Thursday, January 29, 2009

ஒரு பாலுறவு:
அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு....




என்.சரவணன்

இன்று ”ஒருபாலுறவு” குறித்து சூடான விவாதம் நடந்து வருகின்றது. இது குறித்து ”சிரச” தொலைக்காட்சி சேவை, மற்றும் யுக்திய, ராவய, மாதொட்ட, பாராதீச போன்ற மாற்று பத்திரிகை, சஞ்சிகைகளிலும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்தளவுக்கு தமிழில் இது குறித்த விவாதம் இடம்பெறாதது ஒரு வகையில் துரதிருஷ்டவசமான ஒன்று.

இந்த விவாதத்துக்கு ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது என்றால், அமைச்சர் மங்கள சமரவீர தனது கிரெடிட் கார்ட்டைப் பாவித்து இன்டர்நெட்டுக்கூடாக பாலியல் படங்களைப் பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் ஐ.தே.க. வினரால் சுமத்தப்பட்டு பின்னர் அவர் மீதும் பொதுவாகவும் ”ஒருபாலுறவு”க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறி மாறி காறி உமிழும் விவாதமாக அன்று பாராளுமன்றத்தில் இந்த சச்சரவு நிகழ்ந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்தே இந்த விவாதம் கட்சி அரசியலுக்கு அப்பால் தொடர்புசாதனங்களில் நடத்தப்பட்டது.

இன்றைய மைய நீரோட்டத்தில் பெரும்போக்காகவே ஒரு பாலுறவுக்கு விரோதமான கருத்துக்கள் ஆழமாக வேறூன்றியுள்ளன. இதற்கு எமது சமூக அமைப்பின் பண்பாடு, மதம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற ஆதிக்க மரபுவழிக் காரணிகளின் செல்வாக்கின் வழியாக வந்த ஐதீகங்கள் காரணமாக உள்ளன. எனவே இந்தக் கருத்தியலை முறியடிப்பது என்பதற்கு முன்நிபந்தனையாகவே மேற்படி காரணிகளை தகர்ப்பது என்பது அமைகிறது. ஒரு பாலுறவு நடைமுறையில் வழக்கிலுள்ள ஒன்றென்பதையும், அது குறித்து அவமானப்படுத்த, வெட்கங்கொள்ள, அசிங்கம் கொள்ள எந்தவித விஞ்ஞானபூர்வ காரணங்களும் இல்லையென்பதையும் ஒப்புக்கொள்ளத் தடையாக இந்த ஐதீகங்களே இருக்கின்றன.

ஒரு பாலுறவு என்பது திடீரென்று வானத்தில் இருந்து குதித்த அபூர்வமான ஒன்றல்ல அது ஏலவே எமது கலாசாரத்தில் நீண்ட காலம் புழக்கத்திலுள்ள ஒன்று. நிலவி வந்த ஐதீகங்கள் காரணமாக அது வெளிப்படைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. அவ்வளவே. இன்று உலகமுழுவதும் ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்தினால் இன்று பகிரங்க உரிமை கோரி கருத்துகள் வெளியாகின்றன.

இன்று தன்னுடைய நண்பி தனது சக நண்பியை அல்லது நண்பன் தனது சக நண்பனைத் தழுவவோ, அல்லது கைகோர்த்து நடக்கவோ, தோளில் கைபோடவோ, மடியில் சாயவோ அஞ்சுகின்ற நிலைக்கு இந்த ஐதீகங்கள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. இதன் விளைவுகளாக பாலியல் குறித்த எந்தவித கலந்துரையாடலுக்கோ, அல்லது அது குறித்த புரிதலை நாடவோ விடாதது வரை விளைவுகளாக்கியுள்ளது. அவ்வாறான பேச்சு ஒரு நடத்தைக் குறைவாகவும், ஒழுக்கக்கேடாகவுமே நோக்கப்படுகின்றது. சொந்த மனைவி பாலியல் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க தயக்கம் கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அது அவள் ஏற்கெனவே அனுபம் கொண்டவள் என்கின்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றுக்கு பாலியல் குறித்த திறந்த கலந்துரையாடல் எம் சமூகத்ததில் இல்லாததே காரணம். இதன் விளைவுகள் மோசமானவை என்பது கூறித்தெரிய வேண்டியவையல்ல.

1883 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவிதிகளிலேயே முதன் முதலில் ஒரு பாலுறவு தடை செய்யப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ சக்திகள் தமது ஆட்சியிலேயே அந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் இன்று அந்தச் சட்டத்தை பிரித்தானியாவில் நீக்கிவிட்டார்கள். இங்கு இன்னமும் அது நிலவுகிறது. இன்று ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றம். அது இயற்கைக்கு முரணானதாம். இலங்கை குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் பிரகாரம் இதற்கு 12 வருட சிறைத்தண்டனையும் கசையடியும் கொடுக்கப்படும்.

அண்மையில் நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மோசமான அவதூறுகள் காரணமாக அமைச்சர் மங்கள சமரவீர தான் ஒரு தன்னினச் சேர்க்கையாளன் தான் என்று ஆத்திரத்துடன் திருப்பித் திருப்பிக் கூறினார். இதைக் கூறியதும் அங்கிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மேற்படி சட்டத்தின் பிரகாரம் அவர் தண்டனைக்குரியவர் என்று தம் சந்தர்ப்பவாத அரசியலுக்கு சாதகமாக இதனை பாவித்தார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்த ஒரு விவரண நிகழ்ச்சி ஒன்றை ”சிரச” தொலைக்காட்சி செய்தது. அதில் பல புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள், தன்னினச்சேர்க்கை உரிமையாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என்போரின் பேட்டியும் இடம்பெற்றது. ”சிரச” கூறிய தகவலின்படி ராஜித்தவை இது குறித்து கருத்து தெரிவிக்க அழைத்திருந்தும் அதனை நிராகரித்து நழுவினார் என்று கூறுகின்றனர். ஆனால் ராஜித்த சேனாரத்ன பரவலாக எல்லா இடங்களிலும் ஒருபாலுறவு குறித்து கருத்து தெரிவித்து வந்தார்.

யுக்திய பத்திரிகைக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில்...

”..நான் ஒருபாலுறவை கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கென்று இருக்கின்ற நிறுவனங்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்மார் உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு அரச அனுசரணை கிடைக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதையும் (Sex Club) பாலியல் சமூகமாக ஆக்கப் பார்க்கின்றனர். 2500 வருடகால பாரம்பரிய கலாசாரமுடைய இந்த சிங்கள பௌத்த நாட்டை அழிக்கப் பார்க்கின்றனர். இதனைக் கேட்டுக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருப்பது என்னை ஆச்சரியமூட்டுகிறது. நான் கற்றிருக்கின்ற வைத்தியத்துறையைப் பொறுத்தவரை ஒருபாலுறவு என்பது மனநோயின் விளைவு. மனநோயாளர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். அவர்களை புனருத்தாரனம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அதனைப் பேண ஜனநாயக உரிமை வழங்குவதை நான் எதிர்க்கிறேன். எமது குடும்ப கட்டமைப்பை சீரழிக்கிற இயற்கைக்கு முரணான விடயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. பைத்தியக்காரத்தனமான சுதந்திரத்தை கதைத்துக்கொண்டு இதனை செய்ய முயல்வதை நான் இறுதி வரை எதிர்த்தே தீருவேன்.....”
என்றார். (யுக்திய செப்டம்பர் 06)

இவரின் இந்தக் கருத்தோடு சேர்த்து ஐ.தே.க. பிரமுகர் சீ.ஏ.சந்திரபிரேம, ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச, ந.ச.ச.கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பெண் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான அனோமா ராஜகருணாநாயக்க, மற்றும் தன்னினச் சேர்க்கை அமைப்பின் தலைவர் சேர்மன் டி ரோஸ் ஆகியோர் யுக்தியவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்ச குறிப்பிடுகையில்...

