddThis Social Bookmark Button


என் உடல் மீதான உரிமை என்னதே!

"பெண் மீதான அடக்குமுறையின்
அடிப்படை பாலியலிலிருந்தே
ஆரம்பிக்கப்படுகிறது"


-குமுதினி சாமுவேல்-

என்.சரவணன்


பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இன்று அதன் இணைப்பாளராகவும் உள்ள குமுதினி சாமுவேல் நீண்ட காலமாக பெண்ணியம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு வருகிறார். 80களின் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் தொழிலாளர் போராட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமானவர். பெண்களின் மீதான அடக்குமுறைகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகை செய்திகிளினூடாக கண்காணித்து அவை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டு வரும் ''பெண்ணுரிமைகளின் கண்காணிப்''பின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவரும் இவர் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கையிட்டு வருவராகவும் இருந்து வருகிறார். மேர்ஜ் அமைப்பின் தேசியக் கமிட்டி உறுப்பினரான அவர் பெண்ணிய விடயங்களில் குறிப்பாக பெண்களின் சுகாதார, மறுஉற்பத்தி உரிமையில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர்.

சமீப காலமாக கருக்கலைப்பு உரிமை உள்ளிட்ட பெண்களின் சுகாதார உரிமைகள், மறு உற்பத்தி உரிமைகள் பற்றிய விடயங்கள் அதிகளவு பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்ச் சூழலில் இது குறித்த கருத்தாடல்கள் போதுமானதாக இல்லை. மேலும் எனது உடல் எனக்கே சொந்தாமானது அதை தீர்மானிக்கும் உரிமையும் எனக்குரியதே எனும் கோஷமும் பெண்கள் அமைப்புகளால் பலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலம் இது. இந்த நிலையில் இவை பற்றி உரையாட தேர்ந்த நபரென குமுதினி சாமுவேல் அவர்களை தெரிவு செய்தோம்.எனது உடல் எனக்குரியது எனும் கோஷத்தை முன்னெடுக்கின்ற ஒரு வேலைத் திட்டம் குறித்து அண்மையில் இலங்கை அரசு சார்பற்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது பற்றி விளக்குவீர்களா?

அதை இந்த வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அந்த கலந்துறையாடலில் இவை பற்றிய விழிப்பூட்டல் நடவடிக்கைக்கு எப்படிப்பட்ட கோஷங்களை உருவாக்கி பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது குறித்து மட்டும் தான் கலந்துரையாடினோம்.

பெண் உடல் மீதான ஆணின் அதிகாரம், மற்றும் அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான புனைவுகள் பற்றி?
பெண்ணின் உடல் பற்றி எடுத்துக்கொண்டால் சிறு வயது தொடக்கமே அவளது உடல் பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணின் மாதவிடாய் தொடங்கும் காலம் தொட்டு, திருமண கால மாதவிடாய் வரை எமக்கு கற்பிக்கப்படுபவை, எமக்கு கற்பிக்கப்படாதவை பற்றி முக்கியமாக அவதானித்துப் பாருங்கள். சுகாதார விடயங்கள் பற்றி தாய்மார் பேசுவதற்கு வெட்கப்படுகின்றனர். தந்தை மார் அது பற்றி பேசுவதே கிடையாது. இப்படியான நிலையில், ஒன்றில் நன்பிகள் மூலமாகவோ அல்லது சில நூல்களினூடாகத் தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறோம். இவற்றிற்கூடாக பெரும்பாலும் எமக்கு வந்து சேர்பவை தவறானவையாக இருந்து விடுகின்றன.

இன்று தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் காணப்­படுகின்ற ”பெரிய பிள்ளையாதல்” என்பது வெறும் ”சடங்கு” ஆகவே கொள்ளப்படுகிறது. அதன் போது பெண், திருமணத்துக்கு தயாரானவள் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்த சிகப்பு உடுத்தி ஒரு கண்காட்சியையே நடத்தி விடுகிறோம்.

ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணம் சென்றி­ருந்த போது ஒரு நிகழ்ச்சியை அவதானித்தேன். எனது நன்பி ஒருவாpன் உறவினர்கள் அவுஸ்தி­ரேலியாவில் இருந்து வந்திருந்தார்கள். விசாரித்­ததில் தனது பிள்ளைக்கு சாமத்திய சடங்கை நடத்துவதற்காக யாழ் அழைத்து வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை பிரச்சினைகளின் மத்தியில் நடத்தத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி என்னை ஆச்சிரியப்படுத்தியது. சாமத்திய சடங்கு பற்றிய மரபான முறையை கவனித்தோமானால், மாதவி­டாய் முதல் தடவையாக வெளியேறுகிற சந்தர்ப்­பத்தில் ஆண்களின் பார்வையிலிருந்து விலக்கி வைத்து, நேரம் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் நீராட்டி, கடவுளை வணங்கச் செய்து, பகிரங்கமாக உறவினர்கள், நண்பர்கள் பார்வையின் முன் கொண்டு வருவார்கள். இது முதலாவது சந்தர்ப்­பத்தில். ஆனால் 12 தடவைகள் (12 மாதங்கள்) மாதவிடாய் வந்தபின்னும் கூட இந்த சடங்கு நடத்தப்படுகிறது. இதன் காரணம் அதில் ”வாடிக்­கையாளருக்கு” அறிமுகப்படுத்தும் நோக்கமும் திருமணத்துக்கு தகுதி பெற்று விட்டாள் என்கின்ற செய்தியை தெரியப்படுத்துவதுமே உள்ளார்ந்து இருக்கிறது.

வயதுக்கு வந்ததும் ஆண்களுடன் சேரக் கூடாது, பேசக்கூடாது, பழகக் கூடாது என வீட்டார் நிபந்தனை விதிப்பார்கள். திருமண காலங்களில் கூட எமது சம்பிரதாயங்களில் திருமணம் பற்றியோ குறைந்தது பாலியல் விடயங்கள் பற்றி கூட விளக்கமளிப்பதில்லையே. திருமணமான பழையவ­ர்களைக் கேட்டால் தம­க்கு அந்த முதல் இறவின் போது நடந்தவை பற்றி ஆச்சரியமாக இருந்தாகக் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் சிறியானி பஸ்நாயக்க செய்திருந்த ஆய்வொன்றில், மண­மா­காத பருவ வயது இளம் ஆண், பெண்கள் மத்தியில் பாலுறவு செயற்பாடுகள் அதிகாரித்து வருவதாகத் தெரிவி­த்துள்ளார். அது மட்டு­மன்றி இளம் சந்ததியினர் மத்தியில் இன்று பாலியல் விடயங்கள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் மறு உற்பத்தி சுகாதாரம் என்றால் என்ன என்பது குறித்த முறையான விளக்கம் அவர்கள் மத்தியில் கிடையாது.

சுகாதாரம் மறு உற்பத்தி குறித்த விடயங்கள் பெருமளவு பெண்ணின் உடல், பாலுறவு என்பவற்றோடு ஒட்டியல்லவா பேசப்படுகிறது?


மறு உற்பத்தி சுகாதாரம் பற்றிய விடயங்கள் பரந்துபட்டது. பாலியல் ஈடுபாட்டின் போது கருக்கட்டப்படலாம். பாலுறவின் போது கருக்கட்டலை தவிர்க்க வேண்டுமாயின் எப்படிப்பட்ட முறையில் தவிர்ப்பது என்பது பற்றிய விளக்கம் பெரும்பாலும் கிடையாது. கருக்கட்டலை தவிர்க்கின்ற வகையில் பாதுகாப்­பான பாலுறவு கொள்வது எப்படி என்பது பற்றி திருமணமானவர்கள் சாதாரணமாக வைத்தியர்க­ளின் ஆலோசனையைப் பெறலாம். திருமண­மாவதற்கு முன்னர் ஆணும், பெண்ணும் பாதுகாப்பான பாலுறவு கொள்ள ஆலோசனை பெறுவதற்கு பெரும்பாலும் முடிவதில்லை.....

இரண்டாவது, பாலுறவின் போது ஏற்படக்­கூடிய நோய்கள் பற்றிய எச்சரிக்கை கொள்ள வாய்ப்பில்லை. பாலியல் சார்ந்த நோய்கள் உள்ள­வர்களை சமூகம் ஒழுக்கவியல் விவகாரமாகவே (moral) பர்க்கிறது. அவர்கள் பாவம் செய்தவர்­களாகவும், ஊழ்வினைப்பயனை அனுபவிப்­பவர்கள் என்றும் கருதுகிறது. அவ்வாறான நோய்களை தவிர்க்கும் முறைகள் பற்றி எமக்குத் தெரிவதில்லை. இன்று அதையும் விட எச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி குறைவாகவே பேசப்படுகிறது. இலங்கையில் பெரும்பாலானோர் எமது நாட்டில் அப்படியொன்றும் பெரிதாக இல்லை எனக் கூறிக்கொள்கின்றனர். பேசவே விருப்பமில்லாத விடயமென்பதால் அப்படியொன்று இல்லை­யென்று ஒளிக்கவே விரும்புகிறோம்.

இன்று போர்ப் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் அங்கு இளம் - ஆண்கள் படையில் பெருமளவாக உள்ளனர். சாவிலிருந்து தப்பி, விடுமுறையில் திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உணர்ச்சிகளைத் தணிப்பதற்காக பெண்களைத் தேடிக்கொண்டு செல்வார்கள். இன்று அனுராதபுரத்தில் பாரியளவில் விபச்சாரத் தொழில் நடந்து வருவது எம்மெல்லோருக்கும் தெரியும். எல்லைப் புறங்களிலும் இது தான் நிலைமை. மேலும் படையினர் அதிகமாக நடமாடும் இடங்களில் பெண்கள் பழியாக்கப்படுகின்றனர்.

