Thursday, January 29, 2009

மகளிர் தினமும் மகளிர் பிரதிநிதித்துவமும்




என்.சரவணன்

வழமைபோல இம்முறையும் மார்ச் 8ம் திகதியன்று ”சர்வதேச பெண்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. இம்முறையும் பெண்கள் தினத்துக்கான ஆயத்தங்களை பெண்கள் அமைப்பு கள் மும்முமரமாக ஈடுபட்டுவருகின்றன. அவ்வாறான அமைப்புக ளில் அரச சார்பற்ற அமைப்புகள், கட்சிகள் சார்ந்த அமைப்புகள், இரண்டையும் சாராத சுதந்திர அமைப்புகள் என்பவை முக்கியமா னவை. இவற்றில் கட்சி சார்ந்த பெண்கள் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குள் கிளையாக இயங்குகின்ற பெண்கள் அணி என்பவை பெரும்பாலும் இம்முறை சர்வதேச பெண்கள் தின நினைவு கூரலை கைவிட்டுவிட்டனர். காரணம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களின் முன்னிலையில் பெண்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமானதாக அல்லது தேவையற்ற தாகப் போய் விட்டுள்ளது போலும்.

பொதுவாக பெண்கள் அமைப்புக ளைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் பெண்களின் எழுச்சியையும், பலத்தையும், பெண்களின் கோரிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்கும் இந்நாளை கூடிய பட்சம் பயன்படுத்த விளைவதே இயல்பானது.

ஆனால் இங்குள்ள அமைப்புகளுக்கு இது முக்கியமாகப் படவில்லை. அதைவிட தேர்தல் அவர்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இந்த கட்சி சார்ந்த அமைப்புகள் போலவே பெரும்­பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்முறை நேரடி­யாகவோ மறைமுகமாகவோ கட்சிகளுக்கு ஆதரவளித்து இயங்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பொதுஜன ஐக்கிய முன்னணியை வெல்லச் செய்வதே பெருமளவான அரசசார்பற்ற பெண்கள் அமைப்­புகளின் நோக்கமாக இருப்ப தைக் காண முடிகிறது. இதில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது என்னவென்றால் அவ்வாறான பெண்கள் அமைப்புகள் எவ்விதத்திலும் பெண்களின் கோரிக்கை களை முதன் மைப்பத்திய நிபந்தனைகள் எதுவுமில் லாமல் ஆதரவளிப்பதே.

பொ.ஐ.மு.வே ஐ.தேகவுக்கு சாpயான மாற்று என்றும் ஐ.தேகவோடு ஒப்பிடுகையில் ஜனநாயகம், போர், இனப்பிரச்சினை, மனித உரிமை மீறல் என்பவை முன்னரை விட நல்ல நிலையில் அணுகப்படுவதாகவும், ஓரளவு சாத்தியமான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்டிருப்பதா­கவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக கூறித் திரிவதைக் காணமுடிகிறது.

இந்நிலையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தாவது இவ்வமைப்புகள் அவதானத்து டன் அணுகுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

குறிப்பாக உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் 40 வீதத்தினர், 16-35க்கு இடைப்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனும் விதி தேர்தல் ஆணைக்குழுவி னரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விதி மீறப்பட்ட பல பட்டியல்கள் இம்முறை நிராகரிக்கவும் பட்டன. இவ்வாறான ”இளைஞர்” பிரதிநிதித்து வத்தைப் பெற பிரயத்தனம் செய்த ஆணாதிக்க ஆட்சியதிகார கட்டமைப்பு பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து சிறிதும் சட்டை செய்யவே இல்லை. இதில் ஆச்சிரியமும், அனுதாபமும் கொள்ள வேண்டிய விடயமென்னவென்றால் இது குறித்து எந்தவொரு பெண்கள் அமைப்புமே கவனத்தில் கொள்ளாதது தான்.

இந்த 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான பின்னணியை நோக்குவது இங்கு முக்கியமானது.

1987-1989 காலப்பகுதியில் நடந்த அரச பயங்கரவாதத்தை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பியினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆயிரக்க ணக்கான இளைஞர்கள் பிரேமதா சவின் படையினரால் கொன்றொழிக்க ப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்ட போது சர்வதேச ரீதியில் பிரேமதாச அரசாங்கம் சாடப்பட்டது, கண்டிக்கப் பட்டது. இதை மூடி மறைப்பதற்காகவும் இளைஞர் பிரச்சினைக ளை தீர்க்க வந்தவராகவும் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை பிரேமதாசவுக்கு இருந்தது. அதன் விளைவாக 1989இல், ”இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது, அவ் ஆணைக் குழுவில் இருந்த ஐவரில் ஒருவர் இன்றைய நீதித்துறை அமைச்சர் (அன்றைய கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர்.) ஜீ.எல்.பீரிஸ், இன்னொருவர் ஐ.நா.சபையில் பெண்கள் மீதான வன்முறை பற்றிய அறிக்கையாளராக கடமையாற்றும் ராதிகா குமாரசுவாமி.

அவ்வாணைக்குழு விசாரணையின் முடிவில் பல பிரேரணைகள் முன்வைக் கப்பட்டன. அப்பிரேரணைகளில் ஒன்று தான் அரசியலில் இளைஞர்களுக்கு 40 வீத பிரதிநிதித்துவம் என்பது.

அவ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை முழுமையாகப் பார்க்கும் போது அது இளைஞர்களை கட்டிப்போடுவது எப்படி? இளைஞர்களின் புரட்சிகர குணாம்சங்களை வளரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது போன்ற இலக்கைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. மற்றொரு அம்சம், அது ”இளைஞர்” என கருதிக் கொண்டது ஆண்களை மட்டுமே என்பது. இளைஞர்கள் சம்பந்தமாக ஆராயப்பட்ட அவ் ஆணைக்குழு அறிக்கையில் எந்த அத்தியாயமும் ”இளம்” பெண்கள் பற்றி ஆராயப்படாததும் விதிவிலக் காகவே பெண்களை சந்தித்து விசாரித்துள்ளனர் என்பதுவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவால் ”இளைஞன்” களுக்கு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதத்தில் விதிகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.

அது மட்டுமன்றி அவ் ஆணைக்குழுவில் பெண்நிலை­வாதி என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் இருந்தும் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை யென்றால் அதை சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்த ஆணாதிக்க சட்ட அமுலாக்க கட்டமைப்பை பற்றி மட்டும் கூறவா வேண்டும்?
”பிரதிநிதித்துவம்” எனும் போது ஜனத்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களு க்கும் சமமான பிரநிதிநிதித்துவம் இருக்கக் கூடிய வகையில் ஒழுங்கமை க்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அரசியலமைப்பில் ”சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' எனும் போலி வாசகம் மாத்திரம் போதுமானதல்ல. இன்னமும் சர்வதேச ரீதியில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் 5 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. என்பதே யதார்த்த நிலை. இந்நிலை யில் குறைவிருத்தியுடைய (குறைவிரு த்திக்குள்ளாக்கப்பட்ட) பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதெனில் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். அப்படியாக விசேட கவனிப்பு செலுத்துவதா­கவிருந்தால் குறைந்த பட்சம் அக்குறிப்பிட்ட காலத்துக்கு வேட்பாளர் பட்டியலில் 50 வீதத்துக்கும் அதிகமான வீதத்தை பெண்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது. ஆனால் இங்கு 3 வீதத்தைக் கூடக் காணவில்லை.

இதன் அர்த்தம் வேட்பாளர் பட்டிய லில் பெண்களின் எண்ணிக்கையை கூட்டிவிட்டால் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடிவிடும் என்பதல்ல. எப்படியோ வாக்காளப் பெண்கள் கூட ஆண்களை நோக்கியே தமது வாக்குக­ளையிடுவார்கள் என்பதும் வேட்பாளப் பெண்களும் தமது வெற்றியின் பின் பெண்களை பிரதிநித்துவப்படுத்தப் போவதில்லை என்பதுவும் உண்மை. ஆனால் இந்த முதலா­ளி­த்துவ பாராளுமன்ற அமைப்புமுறை மாற்றமுறுவது வரையி­லான காலம் வரை பெண்களது அரசியல் ஈடுபாட்டை நிர்ப்பந்திக்க கணிசமான அளவுக்கு இது உதவுமென்று நம்பலாம்.

இந்தியாவில் கூட பாராளுமன்ற த்தில் 30 வீத பெண் பிரதிநித்துவ கோரிக்கை நாடு முழுவதும் மிகவும் துடிப்பாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

இன்னமும் பெண்களின் பாராளு மன்ற பிரதிந்துவம் குறித்த அசமத்துவ நிலை குறித்து அரச மட்டத்திலேயோ அரசு சாராமட்டத்திலேயோ கேள்வி எழாததன் காரணம் என்ன? ஏன் ஒரு முறையேனும் பெண்கள் அமைப்பி னரால் கூட குரல் எழுப்பப்படவில்லை? 1987-1989இல் நடந்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தான் இன்று 40 வீத இளைஞர் பிரதிநிதித்துவம் வழங்கப் படக் காரணம் என்றால் பெண்கள் கூட தமது உரிமைகளுக்காக அப்படியொரு தனித்த போராட்டத்தை முன்னெடுத் தால் தான் கவனத்தில் கொள்ளப்ப டுமோ?

இக்கேள்விகள் நியாயமான முறை யில் பரிசீலிக்கப்படாவிட்டால் அப்படி யொரு நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

(1997- மார்ச்-06,சரிநிகர்)

AddThis Social Bookmark Button


தமழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும்




என்.சரவணன்

இன்று தென்னிலங்­கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்”” என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசாக (State) இன்னும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளி லிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்­டிருக்கிற சட்டங்களை அலசிப் பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகை யில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” (Panel Code of Tamil Ealam) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு”' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று. அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரை­யின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்­கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.

''பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்” (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)

''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.” (அதே நூல்-பக்கம்-31)

''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்.” (அதே நூல்- பக்கம்-35)

நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிh;வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவ ற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுகளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரிதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியுள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்”” கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தண்டனை


தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் ”ஒறுப்பு” எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்ட­னை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்­கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்கப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்” (பார்க்க-PCTE-சரத்து-47)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. ”கடுஞ்சிறையொ­றுப்பு” என்பதன் அh;த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-PCTE-சரத்து-45.)

ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ”கடும் உடலுழைப்பு” என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.

அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரம­ல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உளரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.

எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற்றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்­கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான ஒன்றாதல் வேண்டும்.

ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:

உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்க­லைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (PCTE-சரத்து-215)

சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும். (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் ”புறநடை விலக்கு” எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு” (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணிணதும் 'இசைவு” தேவை என கூறப்பட்டுள்ளது.

கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் போpல் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்­பும் இன்று ”பாலியல் வல்லுறவு” என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணிடமே விட்டுவிட வேண்டும்.

கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்­தினர் தங்களது போர்க்கால மனிதவள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.

மறுமணம்


”மறுமணம்” விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவா;களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (PCTE-சரத்து 273) எனக் கூறப்பட்டி ருக்கிற போதும் அதன் 'புறநடை” பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.

திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை” என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.

பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.

”பாலியல் வல்லுறவு குற்றம்” புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்ட­னையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (PCTE-சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு” பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டுள்ளது. (PCTE-சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.

இச்சட்டத்தில் ”பாலியல் வல்லுறவு”, ”பாலியல் வன்முறை” இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,

''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் ”பாலியல் வல்லுறவு”' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்” என்றிருக்கிறது.

''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது ”பாலியல் வன்முறை”த் தவறாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து ”பாலியல் வல்லுறவு” மற்றும் பாலியல் வன்முறை” ஆகியன ஆணொருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு”களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.

இதை விட ”பாலியல் வல்லுறவு” (Rape) மற்றும் ”பாலியல் வன்முறை” (Sexual Violence) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்” (sexual Disturbance) என்ற ஒன்றை வேறுபடுத்தி பாh;க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடா;பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.

இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக ”பாலியல் வல்லுறவு” எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு” எனும் பதம் பயன்படுத்தப்பட்ட­போது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்­லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்க­ப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலை­வாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து ”பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் ”சரிநிகர்” பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்” மற்றும் ”பாலியல் வன்முறை” ஆகிய பதங்களில் ”பாலியலுறவு” என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலை­யில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற ”பாலியல் வல்லுறவு” எனும் பதத்தில் பாலியல் (sexual) + வன்மை (violence) + உறவு (intercource) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்ப­தைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைக ளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையி லொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCTE-சரத்து-(286))

இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்” என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகி­றது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதி­தாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்­கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதி­லிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபுரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்க­த்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.

பரத்தமை


'பரத்தமை” (விபச்சாரம்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.

பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரண­மாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலை­யினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்­கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.

''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாரு­டன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை” தவறாகும். இத்தவறு­க்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையி­லொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்.” (PCTE-சரத்து (481),(420))

பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.

''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?” என வினவுகிறார் பெண்ணிலைவாதி­களில் ஒருவரான சுனிலா அபேசேகர.

இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.

மேலும் 'விபச்சாரி” அல்லது 'வேசி” என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகை­யான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப்பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.

ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்” அல்லது ''பரத்தன்” போன்ற பதங்க­ளைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்­தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.

இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்” தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் அசட்டை யாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப் படும் பெண்ணி­னம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க முடியாதே.

ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள ”பெண்கள்” பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.

முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்­களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கி­யமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.

(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


கிருஷாந்தி:
பாலியல் வல்லுறவுக்கும்,
படுகொலைக்கும் பதில் சொல்வது
யார்




என்.சரவணன்

(கிருஷாந்தி சம்பவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ”பெண்கள் தொடர்பூடக கூட்டு” பெண்கள் தொடர்பூகடக் கூட்டு அமைப்பின் வேண்டு­கோளுக்கிணங்க எழுதி வெயிடப்பட்ட துண்டுப் பிரசுரம் -பி.கு.-இத் துண்டுப்பிரசுரம் அமைதியான ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்குடன் வெளியிடப் பட்டதென்றும் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் கூறி இத்துண்டுப் பிரசுரத்தை பகிர்வதற்கு விட முடியாது என யூ.டி.எச்.சீ.ஆரைச் சேர்ந்தவர்கள் தடுத்தார்கள். இவர்களுக்கு பின்னர் அரச தொடர்பு சாதனங்களில் நல்ல பதவிகள் கிடைத்தன. அவர்களின் ஒரே நோக்கம் அரசை பாதுகாப்பது என்பதாகவே இருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்.ஜீ.ஓ. குழுவினரோ உடனடியாக பீதியுற்றதுடன் இந் நபர்களின் பயமுறுத்தலுக்குப் பழியாகி அவர்களின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டனர்.)


'சில விஷமிகள் இராணுவத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிஷாந்தி மற்றும் அவரது குடும்பத்தவர், அயலவர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை புலிகளே செய்துள்ளனர். அதற்கான சாட்சிகளும் எம்மிடம் உண்டு””

இது இம்மாதம் 1ம் திகதி ஹைட்பார்க்கில் நடத்தப்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்­டத்தைத் தொடர்ந்து அன்று அரச தொடர்பு சாதனமான ரூபவாஹினி , செய்தியில் வெளியிடப்பட்ட ஒரு தகவல். ஏற்கெனவே முழு உலகமுமே அறிந்த விடயம். இராணுவமே ஒத்துக்கொண்ட விடயம், சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாக அரசாங்க உயரதிகாரிகளே சொன்ன விடயம். அப்படியிருக்க திடீரென்று இப்போது எப்படி பொய்யானது?

கிரிஷாந்தி (வயது-18) யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த-சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்ற மிக திறமை­யான மாணவி என கணிக்கப்பட்டவர். 12 வருடங்களுக்கு முன்னர் தனது ஆறாவது வயதிலேயே கிரிஷாந்தி தனது தகப்பனாரை இழந்து விட்டிருந்தார். கிரிஷாந்தியின் தகப்பனார் திரு.இ.குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.

கடந்த செப்டம்பர் 7ம் திகதியன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிரிஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது-59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.

கிரிஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாரு­க்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது-35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது-16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர். கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிரிஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்தி­ருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிரிஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா­கியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்­தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதை­த்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military Police), ஒன்பது இராணு­வத்தினருமாக பதினொரு பேர் கிரிஷாந்தியை தொடர்ச்சி­யாக பாலியல் வல்லுறவு செய்தனர். இவர்களில் சிலர் சாட்சிகளாக இருந்ததினாலேயே அவர்களுக்கும் 'அனுபவி­க்க' அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிரிஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிரிஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் செப்டம்பர் 17ம் திகதியன்று பாராளுமன்­றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்­கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது. இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்­ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிரிஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிரிஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவின­ர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையி­ட்டதன் பின்னரே ஒக்டோபர் 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.

ராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.

இச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27ம் திகதியன்று வாழைச்சேனை­யில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்­காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக இராணுவ சந்தேக நப­ர்­களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது-22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேக­த்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.

மனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்­டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில் இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கை­யில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரண­மாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவே­யில்லை.

இராணுவத்தினர் கடந்த 1987-1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்கு­வதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வருவது எதனைக் குறிக்கிறது? இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவி­ல்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்­பட்ட வண்ணமேயுள்­ளது. மைலந்தனை, கொக்கட்டிச்­சோலை தொடக்கம் சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்­கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை. இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்­டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்­பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு, கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.

இலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.

(1996 டிசம்பர்)

AddThis Social Bookmark Button


விவியன்:
ஒரு பரட்சிகாரியின் மரணம்









என்.சரவணன்


கடந்த ஒக்ரோ­பர் 3ம் திகதியன்று விவி­யன் குணவர்தன எம்மை விட்டு மறைந்து விட்டார். சகல பத்திரிகை­களும் ”புரட்சிக்காரி” விவிய­னின் இழப்புக் குறித்துச் செய்திகள் வெளியிட்­டிருந்தன. கடந்த செப்­டெம்பர் மாதம் 18ம் திகதி தான் விவியன் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடி­யிருந்தார். அவரது சேவையை வாழ்த்தி பல அமைப்புக்கள் பாராட்டுக் கூட்டங்களை நடாத்தியிருந்தன. எண்ணி 15வது நாளில் திடீரென சுகவீனமுற்ற அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட ஒரு நாளிலேயே எல்லோ ரையும் விட்டுப் பிரிந்துவிட்டார்.

கடந்த வாரம் சரிநிகர் ஆசிரியர் பீட கூட்டத்தின் போது விவியனின் 80வது வயது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஒரு நேர்காணல் செய்வது தொடர்பா­கக் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் அப்பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்­டிருந்த போதே அவரது பிரிவு பற்றிய செய்தி என்னை எட்டியது. அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நிலையில் குற்றவுணர்வும் சூழ்ந்துகொண்டது என்னை.

நேர்காணலைச் செய்ய முடியவி­ல்லை என்பதற்காக மட்டுமல்ல. சென்ற வருடம் யூன் மாதம் எனது தொடர் கட்டுரைக்காக விவியனின் வீட்டுக்குச் சென்று உரையா­டியிருந்தேன். அப்போ­தும் அவரது உடல் நிலை சிறப்பாக இருக்காவிட்டாலும் உற்சாகத் துடன் உரையாடினார். கடந்த காலங்களில் அவரது சேவை பற்றி நான் தெரிந்து வைத்தி­ருந்ததை விட அவருடன் உரையாடி யபோது கிடைத்த தகவல்­கள் என்னையும் உற்சாகப்படுத்தி­யிருந்தன. நான் அவரிடம் ”உங்களைப் பற்றி நூல் ஒன்றை எழுத அனுமதிப்­பீர்களா, நீங்கள் அதற்கு ஒத்துழைப்­பீர்களா?” எனக் கேட்டபோது அவர் ”நிச்சயமாக நான் ஒத்துழைக்கிறேன். குமாரி ஜெயவர்தனவும் என்னைப் பற்றிய ஒரு நூலை எழுதுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஏன் நீங்கள் கொல்வின் பற்றி தமிழில் சரியான நூலை எழுத முயலக் கூடாது?” என என்னிடம் கேட்டார். அவர் பற்றிய நூலை அவர் இருக்கும் போதே செய்ய முடியாமல் போனது ஒரு வகையில் குற்றவு ணர்வை ஏற்படுத்துகிறது. ஆனாலும் விவியன் பற்றி விவியனின் ஒத்துழைப்புடன் 'மலல்கொட பந்துதிலக்க' என்பவர் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் என்று இரு நாட்களுக்கு முன் அறியக்கிடைத்தது. எனினும் இந்நூல் அவர் இறந்த பின் தான் அச்சு செய்து பூர்த்தியாக்கப்­பட்டது. விவியனுக்கு அந் நூலைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

விவியனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்தொகையான செஞ்சட்டையணிந்த கட்சித் தொண்ட­ர்களும், பொது மக்களதும் தொகையே விவியனின் சேவைக்கு சாட்சி சொல்லும். முக்கியமாக விவியனிடம் இருந்த ஒரு போராளிக்குhpய நேர்மை­யும் துணிச்சலும் அவரது புகழுக்குக் காரணமாயிற்று.

விவியன் 1918.09.16ம் திகதியன்று பிறந்தார். ஆங்கிலேய விசுவாசமிக்க உயர் கொவிகம சாதியில் செல்வாக்கு படைத்த பொரளுகொட பரம்பரையில் பிறந்தபோதும் உயர் மத்திய தர வர்க்கத்தவர் பயிலக் கூடிய கொழும்பு மியுசியஸ் கல்லூரியல் பயின்ற காலத்திலேயே பிரித்தானிய ஏகாதிபத்­தியத்தை எதிர்த்து ”சூரியமல்” இயக்கத்துடன் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். ஆங்கிலேயர்களால் வருடாவருடம் மேற்கொ ள்ளப்பட்டு வந்த (நவம்பர் 5ம் திகதி) ”பொப்பிமல்” தினத்தின் போதான 5 நிமிட மௌன­த்தினைப் பாடசாலைக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவார்.

லங்கா சம சமாஜக் கட்சியில் அன்றைய நாட்களின் தலைவர்களான பிலிப் குணவர்தன, ரொபட் குணவர்தன ஆகியோர் விவியனின் மாமனார்கள் (தாயின் சகோதரர்கள்) இவர்கள் இருவரும் விவியனுக்கு மாக்சீய அரசியல் உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

வீட்டுக்குத் தொpயாமல் சூரியமல் இயக்க த்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். பின்னர் இது தந்தைக்குத் தெரிய வந்தபோது விவியன் வீட்டில் அடைக்கப்பட்டார். அதையும் மீறி களவாக அரசியல் கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார்.

ல.ச.ச.கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய தந்தையி­டம் அனுமதி கிடைக்­காத நிலையில், இரகசியமாக ஆரம்ப­த்தில் வேலை செய்யத் தொடங்கி, பின்னர் கட்சியில் முழு நேர ஊழியராகப் பணிபுரிந்தார். ல.ச.ச.க­வின் செயலாளராக அன்று தீவிரமாக பணிபுரிந்து வந்த லெஸ்லி குணவர்தன­வுடன் காதல் கொண்டு குடும்பத்தைத் துறக்க வேண்டிய நிலைக்கும் உள்ளா­னார்.

லெஸ்லி-விவியன் தொடர்பை இல்லாமல் செய்வதற்­காக விவியனை வீட்டில் அடைத்து வைத்ததால் லெஸ்லி, விவியனின் தந்தை குணத்தி­ல­க்கவுக்கு எதிராக ஆட்கொ­ணர்வு மனு வழக்கொன்றை தொடர்ந்திரு­ந்தார். அன்று லெஸ்லிக்கு ஆதரவாக வழக்காடியவர், பின்னாளில் ஜனாதி­பதியான ஜே.ஆர்.ஜெயவர்தனாவே. இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் வைத்து விவியனின் தந்தை ”எனது மகள் காதலிக்கும் நபர் தேச விரோதக் கட்சியின் உறுப்பினர். ல.ச.ச.க. ஒரு தேச விரோதக் கட்சி எனப் பேசப்படும் கட்சியாகும். அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்தால் எனது மகளும் தேச விரோத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என்றார்.

அதற்கு விவியன் அளித்த பதிலோ ”அவர் கூறும் தேச விரோதக் கட்சியில் இரகசியமாக நானும் அங்கம் வகித்து வருகிறேன். எனவே ஒரு தேச விரோதக் கட்சியொன்றின் உறுப்பினருக்குக் கிடைக்கக் கூடிய அதே தண்டனையை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே!” என்றார்.

இவ்வழக்கின் இறுதியில் விவியனின் தந்தையை நீதிமன்றம் கண்டித்ததுடன். லெஸ்லி-விவியனின் இணைவை அங்கீகரித்தது.

விவியன்-தந்தை உறவு அத்துடன் முறிவ டைந்தது. விவியனின் தனிப்பட்ட வாழ்க்கையும், தனிப்பட்ட இயல்பும் புரட்சிகரமானவை.

1950இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக­வும், 1956 தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 1964ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு வரையான காலத்துக்குள் உள்ளூரா­ட்சி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சராகப் பதவி வகித்தார். இலங்கை­யின் அரசிய­லில் முதற் பெண் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் விவியனே. 1970ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1977ம் ஆண்டு தேர்தலில் இரத்மலான தொகுதியில் போட்டி யிட்ட போதும் லலித் அத்துலத் முதலியினால் தோற்கடிக்கப்­பட்டார். அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியி­டவில்லை.

1956ம் ஆண்டு மொழிப்பிரச்சினை­யின் போது தமிழ் மொழிக்கும், சிங்களத்துக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனப் போராடிய போது சிங்கள இனவாதிகளால் 'யாழ்தேவி', எனப் பட்டப்பெயர் சூட்டப்பட் டார். அதுபோல '1953ம் ஆண்டு ஹர்த்தால்' போராட்டத்தின் போது தீவிரமாக மக்களை அணிதிரட்டிப் போராடினார். அமெரிக்க தூதராலயத்தின்முன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய போது விவியன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்ப ட்டார். இறுதி வரையும் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடி வந்தவர் விவியன்.

தன் மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் ஐ.தே.க.வினரால் மேற்கொள்­ளப்பட்ட சண்டித்தனங்களை விவியன் தலைமை கொடுத்து முறியடித்த சம்பவங்கள் ஏராளம்.

அன்று ல.ச.ச.கவின் அனுசரணையு­டன் வெளியிடப்­பட்ட 'ஜனதின' பத்திரிகையிலும் தொடர்ந்து சில வருடங்கள் பணியாற்றியிருந்தார்.

அன்றைய காலனித்துவத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நவகாலனித்துவத்­திற்கெதிராகவும் போராடி வந்த விவியன், நிறைவேற்று ஜனாதிபதி முறை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றிற்கெதிராகவும் பிற்காலங்களில் குரலெழுப்பினார். பெண்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளைக் கண்டித்து நடத்தப்­படும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங் களில் விவியனைக் காணலாம்.

பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அறுபதாயிர த்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ”அன்னையர் முன்னணி”யுடன் இணைந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் விவியனின் காரசார­மான உரையைக் கேட்பதற்காகவே பலர் கூடுவர். வயதானாலும் குரலும், அதன் பின்னால் இருக்கும் கருத்தும் உறுதி குலையாது இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் விவியன் ஆற்றிய சேவையை இலகுவில் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எவையுமே பெண்களின் உரிமைக்காக காத்திர­மான பங்களிப்பை இதுவரை செய்யாத­தானது, பெண்களின் பங்களிப்பி லும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மரபு இடதுசாரி அமைப்புகளின் கடைசிக்­காலமான இந்தக் கட்டத்தில் இறுதி­யான புரட்சிக்காரியை இழந்து விட்டோம்.

ஹிட்லரின் சிறையில் தூக்குக்கு அனுப்பப் பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஜலியஸ் பூஷிக் சொன்னதைப் போல ”எமது போராட்டத்தின் சகல நிகழ்வுகளும் பதிவு பெறுவது அவசியம். போராட்டத்தை முன்னெடுக் கும் அடுத்த சந்ததிக்கு அது அவசிய மானது.” என்பது போல விவியனின் வாழ்க்கையும் பதிவு பெறல் அவசியமானது.

(சரிநிகர்-96.ஒக்)

AddThis Social Bookmark Button


பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்:
சில கேள்விகள்....



என்.சரவணன்

''பொ.ஐ.மு. ஆட்சியலமர்வதற்கு பெண்களின் பங்களிப்பு காத்திரமா­னது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு முக்கிய பதவிக­ளையும் பெண்களே வகிக்கின்றார்கள். உலகி­லேயே இலங்கையில் மட்டுமே இப்படியான ஒரு நிலையுள்ளது...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 50 வருடங்களாகப் போகின்ற இந்தத் தருணத்தில் பாராளுமன்றத்தில் பெண்க­­ளின் பிரதிநிதித்துவம் 5.3 வீதமாகவே உள்ளது. எமது நாட்டின் பெண்களுக்கு உள்ள குடும்பப் பொறுப்­புக்கள் காரணமாக இது அதிகரிக்காம­லிருந்தாலும் குறைந்த பட்சம் 25 வீதமாவது பாராளுமன்றத்தில் பிரதிநி­தித்துவம் வகிக்கமுடியுமாயிருந்தால் நல்லது.

கடந்த 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத்திட்ட - மகளிர் விவகாரத் துறைக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான - விவாதத்தின் போது மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்னாயக்க ஆற்றிய உரையிலேயே மேற்படி தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தியிடல்

இவ்வுரையானது அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியானது. சிங்களப் பத்ரிகைகளில், திவய்ன, லங்காதீப ஆகியவற்றில் வெளியான பாராளுமன்ற உரைகளில் ஏனைய ஆண் உறுப்பினர்களின் உரைகள் வெளியாகின. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் கூட வேறு விடயங்கள் குறித்த அம்சங்கள் வெளியாகினவே ஒழிய இவ்விடயம் குறித்தவை வெளியாகியிருக்கவில்லை. தினமின (அரச கட்டுப்பாட்டுக்குள்ளிருப்பது) மாத்திரம் இதனைப் பிரசுரித்திருந்தது. அதற்குக் காரணம் சொல்லப்பட்ட விடயம் பற்றியதற்காக அல்ல. சொல்லிய நபர் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் என்பதற்காகவே.

தமிழ்ப் பத்திரிகைகளிலோ இது குறித்த உரை எங்கும் வெளியாகியிருக்கவில்லை. அதற்கடுத்த நாள் வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கத்தில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.

ஆணாதிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்துமே இச்செய்தியின் முக்கியத்துவத்தை உணராததில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்திதான் என்ற போதும் கூறப்பட்ட விடயம் குறித்து அமைச்சரின் அதே வாதத்­தை அப்படியே ஏற்றுக்கொள்வது இன்னொரு பிரச்சினையாகும்.

காரணம் இந்த 25 வீதம் குறித்தது தான். இந்தக் கோhpக்கையானது ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பைப் பொறுத்தளவில் எதிர்ப்புகளின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சனத்தொகையில் சாpபாதி (அதைவிடவும் கூட) பெண்கள் உள்ள நிலையில் அதே அளவு வீதாசாரத்தைக் கூடக் கோரப்படாததானது ஆணாதிக்கத்துக்கு வெற்றியேயன்றி வேறென்ன?

என்ற போதும் 25 வீதக்கோரிக்கை குறித்து கூட, இது வரை அரச தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை. அது குறித்து பரிசீலிப்பதாகவே கூறியிருக்கிறது. அக்கோரிக்கையை அதிகாரத்தரப்பு ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ஆச்சரியப்படுவ­தற்கில்லை என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கோhpக்கை அதிகாரத் தரப்பிலிருந்து, அதுவும் மகளிர் விவகார அமைச்சரிடமிருந்து வெளிவந்துள்ளமை எல்லோரையும் கூர்ந்து கவனிக்கச் செய்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இக் கோரிக்கையின் அற்பத்தனத்தை அடையாளம் காண எத்தனை பேரின் ஆதிக்க கருத்தியல் இடம் கொடுக்கும்?

அமைச்சர் ஹேமா, சரிபாதி ஜனத்தொகையைக் கொண்ட பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை மட்­டுமே கோருவது மட்டுமல்லாமல் குடும்ப அமைப்புக்குள் பெண்­க­ளுக்குள்ள மரபான பொறுப்புக்களை மறைமுகமாக நியாயப்படுத்துவதையும் கண்டு கொள்ளாமலிருக்க இயலு­மா? அவர் சார்ந்த அதிகாரத்துவம் மிக்க கட்சியினதும், அரசாங்கத்தினதும், அரசினதும் கூடிய பட்ச எல்லை இவ்வளவாகத்தான் இருக்க முடியும்.

அற்பக் கோரிக்கை?

அண்மையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பெண்க­ளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ”in creasing political participation of women through a reservation system” எனும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கி­யிருக்கிறார்கள். அதன்படி அரசாங்க மட்டங்களில், பெண்க­ளுக்கு மூன்றில் ஒரு வீத பிரதிதித்துவக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். 15 வருடங்களுக்கு இது செல்லு படியாக வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இக்கோhpக்கையை முன்கொண்டு செல்ல அணிதிரண்டு வருவதாகத் தொpகிறது. WERC யின் தலைவி செல்வி திருச்சந்திரன் இது குறித்து எமக்கு தெரிவிக்கையில், ”இது குறித்து அரசியற் கட்சிகளு­டன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியாக லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, த.வி.கூட்டணி, ஐ.தே.க. என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கி­ன்றோம். அவர்களைப் பொறுத்தளவில் இக்கோரிக்கையில் எதுவித ஆட்சேபமுமில்லை.” என்றார். அற்பக் கோரிக்கை­க்கு ஆட்சேபமென்ன இருக்க முடியும். (பிரதான கட்சிகளும் கூட இக்கோரிக்கையை அங்கீகரித்துள்ளன என்றால் அதன் அர்த்தம் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்ள இதனை உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்ற கற்பனையினா­லேயொழிய, இக்கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து விட்டார்கள் என்றோ தமது ஆணாதிக்க நிலைப்பாட்­டிலிருந்து மீண்டு விட்டார்கள் என்பதாலோ அல்ல) என்ற போதும் இக்கோரிக்கையும் கூட போதுமான கோரிக்கையாக இருக்க முடியாது.

இக்கோரிக்கை இலங்கையில் எழுவதற்கு பின்புலமாக இருந்தது, இந்தியாவிலும் மூன்றில் ஒரு வீத பெண் பிரதிநிதித்துவ கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதே. இக்கோரிக்கையின் பரப்பு, அது தரப்போகும் நீண்டகால பிரதிபலன், அதன் போதுமான தன்மை குறித்து எந்த வித பரிசீலனையும் இன்றி அதே கோரிக்கையை இலங்கையிலும் பிரதிபண்ணுவதாகவே தெரிகிறது. சரியான புரட்சிகர மாற்று சக்தியேதுமில்லாத நிலையில் பெண்களின் கோரிக்கை­யினை முன்கொண்டு செல்ல பெண்களுக்கென்று கட்சியொன்று இல்லாததன் குறை இங்கு தான் தெரிகிறது.

”25வீதம்”, ”மூன்றில் ஒரு வீதம்” போன்ற கோரிக்கைகள் முன்வைப்பதன் மூலம் உண்மையில் முன் வைக்கப்பட வேண்டிய கோரிக்கையை அற்பத்தனமான கோரிக்கை­யாக்கி, சிறு தேவையாக குறுக்கி விடும் ஒன்றாகவே இதனைக் காண முடிகிறது. இது வரை அரசு சார்பற்ற நிறுவனங்கள் சகல துறைகளிலும் செய்து வருவதும் இதனைத் தான். பிரதான அரசியல் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற போதெல்லாம் அதற்கு வலிந்து போய் தலையிட்டு, தலைமைகொடுத்து சிறு கோரிக்கையாக குறுக்கி விடும் போக்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே உரியன. அப்படியான ஒரு போக்காகவே இதனையும் காண முடியும். இவ்வமைப்புகள் அவ்வாறான கோரிக்கைகளில் கூட உறுதியாக தொடர்ச்சியாக நிற்கும் என்றோ, மிகவும் துடிப்புடன் போராடும் என்றோ நம்பிக்கை வைக்க முடியாது.

இவ்வமைப்பு ”மூன்றில் ஒரு வீத கோhpக்கை”யை எழுப்­பியது ஒரு புறமிருக்க அக்கோரிக்கை 15 வருடங்களுக்கு செல்லுபடியாகும்படி செய்யவேண்டும் என்று கூறியிருப்ப­தானது, மேலும் அதன் தூரநோக்கற்ற, துரோகத்தனமான கோரிக்கையையே வெளிப்படுத்துகிறது.

ஏன் தேவை?

-சனத்தொகையில் சாpபாதியையுடைய பெண்களுக்கு அதே அளவிலல்லவா பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயகம் கூட விகிதாசாரத்தை மறுக்­காதே. இது சமூகத்திலுள்ள சிறுபான்மையோர் சம்பந்தமான பிரச்சனையல்லவே, சம விகிதாசாரத்தையுடையவர்கள் அதிகார­மற்றிருப்பது, மறறும் இன்னொரு தரப்பால் அடக்கு­முறைக்குள்ளாகிக் கொண்டிருப்பது பற்றிய பிரச்சினை. சிறுபான்மையினர் விடயத்தில் கூட கொள்கையளவில் இவ்விகிதாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடிந்த அதிகாரத் தரப்புக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த விகிதாசா­ரத்தைக் கடைப்பிடிக்க முடியாது?

-தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 35 வீதம் இளைஞர்களை (16க்கும் 35க்கும் இடையில்) உட்படுத்துவது குறித்த விதி பிரேமதாச காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இளைஞர்கள் சம்பந்தமான ஜனாதி­பதி ஆணைக்குழுவின் சிபாரிசாகவே இது அறிமுகப்ப­டுத்தப்பட்டது. அவ்வாணைக்குழு ”இளைஞன்”களை மட்டுமே கருத்திற் கொண்டு இப் பிரேரணைகளை முன் வைத்திருந்தது. ஜனத்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினரை மட்டுமேயுடைய தரப்பினருக்கு இவ்வாறான பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்க முடியுமானால் பெண்களுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சினைதான் என்ன? மேலும் மேற்படி இளைஞர் ஒதுக்கீட்டினை ”இளம்” பெண்கள் அனுபவிக்க முடியாமலிக்கும் போக்கையும் அவதானிக்க வேண்டும்.

-உண்மையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதாயின் இக்கோhpக்கை போதுமானதாக இருக்க முடியாது. சமூகத்தில் எப்போதும் குறை விருத்தியையுடைய (குறை விருத்திக்குள்ளாக்கப்­பட்ட) தரப்பினரை ஆகக் குறைந்த பட்சமேனும் மேலே கொண்டு வருவதாயிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆக வேண்டும். உதாரணத்திற்கு அவர்களின் உண்மையான வீதாசாரம் 50 வீதமாக இருக்கிறதென்றால் (குறிப்பிட்ட பத்தாண்டோ பதினைந்தாண்டோ விசேட திட்டத்தின் மூலம்) அதனை விட மேலதிகமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் முலமே உயர்த்தலாம். இதனை அரசியல் கோரிக்கையாக முன்வைப்பதாயிருந்தால் இதனடிப்படையலேயே அமைய வேண்டும். அதை விட்டு 15 ஆண்டுக்கு மூன்றில் ஒரு வீதத்தைக் கோருவதோ, எந்த விதமான பாPசிலிப்புமின்றி இன்னொரு நாட்டை பிரதிபண்ணுவதோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த அரசியற் கோர்க்கையை சொற்ப கோரிக்கையாக எழுப்புவதோ அக்கோரிக்கையை செயலிழக்கவே செய்யும்.

-இலங்கையில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் இது வரை பெண்களின் பிரதிநிதித்துவம் 5வீதத்தைக் கூடத் தாண்டவில்லை. அமைச்சரவையிலும் கூட பெரும்பாலும் ”மகளிர் அமைச்சு ” தவிர்ந்த வேறு அமைச்சுகள் அவ்வளவாக வழங்கப்பட்டதில்லை. பெண்க­ளு­க்கு அமைச்சுக்கள் வழங்கப்படுவது கூட 9 வீதத்தை இது வரை தாண்டவில்லை. சமூக அரசியல் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கும் அரசியல் ரீதியில் அவற்றில் தலையீடு செய்வதற்கும் பெண்களுக்கு உள்ள உரிமை இதுவரை காலம் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்களில் கூட ஆண்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்துவந்த வேளைகளில் அதனை எதிர்க்க பாராளுமன்றத்தில் பலமில்லாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20, 21 ஆகிய திகதிகளில் ”கருக்கலைப்பு” தொடர்பான சட்ட திருத்தங்கள் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது ஆண் பிரதிநிதிகள் முன் வைத்த கருத்துக்களும் அதன் மோசமான முடிவுகளும்.

உருப்படியான புரட்சிகர சமூக மாற்றம் இடம்பெறாத சூழ்நிலையில் இக்கோரிக்கையும் கூட பூர்ஷ்வா கோரிக்கையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டளவிளான வளர்ச்சிக்கு இது இட்டுச் செல்ல உதவும்.

நிச்சயமாக ஆரம்பத்தில் இது உடனடி பிரதிபலனைத் தராது.
சில புரிதல்...

-ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் வாக்களிப்பில் பங்கு கொள்வது மிகவும் குறைவே.

-பெண்கள் கூட பெண்களுக்குத் தான் அல்லது பெண்களது தேவைகள் குறித்து அக்கறைப்படுபவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும் கூறிவிட முடியாது.

-ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு அதன்படி வேட்பாளர் பட்டியலில் பெண்களையும் சேர்த்து தேர்தலில் போட்டியிடச் செய்தாலும் பெண்கள் அதே அளவு வீதாசாரத்தில் தெரிவு செய்யப்படப் போவதுமில்லை. அதே அளவு தெரிவு செய்யப்­படுவதாகக் கொண்டாலும் நிர்வாகத்துறையில் (அமைச்சர­வையில்) அதே விதாசாரம் கிடைக்கப் போவதுமில்லை. அப்படிக் கிடைத்தாலும் பெண்களின் நலன்களுக்கு சார்பாகத் தான் இருப்பார்கள் என்றோ கற்பனை செய்யத் தேவையில்லை.

-மேட்டுக்குடிப் பெண்களே (ஓரளவு குடும்பச் சுமையிலி­ருந்து விடுபட்ட, பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியி­ருக்காத, வர்க்க, சாதிய,மத, இனத்துவ செல்வாக்கு போன்ற ஆதிக்க பண்புகளைக் கொண்ட, பெண்களே) அரசியல் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உண்டு.

ஆனாலும் நிச்சயமாக இது பெண்களுக்கு அரசியல் பயிற்சியை வழங்கும். அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும். அரசியல் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும். இவை பெண்கள் சம வாய்ப்புகளை அடைய முன்நிபந்த­னையாக அமையும். பெண்களை தமது சந்தர்ப்பவாதத்­துக்காக கையாண்டு வரும் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபடவும் இப் பயிற்சி கணிசமான அளவு உதவும்.

முதலாளித்துவ தேர்தல் முறையில் பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு பல சமூகத் தடைகள் உள்ளன. இன்றைய நிலையில் பெண்களுக்கு மரபான ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறை சுமத்தியுள்ள பொறுப்புகள், வன்­முறை மிகுந்த சூழல், பெண்களின் பகிரங்க சமூக நடவடிக்­கைகளை ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டிருக்கும் சந்தேகப் பார்வை, ஒழுக்க மீறலாக அதனைக் கருதும் போக்கு, கலாசார பண்பாட்டு ஐதீகங்கள், போன்றன தடையாகத் தான் இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட நிச்சயம் இக்கோரிக்கைகள் கூட போதுமானதாக இருக்க முடியாது. புரட்சிகர சமூக மாற்றத்தின் மூலமே இதனை வென்றெடுக்க முடியும்.

எவ்வாறாயினும் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதில் ஈடுபடும் எந்த சக்தியும் வரும் கேள்விகளை கவனத்திற் கொள்வது முக்கியம்.
சில கேள்விகள்...

-சகல தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் சமனாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களா? உண்டாயின் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வாக்களிப்பு வீதம் எத்தனை?

-அரசியற் கட்சிகளின் உறுப்பினர்களில் எத்தனை சதவீதத்தினர் பெண்கள்? அரசியற் பணிகளில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது? அத்தகைய பெண்களின் பங்க­ளிப்பை அதிகரிக்கச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கை­களை மேற்கொள்கின்றனவா? அந் நடவடிக்கைகளின் தன்மை எத்தகையன?

-தேர்தல்களின் போது பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் என்ன? வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது தானா? பெண்களின் கோரிக்கைகளை பெண்கள் எவ்வளவு தூரம் முன் வைக்கிறார்கள்? பெண்களின் வாக்களிப்பு வீதாசாரம் என்ன? பெண்களை வெற்றிபெறச் செய்வதில் பெண் வாக்கா­ளர்களின் பங்களிப்பு என்ன? ஆண்களோடு ஒப்பிடுகையில் எத்தனை வீத பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? நிர்வாகத்துறைக்கு தெரிவு செய்யப்படும் பெண்களின் வீதாசாரம் என்ன?

-பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கான தடைகள் எவை? அத்தடைகளை ஏற்படுத்துவதில் சமூக ஐதீகங்களுக்கும், குடும்பச் சுமைகளுக்கும், அரசியற் சக்திகளுக்கும், அரசியற், பொருளாதார சூழலுக்கும், உள்ள பாத்திரம் எவை?

-இவற்றை தாண்டிவர பெண்களுக்குள்ள தெரிவு என்ன?

மேற்படி கேள்விகளுக்கான விடைகளானது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்புக்கு முன்னர் விடை காண வேண்டிய முன்நிபந்தனையான கேள்விகளாகும்.

மற்றும்படி அரசினதும் (அமைச்சாpன­தும்) அரசு சாரா நிறுவனங்களினதும் திடீர் கரிசனைகளைக் கண்டு மலைக்கவோ நம்பிக்கை கொள்ளவோ தேவையில்லை.

(1998 ஜனவரி 18 சரிநிகர்)

AddThis Social Bookmark Button


Wednesday, January 28, 2009

மகளிர் சாசனத்தை
அமுல்படுத்த என்ன தடை?






என்.சரவணன்


சுனிலா அபேசேகர


சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்­ளும் இவர் ஒரு மனித உரிமையா­ளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்­தில் தீவிர செயற்பா­ட்­டாளராக இருந்­தவர். தற்போது பெண்கள் தொடர்­பூடகக் கூட்டமைப்பு (Women & Media Collective ), இன்போர்ம் (INFORM) என்பவற்றின் இயக்குனர்­களில் ஒருவராக இருந்து வருகிறார். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொரு­வராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர். இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.

இம்முறை பெண்கள் தினத்துக்கு நிங்கள் சார்ந்த அமைப்புகள்
என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றன?

இம்முறை நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கூட்டங்கள், கருத்தரங்குகள், கண்கா­ட்சிகள், பட்டறை­கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட­ங்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகள், இன்­னும் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என நிறையவே நடத்தப்படப் போகின்­றன.

இம்முறை உள்ள முக்கிய மாற்றம் என்னவென்­றால், கடந்த பத்து வருட காலமாக பெண்கள் தின நிகழ்ச்சிகள் யாவும் கொழும்பை மையமாக வைத்தே நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடந்த இரு வருடங்களாக, நாடளாவிய ரீதியில் பல நிகழ்ச்சிகள் பல்வேறு பெண்கள் அமைப்பு­களால் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்­பாக அரசு சார்பற்ற பெண்கள் அமைப்புக­ளில் பெரும்பாலா­னவை இம்முறை கொழும்புக்கு வெளியிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

ஒரு புறத்தில் இது ஆரோக்கியமாக இருந்த போதும் மறுபுறத்தில் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய நிலையை இழக்கவும் நேரிடுகி­றது. கொழு­ம்பை மட்டுமே தொடர்பூடக­ங்கள் அனைத்­தும் கவனம் செலுத்து­கின்ற நிலையில் கிராம மட்டத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி­களை வெளிக் கொணர முடிவதில்லை. தேசிய ரீதியில் தாக்­கத்தை ஏற்படுத்தக் கூடிய வகை­யில் இத்தினத்தில் நடத்தப்­படும் செயற்­பாடுகள் அமைய வேண்டுமெ­ன்றே நான் விரும்புகிறேன்.


