Wednesday, January 28, 2009

"மனிதத்துவத்தைக் கொண்ட
சமத்துவமே எ
னது எதிர்பார்பு"என்.சரவணன்

ஐ.நாவின் மனித உரிமைகளுக்கானவிருது பெற்ற
மனித உரிமையாளரும் பெண்ணிலைவாதியுமான
சுனிலா அபேசேகர

கடந்த ஒக்டோபர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் விருது இலங்கையைச் சேர்ந்த சுனிலா அபேசேகரவுக்கு வழங்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்துக்கு 50 வருடங்கள் பூர்த்தியடைவதையொட்டி நடத்தப்பட்ட விசேட நிகழ்ச்சியொன்றில் வைத்து சுனிலா அபேசேகர கௌரவிக்கப்பட்டு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1948 டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் சாசனம் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின் 1953இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை இந்த விருது ஐவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் இவ்விருதைப் பெற்ற உலகப் பிரமுகர்களில் நெல்சன் மண்டேலா, எல்நோர் ரூஸ்வெல்ட், ஊதாண்ட், பிஷொப் அபெல் முரசோவா, மார்டின் லூதர் கிங் ஆகியோரும் அடங்குவர்.

சுனிலா அபேசேகர, அடிப்படையில் புரட்சிகர இயக்க செயற்பாட்டிலிருந்து இந்த இடத்தை வந்தடைந்தவர். புரட்சிகர அரசியல் செயற்பாட்டிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டபோதும் தொடர்ச்சியாக மனித உரிமைகள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மை பெண்ணியவாதிகளில் சுனிலா ஒருவர். இலங்கைப் பெண்ணியவாதியாக வெளிநாடுகளில் நன்றாக அறியப்பட்டவரும் கூட. 1990இல் ஆரம்பிக்கப்பட்ட இன்போர்ம் (inform) எனும் (இலங்கையின் நிலவரம் குறித்த மாதாந்த அறிக்கை வெளியிடும்) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். (மனித உரிமை மீறல்கள் குறித்து கண்காணிப்பு-அறிக்கையிடல் தேவையானவர்களுக்கு விபரங்களை கிடைக்கச் செய்தல் என செய்யப்படும் இந்நிறுவனத்தை இவரது தந்தையாரான மேர்ஜ் இயக்கத்தின் தலைவராக இருந்த சார்ள்ஸ் அபேசேகர நடத்தி வந்தார்.) பல மனித உரிமைகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களில் நிர்வாக உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.

1975இல் பெண்ணின் குரல் அமைப்புடன் சேர்ந்து செயற்படத் தொடங்கி பின்னர் ”பெண்ணின் குரல்” சஞ்சிகையையும் நடத்தி வந்தார். 1976இல் (1971 ஏப்ரல் புரட்சியின் பின் தலைமறைவு இயக்கமாக செயற்பட்டு வந்த) ஜே.வி.பி.யில் இணைந்தார். கொழும்பு கிழக்குக்கான அமைப்பாளர் மட்டத்தில் செயற்பட்டதுடன் ஜே.வி.பி.யின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ”Red Power” பத்திரிகைக் குழுவிலும் பணியாற்றி வந்தார். ஜே.வி.பி.யின் விடுதலை கீதம் (”விமுக்தி கீ”) எனும் கலைக்குழுவிலும் செயலாற்றியிருந்தார். சுனிலாவின் கலைப்பணி இத்தனை குறுகியது அல்ல. அவர் அதற்கு முன் 1968இல் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். விடுதலை கீதங்கள் கெசட் நாடாக்கள் மற்றும் திரைப்படங்கள் சிலவற்றில் பாடியுள்ளார்.

1979இல் ஜே.வி.பி.யுடன் இணைத்து மனித உரிமைகள் நிறுவனம் ஒன்றை ரெஜி சிறிவர்தன, இந்திக குணவர்தன (தற்போதைய அமைச்சர்) ஆகியோர் அமைத்த போது அதில் இணைந்து பணிபுரிந்தார்.

1980இல் கருத்து முரண்பாடுகள் காரணமாக ஜே.வி.பி.யில் இருந்து விலகி மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் குறித்த விடயங்களில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கினார். 1984இல் பெண்கள் தொடர்பூக நிறுவனம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இவ்வமைப்பு இன்று இலங்கையின் பல்வேறு பெண்கள் அமைப்புகளை ஒன்றிணைக்கும் வலைப் பின்னலின் மைய அமைப்பாகவும் இருந்து வருகிறது.