விருப்பத்துடனோ விருப்பமி­ன்றியோ இவை நடக்கின்றன. பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. படையினர் சூழ உள்ள பிரதேசங்களில் படையினரின் பாலியல் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அப்படி­யான பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பான பாலுறவு, கருக்கட்டல் தவிர்ப்பு, சுகாதாரங்கள், பாலியல் நோய்கள் என்பவை பற்றி அக்கறை காட்டப்படுவதே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை. படையின­ருக்குக் கூட இது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகிறதா என்பது தெரி­யாது. அவர்கள் உறவு கொள்ளும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்­களா?

சிலர் ஆணுறை மாத்திரம் பாவிக்கின்றனர். ஆனால் பெருமள­வான ஆண்கள் ஆணுறையைப் பாவிக்க விருப்பப்படுவதில்லை. திருமணமான கனவனைக் கூட எமது பெண்கள் ஆணுறை பயன்படுத்து­மாறு வலியுறுத்தும் வழக்கம் இல்லையே. அவ்வாறான சந்தர்ப்ப­ங்களில் வழமைபோல ஆணின் அதிகாரம் தான் அதையும் தீர்மானி­க்கிறது. எனவே பெண்களின் உடலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்­புகள் இல்லை. இவை அனைத்தும் பெண்களின் மறு உற்பத்தி உரிமைகளுடன் தொடர்புடையவை.

பொதுவாக இவை குறித்த விழிப்புணர்வுகள் போதுமானதாக இல்லையே?


சமீப கால தரவுகள் படி குடும்பக் கட்டுப்­பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அதிகம் என்று கூறுகின்றன. ஆனால் அது தற்போது குறைந்து வருவதாக சில மருத்துவ நிபுனர்கள் கூறுகின்றனர். குடும்பத்திட்டம் பற்றிய கருத்தூட்டல் நிகழ்ச்சிகள் இலங்கையில் எந்தளவு தூரம் மக்களை அடைகிறது என்பது தொpயாது. இல்லாமல் போனால், கருக்கட்டல் வரையறையில்லாமல் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தற்போது திருமணமாகின்ற வயதும் அதிகரித்து வருகிறது. பெண்களாயின் அது 26-28 ஆகிறது என்றும் ஆண்களாயின் 30 அல்லது அதையும் தாண்டுகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே திருமணமா­வதற்கு முன்னர் பாலுறவுக்கான வாய்ப்புகள் உண்டு. அதை விட திருமணமான பின்னர் வேற்று பாலுறவுக்கான வாய்ப்புகளும் உண்டு. இதைவிட எமது சமூகத்தில் கனவரிழந்தவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு உண்டு. வடக்கிலும், தெற்கிலும், உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தேவைகள் இல்லையா? அல்லது அவர்கள் பாலுறவுக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாக மாட்டார்களா?

சம்பிரதாய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் எமது சமூகத்தில் பாலுறவுகள் நடைமுறையிலி­ருக்கின்றன. நாங்கள் அதனை பிற்போக்குத் தனமாக உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பார்ப்போ­மானால் எம்மால் பிரச்சினைகளை அடையாளம் காணவும் முடியாது. அதனை தீர்க்கவும் முடியாது. யதார்த்தம் என்ன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நவீன சமூகத்தில் இந்த யதார்த்தத்தைத் தடுக்க முடியாது. எனவே நாம் இது விடயத்தில் எடுக்கக்கூடிய ஒரு ஒரே வழி பெண்களைப் பாதுகாப்பது. அதற்கு எமக்கு தகவல்கள் தேவை. பாலுறவுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகள் தேவை. கருக்கட்டல் எவ்வாறு இடம்பெறுகின்றது. கருக்கட்டல் அவசியமில்லையெனில் அதற்கேற்றவகையில் பாலுறவு கொள்வது எப்படி, அதையும் மீறி கருக்கட்டப்பட்டால் அதை பாதுகாப்பான முறை­யில் கருக்கலைப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு, திட்டமிடல் அவசியம். மத்திய தர வர்க்கத்தினருக்கு இவ்விழிப்புணர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகம். வறுமை மிகுந்த, கிராமிய, மற்றும் தொழிலாள, விவசாய பிரிவினருக்கு இந்த வாய்ப்புகள் எட்டுவதில்லை. அவர்களைப் போய் இந்த விழிப்பூட்டல்கள் போய் சேருவதில்லை, அல்லது வெட்கம் காரணமாக அவர்கள் பின்வாங்குகின்றனர். இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. மலையகத்­திலும் இந்த நிலமை இருக்கிறது. மலையகத்தில் பெரும்பாலும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்.

இன்று கருக்கலைப்பு உரிமை பற்றிய விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதற்கென்ன காரணம்?


இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவிலும் தாய்மையைப் பாதுகாப்பது (safe motherhood) என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம் தான் கருக்கலைப்பை செய்து கொள்ளளாம் என்கின்ற கருத்து உள்ளது. அதனடிப்படையிலேயே சட்டங்களும் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு விரோதமான ஒன்று. உங்களுக்குத் தெரியும் இன்று இலங்கையில் நாளொன்றுக்கு 750க்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக ஐ.நா.வின் தகவல் கூறுகின்றன. இதன் போது தாய்மார் 5-6 வீதம் வரை மரணிக்கின்றனர். இதன் பின்னராவது நாம் பெண்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், கருக்கலைப்பு ஒரு உயிர்க் கொலை, பாவம் என்கின்ற கருத்தாக்கத்திலிருந்து தொடங்கினால் உயிருடன் இருக்கிற தாயின் உயிர், ஆரோக்கியம், எதிர்காலம் குறித்த முறையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கருக்கலைப்பை சட்ட ரீதியில் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான ஆரோக்கியமான வசதிகளையும் ஏற்படுத்துவது அரசின் பொறுப்பு. பெரும்பாலும் கருக்கலைப்பைத் தீர்மானிக்கும் போது ஆணும் பெண்ணு­மாக உடன்பட வேண்டும் என்றும் கூறி வருகிறா­ர்கள். ஆனால் கருவை சுமப்பதும், அதன் விளை­வுகளை சந்திப்பதும் பெண் என்பதால், குறித்த தீர்மானமெடுப்பதில் பெண்ணுக்கே முன்னு­ரிமை இருத்தல் அவசியம். விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு அதிகமாக இருக்கிறதென்று எமது புள்ளிவிபரங்களே கூறுகின்றதென்றால், படையினரின் பாலியலு­க்கு பலியாகும் பெண்க­ளின் எண்ணிக்கை அதிக­ரிக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றதென்றால் அதனால் ஏற்படும் கருவை கலைப்பதாயின் அந்த ஆண்களைத் துணைக்கு கூப்பிட முடியாது. எனவே, பெண்ணின் தனிப்பட்ட தீர்மானத்துக்கு வழி சமைக்க வேண்டும். பெண்கள் இந்த விடயத்­தில் பொறுப்பற்ற தீர்மா­னத்தை எடுப்பதில்லை. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டால் சகலரும் குடும்பத்திட்ட முறைகளை கைவிட்டுவிட்டு கருக்கலைப்பை நோக்கிச் செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எமது நாட்டவர் மத்தியில் உண்டு. கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்­பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக் காட்டலாம்.

எப்படி அது சாத்தியமானது?


கருக்கலைப்பு சட்டபூர்வமாக்­கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள், விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவை­யும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேன். இலங்கையில் ஏற்கெ­னவே குடும்பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வ­மாக்கப்பட்டால் அதற்கொன்று கொள்கைவகுப்பு, வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டிவரும். அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செய்து அதிகப்படுத்த வேண்டிவரும்.

கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து...?


1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாலோ, அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால் அதனை கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை. அமைச்சர் அதனை வாபஸ் வாங்க வேண்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர், இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில் பேசாது விடுவோம். அதையாவது செய்வோம். அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை. அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம். எனவே ஆஸ்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னை­யதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்க­ளுடன் முறையான புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை.

இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது. பாராளு­மன்றத்துக்கு மீண்டும் கொண்டு வரும்படி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட, சுகாதார நிறுவனம், தேசிய பெண்கள் கமிட்டி, பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும். சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாத­வர்கள் குழந்தையை பெற்றுக் கொண்டதும், மலசல கூடங்கள், வாய்கால், குப்பைத் தொட்டிகள், காண்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும் அவ்வப்போது செய்திகளில் காண்கிறோம்.

அமைச்சர் கொண்டு வந்த சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெண்கள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெண்கள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியது திர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே. இது வரை அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெண்களின் பிரச்சி­னையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டதில்லை. பெண்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினை­யாக கருதுவது கிடையாது.

பெருமளவான தொடர்பு சாதன­ங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்­படுத்துவது என்பது குறித்த விழிப்­புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம், ”கருவிலேயே கொலை” என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.

ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும் பெண், இயந்திரம் அல்லவே.

குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளா­கவும், வேசி என்றுமல்லவா அழைக்­கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.

சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள், தங்களின் மனைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, சகோதாpக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?

இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல், ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி நிற்கிறது?
அது தான் உண்மை. கற்பு குறித்த ஐதீகம் பெண்ணின் உடல் மீதான ஆணின் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் என்கின்ற விடயம், பாலியலை சுதந்திரமாக பெண் பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பண்டஙகளைப் போல சொந்தமானது, கற்பு புனிதமானது, தூய்மையானது என்கின்ற புனைவுகளை சுற்றிக் கட்டப்பட்டது. இந்த தூய்மையை, புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக ”கெடாமல்” காக்க வேண்டும். குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட, குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப்­பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்­கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் ”வேசி” என்கின்ற பழிச்சொல் சுமத்தி, அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனி­வுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெண்ணின் பாலியலை, உடலை கட்டுப்படுத்­துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெண்ணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தி­யிருப்பதும் அதற்காகத் தான். விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை என்ற நிபந்தனை பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான். கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருப்­பதும் அதற்காகத் தான். பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேண்டியல்லவா போராடுகிறார்கள். அதே சுயநிர்ணய உரிமைக்காகவே பெண்ணும் போராட வேண்டியி­ருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேண்டியிருக்கிறது.

