Wednesday, January 28, 2009

ஒரு பால் உறவு:
"மறைவுக்குரியவை அல்ல!"
-வாசு-என்.சரவணன்


லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னைநாள் நவ சமசமாஜக் கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார ”பாராதீசய” எனும் சிங்கள மாற்று சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது. பாலியல் விவகாரங்கள் குறித்து அதிக சர்ச்சைகளைக் கிளப்பி பெரும் விவாதங்களை நடத்தி வரும் இச் சஞ்சிகையின் ஒக்டோபர் இதழில் இது வெளியானது.

இளைஞர்களை தரம் பிரிக்க முடியுமா?

ஆம். சமூகத்திலுள்ள இளைஞர்களை பல தரப்பட்ட பகுப்புகளுக்கூடாக தரம் பிரிக்க முடியும்.

இன்று மூலை முடுக்கெங்கும் நிலவுகின்ற சமூக கலாசாரப் போக்கில் பல்வேறு சமூக, பொருளாதார பின்புலன்கள் காரணமாக இருந்தாலும் கூட அது குறித்த இளைஞர்களின் ஈடுபாடு பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சமூக ஆதிக்க சிந்தனைகளின் விளைவை தனதாக்கிக் கொண்டு இயங்கி வருகின்ற தொடர்பூடகங்­களின் தாக்கங்களினால் ஆதிக்க நுகர்வுக் கலாசாரங்கள் விரவியுள்ளமையை நாம் இனங்காண முடியும். இரண்டாம்தர கலாசார செயற்பாடுகள் அந்த ஆதிக்க கலாசாரமே. அரச தொடர்பு சாதனங்களு­க்கூடாகவும் வெகுஜனப்படுத்தப்படுவது இந்த ஆதிக்க கலாசாரமே. இன்றைய பெரும்போக்குக் கலாசாரத்தை மறுதலித்து அதிலிருந்து எதிர்கலாசார போக்கொன்றும் இன்று வளர்ந்து வருவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு புதிய கலாசார நடத்தைகளின் மூலம் பாரம்பரிய கலாசாரத்துக்கு பெருத்த அடிவிழும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை மாற்றம் என்பது எல்லாவற்றிலும் நிகழ்கிறது. மாற்றமுற்று வருகின்ற பூகோளமயமயமாகிவரும் கலாசார பண்பாட்டு மரபுகள் சமூகம் என்கின்ற ரீதியில் எந்த இடத்தில் ஒருங்கிணைவது என்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. பழையன அப்படியே நிலவ வேண்டும் என்ற நம்பிக்கையை தொடர்பவர்கள் நிச்சயமாக பிற்போக்கானவர்களாகவே இருப்பர். அதே வேளை உலக ஏகாபத்திய சக்திகள் உலகம் முழுவதும் பரப்பி வரும் கலாசாரங்களுடன் எங்களின் உரிமைக்குரிய கலாசாரத்தினைப் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. ஏகாதிபத்திய கலாசாரத்தை தழுவுவது என்பது அடிமைப்படுவதற்கு ஒப்பாகும். அதன் மூலம் எம்மத்தியில் ஒருவித அடிமையுணர்வு தான் மிஞ்சும். அது எமது வளர்ச்சிக்கு தடை. எங்களின் கலாசார இறைமைக்குள் தான் நாம் எதனையும் உள்வாங்க முனைய வேண்டும்.

ஆனாலும் இளைஞர்களைப் பொறுத்தவரை ஆதிக்க தொடர்பூடகங்களினால் பாதிப்புற்று அதனையே விரும்புகிறார்களே?

அதனை விரும்பவில்லை. அதற்குப் பலியாகிறார்கள்.

அதாவது அந்த இளைஞர்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்ற அர்த்தமா?