சர்வதேச மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் குறித்த மாநாடுகளில் இலங்கையிலிருந்து பெரும்பாலும் சுனிலா கலந்து கொள்வதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் விடுகின்ற அறிக்கைகளை மறுத்து மாற்று அறிக்கைகளை தயாரித்து அளிப்பவராக சுனிலா இருந்து வந்துள்ளார். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் சுனிலா பெண்ணிய, மனித உரிமைகள் பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகிறார்.

இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் இவரும் ஒருவர்.

நான்கு பிள்ளைகளுக்கு சுனிலா இன்று தனியொரு தாயாகவும் தந்தையாகவும் பிள்ளைகளை வளர்த்து வருபவர். இந்த நால்வரில் இருவர் வசி, சுனில் ஆகியோர் லீனா (முன்னாள் ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவு பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஒரு விபத்தில் இறந்து போனார்.)வின் பிள்ளைகள். இன்று அவ்விருவரும் சுனிலாவின் வளர்ப்பிலேயே வாழ்கின்றனர்.

46 வயதான சுனிலாவுக்கு 30 வருடகால செயற்பாட்டு அனுபவம் உண்டு. உலகில் சோஷலிசப் பெண்ணியவாதியொருவருக்கு கிடைத்த முதல் ஐ.நா.மனித உரிமை விருதென்றும் இதனைக் கூறலாம். மறுபுறம் இவரின் மனிதாபிமானப் பார்வையானது இவரது அரசியலையும் விழுங்கிவிட்டதென்றும் இன்று சுனிலா வெறும் ”மனிதாபிமானி” மாத்திரம் தான் என்கின்ற விமர்சனமும் பரவலாக கூறப்படுவதையும் கருத்திற் கொள்வோம். சுனிலாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.


தமிழ்ச் சூழலோடு உங்களுக்கு ஏற்பட்ட உறவையும், அதன் அரசியல் சூழலை நீங்கள் விளங்கிக் கொண்டதையும் கூறுங்களேன்?

1970களில் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியிலும் பாடநெறிகள் நடந்த காலத்தில் நான் யாழ் போய் வருவவேன். அப்போது அங்கு பல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். நித்தியானந்தன், நிர்மலா, சித்திரா போன்ற பலரின் நெருங்கிய நட்புக் கிடைத்தது. இந்த உறவின் காரணமாக யாழ்ப்பாணப் பிரயாணம் அதிகரித்தது. தர்மசேன பத்திராஜவுடன் பொன்மணி திரைப்படத்துக்கு பங்களித்தோம். எங்களுக்கு தமிழர் பண்பாடு, அவர்கள் எதிர்கொள்ளும் விசேட பிரச்சினைகள் என்பவற்றை உணரக் கிடைத்தது. அவர்களின் பல்வேறு நடைமுறைகளுடன் தொடர்புற கிடைத்தது. பிரச்சினைகள் வளர்ந்து கொண்டிருந்த போதும் எனது தொடர்பு இருந்து கொண்டே இருந்தது. நிர்மலா நித்தியானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது முதல் நாள் இரவு புறப்பட்டு சென்று காலையில் ஒரு முறை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் ஜெயிலரோடு சண்டை பிடித்து மாலையும் சந்தித்து விட்டு வருவேன். அவர்கள் சிறைகள் மாற்றப்படும் போது தொடர்ந்தும் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டுச் சென்று பார்வையிட்டு வருவேன். இவ்வுறவுகள் வெறுமனே தத்துவார்த்த ரீதியான அல்லது, அரசியல் ரீதியான புரிதலோடு நீடித்­தவை அல்ல. அதற்கு அப்பால் நட்புறவுக்­கூடாக இவை நீடித்தன. பிற்காலங்களில் எனது பிள்ளைகளையும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு கூட்டிச் செல்வதில் எனக்கு விருப்பமதிகம். அப்படி அழைத்து செல்லப்படுகின்ற போதெல்­லாம் பிள்ளைகள் அங்கு உடைந்து சிதைந்து தரைமட்டமாகிவிட்டிருக்கும் இடங்களைக் காட்டி பல கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களுக்கு அவை குறித்த விளக்கத்தை நான் கொடுப்பேன். இந்த நினைவுகள் அவர்களை ஒரு போதும் இனவாதத்துக்கு இட்டுச் செல்லாது. அவர்களுக்கு பிரச்சினையை விளங்கிக் கொள்ள வாய்ப்புகளைக் கிட்டச் செய்வது அவசியம். அரசியல் ரீதியாக மட்டும் இவற்றை நோக்குவதில் எனக்கு உடன்பாடி­ல்லை.