நேர்காணல்: என்.சரவணன்

AddThis Social Bookmark Button




மனம்பேரி:
ஒரு அழகிய போராளியின்
25வருட நினைவுகள்



என்.சரவணன்

(இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.)

இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்­னெ­டுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி­யினர். 1971 ஏப்ரல் கிளர்­ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடுர ஒடுக்குமுறையி­னால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்­பேரி பற்றி இந்த இருபத்­தைந்து வருட நினை­வில் சில குறிப்புகள்.

அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...?

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்­லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருப­தா­யிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளி­களை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்த­னைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை.

இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களு­க்கு தண்டணை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.

கதிர்காமத் தாக்குதல்.

1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்­து­ள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்­பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்பட்டது.

இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.
அழகு ராணி மனம்பேரி

பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர். மனம்பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்களால் கடத்தப்பட்டாள்.
கடத்தலும் வதையும்

1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியளவில் மனம்போpயின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெறிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.

அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”
மௌனம்

”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?”
”.........”
”நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”
இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.

”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...”
”ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.

”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைகளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.

மனம்போpயை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.

ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்­டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்­ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்­தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.
உயிர் பிரிந்தது.

எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.

”தண்ணீர் தண்ணீர்...” என முனுகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடுர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)

காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசிகளை அழைத்து பிணங்களைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்பதைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இருவரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்­டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறு­தி­யாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)

முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.

மனம்போpயின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை சிசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.
கொலைஞர்களின் முடிவு.

1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்முறையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.

(1996 ஏப்ரல்.4 சரிநிகர்)
(தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ”நிறப்பிரிகை” சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது.

AddThis Social Bookmark Button


மகளிர் சாசனம்:
கண்டுகொள்ளாத தவறுகள்












என்.சரவணன்

”மகளிர் சாசனத்தை அமுல் படுத்து!”
”பெண்களே! யுத்த அடக்கு முறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்!”

இம்முறை இலங்கையில் ”சர்வதேச பெண்கள் தினத்தை நினவு கூருகின்ற பெண்கள் அமைப்புகள் பல இக்கோரிக்கைகளையே முன்னணி கோஷமாக எழுப்ப தீர்மானித்திருக்கின்றன.

இவற்றில் ”மகளிர் சாசனம்” பற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றை சில பெண்கள் அமைப்புகள் நடத்தி வருகின்றன.

எனவே இன்றைய காலப் பொருத்தம் கருதி மகளிர் சாசனம் பற்றிய நடைமுறை சாத்தியங்கள் குறத்து கலந்துரையாடுவது பொருத்தமானது.

மகளிர் சாசனத்தின் தோற்றம்:

1975ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் வருடத்தை உலகம் பூராவும் நினைவு கூர்ந்த போது 1975 தொடக்கம் 1985ம் அண்டு வரையான பத்தாண்டுகளை பெண்கள் தசாப்பதமாகவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து உலகம் பூராவுமுள்ள பல நாடுகள் பெண்கள் நலனில் ஓரளவு ஈடுபாடு கொண்டன.

நான்கே ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிருக்கெதிரான சகலவிதமான பாரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் உடன்படிக்கையை (CEDAW-Convention on the Elimination of all Discrimination Against Women) 1979 இல் அறிமுகப்படுத்தியது. ஆனாலும் வெகு சில நாடுகளே இவ்வுடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட முன்வந்தன.

இந்த CEDAW உடன்படிக்கையானது பெண்களின் உரிமைகளைப் பேணுவதற்கான அடிப்படையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு இவ்வுடன்படிக்கை­யில் கைச்சாத்திட்டது. இதனால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதன்மை நாடுகளில் ஒன்றாகவே இலங்கையும் கொள்ளப்படுகிறது. இவ்வுடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்ட போதும் அரசாங்கம் பெண்களின் நலனில் அக்கறையில்லாமலேயே செயற்பட்டு வருகின்றது எனும் குற்றச்சாட்டை பெண்கள் அமைப்புகள் முன்வைத்தன.

அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை CEDAW உடன்படிக்கையை இலங்கையில் அமுலாக்கும்படியும் இதற்கான ஒரு சுதேச சாசனம் ஒன்றை வரையும் படியும் பெண்கள் அமைப்புகள் கோரின. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே 90களின் ஆரம்பத்தில் அரசாங்கம் மகளிர் தொடர்பான உத்தேச சாசனம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மகளிர் அமைச்சிடம் ஒப்படைத்தது. மகளிர் விவகார அமைச்சு இவ் உத்தேச சாசனத்தை வரைவதற்காக பெண்கள் உரிமைகளில் அக்கறை காட்டும் முக்கிய பெண் பிரமுகர்கள் சிலரைக் கொண்ட குழுவொ­ன்றை அமைத்தது. இக்குழுவினரால் அமைக்கப்பட்ட உத்தேச சாசனமே 1993ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்ப்பட்­டது. இந்த சாசனமானது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பெண்கள் சாசனமாக கொள்ளப்படுகின்ற ஊநுனுயுறுவை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்­பட்டுமுள்ளது. இலங்கையில் பெண்கள் நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடைய பெரும்பாலான பெண்ணிலைவா­திகளின் கருத்தின்­படி இச்சாசனம் மிகவும் பிரயோசனமா­னது. சிறந்தது. விமர்சனங்கள் திருத்த வேண்டியவைகள் எதுவுமில்லை. ஆனால் நடைமுறைச் சாத்தியம் பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்கின்றனர்.

ஆனால் அதற்கிடையில் இச்சாசனம் தொடர்பாக பல விடயங்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்பதை பலர் உணர மறுக்கின்றனர். வெகு சிலரிடமே இச்சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருப்பதைக் காண முடிகிறது. பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் குடும்ப அமைப்பு முறையை பாதுகாக்கக் கூடிய பல அம்சங்கள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. பெண்கள் மீதான ஒடுக்கு முறையின் பிரதான கருவிகளில் ஒன்றாகவே குடும்ப நிறவனம் அடையாளம் காணப்படுகின்ற போதும் அக்குடும்ப அமைப்பு முறைக்கு தோகக் கூடிய அம்சங்களை இதில் காண முடிகிறது.

ஆண்களுக்கிருக்கின்ற பாலியல் சுதந்திரங்கள் எவற்றையும் பெண்களுக்கும் இருப்பதாக இச்சாசனம் முன்­வைக்கவில்லை. புராதன தாய் வழிச் சமூகத்தை, தனிச் சொத்­துரிமையைப் பேணுவதற்காக உடைத்து தற்போ­தைய தந்தை வழிச் சமூகத்தை நிறுவிய ஆணாதிக்கம் தமது தனிச்சொத்துரிமையை பாதுகாப்பதற்காகவே ”தகாத பாலுறுவு” எனும் தடையை பெண்களுக்கு மட்டுமே விதித்தது. அந்தக் கருத்தியலின் தொடர்ச்சியான இருப்பை இன்னமும் ஆண்கள் அனுபவித்து பேணி வருவதுடன் பெண்கள் அவ்வுரிமையை பயன்படுத்தினால் ”வேசித்தனம்” என அவமானப்­படுத்தி சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே சமூகத்தால் தூற்றவும் செய்கிறது. இதே முறைமையை பெண்கள் சாசனம் பேணுகிறதா? ஆண்களுக்கு மட்டுமே இவ்வுரிமை இருப்பதாகக் கொள்கிறதா?

இந்நிலப்பாடானது அரசாங்கம் பெண்கள் மீதான கருத்தியல் சார்ந்த ஒடுக்குமுறையை பேணுவதாகவே கருதமுடியும்.

இன்று பெண்ணியத்தில், ஒருபால் உறவு சுதந்திரம் (Lesbiana Relationaship) என்பது இன்று பெண் விடுதலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பேசப்பட்டு வருகிறது. கருவள கட்டுப்பாட்டை திண்து வருவதில் வெற்றி கண்டு வந்த ஆண்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும் பெண்ணின் உயிரியல் இயல்புகளை ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதில் இருந்து விடுபடவும் ஒரு பால் உறவு சுதந்திரம் பெண்ணுக்கு இருக்க வேண்டுமென பேசப்படுகிற அளவுக்கு இன்று தத்துவார்த்த விவாதங்கள் வளர்ச்சியுற்றிருக்கிற போது இலங்கை மகளிர் சாசனத்தில் பாலியல் உரிமைகளுக்கே இடமில்லையென்றாகிவிட்டது. இது பற்றிய சர்ச்சைகளை பல பெண்ணிலைவாதிகள் எழுப்பாமல் இருப்பது தான் ஆச்சரியத்துக்குரியது.

இந்தச் சில குறைகள் இருந்த போதும் பெரும்பாலான உருப்படியான அம்சங்கள் நிறைந்த இந்த சாசனத்தில் அதன் சாத்தியப்பாடு குறித்த பல கேளிகளை எழுப்பச் செய்கின்றன.

சாத்தியப்பாடு


முதலாவது இது ஒரு சட்டமல்ல. அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயமல்ல. இது வெறும் அரச கொள்கை மாத்திரமே. அதாவது அரசானது கொள்கையளவில் மாத்திரமே அதாவது அரசு கொள்கையளவில் மாத்திரமே பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது என கொள்ளலாம். இச்சாசனத்துக்கு எந்த வித உத்தரவாதமுமில்லை. எனவே, இவற்றில் சொல்லப்பட்டவை மீறப்பட்டிருப்பதாக எவருக்கெதிராகவும் வழக்கு தொடர முடியாது. அதாவது ஒரு தனி நபரோ ஒரு நிறுவனமோ ஏன் அரசாங்கமோ கூட பெண்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதையிட்டு எதுவித சட்ட நடவடிக்கையையும் இச்சாசனத்தைக் காட்டி எடுக்க முடியாது. அது வெறும் அரச கொள்கை மட்டும் தான் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

எனவே தான் 1993ல் பாராளுமன்றத்தில் இக்கொள்கை அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் அமைப்புகள் பல இச்சாசனத்திற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும்படி போராடி வருகின்றனர்.

ஆனாலும் இச்சாசனத்தின் சாத்தியப்பாடு குறித்து கண்காணிப்பதற்கான பெண்கள் தேசியக் குழு (National Committee of Women) எனும்அரசாங்க நிறுவனம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் நியமித்தது. இந்தக் குழுவுக்கூடாகவேனும் சாசனம் சட்ட அந்தஸ்து பெறும் வரையில் பெண்கள் உரிமைகளை ஓரளவு பாதுகாக்கலாம் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுவும் கனவாக மட்டுமே காணப்பட்டது. காரணம் 15 பேர் அடங்கிய இந்த தேசியக் கமிட்டியால், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை சட்ட மீறல் நடவடிக்கையாகக் கொண்டு செயற்பட முடியாது. இக்கமிட்டிக்கு முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்து நேரடியாக நடவடிக்கை எடுக்கவோ, சமரச முயற்சிகளில் ஈடுபடவோ, சாட்சியங்களை அழைக்கவோ அதிகாரம் இல்லை.

ஆகக் கூடிய பட்சம், பாரபட்சம் தொடர்பான முறைப்பாடு­களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரப்பிரிவு­களை வலுப்படுத்தி, அபிவிருத்தி கொள்கைகள், சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் என்பன சாசன பிரமாணங்களின்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணிக்கவும் சிபாரிசுகளை செய்யவும் மட்டுமேமுடியும். எனவே கண்காணி­ப்பு, சிபாரிசு, விதந்துரைப்பு, ஆலோசனை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளுக்கப்பால் எதுவித அதிகாரமும் கமிட்டிக்கு இல்லை என்பதே உண்மை.

ஆக, ஒரு பக்கம் சட்ட அந்தஸ்து இல்லாத சாசனம். மறுபுறம் அதிகாரம் இல்லாத கமிட்டி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு தான் பெண்கள் நலனில் இந்த அரசாங்கம் ஈடுபடப் போகின்றதென்றால் பெண்களின் பாரிய போராட்டத்திற்கான தேவையுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

ஆனால் வாய் கிழிய நெஞ்சதிர மார்தட்டிக் கொள்வோம். நாட்டின் ஜனாதிபதி பெண் என்று, பிரதமர் பெண் என்று. பாராளுமன்றத்தில் அதிகப் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்று. அமைச்சரவையில் அதிகப் பெண்கள் இம்முறை இருக்கிறார்கள் என்று...

இலங்கையில் பெண்கள் சாசனம் வரையப்பட்டது (ஆண் தலைமையிலான) ஐ.தே.க. ஆட்சியின் போதே. பெண்கள் தேசியக் கமிட்டி அமைக்கப்பட்டதும் (ஆண் தலைமையி­லான) ஐதே.க. ஆட்சியின் போதே.

ஆனால் அன்று தொடக்கமே இவ்விரண்டையும் வலுவுள்ளதாக்கும்படி பெண்கள் போராடித்தான் வந்தார்கள். பலன் இருக்கவில்லை. சந்திரிகா ஆட்சி தலைமை ஏற்ற போது எல்லாம் தீர்ந்தது என நினைத்தனர் பெண்கள். இன்று ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. சாசனம் வெற்றுக் கொள்கையாகவே உள்ளது. தேசியக் கமிட்டி கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றாக மட்டுமே உள்ளது.

இன்று இச்சாசனம் தொடர்பாக பெண்கள் எழுப்ப வேண்டிய முக்கிய மான கோரிக்கை என்னவென்றால்,

”அரசே! சாசனத்திற்கு சட்ட அந்தஸ்து கொடு! பெண்கள் தேசிய கமிட்டியை நீக்கி, பெண்கள் ஆணைக்­குழுவை ஸ்தாபி!”
என்பதே!.

(1996 மார்ச் 07 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


மகளிர் தினமும் மகளிர் பிரதிநிதித்துவமும்




என்.சரவணன்

வழமைபோல இம்முறையும் மார்ச் 8ம் திகதியன்று ”சர்வதேச பெண்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. இம்முறையும் பெண்கள் தினத்துக்கான ஆயத்தங்களை பெண்கள் அமைப்பு கள் மும்முமரமாக ஈடுபட்டுவருகின்றன. அவ்வாறான அமைப்புக ளில் அரச சார்பற்ற அமைப்புகள், கட்சிகள் சார்ந்த அமைப்புகள், இரண்டையும் சாராத சுதந்திர அமைப்புகள் என்பவை முக்கியமா னவை. இவற்றில் கட்சி சார்ந்த பெண்கள் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குள் கிளையாக இயங்குகின்ற பெண்கள் அணி என்பவை பெரும்பாலும் இம்முறை சர்வதேச பெண்கள் தின நினைவு கூரலை கைவிட்டுவிட்டனர். காரணம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களின் முன்னிலையில் பெண்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமானதாக அல்லது தேவையற்ற தாகப் போய் விட்டுள்ளது போலும்.

பொதுவாக பெண்கள் அமைப்புக ளைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் பெண்களின் எழுச்சியையும், பலத்தையும், பெண்களின் கோரிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்கும் இந்நாளை கூடிய பட்சம் பயன்படுத்த விளைவதே இயல்பானது.

ஆனால் இங்குள்ள அமைப்புகளுக்கு இது முக்கியமாகப் படவில்லை. அதைவிட தேர்தல் அவர்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இந்த கட்சி சார்ந்த அமைப்புகள் போலவே பெரும்­பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்முறை நேரடி­யாகவோ மறைமுகமாகவோ கட்சிகளுக்கு ஆதரவளித்து இயங்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெல்லச் செய்வதே பெருமளவான அரசசார்பற்ற பெண்கள் அமைப்­புகளின் நோக்கமாக இருப்ப தைக் காண முடிகிறது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது என்னவென்றால் அவ்வாறான பெண்கள் அமைப்புகள் எவ்விதத்திலும் பெண்களின் கோரிக்கை களை முதன் மைப்பத்திய நிபந்தனைகள் எதுவுமில் லாமல் ஆதரவளிப்பதே.

பொ.ஐ.மு.வே ஐ.தேகவுக்கு சாpயான மாற்று என்றும் ஐ.தேகவோடு ஒப்பிடுகையில் ஜனநாயகம், போர், இனப்பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவை முன்னரை விட நல்ல நிலையில் அணுகப்படுவதாகவும், ஓரளவு சாத்தியமான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்டிருப்பதா­கவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக கூறித் திரிவதைக் காணமுடிகிறது.

இந்நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தாவது இவ்வமைப்புகள் அவதானத்து டன் அணுகுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

குறிப்பாக உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 40 வீதத்தினர், 16-35க்கு இடைப்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனும் விதி தேர்தல் ஆணைக்குழுவி னரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விதி மீறப்பட்ட பல பட்டியல்கள் இம்முறை நிராகரிக்கவும் பட்டன. இவ்வாறான ”இளைஞர்” பிரதிநிதித்து வத்தைப் பெற பிரயத்தனம் செய்த ஆணாதிக்க ஆட்சியதிகார கட்டமைப்பு பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து சிறிதும் சட்டை செய்யவே இல்லை. இதில் ஆச்சிரியமும், அனுதாபமும் கொள்ள வேண்டிய விடயமென்னவென்றால் இது குறித்து எந்தவொரு பெண்கள் அமைப்புமே கவனத்தில் கொள்ளாதது தான்.

இந்த 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை நோக்குவது இங்கு முக்கியமானது.

1987-1989 காலப்பகுதியில் நடந்த அரச பயங்கரவாதத்தை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பியினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆயிரக்க ணக்கான இளைஞர்கள் பிரேமதா சவின் படையினரால் கொன்றொழிக்க ப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்ட போது சர்வதேச ரீதியில் பிரேமதாச அரசாங்கம் சாடப்பட்டது, கண்டிக்கப் பட்டது. இதை மூடி மறைப்பதற்காகவும் இளைஞர் பிரச்சினைக ளை தீர்க்க வந்தவராகவும் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை பிரேமதாசவுக்கு இருந்தது. அதன் விளைவாக 1989இல், ”இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது, அவ் ஆணைக் குழுவில் இருந்த ஐவரில் ஒருவர் இன்றைய நீதித்துறை அமைச்சர் (அன்றைய கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர்.) ஜீ.எல்.பீரிஸ், இன்னொருவர் ஐ.நா.சபையில் பெண்கள் மீதான வன்முறை பற்றிய அறிக்கையாளராக கடமையாற்றும் ராதிகா குமாரசுவாமி.

அவ்வாணைக்குழு விசாரணையின் முடிவில் பல பிரேரணைகள் முன்வைக் கப்பட்டன. அப்பிரேரணைகளில் ஒன்று தான் அரசியலில் இளைஞர்களுக்கு 40 வீத பிரதிநிதித்துவம் என்பது.

அவ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை முழுமையாகப் பார்க்கும் போது அது இளைஞர்களை கட்டிப்போடுவது எப்படி? இளைஞர்களின் புரட்சிகர குணாம்சங்களை வளரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது போன்ற இலக்கைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. மற்றொரு அம்சம், அது ”இளைஞர்” என கருதிக் கொண்டது ஆண்களை மட்டுமே என்பது. இளைஞர்கள் சம்பந்தமாக ஆராயப்பட்ட அவ் ஆணைக்குழு அறிக்கையில் எந்த அத்தியாயமும் ”இளம்” பெண்கள் பற்றி ஆராயப்படாததும் விதிவிலக் காகவே பெண்களை சந்தித்து விசாரித்துள்ளனர் என்பதுவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவால் ”இளைஞன்” களுக்கு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதத்தில் விதிகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.

