Wednesday, January 28, 2009

அரச சார்பற்ற
பெண்கள் அமைப்புகள் குறித்து....


என்.சரவணன், சூரியகுமாரி, தேவகெளரிசரிநிகர் இதழ் 182 இல் நாங்கள் எழுதியிருந்த கட்டு­ரையில் பெண்கள் அமைப்புகள் ஓருபாலுறவு உரிமை குறித்த விடயங்களில் அக்கறை காட்டத் தயங்குகின்றன என்று குறிப்பிட்டு எழுதியதை மறுத்து சென்ற இதழில் செல்வி திருச்சந்திரன் அவர்கள் எழுதிருந்தார்.

செல்வி அவர்கள் இவ் விட­யத்தில் பொறுப்­புடன் கருத்துக்­களை முன்வைத்தமை வரவேற்­கப்பட­­ வேண்டியது. அதை நாம் கௌர­விக்­கி­றோம். இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பும் எமக்கு உண்டு.

”கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியலாமா” என அவர் எங்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கு, எதனை நோக்கி எறிகிறோம் என்பதைத் தெரிந்து தான் அதனை எறிந்தோம் என்­பதை நாம் தெரிவித்தாக வேண்­டும். அவர் குறிப்பிட்ட லெஸ்­பியன் மாநாடு குறித்து 'ஐலன்ட்' பத்திரிகையில் வெளிவந்த மோசமான கட்டுரையை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் விடுத்த அறிக்கை எமக்குத் தெரிந்தே இருந்தது. (அதனைத் தம்மிட­மிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று செல்வி கூறியிருந்தார்.) ஆனால் அந்த அறிக்கையை வைத்துக் கொண்டு பெண்கள் அமைப்புகளெல்லாம் தொடர்ச்­சியாக இவ்வுரிமை குறித்து கரிசனையுடன் இருப்பதாக முடிவுக்கு வர எம்மால் முடிய­வில்லை. பெண்கள் அமைப்பு­களின் கடமை இந்த அறிக்கை விடுவதுடன் முடிந்து போவ­தில்லை என்பதும், இவ்­வாறான பெரும்பாலான சந்தர்ப்­பங்களில் இப்­பெண்கள் அமைப்பு­கள் காத்த மௌனங்­­க­ளுமே எமது நிலைப்­பாட்டுக்கு வலு சேர்க்கின்றன.

ஒரு மாற்றுப் பத்திரிகை என்கிற அளவில் சரிநிகரில் 'ஒருபாலுறவு என்பது சம்பந்தப்பட்டவர்களின் ஜனநாயகத் தெரிவு' என்கின்ற நிலைப்பாட்டுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்­போக்கோடு சமரசம் செய்து கொண்டு போனால் தான் முதலா­ளித்துவ சந்தையில் இருப்பைப் பேணலாம் என்கிற நிலையை­யுடைய ஊடகங்கள் குறித்து எமக்குப் புரிதலுண்டு. செல்வி அவர்கள் கூறுவது போலவே அப்பத்திரி­கை­கள் ஏனைய வெகு­ஜன இயக்கங்­களின் அறிக்கை­களைக் கூடப் பிரசுரிப்பதில்லை என்பதற்கும் எமக்கு தெளிவான விளக்கம் உண்டு. ஆனால் இவை பற்றிப் பேச வாய்ப்பு இருக்கின்ற இடங்களைக் கூட செல்வி அவார்கள் இதுவரை பயன்­படுத்தியதாக எமக்குத் தெரியவில்லை.

சரிநிகர் இவ்விடயம் தொடர்பாக கொண்டுள்ள கவனத்­தையும் அது தொடர்பாக அது வெளியிட்டு வரும் கட்டுரை­களையும் தெரிந்து கொண்டும் சரிநிகரைச் சேர்ந்த 'சரவணன் ஏன் இதுவரை இது பற்றி எதுவும் எழுதவில்லை' என்று செல்வி அவர்கள் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை. அது வெறும் விதண்டாவாதத்துக்கான கேள்வியாக மட்டுமே இருக்க முடியும். மறுபுறத்தில் ”தேவ­கெளரி, சூரியகுமாரி ஆகியோர் தங்கள் நிறுவனங்களுக்கள் இருந்து கொண்டு கூட ஏன் இவற்றுக்காக குரல்கொடுக்க முடியவில்லை” என்று கேட்பதிலும் நியாய­மில்லை. ஏனென்றால் இதற்கான பதில் செல்விக்கு தொpயாமலிருக்க வாய்ப்பில்லை. ரூபவாஹினியின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் செல்வியால் அதில் இவ்விடயம் தொடர்பாக ஏதாவது செய்ய முடிந்திருக்கிறதா? ஏன் அவரது நிறுவனமான பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் சஞ்சிகையில் கூட இவை குறித்து ஏதாவது விடயம் வெளிவந்துள்­ளதா? இன்னும் பெண்கள் அமைப்புக்களின் வெளியீடுகளான பெண்(சூர்யாஅபிவிருத்தி நிறுவனம்), பெண்ணின் குரல் (பெண்ணின் குரல் அமைப்பு ) என்பவற்றில் கூட இவை தொடர்பான கட்டுரைகள் எவற்றையும் காணக்கிடைக்கவில்லையே ஏன்? தேவகெளாரி சரியகுமாரிக்கு பொருந்துவது செல்விக்கும் பொருந்தத் தானே வேண்டும். அப்படியென்றால் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறி­வதில் தான் எங்களுக்குச் சற்றும் சளைத்த­வரில்லை என்பதை செல்வி ஒப்புக் கொள்கிறாரா?