இல்லை... இல்லை.... நுகர்வுக் கலாசாரத்தின் பிடியில் சிக்காதிருக்கத் தேவையான புதிய சிந்தனைகளை எப்படி சமூகத்தில் பரப்புவது என்பது குறித்து நாங்கள் ஆராய வேண்டும். நாங்கள் இது குறித்து தீவிரமாக கருத்தாட வேண்டும். அதன் மூலம் இந்த நுகர்கலாசாரவாதத்தை எதிர்கொண்டு வெல்லலாமென நான் நம்புகிறேன்.

நிலவுகின்ற கலாசாரப் பண்புகளை ஆதிக்க கலாசார பண்புகளாக நீங்கள் கருதுகிறீர்களாயின் உங்களிடம் ஒரு மாற்று கலாசார மாதிரி (Model) உள்ளதா?

இல்லை. மாதிரி (Model) என்று ஒன்றை என்னால் கூற இயலாது. எங்களிடமுள்ளது எங்களின் சிங்களத்தனம். அந்த சிங்களத்தனத்துக்கு ஒரு கலாசார தனித்துவம் உண்டு. அதே வேளை உலக வளர்ச்சிப் போக்கை எதிர்கொள்ளாமல் நாங்கள் இயங்குதளத்தை சவால்கொள்ள முடியாது. பல்வேறு கலாசாரப் பண்புகள் முட்டி மோதுகின்ற உலகில் தேசங்களின் தனித்துவங்களைப் பாதுகாக்கக் கூடிய உலக கலாசாரமொன்றை கட்டியெழுப்புவதே இன்றைய சூழலில் உகந்தது.

இளைஞர்களின் பாலியல் போக்கு குறித்து கருத்து கூறுவீர்களா?

நான் அண்மைக்காலமாக இது குறித்து சிந்தித்து வந்திருக்கிறேன். எனது டயரியில் இது குறித்த குறிப்பொன்றையும் எழுதியிருக்கிறேன். சகல பாலாருக்கும் 12 வயதிலேயே பாலியல் கல்வியூட்டிவிட வேண்டும். 15 வயதிலேயே அவர்களுக்கு பாலியல் ஈடுபாடு கொள்ளுகின்ற தேவையேற்பட்டு விடுகின்றது. அதற்கென்று ஒரு புரிதல் அவசியம். ஆனால் எமது சமூகத்தில் அது பெரும் குற்றம். விவாகமாகும் வரை அதை செய்யாதிருக்க வேண்டும் என விதித்திருக்கிறது. இது மிகவும் பிழையான முறை. விவாகம் கொள்ளாமல் பாலியலை 15 வயதில் அனுபவிப்பதை தடுக்கும் முறையை வீழ்த்துகின்ற சமூக அமைப்பொன்று உருவாவது அவசியமானது. விவாகம் குறித்து அவர்கள் தமக்குள் பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம். பாலியல் ரசனையை அனுபவிப்பது குறித்த ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துவது என்பது இன்று பெருங்குற்றத்துக்கும், தயக்கத்துக்கும் உரிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் இவை குறித்த சரியான புரிதல்களை எட்ட வகை செய்வது மிகவும் அவசியம். இவற்றுக்கு எல்லாம் மேல் பாலியல் குறித்து எமது சமூகத்தில் நிலவி வரும் சமூக ஐதீகம் தகரவேண்டும்.

பாலியலை இயற்கையான ஒன்றாகவா நீங்கள் காணுகிறீர்கள்?

ஆம், அது நிச்சயமாக இயற்கையானது தான். இயல்பானது தான்.
அது முன்னைய சமூக அமைப்பினால் அனுப்பப்பட்ட ஒன்றென்றும், எங்களால் ஏற்றக்கொள்ள வேண்டியேற்பட்ட ஒன்றென்றும் கூறினால்...?

அது எப்படி என்பது குறித்து நான் கூறமாட்டேன். நான் என் அனுபவங்களுடன் பேசுகிறேன்.

