Thursday, January 29, 2009
கிருஷாந்தி:
பாலியல் வல்லுறவுக்கும்,
படுகொலைக்கும் பதில் சொல்வது
யார்
பாலியல் வல்லுறவுக்கும்,
படுகொலைக்கும் பதில் சொல்வது
யார்
என்.சரவணன்
(கிருஷாந்தி சம்பவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ”பெண்கள் தொடர்பூடக கூட்டு” பெண்கள் தொடர்பூகடக் கூட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க எழுதி வெயிடப்பட்ட துண்டுப் பிரசுரம் -பி.கு.-இத் துண்டுப்பிரசுரம் அமைதியான ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்குடன் வெளியிடப் பட்டதென்றும் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் கூறி இத்துண்டுப் பிரசுரத்தை பகிர்வதற்கு விட முடியாது என யூ.டி.எச்.சீ.ஆரைச் சேர்ந்தவர்கள் தடுத்தார்கள். இவர்களுக்கு பின்னர் அரச தொடர்பு சாதனங்களில் நல்ல பதவிகள் கிடைத்தன. அவர்களின் ஒரே நோக்கம் அரசை பாதுகாப்பது என்பதாகவே இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்.ஜீ.ஓ. குழுவினரோ உடனடியாக பீதியுற்றதுடன் இந் நபர்களின் பயமுறுத்தலுக்குப் பழியாகி அவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டனர்.)

'சில விஷமிகள் இராணுவத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிஷாந்தி மற்றும் அவரது குடும்பத்தவர், அயலவர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை புலிகளே செய்துள்ளனர். அதற்கான சாட்சிகளும் எம்மிடம் உண்டு””
இது இம்மாதம் 1ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அன்று அரச தொடர்பு சாதனமான ரூபவாஹினி , செய்தியில் வெளியிடப்பட்ட ஒரு தகவல். ஏற்கெனவே முழு உலகமுமே அறிந்த விடயம். இராணுவமே ஒத்துக்கொண்ட விடயம், சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாக அரசாங்க உயரதிகாரிகளே சொன்ன விடயம். அப்படியிருக்க திடீரென்று இப்போது எப்படி பொய்யானது?
கிரிஷாந்தி (வயது-18) யாழ்ப்

கடந்த செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிரிஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.
கிரிஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாருக்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிரிஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்திருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிரிஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதைத்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military Police), ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் கிரிஷாந்தியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்தனர். இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே அவர்களுக்கும் 'அனுபவிக்க' அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிரிஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிரிஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் செப்டம்பர் 17ம் திகதியன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது. இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிரிஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிரிஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவினர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையிட்டதன் பின்னரே ஒக்டோபர் 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.
ராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.
இச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27ம் திகதியன்று வாழைச்சேனையில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக இராணுவ சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது-22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.
மனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில் இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கையில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவேயில்லை.
இராணுவத்தினர் கடந்த 1987-1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்குவதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வருவது எதனைக் குறிக்கிறது? இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்பட்ட வண்ணமேயுள்ளது. மைலந்தனை, கொக்கட்டிச்சோலை தொடக்கம் சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை. இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு, கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.
இலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.
(1996 டிசம்பர்)
0 comments: to “ ”
Post a Comment