”பாலியல் ஒருவாpன் தனிப்பட்ட உரிமை. ராஜித்தவுக்கு இது குறித்து பேச எந்த அருகதையுமில்லை. இதனை ஒரு இழிவுக்கும் குற்றத்துக்குமுள்ளாக்கும் ராஜித்த ஐ.தே.க.வுக்குள் இருக்கின்ற ஒருபாலுறவினரை எவ்வாறு காண்கிறார்.... இன்று ஐ.தே.க.வும் பொ.ஐ.மு.வும் மாறி மாறி குறை சொல்ல ஒன்றும் மிச்சம் இல்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் ஒன்று தான். ஒரே கொள்கை, ஒரே நடைமுறை. எனவே தான் அரசியல் கொள்கைகளுக்காக சண்டை பிடிப்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுத்து இழிவுபடுத்தி அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்....”

விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்...

”...இன்று உலகம் முழுவதும் ஒரு பாலுறவை மானுட ரீதியில் அணுகி அங்கீகாரமளிக்கின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜித்தவிடம் ஒருபாலுறவு குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும் கூட அதனை ஏனைய சமூக, பொருளாதார காரணிகளுடன் நிறுவ முயலவில்லை. தனது இயலாமையை மூடி மறைக்க தனிப்பட்ட தாக்குதலைப் பிரயோகித்தமை குறித்து ராஜித்த வெட்கப்பட வேண்டும். இது ஐ.தே.க.வின் சீரழிவையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான கருத்துகள் அசட்டை செய்யக்கூடியதல்ல....”

பெண்ணியவாதி அனோமா ராஜகருணாநாயக்க கூறுகிறார்..

”....குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப்பட்ட தனித்துவமிக்க பாலியல் இறைமைகளை பலியாக்குவது என்பது துரதிருஷ்டவசமான ஒன்று. இப்படிப்பட்ட இழிவுபடுத்தல் எமது நாட்டில் நிலவுகிற வங்குரோத்துதனமிக்க அரசியல் போக்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஒருபாலுறவு என்பது ஏதோ திடீரென்று வானத்திலிருந்து குதித்த அபூர்வமான ஒன்று அல்ல....”

சீ.ஏ.சந்திரபிரேம இது குறித்து கருத்து தெரிவிக்கையில்...

”...பௌத்தத்தின்படி பாலியல் குற்றம் என்று இல்லை. கிறிஸ்தவ சமயத்தில் தான் அப்படிப்பட்ட விதிகள் இருக்கின்றன. பௌத்தத்தில் பிக்கு-பிக்குனிகளுக்கு மாத்திரம் சகல பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருந்த போதும் இந்த பிரச்சினையின் மூலம் எமது சமூகத்தில் பாலியல் கருத்தாக்கம் குறித்த விடயம் பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ளது. அது எதிர்கால சமூகத்துக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கது....”

சேர்மன் டி ரோஸ் கருத்து தெரிவிக்கையில்....

”....ஒருபாலுறவினர் என்கின்ற ரீதியில் நாங்கள் அமைப்பொன்றை உருவாக்கியதே அதற்குhpய உரிமையை ஏற்கச்செய்வதற்காகவே. அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் உரிமையை பலியாக்கியுள்ளனர். ஒருவருக்கு இந்த உரிமையை ஏற்காதிருக்க உரிமையுண்டு. ஆனால் நாகரிகமான ஜனநாயக முறையியல் என்று ஒன்று உண்டு. ஒருவர் ஒருபாலுறவு கொண்டதற்காக அவர் ஒருபாலுறவினர் என ஆகிவிடமாட்டார். அதற்கு பல காரணங்கள் உண்டு. இது தெரிவைப் பொறுத்தது. இலங்கையில் ஆயிரக்கணக்கான ஒருபாலுறவினர் உள்ளனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருபவர்கள். ராஜித்தவின் கருத்தானது அந்த ஆயிரக்கணக்கான அனைவருக்கும் எதிரான தாக்குதல். இந்த மோசமான கருத்து குறித்து மக்கள் முன்னிலையில் ராஜித்த பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....” என்றார்.