பாலியலில் பல்வேறு முறையியல்கள் நிலவுகின்றன. ஒருபால் உறவு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குறிப்பிட்ட சிலர் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கிற ஒரு பாலியல் இரசனை வகை அது.

அதனை ஏற்பது ஏற்காதது குறித்த உங்கள் கருத்தை கூறுங்களேன்?

இல்லை. இல்லை.. அது குறைந்த அளவிலான நடைமுறை வகை. ஆண் பெண் பாலுறவு பொதுவான ஒன்றாக இருக்கின்றது. எவ்வாறிருந்த போதும் ஒருபாலுறவை அவமானப்படுத்த முனையக் கூடாது.

நீங்கள் முன்னர் கூறியவற்றை மறுதலிக்கின்ற ஒன்றாக இது ஆகிறதல்லவா?

எங்களின் காமசூத்திரமல்லவா எங்கள் கலாசாரத்துக்கு ஆரம்பம். அதிலுள்ள புராணக்கதைகளிலும் இவைபற்றி உண்டு. அவற்றை புரிந்துகொள்ளாமல் எமது கலாசாரத்தையும் பாலியலையும் விளங்கிக் கொள்ள முடியாது.

தன்னினச்சேர்க்கையாளர்களாக ஆகியமையினால் சமூகத்தில் அருவருப்புக்குரியவர்களாகவும், அவமானத்துக்குரியவர்களாகவும், சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுப் பார்க்கும் போக்கு பாரம்பரிய கட்சிகளைப் போலவே இடதுசாhpக் கட்சிகளிலும் உண்டென்று கூறினால்....?

அவ்வாறானவர்களை அவமானப்படுத்துவதை செய்யாதிருந்திருக்க வேண்டும். அது அவர்களின் இறைமை அது மட்டுமன்றி அவர்களின் தனிப்பட்ட தெரிவு.

சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது ஒருபாலுறவு கொச்சைப்படுத்தப்பட்டது குறித்து உங்கள் கருத்தென்ன?

எமது சமூகம் எவ்வளவு தூரம் பிற்போக்கு நிலையில் உள்ளது என்பது அதிலிருந்து தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அங்கு அவர்களின் தனிப்பட்ட தெரிவை அசிங்கப்படுத்திப் பேசியது அவர்களது ஜனநாயக சகிப்பின்மையையே காட்டுகிறது. முன்னர் கடவுள் இல்லையென்றவர்களை எரித்தது போல தன்னினச்சேர்க்கையாளர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்று கூறி எரித்துக்கொள்ளுமளவுக்கு இந்த மிலேச்சப்போக்கு கொண்டுபோய் விடும்.

ஆனால், இந்த தன்னினச்சேர்க்கை வெறுமனே தனிப்பட்ட இயல்பு சார்ந்தது மட்டுமல்ல, பொருளாதாரக் காரணிகளும் இதில் பாத்திரம் செலுத்துகின்றன. விவாகத்துக்கு காலம் தாழ்த்தப்படல் எதிர்பால் (Hetro sexual) உறவுகொள்ளக் கிடைக்காமை போன்றவற்றால் அடுத்த தெரிவை நோக்கிப் போகிறார்கள். இது அடிமட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினையாகவும் இருக்கின்றது. எவ்வாறிருந்த போதும் இது இளம் சந்ததியினருக்கு பெரும் துரதிருஷ்டவசமானது. இன்று எவ்வளவு தூரம் ஹெரோயினுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதைவிட கஞ்சா புகைப்பது நல்லது என்றே நான் கூறுவேன். ஏனென்றால் கஞ்சா என்பது எங்களின் சமூக கலாசாரத்துடன் இணைந்த ஒன்று. அதற்கு சட்ட அனுமதி வழங்கினாலும் பரவாயில்லை.


சரிநிகர் இதழ் 157

AddThis Social Bookmark Button


0 comments: to “

Design by Amanda @ Blogger Buster