இந்த முறை பெண்கள் தினத்துக்காக கோஷமாக
பெரும்பாலும் என்னென்ன முன்வைக்கப்பட்டுள்ளன?

பெரும்பாலும் 'சமாதானமும், ஜனநாய­கமும்' பற்றியே கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.



மூன்று வருடங்களுக்கு முன் பெண்கள் தினத்துக்கு சகல பெண்கள் அமைப்புகளும் சமாதானத்துக்காக பெண்கள் அமைப்புடன் (women for eace) சேர்ந்து யுத்தத்துக்கு எதிராக கறுப்பாடைப் பெண்கள் ஆர்பாட்டத்தை நடத்தியிருந்தன. யுத்தத்தின் கொடூரத்தால் பெண்கள் மேலும் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஏன் அந்த ஆர்பாட்டத்தை கைவிட்டீர்கள்.

இஸ்ரேல், பொஸ்னியா, யூகோஸ்லா­வியா போன்ற நாடுகளில் யுத்தத்துக்கு எதிராக பெண்கள் அணி திரண்டு நடத்தி வந்த Women in Black எனும் ஆர்ப்பாட்ட­த்தை அனு­ப­வமாகக் கொண்டு இலங்­கையிலும் அத்தகைய ஆர்ப்­பா­ட்டத்தை பெண்கள் அமைப்புகள் செய்தன. ஆனாலும் யுத்தத்துக்கு எதிரான கோஷம் தற்போது தான் முன் வைக்கப்பட்­டது என்றில்லை. 83 க்குப் பின்னர் பல பெண்கள் அமைப்புகளின் முக்கிய கோஷங்களில் ஒன்றாக ”யுத்த எதிர்ப்பு” என்பது இடம்பெற்று வருகின்றது. இம்முறை கூட பெண்கள் அமைப்புகள் பலவற்றின் செயற்பாடுகள் யுத்த எதிர்ப்­பையே மையமாகக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இதில் உள்ள விடயம் என்னவெ­ன்றால் யுத்த எதிர்ப்பு உணர்வோ, அல்லது சமாதான அபிலாஷையோ எவ்வ­ளவு தான் இருந்தபோதும், எவருக்கும் நடைமுறையில் எப்படி இந்த சமாதானத்­தைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்து சரியான தெளிவில்லை. மேலும் 80களில் இருந்து பெண்கள் அரசியல் தீர்வை கோரி நிற்கின்றனர். ஆனால் இன்று அரசியல் தீர்வு யோசனையாக அரசாங்கத்தின் தீர்வு யோசனை­யையே கொள்கின்றனர். வேறு எந்த வித அரசியல் யோசனைகள் குறித்­தும் எந்த வித பேச்சுமேயில்­லையே. இன்று அரசியல் தீர்வு யோசனையை வேண்டி நிற்கின்றோம் ஆனால் அது அரசாங்­கத்தின் யோசனையாகத் தான் இருக்க வேண்டுமென்றில்லை.

சிடோ குறித்த அனுபவத்தையும், அதன் இன்றைய நிலையையும் வாசகர்களுக்கு விளக்குவீர்களா

சீடோ (CSDAW) என்பது ஐ.நா.வின் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஆக்கப்பட்டுள்ள ஒரு சர்வதேச பிரகடனம். அது ஒரு சாசனம். இச்சாசன­த்தை இலங்கையும் அங்கீகரித்து கைச்சாத்திட்­டுள்ளது. கையெழுத்திட்ட நாடுகளில் இச்சாசனத்­தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்­கள் குறித்த வளர்ச்சி என்ன? பெண்களால் அதனை அனுபவிக்க முடிந்­ததா? முடியாவிட்டால் அதற்கென்ன காரணம்? அதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் எவை? போன்றவை குறித்து நான்காண்­டுகளுக்கு ஒரு முறை ஒரு அறிக்கையை அளிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்த நாடுகளுக்கு உண்டு.

இலங்கை அரசாங்கம் அப்படி இது வரை அளித்து வருகிறதா?

இறுதியாக 1992ஆம் ஆண்டு இலங்கை அரசு அறிக்­கையை கையளித்திருந்தது. அது கூட அப்போது மிகவும் பிந்தியிருந்தது. அடுத்த அறிக்கையை 1995இல் கையளி­த்திருக்க வேண்டும். ஆனால் 1995ஆம் ஆண்டு பீஜிங்கில் நடத்தப்பட்ட நான்கா­வது சர்வதேசப் பெண்கள் மாநாட்டுக்­காக அரசாங்கம் தயாhpத்திருந்த அறிக்கையின் பிரதியை­யே சீடோவுக்கான அறிக்கையா­கவும் கையளித்திருந்தது. இவ்வாறு அறிக்கை கையளி­த்த பின் அரசாங்கத்தின் பிரதிநி­திகள் அவ்வறி­க்கை குறித்து சீடோ கமிட்டி முன் விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இது வரை அரசாங்கம் இவ்வறி­க்கை குறித்து விளக்கமளிப்பதற்காக சீடோ கமிட்டி முன் செல்லவில்லை. சில வேளை இந்த வருட மத்தியில் அரசாங்கம் சீடோவின் முன் செல்லுமென எதிர்பார்­க்கிறோம்.

1992ஆம் ஆண்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றி­ணை­ந்து ஒரு ”மாற்று அறிக்கை”யை கையளி­த்திருந்தன. இவ்வ­றிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கப் பிரதிநிதிகள் சீடோ கமிட்டியை சந்தித்த வேளையில் பல கேள்விகளை எழுப்பியி­ருந்தனர். எனவே தான் அரசாங்­கம் பல விடயங்கள் குறித்து சீடோவின் முன் உறுதிமொழிகளை அளிக்க நேரிட்­டது. குறிப்பாக நாங்கள் குறிப்பிட்டிருந்த விடய­ங்களில் திருமணத்துக்கான குறைந்­தபட்ச வயது 12 என்பதை எதிர்த்திருந்­தோம். அதன் பின்னர் 16 வயதாக சட்டத்­தை மாற்றியது அரசாங்கம். இம்முறை அரசு சார்பற்ற அமைப்புகள் இம்முறை மாற்று அறிக்கையொன்றுக்கான தயாhpப்புகளில் தீவர கவனமெடுத்து வருகின்றன.

இம்முறை தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கையில் முக்கியமாக என்னென்ன விடயங்களை முன்மொழிந்திருக்கிறீர்கள்?

உதாரணத்திற்கு சுகாதார விடயத்தை எடுத்துக் கொண்டால் சுகாதாரத்துறைக்கு அரசின் நிதியொதுக்கீடு வரவர குறைந்து போதல் மற்றும் உலக வங்கியின் ஆலோச­னையின் காரணமாக சுகாதாரத்துறையை தனியார் மயப்ப­டுத்தி வருவதன் விளைவா­கவும் பெண்களின் நலன்களுக்­கான மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட பல மருத்துவ மையங்களிலிருந்து பெண்கள் பெற்றுவந்த வசதிகள் அனைத்தும் குறைக்கப்பட்டு பறிக்கப்­பட்டு, வருகின்றன. மருத்துவ வசதிகள் குறைக்கப்­படும் போது குறிப்பாக பெண்களே பாதிப்புக்குள்ளாக்­கப்படுவது பற்றி சொல்லித் தெரியத் தேவையில்லையே.

குழந்தைகளின் சுகா­தார நிலைமைகளும் கீழே விழுமல்லவா? இலங்கையில் குறைந்த எடையுடன் பிறக்­கும் குழந்தைகளின் எண்ணிக்கை அண்மை­க்காலமாக வேகமாகவே அதிகரித்து வருகிறது. குழந்தை­கள் குறைந்த எடையில் பிறப்பதற்கான காரணம் தாயின் மந்தபோசனமும், இரத்தக் குறைவுமே. குழந்தை தாயின் வயிற்றிலிருக்கையில் தாய் மந்தபோச­னத்தால் பதிக்கப்ப­டுவது என்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் ஒன்றாகும். எடை குறைவாகப் பிறக்கும் குழந்தை­கள் பல சந்தர்ப்பங்களில் இறக்கவும் செய்கின்றன. இலங்­கை­யில் இப்படி சிசுமரண வீதம் அதிகரித்துக் கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணம். அறிக்கையில் இவை குறித்து விhpவாகக் குறிப்பி­ட்டுள்ளோம். அது தவிர இலங்கையில் சட்ட விரோத­மான கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. கருக் கலைப்பு காரணமாக மரணிக்கும், உடல் அங்கவீனங்­களுக்கு உள்ளாகி வரும் பெண்களின் எண்ணிக்கை எமது நாட்டில் அதிகம். அடுத்தது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் சரியான முறையில் ஒப்பந்த அடிப்படையில் செல்ல முடியாததன் விளை­வாக அனுபவித்து வரும் கொடுமைகள் தொடர்பானது.

இதில் அரசாங்க­த்தின் தலையீடும், கண்காணிப்பும், பராமரிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களின் பிள்ளை­கள் வளர்க்கப்படுவ­தற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்நாட்டுக்கு அதிகளவு செலா­வணியைப் பெற்றுத் தரும் இப் பெண்கள் குறித்து கூடிய அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மேலும் இன்றும் விவசாயத்துறையில் ஆண்களு­க்கு சமமான சம்பள­த்தை பெண்கள் பெறுவத­ற்கான வாய்ப்புகள் இல்லை. விவ­சாய­த்துறை பெருமளவு தனி நபர்களி­டம் தங்கியிருப்பதால் சமசம்பளம் என்பது சாத்தியப்படாமல் உள்ளது. எனவே அரசாங்கத்தின் கவனமும் ஈடுபாடும் இது குறித்து இருக்க வேண்டும். இது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

சீடோவுக்கான அரசாங்கத்தின் அறிக்கையில் காணப்படும் விடயங்கள் என்ன?

அரசாங்கம் பெண்களின் உண்மை நிலையைக் குறிப்­பதை விட, தனது சாதனைகளைக் கூறும் வகையிலேயே அறிக்கை தயாரித்திருக்கும். இலங்கை மட்டுமல்ல உலகின் பல நாடுகள் இப்படித் தான். எனவே தான் எமது அறிக்கை இந்த இடத்தில் முக்கிய பெறுமதியைத் தருகி­றது.

பெண்கள் சாசனம் இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறப்படாதிருப்பதற்கு என்ன காரணம்?

உண்மை தான் பெண்கள் சாசனம் ஒரு அரச கொள்கை­யாக மாத்திரமே உள்ளது. இது 1993இல் பாராளுமன்றத்தால் அங்கீகாரிக்கப்பட்டது. இது மிகவும் நல்லதொரு ஆரம்பம். இது சீடோ பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரச மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல சேர்ந்து தயாரித்தது. சாசனத்தைப் பேணுவதற்­காக பெண்கள் தேசியக் கமிட்டி எனும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவுக்கு சாசனத்தை நடைமுறைப் படுத்­தவோ அல்லது அந்த சாசனம் மீறப்ப­ட்டது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்­கவோ அதற்கு அதிகாரமில்லை. அப்படி­யொரு அதிகார­மிக்க பெண்கள் ஆணைக் குழு­வொன்று நியமிக்கப்படு­மென்று சாசன­த்தில் கூறப்பட்டாலும், இன்று வரை அப்படி­யொ­ன்று நியமிக்கப்படவில்லை. சாசனம் என்பது வெற்றுக் கடதாசியாகவும், தேசிய பெண்கள் கமிட்டி என்பது வெறும் பரிந்து­ரைகளை மட்டும் செய்யும் ஒன்றாகவுமே இருந்து வருகிறது.

ஆனணக்குழுவை அரசாங்கம் நியமிப்பதில் இருக்கம் தடைகள் எவை?

எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் அக்கறை இருப்பதா­கவும் தெரியவில்லை. பெண்கள் அமைப்­பு­கள் கூட இதனை நியமிக்கும்படி கோருகி­ன்ற எதுவித நிர்ப்பந்தங்களையும் அரசுக்கு ஏற்படுத்துவதாகத் தெரியவி­ல்லை. சாசன­த்தை அமுல்படுத்த ஆணை­க்குழு அவசிய­மென்பது பல பேருக்குப் புரியவில்லை . இது வரைக்கும் பெண்கள் அமைச்சு என தனியான ஒன்று இருக்கவி­ல்லை. ஏதாவது ஒரு அமைச்சுடன் இணை­ந்தே இருந்து வந்திருக்­கிறது. ஆகவே பெண்கள் விடயத்­தில் தனியான அக்கறை காட்டுகின்ற அரச யந்திரம் இருக்கவி­ல்லை. ஆனால் இறுதி­யாக நடந்த அமைச்­சரவை மாற்றத்தின் போது பெண்கள் அமைச்சு தனியான ஒன்றாக ஆக்கப்­பட்டது. இவையெல்­லாம் நல்ல விடயங்கள்.

தற்போது பெண்கள் சாசனம் மிகவும் முன்னேறிய ஒறாக கூறப்பட்டு வருகின்ற அதே வேளை அதில் இன்னும் பல குறைகள் இருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக பெண்களின் பாலியல் தெரிவு (ஒரு பால் உறவு), குடும்ப வன்முறைகள் குறித்த சட்ட நடவடிக்கைகள் எடக்க முடியாத, குடும்ப அமைப்பு முறையை பேனுவதற்குரிய அம்சங்கள் எனபன சிக்கலாகனவையாக இருக்கின்றனவே?

பல வித குடும்ப மாதிரிகள் இன்று முன்வைக்­கப்படு­கின்றன. இந்தச் சாசனத்­தில் எந்த வித குடும்ப மாதிரிக்கும் பொருந்­தக் கூடிய விதத்தில் இச்சாசனம் அமைக்­கப்பட்டுள்ளதாகவே எனக்குப் படுகிறது. மற்றும்படி குடும்ப வன்முறைகள் குறித்த விடயங்களில் சாசனத்தில் கூறப்பட்ட விடயங்கள் சிக்கல்களைத் தருவனவா­கவே இருக்கின்றன.

இன்றைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைவிட முற்பொக்கானது, சகல விடயங்களிலும் ஒரு மாற்று அரசாங்கமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அரசாங்கம். பெண்களின் நலன்களில் கூட அது சிறப்பாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த குறைந்த ஆண்டுகளுக்குள் இந்த அரசாங்கம் பெண்கள் நலன்களை அதிகளவு மீறியிருப்பதாகக் கொள்ளலாமா?

எந்தவொரு அரசாங்கமும் பெண்கள் தொடர்பான வாக்­குறுதிகளை அளிப்பது ஒன்றும் கடினமானதல்ல. காரணம் அதற்­­கெதிர்ப்பு தொpவிக்­கும் நிலை இல்லை. கடந்த காலங்­களில் ஐ.தே.க. அரசாங்கம் தனது ஜனநாயக விரோத போக்குக­ளால் பறி போன புள்ளிகளை இந்தப் பெண்கள் சாசனம் போன்றவற்றை முன்வைத்ததனூ­டாக சர்வதேச அளவில் பெற்றுக்கொண்­டது. இது அரசியல் ரீதியில் அவர்களுக்கு சாதகமாகப் போனது. அரசாங்கத்தின் கவனம் முழுவதும் நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளில் மையப்படுத்தப்­பட்டு வருவதால் பெண்கள் பிரச்சி­னையென்பது அவர்களின் அக்கறைக்கு­ரியதாக இல்லை. அதே வேளை பெண்கள் பிரச்சினை குறித்து இந்த அரசாங்கம் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் நல்லவை­யாகவும் radical ஆகவும் இருந்த போதும், அவை விவாதத்துக்குரிய ஒன்றாக மாறும் என நம்புகிறது. குறிப்பாக கருக்கலைப்பு உரிமை, விவாகரத்து கோருகையில் காணப்படுகின்ற சிக்கல்­கள், குடும்பத்துக்­குள் காணப்படும் பாலி­யல் பலாத்காரங்கள் என்பன இன்றும் சிக்கலுக்குரிய­வையாகவே உள்ளன. 1995 செப்டம்பரில் தண்ட­னைக் கோவை சட்ட திருத்த விவாதத்தில் கருக்கலைப்பு பற்றிய விடயம் குறித்து எவ்வளவு எதிர்ப்புகள் காணப்பட்டன என்பது தெரியும் தானே.

அப்படி அக்கறையுள்ள அரசாங்கத்தால் ஏன் பெண்கள் ஆனணக்கழுவை நியமிக்க முடியாமல் போனது?

ஆணைக்குழுவை நியமிப்பதில் வேண்டுமென்றே தள்ளி வருகிறது எனக் கூற மாட்டேன். ஆனால் அசட்டையாகவே இருந்து வருகிறது என கூறலாம். அரசாங்­கம் யுத்தத்தில் காட்டி வரும் ஆர்வத்தின் முன்னால் இது போன்ற விடயங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு வருகின்றன. முன்னைய அரசாங்க­த்தின் மீது பெண்கள் அமைப்புகளுக்கு இருந்த எதிர்ப்புணர்வு காரணமாக பல கோரிக்கைகளுக்­காக பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடி­னார்கள். எப்படியோ அவ்வரசாங்கத்தோடு ஒருவித தொடர்பு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமா­கவோ என்னவோ அரசுடனான ஒரு கருத்­தாட­லைக் கூட காண முடியாதுள்ளது. இது ஒரு சிக்கலுக்குரிய விடயம். கருக்கலைப்பு குறித்த பாராளுமன்ற விவாதம் தொடர்பாக கூட அதற்கு வெளியில் எந்தவித நிர்ப்ப­ந்தமும் பெண்கள் அமைப்புகளால் செய்யப்­படவில்லை. இது எம்மிடமே உள்ள பெரிய குறைபாடு. இதனை சுயவிமர்சனமாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத்தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?

இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவா­கவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுக­ளில் காணப்பட்டு வரும் மாற்றங்­களையும் நாம் கவனத்தில்­கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பா­டானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்­கைகளு­க்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படு­கிறத­ல்­லவா? சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்­களை எம்மால் மாற்றத்துக்குள்­ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமா­கவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திக­ளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரி­கையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்­காக போராடுபவர்களுமே காணப்படுகின்­றனர் என்றே நான் கருதுகிறேன்.

நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?

ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோ­தும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்ற­னர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கி­றேன். சோஷ­லிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.

நீங்கள் ஜே.வி.பி.யின் சோசலிச மகளிர் சங்க்தில் இருக்கவில்லையா?

இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்­றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த RedPower பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்­குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கி­றேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிரு­க்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பி­ருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.

ஜே.வி.பி.யுடன் இணைவதற்க்கு உந்துதாக இருந்த சூழலை விளக்குவீர்களா?

நான் இன்றும் நம்புகிறேன். இலங்கை­யில் தீவிர இடதுசா­ரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமி­ருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமெ­ன்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சி­யில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்­குழுவின் விசாரணை­களின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடை­யாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைக­ளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலை­யான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.

ஜே.வி.பி.யிலிருந்து ஏன் விளகினீர்கள்?

ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சி­னைகளும் எனது விலகலுக்குக் காரணமா­கியிருந்தன. அதை விட தொடர்ந்­தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பா­னது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீன­மாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்க­ளின் வழிநடத்தலிலேயே, அவர்­கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்தி­ரை குத்தப்பட்­டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்த­தால் இது இம்முத்­திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திரு­க்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்தி­ருந்­ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றிருந்த வேளையில் அங்கு நடத்தப் பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்­களை அழைத்­திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார். அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படுத்தி அபாண்­டமான குற்றச்சாட்­டுக்கள் சுமத்தப்­பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரை­யும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்­திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினை­களை மூடிமறைத்துக் கொண்டே வருகி­றது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்­குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போ­டியப் போராட்டத்தைஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னி­டம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபன­ங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்க­ளைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்­தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி­யான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொ­டுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.

இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்­காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்­களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்ப­டுவதாகத் தெரியவில்லை. பொரு­ளாதார விடுதலை­யிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துட­னேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்ப­தாகத் தெரியவில்லை.

இன்று லெஸ்பியன் உறவுகள் (ஒருபால் உறவு) பெண்ணியத்தில் மிகவும் சர்சைக்குரியதாகவும், விவாதம் மிக்க ஒன்றாகவும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவுகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில் உங்கள் கருத்தென்ன?

நடைமுறையில், இலங்கை சமூகத்தில் கூட பெண்கள் பெண்களோடேயே நெருக்க­முற்றுள்ளனர். ஆண்கள் ஆண்களோ­டேயே நெருக்கமுடையவர்க­ளாக இருக்கி­ன்றனர். சிறு வயதிலிருந்தே விளையா­டும் போதும் பழகும் போதும் உறவுகள், தொடர்­புகள் என எல்லாமே அந்தந்த பாலாரைச் சார்ந்தவர்­க­ளோடேயே வரையறுக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இலங்கைச் சமூகத்­தில் இதனை அதிகளவு காணலாம். எமது பாடசாலை­களும் கூட தனித் தனிப்பாலாரு­க்கென மட்டுப்படுத்தப்பட்டே இருக்கி­ன்றன. மறு பாலாருடனான உறவுக்குரிய வாய்ப்புகள் எல்லைப்­படுத்தப்பட்டே இருக்கின்றன.

பாடசாலை விடுதிகள் மற்றும் வேலை செய்யும் பெண்கள் விடுதிகளில் பெண்க­ளோடேயே வசிக்கின்­றனர். ஆண்கள் ஆண்களோடேயே வசிக்கின்றனர். இவற்­றை ஒரு போதும் ஒரு பாலுறவு எனக் கொள்வதில்லை. சிலவேளைகளில் அவர்­களில் ஒரு பால் உறவு இருப்பவர்கள் உள்ள சந்தர்ப்பங்களில் அதனை ஒரு வித்தியா­சமாக உணருவதில்லையே. மேற்கு­லக நாடுகளில் மறு பாலாருடனான உறவுகள் பிரச்சினை­க்குரிய ஒன்றாக இல்லை. எனவே தான் சில வேளைகளில் ஒத்த பாலாருட­னான உறவுகள் வளர்கின்ற போது அது பிரச்சினைக்குரிய ஒன்றாக தோன்றுவதை­யும் நாம் கவனிக்கலாம். நமது சமூகத்தில் கூட சமூக உறவு என்பது ஒத்த பாலாருட­னேயே உள்ளது. எனவே இதன் தொடர்ச்­சியாகவே நாம் ஒத்த பாலுறவையும் பார்க்க வேண்டும். தனிச் சொத்தாகவே பெண்ணைப் பார்த்து வந்த ஆணாதிக்கத்­துக்கு பெண்ணை இன்னொ­ரு ஆண் மட்டுமல்ல பெண்ணின் மீது இன்னொரு பெண் அன்பு வைப்பதையும். பாலுறவு கொள்வதையும் ஒரு வேண்டப் படாத போக்காகவே ஐதீக­மொன்றை வளர்த்து விட்டுள்ளது என்றே நாம் கொள்ள வேண்டும்.

இலங்கையில் பெரும்பாலான பெண் பிள்ளைகளி­டம் உங்கள் நெருங்கிய நண்பர் யார்? யாரோடு ஒளிவுமறைவின்றி பேச முடிகிறது? யாரோடு அழ முடிகிறது? என கேட்டோமா­னால் அது பெரும்பாலும் இன்னொரு பெண்ணாகத் தான் இருக்கும். இதனை உங்களால் உணர முடிகிறதா? எனது உள்ளத்தைப் பகிர்ந்து கொள்வது இன்னொரு பெண்ணோடு என்றால்? பாலியல் உறவு என்பது மிகவும் சொற்பமான ஒன்றல்­லவா? சமூகம், ஒத்த பால் இணைவாக (Homo Social) இருக்கையில் ஒத்தபாலுற­வாக (Homo Sexual) ஏன் இருக்க முடியாது? எப்போதாவது ஆண்-ஆணோ­டும், பெண்-பெண்ணோடும் உள்ள உறவுக்கு சமூக அளவில் அல்லது சட்ட அளவில் இடையூறு­கள் வந்தால் அந்த வேளை நாங்கள் அதற்கெதிராக செயற்பட வேண்டி வரும். அப்போது லெஸ்பி­யன்களது (Lesbian) உரிமைகளுக்காகவும், கே (Guy) உரிமை­களுக்­காகவும் பகிரங்கமாகப் போராட வேண்டிவரும்.

லெஸ்பியன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்புகள் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது?

துரதிருஷ்டவசமாக இலங்கையில் பெண்கள் தொடர்பூ­டகக் கூட்டமைப்பி­னைத் தவிர லெஸ்பியன் உரிமைகள் குறித்து பேச ஒரு அமைப்பும் இல்லை. அது கூட இதனை வெறும் சஞ்சிகையில் எழுதுவ­தோடு நிறுத்தி விடுகின்றதே ஒழிய அவ்வுரிமை­க்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கின்ற அமைப்பாக இல்லை. தான் ஒரு லெஸ்பியன் என கூறிக்­கொள்­கிற பெண்ணிலைவாதிகளை கூட எம்மால் காணமுடி­வதில்லை. அப்படி சொல்வதை ஏற்றுக் கொள்வதற்குரிய சமூகச் சூழல் கூட வழக்கில் இல்லை.

இன்று வரை ஒரபாலுறவு என்பது ஒரு கிரிமினல் குற்றமாக அல்லவா காணப்படுகிறது?

ஆம் ஒருபாலுறவு என்பது சட்ட ரிதியில் தடை செய்யப்­பட்ட ஒன்று. ஆனால் நடை­முறையில் அது தடுக்கக்கூடிய ஒன்றா? பகிரங்கமாக இவை நடப்பதில்லையே? பொலிஸார் என்ன இதனை பிடிப்பதற்கு வீடுவீடாக டோச் அடித்துக் கொண்டா செல்ல முடியும்? பெரும்பாலும் ஆண்களு­க்கு ஒருபாலுறவில் ஈடுபடுவதற்கான சந்தர்­ப்பங்கள் அதிகம். பெரும்பாலும் மலசல­கூடங்களில், கடற்க­ரைகளில்... இப்படி­யாக. பெரும்பாலும் கைது செய்யப்பட்டுள்ள இடங்களைப் பார்த்தால் இப்படித் தான் இருக்கும். பெண்கள் - பெண்களென்பதா­லேயே அந்தளவு சந்தர்ப்பங்கள் இல்லை. எனவே பெண்களை பகிரங்கமாக கண்டி­ருக்க வாய்ப்புகள் இல்லை. நீங்கள் பாதைகளில் பார்த்தால் கூட பெண்கள் பெண்களுடன் கைகோர்த்துச் செல்வதை­யும் ஆண்கள் ஆண்களின் தோளில் கைபோட்டுச் செல்வதையும் பார்க்க­லாம். ஒரே கோப்பையில் உண்ணுவார்கள். ஒரே படுக்கையில் உறங்குவார்­கள். மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள் இதனைக் காணும் போது உடனேயே Homo Sexual என நினைப்பா­ர்கள். ஆனால் இது Homo Social. சில வேளை எமது சமூகத்­தில் நிலவிவரும் Homo Social ஐ விளங்கிக் கொண்டால் எம்மால் அது எப்படி Homo Sexual ஆக மாறுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோமென்றால் பாலியல் விடயத்தில் நெருங்குவது ஒன்றும் பிரச்சினைக்­குரிய ஒன்றல்ல. இதிலிருந்து ஒருபாலுறவுக்கு சிறு இடைவெளியொன்றே உள்ளது.

இதற்கெதிரான கருத்துகள் எங்கிருந்து வருகின்றது என நினைக்கிறீர்கள்?

பெரும்பாலும் மதங்களிலும், ஆணாதி­க்க தனிச்சொத்­தாக பெண்களை நோக்கு­கின்ற கருத்தியலிலிருந்துமே இது தொடங்­குகிறது. மேலும் யோனி மைய வாதம் ஒரு குறிப்பான காரணம். பாலுறுப்புகள் என்பது கருவுறுவாக்கலுக்கு பயன்பட வேண்டி­யவை. ஆனால் அதுவல்லாத பாலுறவு என்பது சமூக ஐதீகத்துக்குப் புறம்பானது என்ற கருத்தே வேறூன்றியுள்ளது.

மேலும் எப்போதும் பாலுறுவின் போது கூட ஆண்களின் அதிகாரத்துவ பாலுறவு நிலவி வருகிறது. ஆண்களுக்கு தேவை­யான போது, பாலுறவுக்குத் தயாராயிருத்­தல், ஆணின் தேவைக்­கிணங்க வளைந்து கொடுத்தல் என்பன சாதாரண­மாக நிலவு­கின்ற விடயம். எனவே தான் இப்படியான போக்குக்கு ஆணாதிக்கம் பயப்படுகிறது. இது ”ஆண்மை”­க்கே சவாலான ஒன்றாக பார்க்க வைக்கிறது. ”Whether you are homo sxual man or you are a Lesbian you challenge male image” ஆணதிகாரத்­துக்கே சவாலான ஒன்றாக கருதப்ப­டுகிறது. நாங்கள் மாற்று குடும்ப அலகு குறித்துப் பேசுவதாயிருந்தால், மாற்று கலாசார கட்டமைப்பு குறித்து பேசுகிறோம் என்றால் ஏன் மாற்று பாலுறவைப் பற்றிப் பேச பின்நிற்கிறோம்?

(சரிநிகர் 1998 மார்ச்)

AddThis Social Bookmark Button


அப்படிப்பட்ட ஒரு விடுதலை
எனது மகனுக்கு தேவையில்லை!
-சீலவத்
தி-



நேர்காணல் - என்.சரவணன்

சீலவத்தி டி சில்வா

1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல.
ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அறிமுகப்படுத்துகி­ன்ற நோக்கில் அவர் பற்றிய அறிமுகமும் சிறு உரையாடலும் இவ்விதழில் பிரசுரமா­கிறது.

அவர் இப்போது இல்லை என்றே பரவலான கதை நிலவி வந்தது. ஆனால் ஒஸ்மன் டி சில்வாவிடம் நேர்காண­லொ­ன்றை செய்வதற்­குச் சென்றிருந்த வேளை அவரது தாயார் இன்ன­மும் இருக்கின்ற தகவலை அறிய முடிந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் ”இது தகர்த்தெறி­யப்பட வேண்டிய சமூக அமைப்புமுறை” என உறுதியாகக் கூறுகிறார் அவர்.

அன்று தொடக்கம் இன்று வரை ஜே.வி.பி.யினர் மத்தியிலும் இடதுசாரிப் பெண்கள் மத்தியிலும் மதிப்பு மிக்கவராக விளங்கிவரும் தோழர் சீலவத்தியை வட­கொரிய புரட்சிகரத் தலைவரின் தாயார் ”கம்பொங்ஷொக்” என்ற பெயரில் ஜே.வி.பி.­யினர் அழைத்து வந்தனர்.

1923 டிசம்பர் 24ஆம் திகதி கொழு­ம்பு-பொரல்­லையில் பிறந்த இவாpன் பெற்­றோர், ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற் கட்சி­யின் ஆதரவாளர்கள். 1940இல் தள்ளு வண்டி­களை சொந்தமாக வைத்து வாடகைக்கு கொடுத்து வந்த வில்பிரட் சில்வாவை இவர் மணந்தார்.

30களில் மலோpயா காய்ச்சல் பரவிய­போது, மலோpயா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சமசமாஜக் கட்சியினாpன் பிரச்சாரத்தால் கவரப்பட்டு தம்பதியர்கள் இருவரும் அரசியலில் ஈடுபாடு காட்டினர். இரண்டாம் உலக மகா யுத்தக் காலப் பகுதியில் சமசமாஜக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தடை செய்யப்பட்­டிருந்தது. சம சமாஜக் கட்சியின் செயற்பா­டுகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்­கொள்ளப்பட்டு வந்தன. இரகசியப் பிரச்சார வேலைகளிலும் கட்சியின் உத்தியோகபூர்­வமான ஏடான ”சமசமாஜய” பத்திரிகையை இரகசியமாக விநியோகிப்பது போன்ற வேளைலகளில் தோழர் சீலவத்தி ஈடுபட்டு வந்தார். கால்களில் பத்திரி­கைகளை சுற்றி வைத்து இரப்பர் போட்டு விழாதபடி வைத்துக்கொண்டு வெளித் தெரியாதபடி சேலைய­ணிந்து செல்வாராம் இவர்.

1942 இல் இவர் கொம்யூனிஸ்ட் கட்சி­யு­டன் இணைந்து கொண்டார். உள்ளுரா­ட்சித் தேர்தல்களின் போது பீட்டர் கெனம­னின் வெற்றிக்காக கடுமையாக உழைத்­தார். பேர் பெற்ற டிராம் வண்டித் தொழிலாள­ர்­களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது வீதி மறியல் செய்தனர் பெண்கள். அப்பெண்களுக்கு தலைமை தாங்கியவர்­களில் சீலவத்தி, மல்லிகா, சோமா போன்ற­வர்கள் முக்கியமான­வர்கள். இரண்டாம் யுத்த காலப்பகுதியின் பின் சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் விடுத­லையாகி வந்த­னர். அதன் பின் கட்சியின் வேலைக­ளைப் பகிரங்கமாக நடத்த முடிந்­ததால், சீலவத்தி தனது பிரதேசமான வனாத்த­முல்ல பகுதியில் ல.ச.ச.க.வின் மாபெரும் பகிரங்கக் கூட்ட­த்தை நடத்துகின்ற ஒழுங்குகளை மேற்கொண்டார். பின்னர் ல.ச.ச.க. தலைமை தாங்கிய லிப்டன் கம்பனி, பொஸ்டட் கம்பனி, கொமர்ஷல் கொம்பனி போன்ற வேலை நிறுத்தப் போராட்டங்க­ளிலெல்லாம் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

1953 ஹர்த்தால் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு என்பது வரலாறு காணாத ஒன்று என்பதை யாரும் அறிவர். வீதிகளை மறித்து மறியல் போரா­ட்டம் செய்த போது அரசாங்கம் வலுக்கட்­டா­யமாக வாகனங்களை செலுத்தி­யது. அதனை தடுப்பதற்கென வீதிகளில் கிடையாக குழி தோண்டுதல், மற்றும் வாகனங்­களை சேதப்படுத்துதல போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்ட­மிடப்­பட்டிருந்தது. அதற்காக வெடி குண்டு­கள் கூட தயார் படுத்தப்பட்டிருந்தது. அப்ப­டி­யான தயாரிப்புகளில் தோழர் சீலவத்தி­க்கும் பங்கிருந்தது.

சீலவத்தி அரசியல் ரீதியில் நிறைந்த அனுபவங்­களைப் பெற்றிருந்த வேளை 1963, 1964களில், இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டுவது குறித்து தீர்மானம் நிறை­வேற்றிய போது லெஸ்லி குணவர்தனவுடன் சேர்ந்து நடுநி­லைமை வகித்தார். ஆனால் அது எவ்வளவு தவறான நிலைப்பாடு என்பதை பிற்காலத்­தில் உணர்ந்ததாகத் தெரிவிக்கி­றார்.