ஒருபாலுறவு உரிமை குறித்து வெறும் பெண்ணிய இயக்கங்கள் தான் பேச வேண்டுமென்று இல்லை. ஜனநாயகத்துக்கு குரல்­கொடுக்கும் அனைத்து தரப்பினர­தும் பொறுப்பு அது. ஆனால் லெஸ்பியன்களின் உரிமை என்ற விடயத்தில் பெண்கள் இயக்கங்­களுக்கு அதிக பொறுப்பு உண்டென நாங்கள் நம்புகிறோம். நாங்கள் தனி நபர்கள் என்கிற வகையில் எம்மிடம் எதிர்பார்ப்­பதைவிட செல்வி போன்ற பெண்ணிய உரிமைகளுக்கான நிறுவனங்களை கொண்டிருப்ப­வர்களிடம் சமூகம் அதிகமாக எதிர்­பார்ப்பது தவிர்க்க முடியா­ததே. அவ்வாறான நிலையி­லிருந்தே பெண்கள் அமைப்பு­களின் தயக்­கங்கள் குறித்தும் குறிப்பிட நேரிட்டிருந்தது.

இலங்கையில் எந்தப் பெண்கள் அமைப்புக்கும் ஒரு உறுதியான பெண்ணிய வேலைத்திட்டம் இருந்தது கிடையாது என்பதை தயக்கமின்றிக் கூறலாம். பெண்கள் அமைப்புகளுக்கு, ஏன், பூர்ஷ்வா அரசியற் கட்சிகள் போலவே எந்தவொரு இடதுசாரி இயக்கங்­களுக்கும் கூட ஒரு தனித்துவமான பெண்ணிய வேலைத் திட்டம் இருந்தது கிடையாது. அவ்­வப்போது அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான நிகழ்ச்சி நிரல்கள் மட்டும் தான் இருந்திருக்­கின்றன. இலங்கையில் 35,000 என்.­ஜீ.ஓ.க்கள் இருப்பதாக அண்மை­யில் வெளியான ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இவற்றில் கணிசமானவை பெண்கள் அமைப்­புகள் என்பதும் உண்மை. பெரும­ள­வில் இவ்வமைப்புகளின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பது அமைப்­புகளின் நீண்டகால இலக்குகளின் மீதிருந்து இல்லை. பெரும்பாலும் நிதி­ வழங்கும் நிறுவனங்களின் ”இவற்றுக்குத் தான் நிதி வழங்கு­வோம்” என்கிற நிபந்தனை­களுக்­கேற்றாற் போன்ற நிகழ்ச்சி நிரல்களை தயாரிப்பதும், தகவமைப்பதும் தான் நடந்து வருகின்றது.

இலங்கையில் உள்ள சமூக உருவாக்கங்களை விளங்கிக் கொள்ளல், வர்க்க சக்திகள், ஆதிக்க-அடக்குமுறைக் குழுமங்­களை விளங்கிக் கொள்ளல் இந்தக் குழுமங்கள் மொத்தத்தில் பெண்­களின் மீது செலுத்துகின்ற அதிகா­ரத்துவ பாத்திரம், முரண்­பாடுகளின் தன்மை, அவற்றின் படிநிலை­யொழுங்கு, அவை ஒன்றிலொன்று ஏற்படுத்தி­யிருக்கின்ற உறவு, அதன் அடிப்படையில் நேச -பகைமை சக்திகளின் அணிபிரிகையை அடையாளம் காணல், இதற்கான மூலோபாயம் தந்திரோ­பாயங்­களை வகுத்தல் என்பனவற்­றிலிருந்து இச்சூழலுக்­கேற்ப பெண்ணியத் திட்டத்தை வரை­யறை செய்து­கொள்வது வரை தொடரப்பட வேண்டிய பாhpய தேவைகளை கோரி நிற்கும் பெண்ணிய வேலைத்திட்டம் பற்றி இந்த அமைப்புக்கள் எதுவும் தீவிரமாக சிந்திப்பதாகத் தெரிய­வில்லை. பதிலாக மேம்போக்கான தன்னியல்பான, எதனைச் செய்ய வேண்டுமோ அதுவல்லாமல், எதனை நோகாமல் செய்ய முடியுமோ அதனைச் செய்வது, (இலங்கையில் பெண்ணிய இயக்கங்களுக்கு மாத்திரமல்ல பல்வேறு இயக்கங்களுக்கும் பொதுவானது) என்கிற போக்கே இங்கு நிலவுகிறது.

இது தான் நாம் எழுதிய கட்டுரையில் பெண்கள் அமைப்­புகள் தொடர்பாக எழுதிய குறிப்பின் சாரம்.


AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster