Wednesday, January 28, 2009
மீண்டும் பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவ கோரிக்கை!

என்.சரவணன்
மீண்டும் பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இம்முயற்சிகட்கான உடனடி முக்கிய காரணங்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். முதலாவது இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சென்ற மாதம் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு 30 வீத அரசியற் பிரதிநிதித்துவம் பற்றிய மசோதா. அடுத்தது இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஆயத்தங்கள்.
இந்த இரண்டு காரணங்கள் மட்டும் தான் காரணமென்றில்லை. இவற்றிற்கான முயற்சிகளை பெண்கள் அமைப்புகள் கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருவது உண்மையே. ஆனால் மீண்டும் இன்னும் பல பெண்கள் அமைப்புகளை இணைத்துக் கொண்டு முயற்சிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளன.
இந்த முயற்சிகளை கடந்த சில காலமாக சில பெண்கள் அமைப்புகள் தனித்தனியாகவே முயன்று வந்தன. இம்முறை ”இலங்கைப் பெண்களின் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு” (Sri Lanka Women's NGO Forum) எனும் அமைப்பின் கீழ் திரண்டுள்ள பெண்கள் அமைப்புகள் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளன. இதன் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்ற 49 பெண்கள் அமைப்புகள் இணைந்துள்ளன.
1995ஆம் ஆண்டு பீஜிங்கில் நடந்த நான்காவது உலகப் பெண்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பரப்புவது, கண்காணிப்பது போன்ற காரியங்களையும் இந்த அமைப்பே மேற்கொண்டு வருகிறது. அம்மாநாட்டின் போது பெண்களை சகல மட்டங்களிலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரமின்மையைப் போக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசியற் பிரதிநிதித்துவ கோரிக்கையும் இதன் விளைவே.
இம்முறை மாகாண சபைத் தேர்தலுக்காக பொதுவாக,
1. கூடியளவு பெண்களை வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச் செய்தல், பெண்கள் தொடர்பான விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக்கொள்ளல்,
2. பெண்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தல்,
3. வன்முறையற்ற தேர்தலை உறுதி செய்யமாறு கோருதல்
என்பவற்றை அரசியற் கட்சிகளிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளன.
அரசியற் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், வேறும் சமூக வெகுஜன இயக்கங்கள் போன்ற பல்வேறு சமூக நிறுவனங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இந்த அமைப்பு.
இது வரை ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாங்கள் பேசிய வேளையில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தங்களிடம் ”பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 வீதம் அதிகரிப்பது குறித்து எமக்கு பிரச்சினை இல்லை ஆனால் தகுதியானவர்களை நியமிப்பதா பெண்களை நியமிப்பதா என்ற கேள்விக்கு உங்களால் பதில் தரமுடியுமா?... உள்ளுராட்சி, மாகாண மட்டங்களில் இதனை செயற்படுத்துவது குறித்து சிந்திக்கலாம் ஆனால் பாராளுமன்றம் என்று வரும் போது எங்களுக்கு செல்வாக்கு மிகுந்தவர் தான் முக்கியம்” என்று அவர் தெரிவித்ததாக சுனிலா அபேசேகரா சரிநிகருக்கு தெரிவித்தார்.
”இன்று வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் ஆண்களில் எவர் தகுதியுடன் தெரிவாகிறார்? சகலரும் குடும்ப செல்வாக்குடனும், சண்டித்தனத்தினாலும், தனது வர்க்க செல்வாக்குகளினாலுமே தெரிவாகின்றனர். இந்த நிலையில் பெண்களிடம் தகுதி குறித்து கேள்வி எழுப்புவது சுத்த அபத்தம். மேலும் இதன் மறு பக்க அர்த்தம் பெண்கள் ஊழல், மோசடிகள் செய்யமாட்டார்கள் என்பதோ அல்ல அப்படி நடக்காது என்று உறுதி செய்ய முடியாது. ஆனாலும் அவர்களின் பிரச்சினையை அவர்களுக்குப் பேசக் கூட அதிகாரமற்றவர்களாக இருக்கும் நிலையில் அரசியல் அதிகாரம் அவசியமாகிறது.” என்கிறார் சுனிலா.
இப்படித் தான் 1931இல் சர்வஜன வாக்குரிமை முதற் தடவை வழங்கப்பட்ட போது டொனமூர் ”நீந்த வேண்டுமாயின் நீரில் இறங்கியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டது நினைவு கொள்ளத்தக்கது.
உண்மையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதாயின் இக்கோரிக்கை போதுமானதாக இருக்க முடியாது. சமூகத்தில் எப்போதும் குறை விருத்தியையுடைய (குறை விருத்திக்குள்ளாக்கப்பட்ட) தரப்பினரை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதாயிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். உதாரணத்திற்கு அவர்களின் உண்மையான வீதாசாரம் 50 வீதமாக இருக்கிறதென்றால் (குறிப்பிட்ட பத்தாண்டோ பதினைந்தாண்டோ விசேட திட்டத்தின் மூலம்) அதனை விட மேலதிகமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் முலமே உயர்த்தலாம். இதனை அரசியல் கோரிக்கையாக முன்வைப்பதாயிருந்தால் இதனடிப்படையிலேயே அமைய வேண்டும்.
”ஏன் அவ்வாறு அதிக பட்ச பிரதிநிதித்துவத்தைக் கோராமல் குறுக்கிவிட்டீர்கள்?” என்று சுனிலாவிடம் கேட்ட போது,
நீண்ட கால அரசியல் முழக்கமாக (Political Slogan ) 50வீதத்தைக் கோர முடியும். ஆனால் அரசியல் தந்திரோபாயமாக (political strategy ) நாங்கள் 30வீதத்தைத் தான் தற்போதைக்குக் கோரமுடியும் காலப்போக்கில் எமது நீண்டகால கோரிக்கையை வெல்ல அடுத்த கட்ட கோரிக்கையை முன்வைக்கலாம். இல்லையென்றால் ஒரே நேரத்தில் இக்கோhpக்கையை அடித்து வீழ்த்தி விடுவார்கள் என்கிறார்.
இதற்கிடையில் இம்முறை ஊவா மாகாணசபைக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பெண்கள் குழு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் இதற்கு பல பெண்கள் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. 22 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலில் 3 ஆண்களையும் சேர்த்திருக்கிறார்கள். இக்குழுவின் தலைவி விமாலி கருணாரத்ன நுவரெலியா மாவட்டத்தில் வெகுஜன செயற்பாடுகளில் பேர்போனவர். இவ்வருடம் ”தலைமைத்துவம், மற்றும் சமூக சேவைகளுக்கான ஜனாதிபதி விருது” இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூவினத்தவர்களும் அடக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் சகலரும் சமூக செயற்பாட்டாளர்கள்.
இலங்கையில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 5வீதத்தைக் கூடத் தாண்டவில்லை. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலும் ”மகளிர் அமைச்சு ” தவிர்ந்த வேறு அமைச்சுகள் அவ்வளவாக வழங்கப்பட்டதில்லை. பெண்களுக்கு அமைச்சுக்கள் வழங்கப்படுவது கூட 9 வீதத்தை இது வரை தாண்டவில்லை. சமூக அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கும் அரசியல் ரீதியில் அவற்றில் தலையீடு செய்வதற்கும் பெண்களுக்கு உள்ள உரிமை இதுவரை காலம் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்துவந்த வேளைகளில் அதனை எதிர்க்க பாராளுமன்றத்தில் பலமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் இதற்கு முன் எழுப்பிய கேள்விகளை மீண்டும் எழுப்புவது பொருத்தமாக இருக்கும். இந்த கோரிக்கைகள் பாராளுமன்ற அரசியலை மேலும் ஊறுதி செய்கின்ற அதில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற ஒரு நிலைக்கு இட்டுச் செல்வதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சில கேள்விகள்...
-சகல தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சமனாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா? உண்டாயின் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வாக்களிப்பு வீதம் எத்தனை?
-அரசியற் கட்சிகளின் உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்தினர் பெண்கள்?
அரசியற் பணிகளில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது?
அத்தகைய பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா?
அந் நடவடிக்கைகளின் தன்மை எத்தகையன?
-தேர்தல்களின் போது பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் என்ன? வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது தானா? பெண்களின் கோரிக்கைகளை பெண்கள் எவ்வளவு தூரம் முன் வைக்கிறார்கள்? பெண்களின் வாக்களிப்பு வீதாசாரம் என்ன?
பெண்களை வெற்றிபெறச் செய்வதில் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு என்ன? ஆண்களோடு ஒப்பிடுகையில் எத்தனை வீத பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? நிர்வாகத்துறைக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் வீதாசாரம் என்ன?
-பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கான தடைகள் எவை? அத்தடைகளை ஏற்படுத்துவதில் சமூக ஐதீகங்களுக்கும், குடும்பச் சுமைகளுக்கும், அரசியற் சக்திகளுக்கும், அரசியற், பொருளாதார சூழலுக்கும், உள்ள பாத்திரம் எவை?
-இவற்றை தாண்டிவர பெண்களுக்குள்ள தெரிவு என்ன?
மேற்படி கேள்விகளுக்கான விடைகளானது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்பு குறித்து அக்கறை காட்டப்படும் போது விடை காண வேண்டிய முன்நிபந்தனையான கேள்விகளாகும்.
-என்.சரவணன்
அரசியல் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்
0 comments: to “ ”
Post a Comment