ஜே.வி.பி.யுடன் நான் உறவை முறித்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் கூட மனித உணர்வு­களை மதிக்காததில் ஏற்பட்ட பிரச்சினையே மேலெழுந்தது.

இப்படியான மனிதாபிமானப் பார்வை, அரசியல் ரீதியாக பார்க்கவிடாதபடி செய்து விடுமல்லவா?

நான் எனது அரசியல் வாழ்க்கையில் மனிதாபிமான முறையிலேயே செய்து வந்துள்­ளேன். மனிதத்துவம் என்பது புரட்சிகர அரசிய­லொன்றின் மூலமாவே சாத்தியப்படும் என்பதை நம்பியல்லவா நாங்கள் அரசியல் செய்யத் தொடங்கினோம். பெண்ணியம் குறித்த செயற்­பாடுகளையும் அதே மனிதத்துவத்தை அடிப்ப­டையாகக் கொண்டல்லாவா செய்யத் தொட­ங்கினோம். அர­சியலின் பேரால் நான் ஒருபோதும் மனிதத்துவத்தை விலைகொடுக்க விரும்பவில்லை.

1987-1989 காலப்பகுதிகளில் எனக்கு ஜே.வி.­பி.யால் அச்சுறுத்தல் இருந்தது. அப்போது ஒரு முறை ராஜகிரிய பகுதியில் சிறுமியாக இருந்த எனது மகளையும் கைபிடி­த்துக் கொண்டு பாதையில் சென்று கொண்டி­ருந்த போது இருவர் எங்களையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சிவில் உடை தரித்த படையினரும் விரட்டி வந்தார்கள். வந்த படையினர் என்னிடம் கேட்டார்கள் எங்கே அவர்கள் என்று. எனக்கு தெரியும் அவர்கள் ஒளிந்திருந்த இடம். ஆனால் நான் வேறு இடத்தைக் காண்பித்து அவர்களைத் திசை திருப்பினேன். பின்னர் வந்து எனது அரசியல் நண்பர்கள் சிலருடன் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் ”உன்­னைக் கொல்லப் பார்க்கும் ஜே.வி.பி.காரர்களை நீ ஏன் பிடித்துக் கொடுக்காமல் போனாய்” என்று என்னைத் திட்டினார்கள். ஆனால் அப்­படிச் செய்ய என்னால் முடியாது. அவர்கள் என்­னைக் கொல்ல வந்திருந்தாலும் கூட நான் பிடித்துக் கொடுக்க முடியாது. அப்படிச் செய்திருந்தால் நான் அரசியல் செய்து பிரயோசனமில்லை.

நீங்கள் ஜே.வி.பி.யில் இருந்து விலகிய போதிருந்த காரணத்தையும் தற்போது நீங்கள் கூறிய சம்பவத்திலும் அரசியல் இல்லையா? ஏன் இவ்விரண்டையும் அரசியல் ரீதியில் உங்களால் எதிர்கொள்ளமுடியாமல் போனது?

இலங்கையின் அரசியல் ஒரு தத்துவார்த்த அரசியல் இல்லையே. தொடர்ச்சியாக ஒருபுறம் ஊழலும் மறுபுறம் வன்முறையும், குரூரமும், நிறைந்த அரசியலே இருந்து வருகிறது. இந்த சட்டகத்துக்குள் யூஎன்.பி., ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி., புலிகள் என எவரும் விதிவிலக்­கில்லை. இப்படிப்பட்ட சூழலில் மனிதத்து­வத்தை அரசியலால் எதிர் கொள்ளலாம் என்று நான் நினைக்கவில்லை. இவையனைத்தும் வர்க்க, இன, சாதிய, பால்வாத அதிகாரத்து­வத்தை நிலைநாட்டவென இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்றன. குறுகியகால நலன்களுக்காக மனிதத்துவம் பற்றி சிறிதும் அக்கறை கொள்வதில்லை. எனவே தான் மனிதத்துவத்தை அரசியலால் எதிர்கொள்ள வாய்ப்பில்லை. இப்படி உங்களுக்குத் தோன்றவில்லையா?