அது மட்டுமன்றி அவ் ஆணைக்குழுவில் பெண்நிலை­வாதி என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் இருந்தும் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை யென்றால் அதை சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்த ஆணாதிக்க சட்ட அமுலாக்க கட்டமைப்பை பற்றி மட்டும் கூறவா வேண்டும்?
”பிரதிநிதித்துவம்” எனும் போது ஜனத்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களு க்கும் சமமான பிரநிதிநிதித்துவம் இருக்கக் கூடிய வகையில் ஒழுங்கமை க்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அரசியலமைப்பில் ”சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' எனும் போலி வாசகம் மாத்திரம் போதுமானதல்ல. இன்னமும் சர்வதேச ரீதியில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் 5 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. என்பதே யதார்த்த நிலை. இந்நிலை யில் குறைவிருத்தியுடைய (குறைவிரு த்திக்குள்ளாக்கப்பட்ட) பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதெனில் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். அப்படியாக விசேட கவனிப்பு செலுத்துவதா­கவிருந்தால் குறைந்த பட்சம் அக்குறிப்பிட்ட காலத்துக்கு வேட்பாளர் பட்டியலில் 50 வீதத்துக்கும் அதிகமான வீதத்தை பெண்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது. ஆனால் இங்கு 3 வீதத்தைக் கூடக் காணவில்லை.

இதன் அர்த்தம் வேட்பாளர் பட்டிய லில் பெண்களின் எண்ணிக்கையை கூட்டிவிட்டால் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடிவிடும் என்பதல்ல. எப்படியோ வாக்காளப் பெண்கள் கூட ஆண்களை நோக்கியே தமது வாக்குக­ளையிடுவார்கள் என்பதும் வேட்பாளப் பெண்களும் தமது வெற்றியின் பின் பெண்களை பிரதிநித்துவப்படுத்தப் போவதில்லை என்பதுவும் உண்மை. ஆனால் இந்த முதலா­ளி­த்துவ பாராளுமன்ற அமைப்புமுறை மாற்றமுறுவது வரையி­லான காலம் வரை பெண்களது அரசியல் ஈடுபாட்டை நிர்ப்பந்திக்க கணிசமான அளவுக்கு இது உதவுமென்று நம்பலாம்.

இந்தியாவில் கூட பாராளுமன்ற த்தில் 30 வீத பெண் பிரதிநித்துவ கோரிக்கை நாடு முழுவதும் மிகவும் துடிப்பாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

இன்னமும் பெண்களின் பாராளு மன்ற பிரதிந்துவம் குறித்த அசமத்துவ நிலை குறித்து அரச மட்டத்திலேயோ அரசு சாராமட்டத்திலேயோ கேள்வி எழாததன் காரணம் என்ன? ஏன் ஒரு முறையேனும் பெண்கள் அமைப்பி னரால் கூட குரல் எழுப்பப்படவில்லை? 1987-1989இல் நடந்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தான் இன்று 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவம் வழங்கப் படக் காரணம் என்றால் பெண்கள் கூட தமது உரிமைகளுக்காக அப்படியொரு தனித்த போராட்டத்தை முன்னெடுத் தால் தான் கவனத்தில் கொள்ளப்ப டுமோ?

இக்கேள்விகள் நியாயமான முறை யில் பரிசீலிக்கப்படாவிட்டால் அப்படி யொரு நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

(1997- மார்ச்-06,சரிநிகர்)

AddThis Social Bookmark Button


தமழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும்




என்.சரவணன்

இன்று தென்னிலங்­கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்”” என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசாக (State) இன்னும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளி லிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்­டிருக்கிற சட்டங்களை அலசிப் பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகை யில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” (Panel Code of Tamil Ealam) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு”' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று. அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரை­யின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்­கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.

''பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்” (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)

''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.” (அதே நூல்-பக்கம்-31)

''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்.” (அதே நூல்- பக்கம்-35)

நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிh;வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவ ற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுகளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரிதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியுள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தண்டனை


தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் ”ஒறுப்பு” எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்ட­னை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்­கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்கப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்” (பார்க்க-PCTE-சரத்து-47)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. ”கடுஞ்சிறையொ­றுப்பு” என்பதன் அh;த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-PCTE-சரத்து-45.)

ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ”கடும் உடலுழைப்பு” என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.

அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரம­ல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உளரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.

எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற்றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்­கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான ஒன்றாதல் வேண்டும்.

ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:

உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்க­லைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (PCTE-சரத்து-215)

சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும். (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் ”புறநடை விலக்கு” எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு” (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணிணதும் 'இசைவு” தேவை என கூறப்பட்டுள்ளது.

கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் போpல் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்­பும் இன்று ”பாலியல் வல்லுறவு” என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணிடமே விட்டுவிட வேண்டும்.

கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்­தினர் தங்களது போர்க்கால மனிதவள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.

மறுமணம்


”மறுமணம்” விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவா;களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (PCTE-சரத்து 273) எனக் கூறப்பட்டி ருக்கிற போதும் அதன் 'புறநடை” பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.

திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை” என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.

பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.

”பாலியல் வல்லுறவு குற்றம்” புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட­னையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (PCTE-சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு” பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டுள்ளது. (PCTE-சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.

இச்சட்டத்தில் ”பாலியல் வல்லுறவு”, ”பாலியல் வன்முறை” இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,

''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் ”பாலியல் வல்லுறவு”' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்” என்றிருக்கிறது.

''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது ”பாலியல் வன்முறை”த் தவறாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து ”பாலியல் வல்லுறவு” மற்றும் பாலியல் வன்முறை” ஆகியன ஆணொருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு”களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.

இதை விட ”பாலியல் வல்லுறவு” (Rape) மற்றும் ”பாலியல் வன்முறை” (Sexual Violence) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்” (sexual Disturbance) என்ற ஒன்றை வேறுபடுத்தி பாh;க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடா;பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.

இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக ”பாலியல் வல்லுறவு” எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு” எனும் பதம் பயன்படுத்தப்பட்ட­போது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்­லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்க­ப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலை­வாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து ”பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் ”சரிநிகர்” பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்களில் ”பாலியலுறவு” என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலை­யில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற ”பாலியல் வல்லுறவு” எனும் பதத்தில் பாலியல் (sexual) + வன்மை (violence) + உறவு (intercource) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்ப­தைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைக ளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையி லொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCTE-சரத்து-(286))

இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்” என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகி­றது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதி­தாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்­கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதி­லிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபுரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்க­த்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.

பரத்தமை


'பரத்தமை” (விபச்சாரம்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.

பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரண­மாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலை­யினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்­கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.

''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாரு­டன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை” தவறாகும். இத்தவறு­க்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையி­லொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்.” (PCTE-சரத்து (481),(420))

பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.

''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?” என வினவுகிறார் பெண்ணிலைவாதி­களில் ஒருவரான சுனிலா அபேசேகர.

இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.

மேலும் 'விபச்சாரி” அல்லது 'வேசி” என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகை­யான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப்பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.

ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்” அல்லது ''பரத்தன்” போன்ற பதங்க­ளைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்­தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.

இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்” தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் அசட்டை யாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப் படும் பெண்ணி­னம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க முடியாதே.

ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள ”பெண்கள்” பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.

முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்­களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கி­யமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.

(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


கிருஷாந்தி:
பாலியல் வல்லுறவுக்கும்,
படுகொலைக்கும் பதில் சொல்வது
யார்




என்.சரவணன்

(கிருஷாந்தி சம்பவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ”பெண்கள் தொடர்பூடக கூட்டு” பெண்கள் தொடர்பூகடக் கூட்டு அமைப்பின் வேண்டு­கோளுக்கிணங்க எழுதி வெயிடப்பட்ட துண்டுப் பிரசுரம் -பி.கு.-இத் துண்டுப்பிரசுரம் அமைதியான ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்குடன் வெளியிடப் பட்டதென்றும் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் கூறி இத்துண்டுப் பிரசுரத்தை பகிர்வதற்கு விட முடியாது என யூ.டி.எச்.சீ.ஆரைச் சேர்ந்தவர்கள் தடுத்தார்கள். இவர்களுக்கு பின்னர் அரச தொடர்பு சாதனங்களில் நல்ல பதவிகள் கிடைத்தன. அவர்களின் ஒரே நோக்கம் அரசை பாதுகாப்பது என்பதாகவே இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்.ஜீ.ஓ. குழுவினரோ உடனடியாக பீதியுற்றதுடன் இந் நபர்களின் பயமுறுத்தலுக்குப் பழியாகி அவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டனர்.)


'சில விஷமிகள் இராணுவத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிஷாந்தி மற்றும் அவரது குடும்பத்தவர், அயலவர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை புலிகளே செய்துள்ளனர். அதற்கான சாட்சிகளும் எம்மிடம் உண்டு””

இது இம்மாதம் 1ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்­டத்தைத் தொடர்ந்து அன்று அரச தொடர்பு சாதனமான ரூபவாஹினி , செய்தியில் வெளியிடப்பட்ட ஒரு தகவல். ஏற்கெனவே முழு உலகமுமே அறிந்த விடயம். இராணுவமே ஒத்துக்கொண்ட விடயம், சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாக அரசாங்க உயரதிகாரிகளே சொன்ன விடயம். அப்படியிருக்க திடீரென்று இப்போது எப்படி பொய்யானது?

கிரிஷாந்தி (வயது-18) யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த-சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்ற மிக திறமை­யான மாணவி என கணிக்கப்பட்டவர். 12 வருடங்களுக்கு முன்னர் தனது ஆறாவது வயதிலேயே கிரிஷாந்தி தனது தகப்பனாரை இழந்து விட்டிருந்தார். கிரிஷாந்தியின் தகப்பனார் திரு.இ.குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.

கடந்த செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிரிஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.

கிரிஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாரு­க்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிரிஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்தி­ருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிரிஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா­கியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்­தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதை­த்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military Police), ஒன்பது இராணு­வத்தினருமாக பதினொரு பேர் கிரிஷாந்தியை தொடர்ச்சி­யாக பாலியல் வல்லுறவு செய்தனர். இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே அவர்களுக்கும் 'அனுபவி­க்க' அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிரிஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிரிஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் செப்டம்பர் 17ம் திகதியன்று பாராளுமன்­றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்­கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது. இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்­ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிரிஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிரிஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவின­ர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையி­ட்டதன் பின்னரே ஒக்டோபர் 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.

ராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.

இச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27ம் திகதியன்று வாழைச்சேனை­யில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்­காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக இராணுவ சந்தேக நப­ர்­களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது-22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேக­த்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.

மனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்­டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில் இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கை­யில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரண­மாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவே­யில்லை.

இராணுவத்தினர் கடந்த 1987-1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்கு­வதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வருவது எதனைக் குறிக்கிறது? இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவி­ல்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்­பட்ட வண்ணமேயுள்­ளது. மைலந்தனை, கொக்கட்டிச்­சோலை தொடக்கம் சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்­கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை. இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்­டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்­பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு, கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.

இலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.

(1996 டிசம்பர்)

AddThis Social Bookmark Button


விவியன்:
ஒரு பரட்சிகாரியின் மரணம்









என்.சரவணன்


கடந்த ஒக்ரோ­பர் 3ம் திகதியன்று விவி­யன் குணவர்தன எம்மை விட்டு மறைந்து விட்டார். சகல பத்திரிகை­களும் ”புரட்சிக்காரி” விவிய­னின் இழப்புக் குறித்துச் செய்திகள் வெளியிட்­டிருந்தன. கடந்த செப்­டெம்பர் மாதம் 18ம் திகதி தான் விவியன் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி­யிருந்தார். அவரது சேவையை வாழ்த்தி பல அமைப்புக்கள் பாராட்டுக் கூட்டங்களை நடாத்தியிருந்தன. எண்ணி 15வது நாளில் திடீரென சுகவீனமுற்ற அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட ஒரு நாளிலேயே எல்லோ ரையும் விட்டுப் பிரிந்துவிட்டார்.

கடந்த வாரம் சரிநிகர் ஆசிரியர் பீட கூட்டத்தின் போது விவியனின் 80வது வயது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஒரு நேர்காணல் செய்வது தொடர்பா­கக் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் அப்பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்­டிருந்த போதே அவரது பிரிவு பற்றிய செய்தி என்னை எட்டியது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நிலையில் குற்றவுணர்வும் சூழ்ந்துகொண்டது என்னை.

நேர்காணலைச் செய்ய முடியவி­ல்லை என்பதற்காக மட்டுமல்ல. சென்ற வருடம் யூன் மாதம் எனது தொடர் கட்டுரைக்காக விவியனின் வீட்டுக்குச் சென்று உரையா­டியிருந்தேன். அப்போ­தும் அவரது உடல் நிலை சிறப்பாக இருக்காவிட்டாலும் உற்சாகத் துடன் உரையாடினார். கடந்த காலங்களில் அவரது சேவை பற்றி நான் தெரிந்து வைத்தி­ருந்ததை விட அவருடன் உரையாடி யபோது கிடைத்த தகவல்­கள் என்னையும் உற்சாகப்படுத்தி­யிருந்தன. நான் அவரிடம் ”உங்களைப் பற்றி நூல் ஒன்றை எழுத அனுமதிப்­பீர்களா, நீங்கள் அதற்கு ஒத்துழைப்­பீர்களா?” எனக் கேட்டபோது அவர் ”நிச்சயமாக நான் ஒத்துழைக்கிறேன். குமாரி ஜெயவர்தனவும் என்னைப் பற்றிய ஒரு நூலை எழுதுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஏன் நீங்கள் கொல்வின் பற்றி தமிழில் சரியான நூலை எழுத முயலக் கூடாது?” என என்னிடம் கேட்டார். அவர் பற்றிய நூலை அவர் இருக்கும் போதே செய்ய முடியாமல் போனது ஒரு வகையில் குற்றவு ணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் விவியன் பற்றி விவியனின் ஒத்துழைப்புடன் 'மலல்கொட பந்துதிலக்க' என்பவர் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் என்று இரு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. எனினும் இந்நூல் அவர் இறந்த பின் தான் அச்சு செய்து பூர்த்தியாக்கப்­பட்டது. விவியனுக்கு அந் நூலைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

விவியனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான செஞ்சட்டையணிந்த கட்சித் தொண்ட­ர்களும், பொது மக்களதும் தொகையே விவியனின் சேவைக்கு சாட்சி சொல்லும். முக்கியமாக விவியனிடம் இருந்த ஒரு போராளிக்குhpய நேர்மை­யும் துணிச்சலும் அவரது புகழுக்குக் காரணமாயிற்று.

விவியன் 1918.09.16ம் திகதியன்று பிறந்தார். ஆங்கிலேய விசுவாசமிக்க உயர் கொவிகம சாதியில் செல்வாக்கு படைத்த பொரளுகொட பரம்பரையில் பிறந்தபோதும் உயர் மத்திய தர வர்க்கத்தவர் பயிலக் கூடிய கொழும்பு மியுசியஸ் கல்லூரியல் பயின்ற காலத்திலேயே பிரித்தானிய ஏகாதிபத்­தியத்தை எதிர்த்து ”சூரியமல்” இயக்கத்துடன் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். ஆங்கிலேயர்களால் வருடாவருடம் மேற்கொ ள்ளப்பட்டு வந்த (நவம்பர் 5ம் திகதி) ”பொப்பிமல்” தினத்தின் போதான 5 நிமிட மௌன­த்தினைப் பாடசாலைக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவார்.

லங்கா சம சமாஜக் கட்சியில் அன்றைய நாட்களின் தலைவர்களான பிலிப் குணவர்தன, ரொபட் குணவர்தன ஆகியோர் விவியனின் மாமனார்கள் (தாயின் சகோதரர்கள்) இவர்கள் இருவரும் விவியனுக்கு மாக்சீய அரசியல் உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

வீட்டுக்குத் தொpயாமல் சூரியமல் இயக்க த்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். பின்னர் இது தந்தைக்குத் தெரிய வந்தபோது விவியன் வீட்டில் அடைக்கப்பட்டார். அதையும் மீறி களவாக அரசியல் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார்.

ல.ச.ச.கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய தந்தையி­டம் அனுமதி கிடைக்­காத நிலையில், இரகசியமாக ஆரம்ப­த்தில் வேலை செய்யத் தொடங்கி, பின்னர் கட்சியில் முழு நேர ஊழியராகப் பணிபுரிந்தார். ல.ச.ச.க­வின் செயலாளராக அன்று தீவிரமாக பணிபுரிந்து வந்த லெஸ்லி குணவர்தன­வுடன் காதல் கொண்டு குடும்பத்தைத் துறக்க வேண்டிய நிலைக்கும் உள்ளா­னார்.

லெஸ்லி-விவியன் தொடர்பை இல்லாமல் செய்வதற்­காக விவியனை வீட்டில் அடைத்து வைத்ததால் லெஸ்லி, விவியனின் தந்தை குணத்தி­ல­க்கவுக்கு எதிராக ஆட்கொ­ணர்வு மனு வழக்கொன்றை தொடர்ந்திரு­ந்தார். அன்று லெஸ்லிக்கு ஆதரவாக வழக்காடியவர், பின்னாளில் ஜனாதி­பதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவே. இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் வைத்து விவியனின் தந்தை ”எனது மகள் காதலிக்கும் நபர் தேச விரோதக் கட்சியின் உறுப்பினர். ல.ச.ச.க. ஒரு தேச விரோதக் கட்சி எனப் பேசப்படும் கட்சியாகும். அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்தால் எனது மகளும் தேச விரோத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என்றார்.

அதற்கு விவியன் அளித்த பதிலோ ”அவர் கூறும் தேச விரோதக் கட்சியில் இரகசியமாக நானும் அங்கம் வகித்து வருகிறேன். எனவே ஒரு தேச விரோதக் கட்சியொன்றின் உறுப்பினருக்குக் கிடைக்கக் கூடிய அதே தண்டனையை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே!” என்றார்.

இவ்வழக்கின் இறுதியில் விவியனின் தந்தையை நீதிமன்றம் கண்டித்ததுடன். லெஸ்லி-விவியனின் இணைவை அங்கீகரித்தது.

விவியன்-தந்தை உறவு அத்துடன் முறிவ டைந்தது. விவியனின் தனிப்பட்ட வாழ்க்கையும், தனிப்பட்ட இயல்பும் புரட்சிகரமானவை.

1950இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக­வும், 1956 தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 1964ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு வரையான காலத்துக்குள் உள்ளூரா­ட்சி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சராகப் பதவி வகித்தார். இலங்கை­யின் அரசிய­லில் முதற் பெண் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் விவியனே. 1970ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1977ம் ஆண்டு தேர்தலில் இரத்மலான தொகுதியில் போட்டி யிட்ட போதும் லலித் அத்துலத் முதலியினால் தோற்கடிக்கப்­பட்டார். அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியி­டவில்லை.

1956ம் ஆண்டு மொழிப்பிரச்சினை­யின் போது தமிழ் மொழிக்கும், சிங்களத்துக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனப் போராடிய போது சிங்கள இனவாதிகளால் 'யாழ்தேவி', எனப் பட்டப்பெயர் சூட்டப்பட் டார். அதுபோல '1953ம் ஆண்டு ஹர்த்தால்' போராட்டத்தின் போது தீவிரமாக மக்களை அணிதிரட்டிப் போராடினார். அமெரிக்க தூதராலயத்தின்முன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய போது விவியன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்ப ட்டார். இறுதி வரையும் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடி வந்தவர் விவியன்.

தன் மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் ஐ.தே.க.வினரால் மேற்கொள்­ளப்பட்ட சண்டித்தனங்களை விவியன் தலைமை கொடுத்து முறியடித்த சம்பவங்கள் ஏராளம்.

அன்று ல.ச.ச.கவின் அனுசரணையு­டன் வெளியிடப்­பட்ட 'ஜனதின' பத்திரிகையிலும் தொடர்ந்து சில வருடங்கள் பணியாற்றியிருந்தார்.

அன்றைய காலனித்துவத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நவகாலனித்துவத்­திற்கெதிராகவும் போராடி வந்த விவியன், நிறைவேற்று ஜனாதிபதி முறை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றிற்கெதிராகவும் பிற்காலங்களில் குரலெழுப்பினார். பெண்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளைக் கண்டித்து நடத்தப்­படும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங் களில் விவியனைக் காணலாம்.

பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அறுபதாயிர த்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ”அன்னையர் முன்னணி”யுடன் இணைந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் விவியனின் காரசார­மான உரையைக் கேட்பதற்காகவே பலர் கூடுவர். வயதானாலும் குரலும், அதன் பின்னால் இருக்கும் கருத்தும் உறுதி குலையாது இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் விவியன் ஆற்றிய சேவையை இலகுவில் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எவையுமே பெண்களின் உரிமைக்காக காத்திர­மான பங்களிப்பை இதுவரை செய்யாத­தானது, பெண்களின் பங்களிப்பி லும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மரபு இடதுசாரி அமைப்புகளின் கடைசிக்­காலமான இந்தக் கட்டத்தில் இறுதி­யான புரட்சிக்காரியை இழந்து விட்டோம்.

ஹிட்லரின் சிறையில் தூக்குக்கு அனுப்பப் பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஜலியஸ் பூஷிக் சொன்னதைப் போல ”எமது போராட்டத்தின் சகல நிகழ்வுகளும் பதிவு பெறுவது அவசியம். போராட்டத்தை முன்னெடுக் கும் அடுத்த சந்ததிக்கு அது அவசிய மானது.” என்பது போல விவியனின் வாழ்க்கையும் பதிவு பெறல் அவசியமானது.

(சரிநிகர்-96.ஒக்)

AddThis Social Bookmark Button


பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்:
சில கேள்விகள்....



என்.சரவணன்

''பொ.ஐ.மு. ஆட்சியலமர்வதற்கு பெண்களின் பங்களிப்பு காத்திரமா­னது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு முக்கிய பதவிக­ளையும் பெண்களே வகிக்கின்றார்கள். உலகி­லேயே இலங்கையில் மட்டுமே இப்படியான ஒரு நிலையுள்ளது...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 50 வருடங்களாகப் போகின்ற இந்தத் தருணத்தில் பாராளுமன்றத்தில் பெண்க­­ளின் பிரதிநிதித்துவம் 5.3 வீதமாகவே உள்ளது. எமது நாட்டின் பெண்களுக்கு உள்ள குடும்பப் பொறுப்­புக்கள் காரணமாக இது அதிகரிக்காம­லிருந்தாலும் குறைந்த பட்சம் 25 வீதமாவது பாராளுமன்றத்தில் பிரதிநி­தித்துவம் வகிக்கமுடியுமாயிருந்தால் நல்லது.

கடந்த 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத்திட்ட - மகளிர் விவகாரத் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான - விவாதத்தின் போது மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்னாயக்க ஆற்றிய உரையிலேயே மேற்படி தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தியிடல்

இவ்வுரையானது அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியானது. சிங்களப் பத்ரிகைகளில், திவய்ன, லங்காதீப ஆகியவற்றில் வெளியான பாராளுமன்ற உரைகளில் ஏனைய ஆண் உறுப்பினர்களின் உரைகள் வெளியாகின. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் கூட வேறு விடயங்கள் குறித்த அம்சங்கள் வெளியாகினவே ஒழிய இவ்விடயம் குறித்தவை வெளியாகியிருக்கவில்லை. தினமின (அரச கட்டுப்பாட்டுக்குள்ளிருப்பது) மாத்திரம் இதனைப் பிரசுரித்திருந்தது. அதற்குக் காரணம் சொல்லப்பட்ட விடயம் பற்றியதற்காக அல்ல. சொல்லிய நபர் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் என்பதற்காகவே.

தமிழ்ப் பத்திரிகைகளிலோ இது குறித்த உரை எங்கும் வெளியாகியிருக்கவில்லை. அதற்கடுத்த நாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.

ஆணாதிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்துமே இச்செய்தியின் முக்கியத்துவத்தை உணராததில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்திதான் என்ற போதும் கூறப்பட்ட விடயம் குறித்து அமைச்சரின் அதே வாதத்­தை அப்படியே ஏற்றுக்கொள்வது இன்னொரு பிரச்சினையாகும்.

காரணம் இந்த 25 வீதம் குறித்தது தான். இந்தக் கோhpக்கையானது ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைப் பொறுத்தளவில் எதிர்ப்புகளின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சனத்தொகையில் சாpபாதி (அதைவிடவும் கூட) பெண்கள் உள்ள நிலையில் அதே அளவு வீதாசாரத்தைக் கூடக் கோரப்படாததானது ஆணாதிக்கத்துக்கு வெற்றியேயன்றி வேறென்ன?

என்ற போதும் 25 வீதக்கோரிக்கை குறித்து கூட, இது வரை அரச தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை. அது குறித்து பரிசீலிப்பதாகவே கூறியிருக்கிறது. அக்கோரிக்கையை அதிகாரத்தரப்பு ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ஆச்சரியப்படுவ­தற்கில்லை என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோhpக்கை அதிகாரத் தரப்பிலிருந்து, அதுவும் மகளிர் விவகார அமைச்சரிடமிருந்து வெளிவந்துள்ளமை எல்லோரையும் கூர்ந்து கவனிக்கச் செய்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இக் கோரிக்கையின் அற்பத்தனத்தை அடையாளம் காண எத்தனை பேரின் ஆதிக்க கருத்தியல் இடம் கொடுக்கும்?

அமைச்சர் ஹேமா, சரிபாதி ஜனத்தொகையைக் கொண்ட பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை மட்­டுமே கோருவது மட்டுமல்லாமல் குடும்ப அமைப்புக்குள் பெண்­க­ளுக்குள்ள மரபான பொறுப்புக்களை மறைமுகமாக நியாயப்படுத்துவதையும் கண்டு கொள்ளாமலிருக்க இயலு­மா? அவர் சார்ந்த அதிகாரத்துவம் மிக்க கட்சியினதும், அரசாங்கத்தினதும், அரசினதும் கூடிய பட்ச எல்லை இவ்வளவாகத்தான் இருக்க முடியும்.

அற்பக் கோரிக்கை?

அண்மையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பெண்க­ளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ”in creasing political participation of women through a reservation system” எனும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கி­யிருக்கிறார்கள். அதன்படி அரசாங்க மட்டங்களில், பெண்க­ளுக்கு மூன்றில் ஒரு வீத பிரதிதித்துவக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். 15 வருடங்களுக்கு இது செல்லு படியாக வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இக்கோhpக்கையை முன்கொண்டு செல்ல அணிதிரண்டு வருவதாகத் தொpகிறது. WERC யின் தலைவி செல்வி திருச்சந்திரன் இது குறித்து எமக்கு தெரிவிக்கையில், ”இது குறித்து அரசியற் கட்சிகளு­டன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியாக லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, த.வி.கூட்டணி, ஐ.தே.க. என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கி­ன்றோம். அவர்களைப் பொறுத்தளவில் இக்கோரிக்கையில் எதுவித ஆட்சேபமுமில்லை.” என்றார். அற்பக் கோரிக்கை­க்கு ஆட்சேபமென்ன இருக்க முடியும். (பிரதான கட்சிகளும் கூட இக்கோரிக்கையை அங்கீகரித்துள்ளன என்றால் அதன் அர்த்தம் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ள இதனை உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்ற கற்பனையினா­லேயொழிய, இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து விட்டார்கள் என்றோ தமது ஆணாதிக்க நிலைப்பாட்­டிலிருந்து மீண்டு விட்டார்கள் என்பதாலோ அல்ல) என்ற போதும் இக்கோரிக்கையும் கூட போதுமான கோரிக்கையாக இருக்க முடியாது.

இக்கோரிக்கை இலங்கையில் எழுவதற்கு பின்புலமாக இருந்தது, இந்தியாவிலும் மூன்றில் ஒரு வீத பெண் பிரதிநிதித்துவ கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதே. இக்கோரிக்கையின் பரப்பு, அது தரப்போகும் நீண்டகால பிரதிபலன், அதன் போதுமான தன்மை குறித்து எந்த வித பரிசீலனையும் இன்றி அதே கோரிக்கையை இலங்கையிலும் பிரதிபண்ணுவதாகவே தெரிகிறது. சரியான புரட்சிகர மாற்று சக்தியேதுமில்லாத நிலையில் பெண்களின் கோரிக்கை­யினை முன்கொண்டு செல்ல பெண்களுக்கென்று கட்சியொன்று இல்லாததன் குறை இங்கு தான் தெரிகிறது.

”25வீதம்”, ”மூன்றில் ஒரு வீதம்” போன்ற கோரிக்கைகள் முன்வைப்பதன் மூலம் உண்மையில் முன் வைக்கப்பட வேண்டிய கோரிக்கையை அற்பத்தனமான கோரிக்கை­யாக்கி, சிறு தேவையாக குறுக்கி விடும் ஒன்றாகவே இதனைக் காண முடிகிறது. இது வரை அரசு சார்பற்ற நிறுவனங்கள் சகல துறைகளிலும் செய்து வருவதும் இதனைத் தான். பிரதான அரசியல் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற போதெல்லாம் அதற்கு வலிந்து போய் தலையிட்டு, தலைமைகொடுத்து சிறு கோரிக்கையாக குறுக்கி விடும் போக்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே உரியன. அப்படியான ஒரு போக்காகவே இதனையும் காண முடியும். இவ்வமைப்புகள் அவ்வாறான கோரிக்கைகளில் கூட உறுதியாக தொடர்ச்சியாக நிற்கும் என்றோ, மிகவும் துடிப்புடன் போராடும் என்றோ நம்பிக்கை வைக்க முடியாது.