இப்படி இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போது ”மாதொட்ட”, மற்றும் ”பாராதீசய” (இப்பத்திரிகைகள் இரண்டும் மங்கள சமரவீரவின் அனுசரணையுடன் நடத்தப்படும் மாதாந்த சஞ்சிகைகள். இதன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முன்னைநாள் ஜே.வி.பி. இளைஞர்கள். இவை தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் மாற்று சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கவை. அரச சார்பற்றவை. பின்நவீனத்துவம், மாக்சீயம், பெண்ணியம், அமைப்பியல்வாதம், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்து வரும் முக்கிய இரு சஞ்சிகைகள். அது மட்டுமன்றி பாலியல் குறித்த விடயங்களை பகிரங்கமாக விவாதித்து வருகின்றவை.) பத்திரிகைகள் இது குறித்து நிறையப் பக்கங்களை ஒதுக்கி விவாதித்தது (ஒக்டோபர் இதழ்கள்). அச்சஞ்சிகைகள் ராஜித்தவை 12ஆம் நூற்றாண்டின் அரசியல்வாதியென்று கூறியிருப்பதுடன் அவரை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வரும்படி சவால் விடுத்துள்ளன.

ராஜித்தவோ சிரசவுக்கு பின்னர் அளித்த பேட்டியொன்றில் ”பாராதீசய” சஞ்சிகை ஒரு தூஷன பத்திரிகை என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் பாராதீச சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ”தூஷனம் என்றால் என்ன? கனவான்களே முடிந்தால் மோதுங்கள்!” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.

இந்த விவாதம் இவ்வாறு தொடர்ந்து செல்கின்றது. இது எவ்வாறிருந்த போதும் உண்மையிலேயே இது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வந்துள்ள இக்கருத்துப் பரிமாறலை உச்ச அளவு பயன்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று.

(சரிநிகர் இதழ் 157)

AddThis Social Bookmark Button


3 comments: to “

  • தமிழ்நதி
    10:41 AM  

    சரவணன், உங்களுடைய கட்டுரைகள் மிகவும் ஆக்கபூர்வமானதாக இருக்கின்றன. இதில் வியப்பு என்னவென்றால், இவ்வளவு விடயங்களை உள்ளடக்கிய ஒரு வலைப்பதிவு கவனம் பெறாமல் போயிருப்பதே.(பின்னுாட்டங்கள் இன்மையின் அடிப்படையில்) மேலோட்டமான வாசிப்புக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டதன் விளைவுகளில் இது ஒன்றெனக் கொள்ளலாமா? உங்கள் கட்டுரைகள் முழுவதனையும் படித்துவிடும் ஆர்வத்தில்... நன்றியுடன்....

  • அனைவருக்கும் அன்பு 
    11:20 PM  

    ஆணின் பார்வையில் ஆரோக்கியமான பெண்ணிய சிந்தனைகள் ஆச்சர்யத்தை தருகிறது

  • Geetha
    8:29 PM  

    வணக்கம்

    www.velunatchiyar.blogspot.com -thendral எனது வலைத்தளம்.

    வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழா 11.10.15 அன்று புதுக்கோட்டையில் நடக்க உள்ளது...விழாவில் வலைப்பதிவர்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டு நூல் வெளியிட உள்ளோம்...தாங்கள் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்...

    வர இயலாத சூழ்நிலையில் தங்களது வலைப்பக்கத்தை கையேட்டில் பதிவு செய்யவும்,தங்களது நண்பர்களின் வலைப்பக்கத்தைப் பதிவு செய்யவும் உதவி செய்யும் படி கேட்டுக்கொள்கின்றேன்..

    மேலும் விவரங்களுக்கு காணவும் www.bloggersmeet2015.blogspot.com.

    மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com.

    நன்றி ...

Design by Amanda @ Blogger Buster