பொதுவாக சுனிலா தனது அரசியலை இழந்து விட்டதாக விமர்சனம் உள்ளதே?

துரதிருஸ்டவசமாக எனது மனிதத்துவத்து­க்கு அரசியலில் இடமில்லை.

இதுவரை காலம் உங்களை ஒரு சோஷலிசப் பெண்ணியவாதியாகவே அடையாளம் கண்டு வந்தனர். இன்றைக்கும் அது செல்லுபடியாகுமா?

ஆம், இன்றும் நான் அடிப்படையில் சோஷலிச விடுதலையையும், புரட்சிகர சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கிறேன். நான் நம்புகின்ற சோஷலிசம் மனிதத்துவத்தை மதிக்­கின்ற சோஷலிசமே. வேடிக்கை என்னவென்­றால் இலங்கை அரசு கூட ”ஜனநாயக சோஷ­லிசக் குடியரசு” என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே சோஷலிசம் என்பது இன்று பல்வேறு வகையில் அர்த்தம் கொள்ளப்படுகிற சூழலில் மனிதத்துவத்தை இலக்காகக் கொண்ட சமத்துவத்தையே நான் எதிர்பார்க்கிறேன்.

ஐ.நா.வால் இது வரை வழங்கப்பட்டுள்ள விருதுகளில் பெண்ணிலைவாதிகள் எவருக்காவது இது வழங்கப்பட்டுள்ளதா?

கடந்த 10 வருடங்களாகத்தான் மனித உரிமைகள் சட்டகத்துக்குள் பெண்ணியம் குறித்­தும் பேசப்படுகிறது. அதுபோல பெண்ணியத்­தையும் மனித உரிமைகள் நடவடிக்கைகளோடு சேர்த்துப் பார்ப்பதும் இந்த சிறு காலப் பகுதிக்குள் தான். ”பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே!” எனும் கோஷம் சமீப காலமாகத் தான் ஓங்கி ஒலிக்கின்றது. அந்த வகையில் மனித உரிமைகள் நடவடிக்கைக­ளுக்கும் பெண்கள் செயற்பாடுகளுக்குமாக பெண்ணிலைவாதியொருவருக்கு கிடைத்த முதல் விருது இதுவென்று கூறலாம். விருது வழங்கப்படுகையில் பெண்கள் பிரச்சினை, ஆயுத மோதல், முரண்பாடுகளைத் தீர்த்தல் (Conflict Resolution) என்பவை தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயற்பட்­டமைக்காக வழங்­கப்பட்டதாக அறிவி­க்­­கப்­பட்டது.

மனித உபிமையாளரான உங்கள் பார்வையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

இந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்கையில் என் போன்ற பலர் நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் இன்று எல்லோரும் அதிருப்திய­டைந்திருக்கிறோம். யாப்பு விடயத்தை எடுத்துக் கொண்டால் அதில் அடிப்படை உரிமை பகுதி­யில் சில திருத்தங்­களையும் கோரியிருந்தோம். அப்பகுதியில் உயிர் வாழ்வதற்கான உரிமை, பொருளாதார உரிமை என்பவை திருத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம். உயிர் வாழும் உரிமை உத்தேசத் திருத்தத்தில் உள்ளட­க்கப்பட்டிருக்­கிறது. ஆனால் பொருளாதார உரிமை உள்ளட­க்கப்படவில்லை. தொழில் புரிவதற்கான உரிமை குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொழிற் பாதுகாப்புக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொழில் புரிவதற்கான உரிமை இன்றி தொழிலை பாதுகாப்பதற்கான உரிமை இருந்து என்ன பிரயோசனம். மேலும் முன்­னைய சட்டங்கள் அப்படியே செல்லுபடியாகும் என்கின்ற பிரிவும் உள்ளது. அதன்படி மரண தண்டனையும் அப்­படியே அமுலில் இருக்கும். அப்படியென்றால் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படுகின்ற போது சட்டங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. யாப்பின் ஆரம்பத்தில் இது ஒரு பல்லின நாடென்பதை உறுதிப்படு­த்தவில்லை. இப்படியாக மனித உரிமையை எடுத்துக் கொண்டாலே பல விடயங்களை உத்தேச யாப்பில் குறிப்பிடலாம்.