இவ்வமைப்பு ”மூன்றில் ஒரு வீத கோhpக்கை”யை எழுப்­பியது ஒரு புறமிருக்க அக்கோரிக்கை 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும்படி செய்யவேண்டும் என்று கூறியிருப்ப­தானது, மேலும் அதன் தூரநோக்கற்ற, துரோகத்தனமான கோரிக்கையையே வெளிப்படுத்துகிறது.

ஏன் தேவை?

-சனத்தொகையில் சாpபாதியையுடைய பெண்களுக்கு அதே அளவிலல்லவா பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகம் கூட விகிதாசாரத்தை மறுக்­காதே. இது சமூகத்திலுள்ள சிறுபான்மையோர் சம்பந்தமான பிரச்சனையல்லவே, சம விகிதாசாரத்தையுடையவர்கள் அதிகார­மற்றிருப்பது, மறறும் இன்னொரு தரப்பால் அடக்கு­முறைக்குள்ளாகிக் கொண்டிருப்பது பற்றிய பிரச்சினை. சிறுபான்மையினர் விடயத்தில் கூட கொள்கையளவில் இவ்விகிதாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடிந்த அதிகாரத் தரப்புக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த விகிதாசா­ரத்தைக் கடைப்பிடிக்க முடியாது?

-தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 35 வீதம் இளைஞர்களை (16க்கும் 35க்கும் இடையில்) உட்படுத்துவது குறித்த விதி பிரேமதாச காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இளைஞர்கள் சம்பந்தமான ஜனாதி­பதி ஆணைக்குழுவின் சிபாரிசாகவே இது அறிமுகப்ப­டுத்தப்பட்டது. அவ்வாணைக்குழு ”இளைஞன்”களை மட்டுமே கருத்திற் கொண்டு இப் பிரேரணைகளை முன் வைத்திருந்தது. ஜனத்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை மட்டுமேயுடைய தரப்பினருக்கு இவ்வாறான பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்க முடியுமானால் பெண்களுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சினைதான் என்ன? மேலும் மேற்படி இளைஞர் ஒதுக்கீட்டினை ”இளம்” பெண்கள் அனுபவிக்க முடியாமலிக்கும் போக்கையும் அவதானிக்க வேண்டும்.

-உண்மையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதாயின் இக்கோhpக்கை போதுமானதாக இருக்க முடியாது. சமூகத்தில் எப்போதும் குறை விருத்தியையுடைய (குறை விருத்திக்குள்ளாக்கப்­பட்ட) தரப்பினரை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதாயிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். உதாரணத்திற்கு அவர்களின் உண்மையான வீதாசாரம் 50 வீதமாக இருக்கிறதென்றால் (குறிப்பிட்ட பத்தாண்டோ பதினைந்தாண்டோ விசேட திட்டத்தின் மூலம்) அதனை விட மேலதிகமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் முலமே உயர்த்தலாம். இதனை அரசியல் கோரிக்கையாக முன்வைப்பதாயிருந்தால் இதனடிப்படையலேயே அமைய வேண்டும். அதை விட்டு 15 ஆண்டுக்கு மூன்றில் ஒரு வீதத்தைக் கோருவதோ, எந்த விதமான பாPசிலிப்புமின்றி இன்னொரு நாட்டை பிரதிபண்ணுவதோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த அரசியற் கோர்க்கையை சொற்ப கோரிக்கையாக எழுப்புவதோ அக்கோரிக்கையை செயலிழக்கவே செய்யும்.

-இலங்கையில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 5வீதத்தைக் கூடத் தாண்டவில்லை. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலும் ”மகளிர் அமைச்சு ” தவிர்ந்த வேறு அமைச்சுகள் அவ்வளவாக வழங்கப்பட்டதில்லை. பெண்க­ளு­க்கு அமைச்சுக்கள் வழங்கப்படுவது கூட 9 வீதத்தை இது வரை தாண்டவில்லை. சமூக அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கும் அரசியல் ரீதியில் அவற்றில் தலையீடு செய்வதற்கும் பெண்களுக்கு உள்ள உரிமை இதுவரை காலம் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்துவந்த வேளைகளில் அதனை எதிர்க்க பாராளுமன்றத்தில் பலமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20, 21 ஆகிய திகதிகளில் ”கருக்கலைப்பு” தொடர்பான சட்ட திருத்தங்கள் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது ஆண் பிரதிநிதிகள் முன் வைத்த கருத்துக்களும் அதன் மோசமான முடிவுகளும்.

உருப்படியான புரட்சிகர சமூக மாற்றம் இடம்பெறாத சூழ்நிலையில் இக்கோரிக்கையும் கூட பூர்ஷ்வா கோரிக்கையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டளவிளான வளர்ச்சிக்கு இது இட்டுச் செல்ல உதவும்.

நிச்சயமாக ஆரம்பத்தில் இது உடனடி பிரதிபலனைத் தராது.
சில புரிதல்...

-ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வது மிகவும் குறைவே.

-பெண்கள் கூட பெண்களுக்குத் தான் அல்லது பெண்களது தேவைகள் குறித்து அக்கறைப்படுபவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் கூறிவிட முடியாது.

-ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அதன்படி வேட்பாளர் பட்டியலில் பெண்களையும் சேர்த்து தேர்தலில் போட்டியிடச் செய்தாலும் பெண்கள் அதே அளவு வீதாசாரத்தில் தெரிவு செய்யப்படப் போவதுமில்லை. அதே அளவு தெரிவு செய்யப்­படுவதாகக் கொண்டாலும் நிர்வாகத்துறையில் (அமைச்சர­வையில்) அதே விதாசாரம் கிடைக்கப் போவதுமில்லை. அப்படிக் கிடைத்தாலும் பெண்களின் நலன்களுக்கு சார்பாகத் தான் இருப்பார்கள் என்றோ கற்பனை செய்யத் தேவையில்லை.

-மேட்டுக்குடிப் பெண்களே (ஓரளவு குடும்பச் சுமையிலி­ருந்து விடுபட்ட, பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியி­ருக்காத, வர்க்க, சாதிய,மத, இனத்துவ செல்வாக்கு போன்ற ஆதிக்க பண்புகளைக் கொண்ட, பெண்களே) அரசியல் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உண்டு.

ஆனாலும் நிச்சயமாக இது பெண்களுக்கு அரசியல் பயிற்சியை வழங்கும். அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும். அரசியல் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். இவை பெண்கள் சம வாய்ப்புகளை அடைய முன்நிபந்த­னையாக அமையும். பெண்களை தமது சந்தர்ப்பவாதத்­துக்காக கையாண்டு வரும் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபடவும் இப் பயிற்சி கணிசமான அளவு உதவும்.

முதலாளித்துவ தேர்தல் முறையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு பல சமூகத் தடைகள் உள்ளன. இன்றைய நிலையில் பெண்களுக்கு மரபான ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறை சுமத்தியுள்ள பொறுப்புகள், வன்­முறை மிகுந்த சூழல், பெண்களின் பகிரங்க சமூக நடவடிக்­கைகளை ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டிருக்கும் சந்தேகப் பார்வை, ஒழுக்க மீறலாக அதனைக் கருதும் போக்கு, கலாசார பண்பாட்டு ஐதீகங்கள், போன்றன தடையாகத் தான் இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட நிச்சயம் இக்கோரிக்கைகள் கூட போதுமானதாக இருக்க முடியாது. புரட்சிகர சமூக மாற்றத்தின் மூலமே இதனை வென்றெடுக்க முடியும்.

எவ்வாறாயினும் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதில் ஈடுபடும் எந்த சக்தியும் வரும் கேள்விகளை கவனத்திற் கொள்வது முக்கியம்.
சில கேள்விகள்...

-சகல தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சமனாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா? உண்டாயின் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வாக்களிப்பு வீதம் எத்தனை?

-அரசியற் கட்சிகளின் உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்தினர் பெண்கள்? அரசியற் பணிகளில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது? அத்தகைய பெண்களின் பங்க­ளிப்பை அதிகரிக்கச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கை­களை மேற்கொள்கின்றனவா? அந் நடவடிக்கைகளின் தன்மை எத்தகையன?

-தேர்தல்களின் போது பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் என்ன? வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது தானா? பெண்களின் கோரிக்கைகளை பெண்கள் எவ்வளவு தூரம் முன் வைக்கிறார்கள்? பெண்களின் வாக்களிப்பு வீதாசாரம் என்ன? பெண்களை வெற்றிபெறச் செய்வதில் பெண் வாக்கா­ளர்களின் பங்களிப்பு என்ன? ஆண்களோடு ஒப்பிடுகையில் எத்தனை வீத பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? நிர்வாகத்துறைக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் வீதாசாரம் என்ன?

-பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கான தடைகள் எவை? அத்தடைகளை ஏற்படுத்துவதில் சமூக ஐதீகங்களுக்கும், குடும்பச் சுமைகளுக்கும், அரசியற் சக்திகளுக்கும், அரசியற், பொருளாதார சூழலுக்கும், உள்ள பாத்திரம் எவை?

-இவற்றை தாண்டிவர பெண்களுக்குள்ள தெரிவு என்ன?

மேற்படி கேள்விகளுக்கான விடைகளானது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்புக்கு முன்னர் விடை காண வேண்டிய முன்நிபந்தனையான கேள்விகளாகும்.

மற்றும்படி அரசினதும் (அமைச்சாpன­தும்) அரசு சாரா நிறுவனங்களினதும் திடீர் கரிசனைகளைக் கண்டு மலைக்கவோ நம்பிக்கை கொள்ளவோ தேவையில்லை.

(1998 ஜனவரி 18 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


Design by Amanda @ Blogger Buster