படிப்படியாக தான் சார்ந்த கட்சியி­லிருந்து நம்பிக்கையிழந்தார். ஜே.வி.பி. செயற்படத் தொடங்­கிய போது அது வரை காலம் ல.ச.ச.க.வில் செயற்பட்டு வந்த தனது மகன் ஜே.வி.பி.யில் இணைந்து அதில் தீவிரமாக செயற்படத் தொடங்கி, தனது வீடும் ஜே.வி.­பி.யின் கட்சிக் காரியா­லயமாக செயற்படத் தொடங்­கிய போது அதில் படிப்படியாக ஈடுபடத் தொடங்கி­னார். அவரால் முடிந்த வேலைகளை பொறுப்பெடுத்து செய்து வந்தார்.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். சமூக விடுதலைக்காக எந்த அமைப்­பில் தீவிரமாக ஆரம்பத்திலிருந்து தன்னை அர்ப்பணித்து வந்தாரோ, அதே கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தான் இவரை கைது செய்து கடுமையான சித்திரவதைக்குள்ளாக்­கியது. தோள்பட்­டையில் பட்ட அடி காரணமாக தோள்ப­ட்டை எலும்பு முறிந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார். தோழர் சீலவத்­தி­க்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் (ஆண்­கள் ஐந்து பேர், பெண்கள் மூவர்). புரட்சி­யின் போது அவரது மூன்று பிள்ளைகளும் (ஒஸ்மன்ட், சிட்னி, நெந்தொல்) கைது செய்­ய­ப்பட்டனர். எல்லோரும் நான்கு வருட­ங்களுக்கு குறையாத சிறைவாசத்தை அனு­பவித்தனர். ஒரு மகன் 1987-89 காலப் பகுதியில் கொல்லப்பட்டார். படையினரால் கொல்லப்பட்டவர் என்றே இன்றும் நம்பப்படுகிறது.

71 ஏப்ரல் புரட்சியைத் தொடர்ந்து இவரது வீடு பொலிஸாரால் அழித்து தீக்கி­ரையாக்கப்­பட்டது. சூழ இருந்தவர்களால் பொருட்கள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த ஏனைய பிள்ளைகள், மருமக்கள்­மார், பேரன் பேத்தி என எல்லோருமாக எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருக்க நேரிட்டது. போகு­மி­டங்­களிலெல்லாம் ஒரு பயங்கரவாதக் குடும்பம் என்று பார்க்கப்பட்டதே இதற்கான காரணம். ”சொந்­தக்காரர்கள் கூட எங்களு­டன் நெருங்க அஞ்சினர். எங்களுக்கு உதவி செய்ய மறுத்தனர். வீட்டில் இருந்த ஆண்கள் எல்லோ­ரும் கைது செய்யப்பட்ட நிலையில் பெண்கள் நாங்கள் வறுமையி­லும், பயத்திலும் காலத்தை கடத்தினோம். அந்த துன்பங்களையும், அவலத்தையும் இன்று நினைத்துப் பார்க்கவும் நடுங்குகி­றது” என்கிறார் சீலவத்தியின் மகள். இப்படி­ப்பட்ட கொடுர அனுபவங்களின் மத்தி­யிலும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவரா­கவும், சமூகப் புரட்சியொன்றை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கின்ற இந்த தாய் வரலாற்று நினைவுகளில் பதிந்து விட்டவர்.


லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர உறுப்பினராக செயற்பட்ட நீங்கள் எப்படி ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளராக ஆனீர்கள்?


எமது வீட்டில் தான் ஜே.வி.பி.யின் சகல அந்தரங்க கூட்டங்களும் நடத்தப்பட்­டன. ஆரம்பத்தில் மகன் கூட எனக்கு விபரங்களை மறைத்தான். வீட்டில் நடத்தப்­படும் கூட்டங்களின் போது அந்த பிள்ளை­களுக்கான உதவிகளை நான் செய்து வந்த போதும் கூட ஒரு மனித குலத்துக்கு விடிவு தேடித்தரும் ஒரு புரட்சிக்கான தயா­ரி­ப்புகளை செய்து வருகிறார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள தாமதமாகவி­ல்லை. புரட்சிக்கான சகல ஒத்துழைப்புக­ளையும் நான் செய்ய தீர்மானித்தேன். இதேவேளை ஜே.வி.பி. குறித்து போலிப் பிரச்சாரங்களை ல.ச.ச.க. மற்றும் கொம்யயூனி­ஸ்ட் கட்சியும் செய்து வந்த போது அது வரை காலம் அதன் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்த என்னால், அந்தக் கட்சி­களை விமர்சிக்காமல் இருக்க முடியவி­ல்லை. எனவே படிப்படியாக ல.ச.ச.க.வின் செயற்பாடுகளிலிருந்து விலகிய அதே வேளை ஜே.வி.பி.யுடனான செயற்பாடு­களை அதிகரித்துக் கொண்டேன்.

71இல் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்க­ப்பட்டிருந்த விஜேவீரவை சந்தித்து தாக்குதலை நடத்துகின்ற செய்தியை அவரிடமிருந்து நீங்கள் தான் பெற்று வந்தீர்கள் என்று கூறப்படுகிறதே உண்மையா?


இயக்கத்தின் இளைஞர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை சிறைக்குச் சென்று சந்திப்­பது மற்றும் ல.ச.­ச.க.வைச் சேர்ந்த -வழக்கறிஞர்க­ளாக இருந்த- எனது நன்பர்களின் உதவியோடு விடுவிப்பது, சிறையிலிருக்கும் கட்சி உறுப்­பி­னர்களிடம் தகவல்களைக் கொண்டு செல்வது, அவர்களிடமிரு­ந்து தகவல்­களை கொண்டு வருவது போன்ற கடமை­களை செய்து வந்தேன். யாழ்ப்பாணத்து­க்குச் சென்று தோழர் விஜேவீரவை சந்தி­க்க நானும் தோழர் குமநா­யக்கவும் சென்றி­ருந்தோம். தாக்குதலை மேற்கொள்­ளும் தீர்மானம் பற்றிய தகவல் என்னிடம் அனுப்­பப்­படவில்லை. அத்தக­வல் குமநாயக்கவி­னூடாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

புரட்சிக்கு முன்னரேயே உங்கள் மகன் உட்பட பல இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு­ விட்டன. அப்போது ஆட்சியிலிருந்த ல.ச.ச.க.வினரை சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா?

தோழர் என்.எம்.பெரேராவை கட்சித் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நானும் குமநாயக்கவும் சென்று சந்தித்து இது குறித்து உரையாடினோம். ”இந்நாட்­டின் புரட்சிகர இளைஞர்கள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதை தடுக்க எவராலும் முடியாதே தோழர், அவர்களை கைது செய்து அடைத்து அடக்­குமுறையை பிரயோகிப்பது இடதுசா­ரிக் கட்சிகளின் கூட்டணி அரசாங்கமொ­ன்றில் எப்படி நிகழ முடியும்? நீங்கள் கூறி வருவதைப் போல இடதுசாரிக் கட்சிகளை நாசம் செய்ய வந்த சீ.ஐ.ஏ. இயக்கமென்பது கட்டுக்கதை. முடிந்தால் அவர்க­ளுடன் சேர்ந்து ஒத்துழையுங்கள்” என்று கேட்­டேன். அவர் இதற்கு செவிமடுக்கவில்லை. அலட்சியமாக நடந்து கொண்டார். ”இப்படி சென்றால் செக்கோஸ்ல­வேக்­கியாவில் நடந்ததைப் போல் தான் ஆகும். உங்­களது மகன் ஒஸ்மன்டை வேண்டுமென்றால் விடுதலை செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி என்னோடு ஒன்றும் பேச வேண்டாம்” என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு மட்டும் தேவை இல்லை என்று வந்து விட்டேன்.

அப்போதைய ல.ச.ச.க.வினர், அரசாங்கத்துடன் சேர்வதென்ற முடிவை எடுத்த போது நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்?

ஐ.தே.க தோற்கடிக்குமுகமாக ஐக்­கிய முன்ன­ணியொன்றை கட்டியெழுப்புவ­தற்கு ல.ச.ச.க., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிரேரணை குறித்து ஒரு முறை நகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்­தில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. ஏறத்­தாழ 700க்கும் மேற்பட்ட வாக்குகள் அப் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்­டது. அந்த விவாதத்தின் போது பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி போன்ற தோழ­ர்கள் கடுமையாக எதிர்த்து தாங்கள் வெளி ­யேறுவதாக அறிவித்தார்கள். லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆகியோர் இதன் போது தாங்கள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் நடுநிலை வகித்தேன். பிற்காலத்­தில் அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தி­ருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

நீங்கள் கைது செய்யப்பட்டது எப்போது?

ஏப்ரல் 18ஆம் திகதியன்று நான் கைது செய்யப்பட்டேன். ஒஸ்மன்ட்டை எங்கு வைத்தி­ருந்தார்கள் என்பது தெரியா­திருந்தது. நான் தேடியலைந்து கொண்டிரு­ந்தேன். அப்படியான ஒரு வேளையில் தான், இடையில் வைத்து பொலிஸார் என்னைக் கைது செய்தார்கள். நான்கு வருடங்கள் எவ்வித வெளியுறவுகளும் இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்­தேன். ஆரம்பத்தில் நான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தேன். தோளில் கடும் தாக்­கு­தலால் குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை பெற்று வந்தேன். 5ஆம் திகதி தாக்குதல் பற்றிய செய்தியை விஜேவீரவிடமிருந்து நான் தான் பெற்று வந்தேன் என வாக்கு மூலமளித்தால் என்னை விடுதலை செய்வ­தாக கூறினார்கள். நான் இறுதி வரை ஒப்புக் கொள்ள மறுத்தேன். அதன் விளைவாகவே நான்கு வருடங்கள் சிறையில் கழித்தேன். மதிலுக்கு அப்பால் எனது மகன்மார் மூவ­ரும் தடுத்து வைக்கப்பட்டிருந்­தும் கூட அவர்களைச் சந்திக்க அனுமதி தரப்படவி­ல்லை. ஒரு முறை ஒஸ்மன்ட் என்னை சந்தி­க்க வேண்டுமென விசாரணையாளர்களிடம் கோரியதைத் தொடர்ந்து ஆணைக்குழுவி­லிருந்த ஒரு மனித நேயமிக்க ஒரு விசார­ணையாளர் தனது சொந்த முயற்சியின் பேரில் பல இடங்களிலிருந்து உத்தரவு பெற்று ஒரே ஒரு முறை சந்திக்க வழி செய்தார்.

சிறையில் பெற்ற அனுபவங்களை விளக்குங்களேன்?

வெலிக்கடை சிறையில் எங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜே.வி.­பி.யின் பெண் தோழர்­கள் பலர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்­குள் நாங்கள் முகம் கொடுத்த முக்கிய பிரச்­சினை, சாதாரண சமூக விரோத குற்ற­ங்களுக்காகத் தண்­டனை பெற்ற கைதிக­ளையும் எங்களைப் போன்ற அரசியல் கைதிகளையும் ஒன்றாக போடப்பட்டிருந்­தது தான். பாதாள உலக செயற்­பாடுகளில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரும் எங்களுடன் சேர்த்து போடப்பட்டிருந்தனர். சிறைக்குள் அவர்க­ளுக்கு, பல சலுகைகள் சிறை அதிகாரிக­ளால் வழங்கப்பட்டு வந்தன. உணவு, இருப்பிடம், சீருடை என பல விடயங்களில் அவர்களுக்கு விசேட வசதிகள் இருந்தன. அரசியல் கைதிகளான நாங்கள் நியாய­மான வசிதிகளோஇன்று இருந்த அதே வேளை கிரிமினல் குற்றவாளிகள் சலுகை பெற்றவர்களாகவும், சிறைக்குள் அதிகா­ரம் நிறைந்தவர்களாகவும் இருந்­தார்கள். அது மட்டுமன்றி அக்கைதிகள் எங்களை இம்சித்தார்கள். எனவே, சிறைக்குள் அடிக்­கடி இரு சாராருக்குமி­டையில் சண்டைகள் நடப்பதுண்டு. நாங்­கள் எமது எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சிறைச் சாலைக்குள்ளும் போராடி­னோம். ஏற்கெனவே சித்திரவதைக்குள்ளாகி, விரக்தியுற்ற நிலையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பெண் தோழர்களுக்கு ஏற்பட்ட இவ்வகையான நிலைமைகள் ஒரு வகையில் சித்திரவ­தைகளே. உண்மை­யில், சிறைச்­சாலை என்பது இன்னொரு அரசியல் வகுப்பு மாத்திரமன்றி இன்னொரு போராட்டக்களமும் கூடத்தான்.

AddThis Social Bookmark Button


Design by Amanda @ Blogger Buster