தொழிலாளர் சாசனத்தை பிரகடனப் படுத்துவதாகக் கூறிய அரசாங்கம் இன்னும் அதனைக் கருத்திற் கொள்ளவில்லை. இன்று அதனை முன்னெடுக்கும்படி எந்த தொழிற் சங்கங்களும் கதைக்கத் தயாராயில்லை ஏனென்றால் அது தொழிலாளர்களை விட முதலாளிகளைப் பாதுகாக்கின்ற சாசனமாகவே ஆக்கப்பட்டுள்ளது. மலையக மக்களின் பிரஜா­வுரிமைப் பிரச்சினை, ஊழல்களையும் வன்முறைகளையும் ஒழிப்பதாகக் கூறிய போதும் அதே சேற்றில் அரசாங்கம் மூழ்கி விட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழு விசாரணை முடிக்கப்­பட்டு அதன் அறிக்கை இன்றும் மக்களுக்கு அறிய வாய்ப்பில்லை. முறைப்படி ஜனாதிபதி செயலகத்துக்கூடாக அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். இன்னும் அப்படிச் செய்யப்படவில்லை. ஜனாதிபதியிடம் இரகசி­யமாக வைக்கப்பட்டுள்ளது. அவ் ஆணைக் குழுவில் சாட்சி கூறிய தாய்மார், மனைவிமார், பிள்ளைகள் என எவரும் அதனை அறிய முடியாதுள்ளது. நட்டஈடு வழங்கப்­படவில்லை. நீதி கிடைக்கவில்லை. அவற்றில் ஈடுபட்ட பலரது பெயர்களும் அதில் உள்ளன. அவர்க­ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அப்படி நடவடிக்கை எடுத்துவிட்டு யுத்தமொன்றைச் செய்ய முடி­யாது என்று நம்புகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட­வர்களுக்கும் இனி பாதிக்கப்படப் போபவர்க­ளுக்கும் இனி இப்படி நடக்காது என்பதற்கு எந்த வித நம்பிக்கையோ உறுதியோ இல்லை.

தமிழ் சிறைக்கைதிகளின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் இன்று வெறும் சந்தேக­த்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை­யின்றி வீணாகத் தடுத்து வைக்கப்பட்­டிருக்கிறார்கள். வெலிக்கடை, களுத்துறை, அனுராதபுரம் என பல சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்­ளன. அவர்களுக்கு திருப்பித் திருப்பி வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் எதுவும் உருப்படியாக இல்லை. இன்றைய செம்மணி புதைகுழி வரை எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம். மனித உரிமைகள் குறித்து திருப்தி கொள்ளக்கூடிய எதுவும் இன்று இல்லை.

இந் நிலைமையை ஐ.தே.க. அரசாங்கத்தோடு ஒப்பிட்டால்..?

இத்தனைக்கும் மத்தியில் மனித உரிமை­யாளர்கள் செயற்படுகின்ற வாய்ப்புகள் தற்போதைய அரசாங்கத்தில் உண்டு. தடையில்லை.

முன்னர் இல்லாததா?

ஆம், 88-90 போன்ற காலப்பகுதிகளில் அவ்வாறு இருக்கவில்லை. ஆனால் மனித உரிமைகளை மீற வேண்டும் என்கின்ற திட்டமிட்ட நோக்கம் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பிரேமதாச அரசாங்கத்துக்கு அப்படி இருந்தது. அரசாங்க விரோதிகளை கூண்டோடு அழிக்­கின்ற திட்டமிட்ட நோக்கம் பிரேமதாசவுக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் கலவரங்களைக் கூட கூறலாம், 82, 83 கலவரத்தைக் கூட ஜே.ஆர் அரசாங்கம் திட்டமிட்டுச் செய்தது. அந்தளவு கொள்கை ரீதியாக திட்டமிட்டு மீறுகின்ற நோக்கம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. இந்த அரசாங்கம் நடைமுறையில் நிறையத் தவறுகளை இழைத்து வருகிறது. அக்கறையீனமாக, பொறுப்பீனமாக நடந்து கொள்கிறது என்கின்ற குற்றச்சாட்டைத் தான் வைக்கமுடிகிறது.

நேர்காணல்: என்.சரவணன்

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster